காலம் பதில் சொல்லட்டும்

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.


ஆதிச் சிங்கள மூலம்
விசயனும் தோழரும் பாதமிட்டது
தாமிரவர்ணி, தம்பிரவர்ணி,
தம்பபன்னி அன்றி தம்மன்னா.
வர்ணி – வன்னியாக மருவியது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு
வன்னி மண்ணென ஆனது.
தன்னிறைவு கொண்ட நிலமது.

'சிந்த்' திலிருந்து விசயன் தோழருடன்
வந்திறங்கிய இடம் சிலாபமென்ற
கெலவற்ற. சிந்த் சக கெல
சிங்களம் என்று ஆனதாம்.
ஆறாயிரத்து ஐந்நூற்றி எண்பது
கிலோமீட்டர் வன்னிப் பரப்பில்
ஐந்துஇலட்சத்து ஏழாயிரம் மக்கள்.
அந்தரத்தில் அகதியாய்ச்சொந்த மண்ணில்.

சிறு நிலப்பரப்பில் மாதொகையினர்
சிறகொடித்த வாழ்வுச் சித்திரவதையுள்.
சிரிப்பிழந்த பட்டினி வாழ்வுப் பரப்பு.
சிதைந்த எலும்புகள் நாற்புற மண்ணில்.
தும்பிக்குச் செய்யும் கொடூர வதையாய்
கம்பிவேலி மிருகவதைக்குள் மனிதர்.
நம்பி நடக்க முடியாத அதிகாரம்.
தேம்புமிதயங்கள் அளந்த வரையறையுள்.

நிலையாக வளமாக வாழ்ந்த மக்கள்
அலைகடல் ஓடி உழைத்தார்.
வலைவிரித்து மீன் பிடித்தார்.
நிலம் கொத்தி பயிர் வளர்த்தார்.
குலம் செழிக்க வயல் விதைத்தார்.
நலம் நிறைந்து வாழ்ந்த மக்கள்
கோலம் மாறியிருப்பது அவலம்!
காலம் நல்ல பதில் சொல்லட்டும்.



vetha@stofanet.dk