நூல் : 'அவாவுறும் நிலம்'
நூல் ஆசிரியர் : முல்லை முஸ்ரிபா
நூல் ஆய்வு: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

'குரல் கம்மியொலிக்கும் எதிர்ப்பிசைக் குருவியின் வலி மிகைத்த பாடல்கள்.'


காற்றில் மிதந்திருக்கும் கிளைகளின்இலைகள் எப்பொழுதும் வேரைத் தேடியபடியே இருக்கும்.எனச் சொல்கிறது முல்லை முஸ்ரிபாவின் அவாவுறும் நிலம். துயர் மண்டிய சுவடுகளில் காணாமல் போன காலடிகளை அவாவுறும் தன் நிலத்திற்கு சமர்ப்பணமாய் வெளிக்கொணர்ந்திருக்கிறார். தனது இரண்டாவது தொகுப்பினை. தேசிய சாகித்தியத் தெரிவில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானதோடு கொடகே விருதினையும் பெற்றுள்ளது இத்தொகுப்பு.

முஸ்ரிபாவின் முதல் தொகுதியானஇருத்தலுக்கான அழைப்பு
2003 இற்கான தேசிய மற்றும் மாகாண சாகித்திய விருதுகளைப்பெற்றுக்கொண்டது. மேலும் அதிலுள்ள மீதம் எனும் கவிதை பதினோராந் தரத்திற்குரிய பாடநூலிலும் சேர்க்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.முதற்தொகுப்பின் நீட்சி போன்ற உணர்வையே தருகிறது இத்தொகுப்பிலுள்ள ஏராளமான கவிதைகள். பேரலை ஓய்ந்தடங்கிக் கடல் ஓய்வு கொள்ள ஆரம்பித்திருக்கிற வேளையிலும் அதன் பேயாட்டக் கணங்கள் தந்த அக-புற வலி தொடர்பான வேதனைகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லையென்பதையே இது உணர்த்துகிறது.தூசு மண்டிக்கிடக்கிற கண்களால் கண்ணீரைத்தானே உதிர்க்கமுடியும்.

முன்னுரையாகச் சில வார்த்தைகள் எழுதுகிறபோது 'வலி ஒரு புறம் வெட்கம் மறுபுறம்' என்கிற கவிஞர் சேரனின் சொற்கள் 'தொழுகை வடுப்பூத்த......' எனத்தொடர்கிற கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்களின் வரிகளை சட்டென நினைவின் விளிம்புகளில் நிறுத்திப் போகிறது. குரல் கம்மியொலிக்கிற இந்த எதிர்ப்பிசைக் குருவியின் வலி மிகைத்த பாடல்களில்முதலில் வருகிற 'நரம்பு சுண்டிய யாழ்' தெருப்பிச்சைக் காரனின் காலிப்பாத்திரத்தை மனக் கண்முன் கொணர்கிறது.அடுத்து வருகிற' ஹயாத்தும்மா மற்றும் உயிர் மீதான பாடல் ஆகிய இரண்டுமே இருவேறு தற்கொலைச் சம்பவங்களின் பதிவுகள் .

'ஹயாத்தும்மா / உனது மௌத்து / எதனைத்தான் ஆயத்தமாக்கிற்று எம்மில்?' எனும் வரிகளின் முற்றுப்புள்ளிகளுக்குள்ளே, ஓயாத இழப்புகளுக்குள் நொந்துவடிக்குமெம் தாய் குலத்திற்குத் தொடராய் ஊட்டப்பட வேண்டிய சீர்மியத்திற்கான அவசியத்தைப் புதைத்து வைத்திருக்கிறார் கவிஞர். சிந்தனையை வேதனையோடு கிளறுகிற ஆழமான வரிகள்.

பால்யகாலத்தின் பசுமைநிறை நினைவுகள் பல கவிதைகளுக்குள் ஏக்கமாய் விரிகிறது.'என் வீட்டு மழை' போன்றவை இவ்வகையானவை. வாழ்வின் முரண்நிலை பற்றிச் சொல்கிறது 'முரண் வாழ்வு' தூர்க்கற்றாய் அலைகிற அரசியலைச் சபிக்கிறது 'சபிக்க பட்டதெரு' . காதலின் மென்மையோடு 'அதிகாலை பனிப்போலே சீதளித்து குதூகலிக்கிறது 'எல்லையற்ற வெளியில் கவிதைக்கு காத்திருத்தல்'

'வெறும் கோப்பையை எடுத்து செல்கிறாள்
மனைவி
முகத்தில் அயர்வின் சாயல்'

எனும் பெண்ணியம் சார் பார்வையோடு வருகிறது. 'உள்முகங்கள்.'

மேலும் நுணல்வாய், பூமியின் துறவு, தீர்வு போன்றகவிதைகளும் வித்தியாசமாக தெரிகிறது.

மாணவப்பிஞ்சுகளைப் பெருங்கல்லாய் அழுத்தும் பாடத்திட்டங்களின் பாரச்சுமையைக் கவிஞரின் ஆசிரியத்துவ அனுபவங்களோடு பேசுகிறது. 'கல் தெப்பம்'

' நீங்கள்
புத்தகப் பொதிகளை கல் தெப்பமாய்
சுமத்துகையில்
நான் எங்கனம் மிதப்பதும் நீந்துவதும்
என் கரைகளை வரைவதும்'.


இதைதான் கவிக்கோ அப்துல் ரஹ்மானும்

'புத்தகங்களே
சமர்த்தாக இருங்கள்
குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்'
என்றிருக்கிறாரோ.

மழலைகளின் ஸ்பரிசங்களோடு ஒன்றிப்போகிற கணங்கள்மிக அற்புதமானவை. குழந்தைகளின் களங்கமில்லா உணர்வுகளைப் போலவே அவை மிகப் பரிசுத்தமானவை. எத்துணை மனவழுத்தங்களையும் நொடிக்குள் நீக்கிப்போகாதோ ஒரு மழலைப் பூஞ்சிரிப்பு. தன் மடிக்குள் துளிர்த்த நிலவு தொடர்பான நினைவுகளைப் பதிந்திருக்கிறார் நிலவு துளிர்த்து அமாவாசை கருகி கவிதையில்.

மற்றுமொரு வசீகரமான கவிதை என் வீட்டு மழை.

'மாமரம் சடைத்த நடுமுற்றத்தில்
குமிழிகுமிழியாய் மழைக்கவிதை வாசிப்போம்.'


கவிஞர் சொல்வதுபோலே சின்னக்காலத்துமழை எவருக்கும் வசீகரமான பதிவுகளிலொன்றுதான்.

தொகுப்பின் தன்மையைத் தீர்மானிப்பதும் பெரும்பான்மையானதுமான கவிதைகள் இழந்து போன பூர்வீக மண் தொடர்பானது. முஸ்ரிபாவின் தன்னிலைப் பட்ட அலைந்துழல்வு தொடர்பான பத்தி என் மனசின் வரைபடமாய் எங்கள்தேசம் பத்திரிகையில் வாசித்ததுண்டு.துயரம், கோபம், ஏக்கம்,  எதிர்பார்ப்பு என எல்லாமே அடைந்து கிடைக்கிற இவ்வகையான இவரின்கவிதைகள் ரசிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்டவை.இதன் வரிகளுக்கும் வாசிப்பிற்குமான இடைவெளிகள் வலியும் துயரும் நிறைந்த பெருவெளி.சதாவும் வீசிக்கொண்டிருக்கிற அனற்காற்றில் பாலைநிலத்தின் வெம்புழுதியை அடைத்துவிடுபவை.கண்ணீருடன் குழைந்த உணர்வுகளால் மட்டுமே அவ்வெளி கடந்துபோக முடியும்.

ஆனாலும் காற்றுமண்டலம் கட்டாயப் படுத்திவைத்திருக்கிற ஈரலிப்பையும் அவை அவாவியபடியே இருக்கிறது.பசுமையை நோக்கிப் பயணப்படுகிறது.அப்பயணமானது எதிர்காலம் மீதான நம்பிக்கையை எமக்கும் ஊட்டிடத் தயங்கவில்லை.

'விடுதலையின் சொற்கள் தேய்வதேயில்லை.'
'ஆழத்துயர் சேற்றின் வேரிலிருந்து
மெதுமெதுவாய்த் துளிர்க்கிறது ஈரமான காதல் தாமரை. '


'ஒலிவந்தோப்பிலும் ஸைத்தூன் வயல்களிலும்
சிறகு சிலிர்க்கப் பறப்பாய்'.
போன்ற வரிகள் இதற்குதாரணமாய் கொள்ளத்தக்கவை.

வவுனியா அகதிமுகாம்களில் இடருறும் வன்னிமக்களின் நினைவுகளுக்காக எழுதப் பட்ட இருள்வெளியும் நாளைய சூரியனும் எனும் கவிதையில்

'உயிரீந்து வளர்த்ததான சூரியனும்
கருகிச் செத்திற்று.'


என்பார் கவிஞர்.இதையே கவிஞர் ஃபஹீமாவின் வரிகளும்

'அந்தச் சூரியன்
மூழ்கிவிட்டது'.
என்கிறது.

முகாமில் என் பேரன்
சிறுதுரும்பெடுத்து

புதிதாய் சூரியனைவரைதல் கூடும் எனும் வரிகளில் மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறது.
தொகுப்பின் இறுதிக் கவிதை மிகுந்த கவனிப்பிற்குரியது.மகிழ்ச்சியும் பசுமையும் நிறைந்த வாழ்வை வேண்டி நிற்கும் கவிஞர் மலராவின் புதிய இலைகளால் ஆதலை பெயரளவில் ஒத்திருக்கிறது புதிய வேர்களால் ஆதல் எனுமிந்தக் கடைசிக்கவிதை. நெடுநாளைய அலைந்துழல்வுக்கு முற்றுப் புள்ளியிடுகிற நேரம் ஊர்போகும் ஆவலும் கனவும் எதிர்பார்ப்புகளும் துளிர்த்திருக்கிற அபூர்வமானதோர் தருணம் பற்றிப்பேசுகிறது இக்கவிதை.

'எல்லாவரைபடங்களையும் கலந்தொரு
புதியவரைபடம் செய்தல் வேண்டுமினி'
எனும் வரிகள் அனைவராலும் உள்வாங்கப்பட வேண்டியவை. இனவாதங் கடந்த பொதுத்தேசியக்குரலை பல்லினத்தொகுதியினராகிய நாம் கவிதைகளிலும் ஒலிக்க விடவேண்டுமெனும் கவிஞரின் அவா அவரின் அடுத்ததடுத்த கவிதை முயற்சி களிலே சாத்தியமாக்கப்படலாம். 'அவாவுறும் நிலம்' தன் கனதிக்கேற்றவாறு நிகழ்பரப்பில் பேசப்படவில்லையோ என்ற ஆதங்கத்தோடுதான் தொகுப்பை மூடவேண்டியிருந்தது.




sfmali@kinniyans.net