ஏட்டில் உள்ளார் காந்தியார்

 

கவிஞர் இனியன், கரூர்




 

காந்தி சொன்ன கருத்துகள்

     காலம் கடந்து நிற்குமே!

ஏந்தி மனதில் இறக்கிடின்

     என்றும் வாழ்வில் இன்பமே!

சாந்த மூர்த்தி காந்தியார்

     சாற்று கின்ற தத்துவம்

காந்தம் போல ஈர்க்குமே

     காதில் ஏறும் யார்க்குமே!

 

எளிமை என்னும் பண்பினை

     ஏற்றுக் கொள்ளும் போதிலே

களிப்புத் தோன்றும் வாழ்விலே

     கருதின் நமக்குத் தாழ்விலை!

ஒளித்து வாழும் எலியென

     ஒளிந்தி ருப்போர் அன்னவர்

அளித்து வாழும் காகமாய்

     அழகாய் வாழச் சொன்னவர்!

 

உலகை மாற்ற நினைத்திடின்

     உன்னை மாற்று முதலிலே!

தலையில் அடித்துச் சொல்லியும்

     தலையில் ஏற வில்லையே!

பலகை ஓட்டை யாகிடின்

     படகும் கவிழ்ந்து போகுமே!

உலகம் வன்முறை யாகிடின்

     உடைந்து சிதைந்து நோகுமே!.

 

உடலின் உழைப்புச் சிறப்பினை

     உரக்கச் சொன்னார் ஆயினும்

உடலை வருத்தி உழைத்திட

     ஊருக் கோராள் இல்லையே!

கடலின் உப்பு நீங்கிடின்

     கடலில் உயிர்கள் வாழுமா?

உடலின் உழைப்பு நீங்கிடின்

     உறுப்பு நலனும் வாய்க்குமா?

 

இராட்டை நூற்றுக் கையிலே

     இரண்டை அணிந்தார் மெய்யிலே!

பூட்டி வைக்கப் பொருளிலை

     பொக்கை வாயில் பொய்இலை!

ஏட்டில் உள்ளார் காந்தியார்

     எடுத்துப் படித்தால் சாத்தியம்

நாட்டில் மறைந்த அறத்தினை

     மீட்டு விடலாம் சத்தியம்!

 

சத்திய சோதனை நூலிலே

     பொத்தி வைத்த செய்திகள்

வித்தாய் நமது மனத்திலே

     வீழின் நன்மை விளையுமே!

முத்தாய் வீழ்ந்த கருத்துகள்

     முளைத்து வளரும் உளத்திலே

கொத்தாய்ப் பூத்துக் காய்த்தது

     கொலுவி ருக்கும் களத்திலே!



 

                  

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்