எதைப் பாட?
சபா. அருள்சுப்பிரமணியம்
எத்தனை குமுறல் என்நெஞ்சில்
எதைநான் எழுதி அடங்குவது?
செத்திடும் எனது உறவுக்காய்ச்
தேம்பி அமுது கவிதரவா?
எத்தனை கொடுமை என்மண்ணில்
ஏதைநான் பாடி ஆறிடுவேன்
அத்தனை கொடுமை நடக்கிறது
அனைத்தும் கவியாய்ப் பாடிடவா?
வீரம் செறிந்த தமிழர்களின்
விடுதலை உணர்வைப் பாடுவதா?
போரிற் சிக்கி அழிகின்ற
பொதுமகன் துயரைப் பாடுவதா?
நாளை இறப்பு யாருக்கு
நடக்கு மென்று அறியாது
நாளை ஏங்கி ஓட்டிவரும்
நம்மவர் கதையைக் கூறிடவா?
தண்ணீர் கூடக் கிடைக்காது
தவியாய்த் தவிக்கும் உறவுகளின்
கண்ணீர்க் கதையை உங்கள்முன்
கவிதை யாக நான்தரவா?
வெய்யில் மழையில் ஒதுங்கவொரு
வீடோ குடிலோ அங்கில்லை
தெய்வம் கூட மறந்தஅவர்
தேவை பற்றிப் பாடுவதா?
தேனால் நனைந்த வன்னிநிலம்
தினையால் நிறைந்த அப்பூமி
ஊனால் நிறைந்து உதிரத்தில்
உறைந்து கிடப்பதைப் பாடுவதா?
தடுப்பு முகாமில் தனித்தனியே
தடுத்து வைத்துத் தரம்பிரித்துக்
கொடுக்கும் கொடிய தண்டனைகள்
கூறிப் பாடல் பாடுவதா?
அங்கம் சிதைந்த தமிழர்களின்
அவலம் தன்னைப் பாடுவதா?
எங்கும் இருந்து நம்மவர்கள்
எழுப்பும் ஓலம் பாடிடவா?
உலகம் தடுக்கும் குண்டுகளை
ஒவ்வொரு நாளும் பொழிந்தங்கே
பலரை அழிக்கும் கொடுமைதனை
பாட யார்க்கு மனமேவும்?
தன்குடி மக்கள் தமிழரெனச்
சற்றும் மனதில் எண்ணாது
சிங்கள பௌத்த அரசாங்கம்
செய்யும் கொடுமை பாடுவதா?
கையைத் தூக்கிக் கும்பிட்ட
கடவுள ரெல்லாம் கைவிட்டுச்
செய்வ தறியா தலைமோதித்
திகைப்போர் கதையைப் பாடிடவா?
ஓடி ஓடி இடம்பெயர்ந்து
ஒவ்வொரு பொருளாய்க் கைவிட்டு
வாடி வருந்தும் மக்களது
வாழ்வு பற்றிப் பாடுவதா?
பஞ்சக் கொடுமை தாங்காது
பச்சிலை வறுத்து உண்டவர்கள்
நெஞ்சை நெருட இறந்தகதை
நீங்கள் கேட்கப் பாடுவதா?
நாடக மாடித் தமிழினத்தை
நட்டாற் றினிலே விட்டுள்ள
கேடறு வார்கள் அழிவரென
கீழ்த்தர மாகச் சபித்திடவா?
இலங்கை இந்திய அரசிரண்டும்
இணைந்து ஈழத் தமிழனது
நிலத்தைச் சுடுகா டாக்குவதை
நெஞ்சம் வெதும்பிப் பாடுவதா?
yoga_arul@yahoo.com
|