நூல் : சிகரம்தொடவா
நூல் ஆசிரியர் : எஸ்.பாயிஸா அலி
நூல் ஆய்வு: கலைவாதிகலீல்

சிறுவர்களுக்கான இலக்கியம் படைப்பது கடினமான காரியம். சிறுவர் மற்றும் குழந்தைகள் மகிழும் வண்ணம் அதேவேளை ஏதாவதொரு வகையான அறிவை அவர்களுக்கு ஊட்டும் வண்ணம் இலக்கியம் படைப்பதென்பதே அருமையான விடயம். எனவேதான் பெரும்பாலான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குழந்தை இலக்கியம் படைக்க முன்வருவதில்லை. இதுதான் யதார்த்தம்.

ஆனால் அவர்களைக் கேட்டால் வேறொரு வகையாகக் கூறுவார்கள். குழந்தை இலக்கியமா? சிறுவர் இலக்கியமா? அது சிறுபிள்ளைத்தனமான விடயமல்லவா? அதற்காக நேரத்தை வீணடிக்கக்கூடாது நாம் பெரியோருக்காக அதாவது புத்தி ஜீவிகளுக்காகவே எழுதுகிறோம்'என்பர்.

இந்த மழுப்பலைக் கூறிவைக்காமல் எதிர்மாறான கருத்துடையவர்கள் சிலரும் தமிழ் இலக்கிய உலகில் உளர் .உதாரணமாக பிரபல நாவலாசிரியர் சே. யோகநாதனைக் குறிப்பிடலாம். அவர் பல சிறுவர்pலக்கியங்கள் படைத்துள்ளார்.

தமிழகத்தில் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பூவண்ணன் ஈழத்துக் கவிஞர்களான நவாலியூர் சோமசுந்தரப் புலவர்,பா.சத்தியசீலன் அம்பிகைபாகன் இக்பால் உ.நிசார் போன்ற ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்.ஸீ.சுபைர் சாரணா கையூம் சுதாகர் போன்றோரையும் குறிப்பிடலாம். அந்தவகையில் மாஸ்டர் சிவலிங்கம் தனித்து மிளிர்பவர்.

புரட்சிக்கவிஞன் பாரதி சுதந்திரத்திற்காகவும் பெண் விடுதலைக்காகவும எழுதியிருப்;பதோடு சிறுவர்களுக்காகவும் எழுதியிருக்கிறார். அவரது பாப்பாப் பாட்டுக்கள்' பிரசித்தி பெற்றவை.

'ஓடிவிளையாடு பாப்பா' வை எளிதில் மறந்து விடமுடியுமா?

வெள்ளை நிறத் தொரு பூனை-எங்கள்
வீடடில் வளருது கண்டீர்.
பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை
பேருக்கொரு நிறமாகும்'


என்ற பாடல் வெறும் பாப்பா பாட்டுத்தானா? இப்பாடல் போதிக்கும் சமுக நீதி மிகவும் வலிமையானது.
கிண்ணியாவைச் சேர்ந்த மூவரது பாடல்களை நான் அறிவேன். அவர்களிள் இருவர் பெண்கள். ஒருவர் ஜெனிரா தௌபீக். மற்றவர் பாயிஸாஅலி. ஜெனிரா நீண்ட காலமாக எழுதி வருபவர். 'பாலர் பாடல்' என்ற நூலை பல வருடங்களுக்கு முன்னரே அளுத்கம ஆசிரியர் கலாசாலையில் வைத்து வெளியிட்டார். பாயிஸாஅலி அண்மைக்காலமாக அதிகம் எழுத ஆரம்பித்துள்ளார்.

பாயிஸாஅலி தற்போது தனது கன்னிநூலை வெளிக்கொணர்ந்துள்ளார். அந்த நூலி;ல் இடம்பெற்றுள்ள பாடல்களைப் படித்து (அல்ல பாடிப்)பார்த்தேன.; உண்மையில் அவை பாடல்களாகவே இருந்தன. அணிநடைசிறப்பு மிக்க இப்பாடல்களில் எதுகை மோனை இதம் பதம் ரிதம் லயம் அனைத்தும் இழையோடுகின்றன. சிறுவர் பாடல்களுக்கு அவசியமான சிறிய சொற்களும்; நீளம் குறைந்த வரிகளும் இப்பாடல்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்கின்றன.

பாடுவதற்கும் பாடலுக்கேற்றவாறு ஆடுவதற்கும் நடிப்பதற்கும் ஏற்றவகையில் பாடல்கள் ஆக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் ஏதாவதொரு வகையில் சிறுவர்கட்கு புத்தி புகட்டுவதாகவோ போதிப்பதாகவோ அல்லது புத்துணரச்சி ஊட்டுவதாகவோ அமைந்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது. பெரும்பாலான பாடல்கள் புளங்காகிதத்தை ஏற்படுத்துகின்றன.

பாயிஸாஅலியின் சிந்தனையில் மலர்ந்த இப்பாடல்கள் தங்கு தடையற்ற நீரோட்டம் போலப் பாய்ந்து செல்கிறன. பாயிஸாவிடம் சிறுவர் நயக்கும் சொற்களுக்கும் பஞ்சம் இல்லை என்று புரிகிறது. பாடல் தேவையான காட்சிக்கருப் பொருளோடு தொடங்கி போதுமான அளவில் நறுக்கி விட்டது போல்முடிவுறுவது சிலாகிக்கத்தக்கது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பாயிஸாவின் மலர்க்கதம்பத்திலி ருந்து ஒரு பூவை நுகர்வோம் .................

துளியே! துளியே விழுந்திடு!
துயரே துயரே கலைந்திடு
போரே போரே ஓய்ந்திடு
பூவே பூவே மலர்ந்திடு.


பாயிஸாஅலிக்கு நல்ல எதிர்காலமுண்டு. இத்தொகுப்போடு நின்று விடாமல் சிறுகதைகள் குறுநாவல்கள் போன்ற மேலும் பல சிறுவர் இலக்கியங்களைப் படைக்க முன்வர வேண்டும் என்பது என் வேண்டுகோளாகும். பாயிஸாஅலிக்கு என நல்லாசிகள்!


சிகரம் தொடவா!

சின்னப்பூவே
சிகரந்தொடவா!
வண்ணக்கனவுகளாய்
வானில் எழவா!

எண்ணமதில் தவிர்ப்பாய்
கறைகள்!
எண்ணித்துணிவாய்
செயல்கள்!
முயற்சி செய்வாய் பொழுதில்
உயர்ச்சி காண்பாய் வாழ்வில்

மலரும் பூவும் உனதே!
மாலைத் தென்றல் உனதே!
புலரும் பொழுதும் உனதே
புவிவளம் யாவும் உனதே!

சின்னப் பாதச் சுவடுகள்
சீராய்ப் பதித்தால் நீயும்
பென்னம் பெரிய சிகரங்கூட
துச்சமுனக்கு நிச்சயமே!


வண்ணக் கவிதை படைப்போமா?

சின்னச் சிட்டுக் குருவிகளே!
சிறகடிக்கும் பட்டம் பூச்சிகளே!
வண்ணக் கவிதைகள் படைப்போமா?
வானில் நிலவாய் ஜொலிப்போமா?

காற்றும் கடலும் மழையும் பார்!
களிப்பாய் நீந்தும் மீன்கள் பார்!
நாற்றும் வயலும் கதிரும் பார்!
நல்ல கவிதை நீ படைப்பாய்!

வீட்டில் கோழி பூனை பார்!
வெள்ளைக் கொக்கும் முயலும் பார்!
கூட்டில் பேசும் கிளிகள் பார்
கொட்டும் கவிதை மழைபோலே!

நல்ல தமிழில் சொல்லெடுத்தே
நயமாய் வரிகள் கோர்த்திடுவோம்
வல்லோன் தந்த கொடைகளையே
வாழ்த்திக் கவிகள் யாத்திடுடிவோம்!




sfmali@kinniyans.net