ஒன்றி லேனும் வென்று காட்ட முயலுவோம் 

கவிஞர் .இராஜகோபாலன்

வேத கால மாதி யாக

    வேறு வேறென் றாயிரம்

சாதி கொண்ட மனித ரன்பிற்

    சேர்ந்து வாழ்ந்த தில்லையா?

போதி தந்த ஞான தீரன்

    புத்தன் வாழ்ந்த பூமியில்

மோதி வீழ்தல் மாற்றி மீண்டும்

    மனித நேயம் காணுவோம்

 

ஏழை வாழ்வு என்ன வாகும்

    என்ற எண்ண மின்றியே

ஊழல் லஞ்சம் என்று நாட்டை

    உட்பு குந்து தின்கிற

பாழும் ஆசைப் பேய்க ளிங்கு

    பாதம் நாட்டி யாடுதே!

கோழை யென்ன நாமி ருந்தால்

    கொன்று தீர்க்க லாகுமோ?

 

காதல் மதுவின் மீது கொண்டு

    கற்ற கல்வி பண்பெலாம்

போதை கொண்டு போக விட்டுப்

    பொருளும் போக நிற்பவர்

மீத முள்ள வாழ்வி லேனும்

    மீண்டு வருதல் வேண்டிநாம்

ஏதும் செய்ய எண்ணி டாதே

    இன்னு மேனி ருக்கிறோம்?

 

மெள்ள மெள்ள நீர்மை மாறி

    மேனி வாடும் பூமியின்

வெள்ள மோடிச் சீர ழிக்கும்

    வேறு மாநி லங்களில்

உள்ள நீரின் பாதை மாற்றி,

    ஓடு மாறு செய்யவே

உள்ள முள்ளோர் ரொன்று சேர

    ஊரும் நாடு முயருமே! 

 

தின்று தின்று தூங்கி நாளைத்

    தொலைத்து வாழ்த லுண்மையில்

பன்றி வாழும் வாழ்க்கை யென்று

    பகர்தல் கேட்ட தில்லையோ?

ஒன்றி லேனும் வென்று காட்ட

    உறுதி யோடு முயலுவோம்.

என்றும் பூமி மீது மக்கள்

    ஏற்ற நின்று வாழுவோம்.  




('இலக்கியவெளி சஞ்சிகை' மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட கவிதை - காலம் 22-08-2020)







உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்