நூல் : உயிர்க்கவிதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் மு.முருகேஷ்
நூல் ஆய்வு: கன்னிக்கோவில் இராஜா


தொடர் இயக்கத்தின் வெளிப்பாடாய் இன்று எண்ணற்ற கவிஞர்கள் ஹைக்கூவின் பால் ஈர்க்கப்பட்டு ஹைக்கூவை நெய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஹைக்கூவால் நெய்யப்படுகிறார்கள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால். ஹைக்கூ - தமிழகத்தில் பரவலாக அறிமுகமானபோது, அறிமுகம் ஆனவர் கவிஞர் மு.முருகேஷ;. ஹைக்கூவோடு தன்னை முழுமையாய் இணைத்துக் கொண்டு பார்க்கின்ற எடுத்துரைத்து. ஹைக்கூவை நெய்ய தூண்டுகோலாய் இருந்தவர் இவர்.

தான் கொண்டு வந்த 'இனிய ஹைக்கூ' இதழ் மூலமாக பல ஹைக்கூ தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழக கவிஞர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்த கவிஞரின் அண்மையில் வெளிவந்த ஹைக்கூத் தொகுப்பு – 'உயிர்க்கவிதைகள்'.

ஹைக்கூ, படைப்பாளியின் மனநிலைச் சார்ந்தது, சூழலுக்கு தகுந்தார்போல் எழுதப்படுவது, அத்தகைய சூழலின் வெளிப்பாடாய் அமைந்திருக்கின்றன உயிர்க்கவிதைகள்.


தூரத்தில் கொக்கு
காலுக்கு கீழே மீன்கள்
விரட்டும் சிறுவர்கள்


யதார்த்தத்தின் விளிம்பில் பதிவான கவிதையோடு, காட்சிப்பதிவும் மிகுந்த நேர்த்தியாக வந்திருக்கிறது. பொதுவான செய்திதான் என்றாலும் குழந்தையின் மனநிலையை படம் பிடித்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

மழலை இன்பத்தை நாம் கூர்ந்து கவனிக்க தவறுவதன் விளைவே, பெற்றோருக்கும் பிள்ளைக்குமான விரிசலை உண்டாக்குகிறது. மூன்று வயது வரை குழந்தைகள் செய்கின்ற குறும்பை ரசிக்க முடிகிற நம்மால், அதற்கு பிறகும் ரசிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன?

இவர் ஒவ்வொரு அசைவுகளையும் மிக நுணுக்கமாக ரசித்திருக்கிறார். என்பதற்கான அடையாளமாய்.....

பறிக்க நீட்டிய கைகளில்
ஈரமுத்தம் தந்தது
தாமரை இலை நீர்


என முத்தத்தின் ஈரத்தை படித்த மாத்திரத்திலேயே உணர வைக்கிறார்.

கும்பைத் தொட்டி நாய், மனிதன் இவை சார்ந்த எராளமான கவிதைகள் பல ஹைக்கூ தொகுப்புகளில் உலா வந்திருக்கின்றன. திரு பாரதிராஜா திரைப்படங்களில் பாடல்களில் வரும் வெள்ளுடை கன்னிகளைப் போல, ஹைக்கூவில் முதிர்கன்னி, கைப்பெண், பட்டாம்பூச்சி என தொடர்கதை இன்னும் தொடர்கிறது. ஹைக்கூவின் மட்டும்தான் இரக்க குணத்தை அப்படியே பிழிந்தெடுத்துக் கொடுக்கிற வழக்கத்தை தொடர்ந்து கொண்டேயிரக்கிறார்கள் கவிஞர்கள். இங்கே ஒரு நாயும் சிறுவனும்.....

கொஞ்சமாய் உணவு
சண்டையில்லாமல் பகிர்ந்துண்ணும்
நாயும் குழந்தையும்.

மாறுதலாய் மாறிப்போன அறறிவும் ஐந்தறிவும் நமக்கு ஆறுதல்.

ஹைக்கூ தரிசனத்தின் நுட்பம் அவ்வளவு எளிதாக வாசகனை அழைத்து வெற்றிக் கொடுத்துவிடுவதில்லை. ஆனால் குழந்தைகள் சார்ந்து இயங்குகிற கவிதைகளில் இத்தகைய தரிசனம் வெகு இயல்பாக கைவரப் பெறுகிறது.

கவிஞர் ந.க.துறைவனின் 'சிரிப்பின் முகவரி', கவிஞர் வசீகரனின் 'குட்டியூண்டு', கவிஞர் மு. முருகேஷின் 'ஹைக்கூ குழந்தைகள்', கன்னிக்கோவில் இராஜாவின் 'யாழினிது' என மழலைச் சார்ந்து எழுதப்பட்ட ஹைக்கூ நூல்கள் அனைத்துமே இயற்கை வரைந்த ஒவியமாகவே விளங்குகிறது.

இருட்டில்தான் படிக்கிறான்
வெளிச்சமாகும்
நாளைய வாழ்க்கை.


கல்வி முறைகளில் மாற்றம் கொண்டு வந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்திலும், விளக்கில் பாடம் படிக்கும் பழக்கம் மட்டும் மாறாதது வேதனைதான், என்றாலும், நாளைய கேள்விக்குறியின் விடையாய் மாறியிருக்கிற இவ்கவிதை பல எடிசன்களை உருவாக்கலாம்.

ஓற்றையடிப் பாதை
தனியே போகையில்
கூடவே வரும் நிலா.


நிலா என்பது குழந்தைகளின் மகிழ்விற்கான குறியீடு. தொன்றுதொட்டு வந்த பந்தம். நகரத்து குழந்தைகளே ஆனாலும் நிலாவின் மீதான அபரிமிதமான ஆவல், நீண்டு கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கவிதையிலும் அம்மாதிரியான வெறுமையை நிலவின் புன்னகை நிரப்பிக்கொண்டே வருகிறது.

தூங்கும் அம்மா
தாலாட்டும்
சின்னக் கொலுசு

இனிப்பை கையிலெடுத்து ஒவ்வொரு துண்டாய் விழுங்கி விட்ட பின், கடைசித் துண்டு தொண்டையில் பரவி வயிறு வரைக்கும் அந்த சுவையை தந்துகொண்டிருப்பதைப் போல, நூலைப் படித்து முடித்தபின் கடைசி அட்டைப்படக் கவிதை நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கிறது.

கடிக்கும் கொசு
தாயை எழுப்பும்
சின்ன கொலுசு.


என்ற கவிஞர் மித்திராவின் இந்தக் கவிதையையும் நினைவுக்கு கொண்டு வரத் தவறவில்லை.

ஒளி ஓவிய ஹைக்கூ கவிதைநூல் என புதிய வகையை ஹைக்கூவாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிற இந்த உயிர்க்கவிதைகள் நூலின் கடைசிப் பக்கத்தில் ஒரு படம் மட்டும் போட்டு ஹைக்கூவை வாசகனுக்காக விட்டிருப்பது வரவேற்புக்குறியது.

இந்நூலின் கவிதைகளைப் போலவே நம்மை வசீகரிக்கப்வை ஒளிப்படங்கள். உயிர்க்கவிதைகளில் கவிஞர்  முருகேஷ்க்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, பாராட்டிருக்கிறதோ அதே அளவுக்குரியவர் ஓவியர் நெய்வேலி ந.செல்வன் அவர்கள்.

மூங்கிலின் உள் நுழைந்து இசையை வெளிப்படுத்தும் காற்றாய். குழந்தைகள் உலகில் நுழைந்து உயிர்க்கவிதைகள் தந்திருக்கிறார் கவிஞர். பாராட்டுகள்.