காணாது போகாதே தாய்மண் காட்சிகள்!

வீரகேசரி மூர்த்தி

கனடாவந்து கால் நூற்றாண்டு காலம்
கடுகதியி லோடிக் கடந்திட்ட போதும்
கண்முன் நிற்கிறது நம்நாட்டுக் காட்சிகள்
கரைவந்து தரையை முத்தமிடும் கடலiலைகள்
களிப்புடன் கக்கும் வெண்திரை நுரைகள்
கரையதில் கால்களால் கோல மிடும்
கடுக்கன் நண்டுகள் கணப் பொழுதில்
காலடி ஓசைகேட்டு ஒழித்திடும் பொந்தினுள்
காலமது கடந்தாலும் மனக்கண்ணை விட்டு
காணாது போகாதே தாய்மண் காட்சிகள்!

குயிலும் சேவலும் கூவித் துயிலெழுப்பும்
கோயில் மணி ஓசையும் குதூகலிக்கும்
வெயிலும் வெளிவர விடியும் பொழுது
வெந்நீரை தேநீராக்கி வெண்நுரை ததும்பும்
வெள்ளைப் பசுவின் பாலது கலந்தம்மா
வெண்கலப் பேணியில் தந்திடப் பருகி
வெந்த புட்டும் பழைய நண்டுக் குழம்பும்
விருப்பொடு பிசைந்துண்ட அந்த நினைவுகள்
காலமது கடந்தாலும் மனக்கண்ணை விட்டு
காணாது போகாதே தாய்மண் காட்சிகள்!

புலவர்கள் போற்றிப் பாடும் பூம்புனலது
புல்லறி வாளர்புரியும் பொல்லாப் பின்றேல்
நிலவளமும் நீர்வளமும் நிறைந்து நித்திலம்
நிலவொளியில் பொங்கிப் பூரிக்கும் நம்மண்
தலவிருட் சங்களாம் பனைதென்னை மற்றும்
பலா மாவாழை பழவகை மரங்களெலாம்
குலை குலையாய் காய்த்து தொங்குமெழில்
குதூ கலிக்கும் மனமதனைக் கண்டினிதே
காலமது கடந்தாலும் மனக்கண்னை விட்டு
காணாது போகாதே தாய்மண் காட்சிகள்!

சண்டை சச்சரவு களின்றி சந்தோஷமாய்
அண்டை அயலவரொடு அன்புடன் பழகி
பண்டைய கலாச்சார பழக்க வழக்கொடு
கண்டு உறவினரை கட்டித் தழுவிநன்றே
விண்டு விருந்தோம்பி விருப்புற வாழ்ந்தோமே
குண்டுகள் பொழிகின்றன மழைக்குப் பதிலாய்
குலைநடுங்க வைத்தின்று குருதியா றோடுது
மணடூகப் பாவிகள் மாழாரோ இடிவிழுந்து
காலமது கடந்தாலும் மனக்கண்ணை விட்டு
காணாது போகாதே தாய்மண் காட்சிகள்!

தாம்பிறந்த மண்ணில் தலை நிமிர்ந்துவாழ
தனியொரு வனுக்கும் உரிமை உண்டென்கிறது
மனிதஉரிமை சாசனம் இருந்துமென்ன தமிழினம்
மனிதாபி மானமேயற்ற மாற்றானால் மடிகிறது
மனிதநலன் காக்கும் ஐநாவும் வல்லரசுகளின்
மாய வலைக்குள் சிக்கித் திண்டாடுகிறது
தமிழீழமதை தனித்தே மீட்டிட தம்பகைநீங்கி
தமிழினம் ஒன்றுபட்டு போரிடுந் தருணமிது
காலமது கடந்தாலும் மனக்கண்ணை விட்டு
காணாது போகாதே தாய்மண் காட்சிகள்!


moorthy.sella@amd.com