நூல் :
கண்ணின் மணி நீயெனக்கு
நூல் ஆசிரியர் :
அகில்
நூல் ஆய்வு:
கார்த்திகாயினி சுபேஸ்
சமூக அக்கறையின் வெளிப்பாடே கண்ணின் மணி நீயெனக்கு
புனைவிலக்கியத்துறை
ஈழத்தில் கனதிமிக்க ஒரு காத்திரமான இடத்தைப் பெற்றிருந்தது.
பெற்றுவருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல எமது நாட்டு
நிலமை 'புலம்பெயர் படைப்புகள்' என்னும் விசேடமான மற்றுமொரு தளத்தையும்
எமக்குத் தந்திருக்கிறது. இந்தப் புலம்பெயர் புனைவிலக்கியத்தளம் ஈழத்து
இலக்கிய வளர்ச்சியின் வேகத்தை கூட்டுவதாகவும் அதன் கனதியை மேலும்
கைகொடுத்து நிமிரத்திவிடுவதாயும் இருந்து வருகின்றது.
ஆனால், கடந்த காலங்களில் முழு வீச்சாக வெளிவந்துகொண்டிருந்த புலம்பெயர்
படைப்புகளின் வருகையில் அண்மைக் காலமாக ஒரு தளர்வுநிலை ஏற்பட்டுள்ளதை
அவதானிக்க முடிகிறது.
இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் இதுவரை காலமும்
எழுதிக்கொண்டிருந்தார்கள். முள்ளிவாய்க்காலுடன் மனமுடைந்து பேனாவை
மூடிவிட்டவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் சிலர்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளான இரண்டாவது
தலைமுறையினர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் அவர்கள் எமது தாயகம் பற்றி
எழுதுவதற்கு வாய்ப்பில்லை. இங்கிருந்து சென்ற இளையவர்கள் இப்பொழுது
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் இவர்களுக்கு
மூத்தவர்களுக்கும் பின்னர், அடுத்த தலைமுறையிலிருந்து தாயகம் பற்றியோ
புலம்பெயர் பண்பாட்டு முரண்பாடுகள் பற்றியோ எழுத வாய்ப்பில்லை என்பதால்
தொடர்ந்து வரும் காலங்களில் புலம்பெயர் இலக்கியங்களின் வருகை
படிப்படியாக அருகிச் சென்று காலஓட்டத்தில் இல்லாமல் கூட போய்விடும்.
ஆனாலும், இன்று புலம்பெயர்ந்து இருப்பவர்கள் சிலர் தமது எழுத்துக்கள்
மூலம் எமது கலாசார பண்பாடுகள், புலம்பெயர் வாழ்வின் பதிவுகள், கலை,
கலாசார முரண்பாடுகள் என்பவற்றை வீச்சுடன் பதித்துச் செல்கிறார்கள்.
இயந்திரத்தனமான வாழ்விலும் இலக்கியங்களை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் இந்த முயற்சி ஈழத் தமிழ் இலக்கியத்திற்கு மிகவும்
அவசியமானதும் ஆரோக்கியமானதுமாகும்.
இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டு சுறுசுறுப்புடன் புலம்பெயர் இலக்கிய
உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் சில எழுத்தாளர்களுள் ஒருவர்தான்
சாம்பசிவம் அகிலேஸ்வரன் என்னும் அகில்.
சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு என பல தளங்களில் இயங்கிவரும்
அகில்
www.tamilauthors.com என்ற
இணையத்தளத்தையும் நடத்திவருகிறார். இந்த இணையத்தளத்தின் மூலம் உலக தமிழ்
எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் பணியைச் செய்துவருகிறார்.
இவர் ஆன்மீகத்துறை தொடர்பாக 'நமது விரதங்களும் பலன்களும்', 'இந்துமதம்
மறைபொருள் தத்துவவிளக்கம்' என்ற இரு ஆன்மீக நூல்களை வெளியிட்டுள்ளார்.
இதுதவிர 'திசைமாறிய தென்றல்' என்ற நாவலை வெளியிட்ட அகில் 'கண்ணின் மணி
நீயெனக்கு' என்ற இந்நாவலை இப்போது இலக்கிய வெளிக்குள் விதைத்துள்ளார்.
இவருடைய முகவரி என்னும் கவிதைத் தொகுப்பும் 'மனம் படைத்தேன் உன்னை
நினைப்பதற்கு' என்னும் நாவலும் விரைவில் வெளிவரக் காத்திருப்பதாக
அறியமுடிகிறது. இலக்கியத்துறையில் பல பரிசுகளையும், விருதுகளையும்
பெற்றுள்ள அகிலின் இரண்டாவது நாவலான கண்ணின்மணி நீயெனக்கு என்னும்
இந்நாவல் ஞானம் பதிப்பகம் ஊடாக அண்மையில் வெளிவந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இந்நாவல் வீரகேசரி மற்றும் கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை
ஆகியவற்றில் வெளிவந்து பலரது பாராட்டைப் பெற்றது. 144
பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்நாவலின் அட்டைப் படத்திற்கு கௌதமனின்
ஓவியம் அழகு சேர்க்கிறது.
'ஒரு நீண்டகால இடைவெளியின் பின்னர் எனது தாய் மண்ணிற்கு சென்று வந்தேன்.
அந்த நினைவுகள் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகவே இந்த நாவலைப்
படைத்திருக்கிறேன்' என்று இந்த நாவலின் தோற்றத்திற்கு வித்திட்ட
காரணத்தை ஆசிரியர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
'வெளிநாட்டு மோகம்' என்பதை கருவாகக்கொண்டு புனையப்பட்டிருக்கும் இக்கதை
சாதாரணமாக எம்மண்ணில் நிலவக்கூடிய பிரச்சினைகளை சம்பவங்களைப்
பேசிநிற்கின்றன.
சேகர் கௌரியின் பல்கலைக்கழகக் காதல் கௌரியின் வெளிநாட்டு மோகத்தால்
கலைந்து போகிறது. வெளிநாடு சென்ற சேகர் குடிகாரனாகின்றான். விடுமுறையில்
தாயகம் திரும்பிய சேகருக்கு திருமணம் பேசுகிறார்கள் பெற்றோர்கள்.
கௌரியின் காதலை மறக்கமுடியாமல் தவிக்கிறான் சேகர். பக்கத்துவீட்டில்
இருக்கும் ராஜேஸ்வரியின் மகள் காயத்திரிக்கு கபிலனை திருமணம் பேசி
முடித்துள்ளார்கள். இதன்போது பள்ளித்தோழியான மகா என்கின்ற மகாலட்சுமியை
நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கிறாள் ராஜேஸ்வரி. அவளின் பிள்ளைகள்
எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள். நாடு நாடாக சுற்றித்திரியும்
அவளின் செல்வச் செழிப்பு ராஜேஸ்வரியின் மனதில் பேராசையை ஏற்படுத்துகிறது.
அது அவளை தவறான பாதையில் செல்ல வைக்கிறது. ஏற்கனவே பேசிமுடித்த தன்
மகளின் திருமணத்தைத் திட்டம்போட்டு தானே நிறுத்தி சேகருக்கு காயத்திரியை
திருமணம் முடித்து வைக்கிறாள். மகள் வெளிநாடுபோன சில மாதங்களிலே
ராஜேஸூம் வெளிநாடு போய் தான் நினைத்த, ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறாள்.
ஆனால், அங்கே தாய் பற்றிய உண்மை காயத்திரிக்கு தெரியவருகிறது. அதன்பின்
காயத்திரி என்ன செய்கிறாள்? அவளுக்கு ஏற்படும் இழப்பு, அதற்குக்
காரணமான தாய்... தாயின் நிலைமை என திருப்பத்துடன் முடிகின்றது கதை.
கதையை நேர்த்தியாக எந்த தங்குதடங்கலும் இன்றி சொல்லியிருக்கிறார் அகில்.
இவர் ஒரு கவிஞர் என்றவகையில் தலைப்பில் காணப்படும் கவிதைத்தனம் மொழி
நடையிலோ அல்லது வர்ணனைகளிலோ அதிகம் காணப்படவில்லை. அதனைக்
கையாண்டிருந்தால் மொழிநடை மேலும் மெருகேறியிருக்கும். ஒருவேளை
யதார்த்தத்தைப் பாதிக்கும் என அதனை எழுத்தாளர் தவிர்த்திருக்கலாம்.
பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார்.
பகிடிவதையின்போது பெண்களின் உணர்வுகளை சிறந்தமுறையில்
வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண்களின் உணர்வுகளை
சிறப்பாக வெளிப்படுத்தி நிற்பது பாராட்டத்தக்கது.
காதலி கௌரியின் குணம் அவளின் பிறந்த நாளுக்கு பரிசுப்பொருள்
வாங்கிக்;கொடுக்க சேகர் அழைத்துச் செல்லும் சந்தர்ப்பத்திலேயே புரிந்து
விடுகின்றது. 'வீட்டில் ஒரே பிள்ளை என்றதும் நான்தான் பெரிசா கற்பனை
பண்ணிப் போட்டன்' என்ற கௌரியின் வார்த்தைகளே அவள் வசதியான வாழ்க்கைக்கு
ஏங்குபவள் என்பதை காட்டிவிடுகிறது. பின்னால் நடக்கப்போகும் (வெளிநாட்டு
மாப்பிள்ளையை திருமணம் செய்யும்) சம்பவத்துக்கு கட்டியம் கூறுமாப்போல்
இச்சம்பவத்தை எழுத்தாளர் படைத்துள்ளார்.
சேகரின் இறந்தகால நினைவுகள் ஊடாக கௌரி – சேகர் காதலைச் சொல்வது
சிறப்பாக அதனை நிகழ்காலத்தின் பொருத்தமான இடங்களில் புகுத்தியிருப்பது
இவரின் நேர்த்தியான கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றது.
இரண்டு கதைக் களங்களைக் கொண்டுள்ளது இந்நாவல். தாயகத்தில் தொடங்கும் கதை
பாதியில் புலம்பெயர் மண்ணுக்கு (கனடா) சென்று கதை அங்கேயே முடிகின்றது.
தாயகத்தை பகைப்புலமாகக் கொண்டு நகரும் சம்பவங்களில் (கொழும்பு)
மண்வாசனையோ பகைப்புல சித்தரிப்போ புலம்பெயர் மண்ணின் (கனடா) பகைப்புலச்
சித்தரிப்புப்போல் சிறப்பாக அமையவில்லை. இதற்கு அவரின் வாழ்விடச்
சூழ்நிலையே காரணமாக அமைந்திருக்கலாம். கனடாவின் இயற்கை அழகு அழகாகச்
சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
புலம்பெயர்ந்து சென்ற முதியவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாய்
சொல்லியிருக்கிறார்.
தம் கடைசி காலத்தில் பேரப்பிள்ளைகளுடனும், பிள்ளைகளுடனும் கழிப்பதில்
சந்தோசம் காணும் பெற்றோரையும் பேரப்பிள்ளைகளைக் கழுவித் துடைச்சுக்
கொண்டு பிள்ளைகளின் எண்ணப்படி நடந்துகொண்டு இருக்க முடியாது என தனியே
வாழ விரும்பும் பெற்றோரையும் இக்கதையில் ஆசிரியர் சுட்டிக்காட்டுவது
யதார்த்தநிலை.
தாயின் செயலால் தன் தாய்மையே பறிபோன காயத்திரியின் உளப்போராட்டத்தையும்
அதற்கு தானே காரணமாகிவிட்ட குற்ற உணர்வில் நிற்கும் தாய் ராஜேஸ்வரியின்
உள்பபோராட்டத்தையும் உணர்வுபூர்வமாக சித்தரித்துள்ளார் எழுத்தாளர்.
சேகர் - கௌரி சந்திப்பு, காயத்திரி – கபில் சந்திப்பு, சேகர் -
காயத்திரி சந்திப்பு போன்ற இடங்களில் காதல் உணர்வுகளை அழகாக இயல்பாக
வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜேஸ்வரியின் பாத்திரம் கதையின் முதுகெலும்பாக இருந்தாலும் தாய்
என்னும் நிலையில் நிற்கும் அப்பாத்திரத்தின் செயற்பாடுகள்
விமர்சனத்துக்குள்ளானாலும் வியப்பில்லை. தன் சந்தோசத்துக்காக ஒரு தாய்
தன் மகளையே பலியாக்குவாளா? என்ற கேள்வி வாசகர் மனதில் நிச்சயம் எழுந்தே
தீரும். அதைவிட ஒரு கேவலமான செயலையும் தாய் செய்கிறாள். அதாவது சேகர்
வீட்டில் சேகரைத் தவிர யாரும் இல்லை என்பதை அறிந்துகொண்டு தன் மகளை
அங்கே (அதுவும் ஒரு குடிகாரனிடம்) அனுப்பிவைக்கும் செயலும் அதனைத்
தொடர்ந்து அத்தாய் புத்திமதி என்ற பெயரில் சொல்லும் வார்த்தைகளும் 'தாய்'
என்ற ஸ்தானத்தில் இருந்து அவளை அதளபாதாளத்துக்கு தள்ளிவிடுகின்றது. 'பெடியன்
தனியத்தானே நிற்கிறான். இருந்து அவனோட கதை. சமயோசிதமாக நடந்துகொள்.
குடுத்துட்டு ஓடிவராத...' என்பதும் அதனைத் தொடர்ந்துவரும் வார்த்தைகளும்
வீட்டுக்கு வந்த காயத்திரியைத் தாய் பார்க்கும் பார்வையும் தனது
திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை தாய் உணர்ந்து கொள்வதும்
தாய்மைக்கே அருவருப்புத்தரும் செயல். இப்படிப்பட்ட விமர்சனத்திற்குரிய
பாத்திரப் படைப்பை துணிச்சலுடன் ஆசிரியர் புகுத்தி இருக்கிறார். அதே
நேரம் தாய்மையின் சிறப்பை காயத்திரி மூலமும் சொல்லியிருக்கிறார். தான்
பெறாத பிள்ளை மேல் அவள் காட்டும் பாசம் உருகவைக்கிறது. ராஜேஸ்வரி போன்ற
தாய்மார்கள் சமூகத்தில் இல்லாமல் இல்லை. ஆனாலும் ஒரு படைப்பென்று
வரும்போது அவை விமர்சனங்களுக்கு உள்ளாவது இயற்கையே!
மொத்தத்தில் 'கண்ணின் மணி நீயெனக்கு' என்னும ;நாவல் மூலம் வெளிநாட்டு
மோகம் ஏற்படுத்தும் சமூக உடைவுகளையும், கலாசார மீறல்களையும், சமூகச்
சீரழிவுகளையும் எடுத்துக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். சமூகத்தின் மீது
கொண்ட அக்கறையின் வெளிப்பாடே இந்நாவல். இலக்கியவெளிக்குள் இது ஒரு
வித்தியாசமான விதைப்பு. இவ்விதைப்பு வீண்போகாது பயன்தரும் என்பதில்
ஐயமில்லை.
|