நூல் : விழி தீண்டும் விரல்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் அமல்ராஜ்
நூல் ஆய்வு:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

ழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடிக்கிறார் இளம் பட்டதாரி ஆசிரியரான கவிஞர் அமல்ராஜ். கவிதைத் தொகுதியின் தலைப்புக்கு மிகப் பொருத்தமான அட்டைப் படத்தோடு தனது கன்னிக் கவிதைத் தொகுதியாக விழி தீண்டும் விரல்கள் என்ற கவிதைத் தொகுதியை பேசாலை அமல்ராஜ் வெளியிட்டிருக்கிறார். இளம் படைப்பாளிகளான விக்கிரம் தீபநாதன், மன்னார் அமுதன், நானாட்டான் ஜெகன், தமிழ்நேசன் அடிகளார், எஸ். . உதயன் போன்றோர்கள் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் கவிஞர் அமல்ராஜூம் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பரிபாலன சபை வெளியீடாக, 74 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 28 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

பேசாலை ஊர்க்காரி, தூரத்து வெளிச்சம், நம்பிக்கை, .வே.ரா. ராமசாமி, நீ பயணித்த சாலைகளில்..., பூமிப் பெண்ணே, அப்பா, கனி - மாங்கனி, கருவாடு, முத்துக்குமார், சிகரெட், குடை, வானத்துச் சுவருக்கு, செருப்பு, மை, கரைவலை, தமிழன், (ப்) போ(தே) (சா) என, மன்னார் மானிடரே, போர்வை, வாக்குறுதி, பொலித்தீன் பை, தமிழ் இருண்ட நாடு, சுருக்கு வலைக்கு போற மச்சான் சாதி, ஏதிலியர்கள், கற்பகத்தரு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'மன்னார் பிரதேசத்தைப் பொறுத்தவரை அதுவொரு கலை இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரதேசம். கடந்த காலத்தில் நவீன கலை இலக்கியம் வழியாகக் கலை இலக்கியப் பணிகள் செய்வதில் பின் நிற்காத ஒரு பிரதேசம். அந்த வரிசையில் விழி தீண்டும் விரல்கள் எனும் இத்தொகுப்பின் மூலம் அமல்ராஜ் இணைகிறார். இன்றைய தமிழ்க் கவிதை வளர்ச்சிப் போக்கில் புதிய தலைமுறையினர் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இப்பங்களிப்பின் ஊடாகத் தமிழ்க் கவிதை செழுமை அடைந்திருப்பது இன்னும் சிலரால் ஒத்துக்கொள்ள முடியாத உண்மையாகவே இருக்கிறது. இச்செழுமைக்கு வெறுமனே அவர்கள் புதிய தலை முறையினராக இருப்பது மட்டுமே காரணம் அல்ல. மாறாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகமும், அது கொண்டு வந்து சேர்த்த அனுபவங்களும் காரணங்களாகின்றன. ஓர் இலக்கிய உருவத்தின் செழுமை என்பது வெறுமனே அதன் உருவச் செழுமையில் மட்டுமே தங்கி நிற்பதில்லை. அதனோடு அவ்விலக்கிய உருவத்தினூடாக பேசப்படும் விடயமும் பாரிய பங்காற்றுகிறது என்பது நாம் அறிந்த உண்மை. ... மன்னார் பிரதேசத்தைச் சார்ந்த சமீப கால கவிஞர்கள் கவனம் செழுத்தாத, ஒரு சில புதிய விடயங்களைப் பற்றி அமல்ராஜ் பேசியிருக்கிறார் என்ற வகையில் இத் தொகுப்பு  நமது கவனத்தை ஈர்க்கிறது' என்று மேமன் கவி அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் மதிப்பீட்டுரை வழங்கியிருக்கும் எஸ்.டேவிட் அவர்கள் '...இக்கவிதை நூலில் உள்ள கவிதைகளின் பரிமாண வீச்சுக்களை மதிப்பீடு செய்ய உள் நுழைந்த எனக்கு கவிதைக்கு சொந்தக்காரரான அமல்ராஜின் சிவந்த சிந்தனைகள் கனிந்த உண்மையான அறிவுத்தளத்தை இனங்கான முடிந்தது. வேறு வார்த்தையில் கூறுவதாயின் அமல்ராஜின் கவிதைகளில் அமல்ராஜ் என்ற மனிதனின் மனிதத்துவப் பண்புகள் பிரதிபலிப்பதை தரிசிக்க முடிந்துள்ளது' என்கிறார்.

'... நான் ஆசிரியனாக இருந்த போதும் கவிதைத் துறைக்குள் நானொரு மாணவன் போல இருக்கின்றேன். கல்லூரிக் காலங்களில் தமிழ் நாட்டில் கல்கி, நந்தன் போன்ற இதல்களில் சில கவிதைகள் எழுதியுள்ளேன். கல்லூரி விழாக்களில் கவிதைகளை படைத்திருக்கிறேன். ஆனால் எமது நாட்டில் கவிதை எழுத முனைந்தபோதெல்லாம் அதற்குரிய சூழல் அமையவில்லை. எம்மினத்தின் துயரங்களை பக்கம் பக்கமாக எழுத முடியும். ஆண்டாண்டு காலமாக நாம் பட்ட அவலங்கள், துன்பங்கள், ஆதங்கங்கள் எல்லாவற்றையும் கவிதைகளாகக் கொட்டியிருக்க முடியும். ஆனால் தக்க சூழல் அதற்குக் களம் அமைத்துத் தரவில்லை. ... கவிதைத் துறை என்பது பெருங்கடல். அதில் இது ஒரு துளி. என் கண்கள் கண்ட விடயங்களை விரல்கள் தீண்டியிருக்கின்றன. அந்த வகையில் இப்படைப்பு  என் உன்னம் சார்ந்த, நான் நாடுகின்ற இடது சாரித்துவக் கொள்கையினை ஓரளவு தொட்டுச் செல்வதை இங்கே நீங்கள் காணலாம். இக் கவிதைத் தொகுப்பு மூலம் என் இனிய தாய் மொழி சிறப்படையுமாக இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். இறுதியாக வீழ்வது நாமாக இருந்தாலும் எழுவது தமிழாக இருக்கட்டும் என்ற அசையாத நம்பிக்கையோடு இந்தக் கவிதையைத் தொகுத்துப் படைக்கின்றேன்' என்று தனது ஆதங்கத்தையும் அதே நேரம் நம்பிக்கையையும் அமல்ராஜ் தனதுரையில் முன்வைக்கிறார்.

இத்தொகுதியில் காதல், தனி மனித உணர்வுகள், சமூகம், அழகியல், போர்ச்சூழல், மீனவச் சூழல், அகதி வாழ்வு, அரசியல், சாதியப் பிரச்சினை போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

பேசாலை ஊர்க்காரி, சுருக்கு வலைக்குப் போற மச்சான் போன்ற கவிதைகள் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற சாயலில் மிகவும் ரசனையுள்ளதாக அமைந்திருக்கின்றன.

பேசாலை ஊர்க்காரி என்ற கவிதையில் (பக்கம் 01) பேசாலை ஊர்க்காரி பேசாமப் போறியே... காளை மனசில திருக்கை வாலால குத்தியவளே...! வாவல் மீனப் போல வளவளப்பு உடம்புக்காரி சுறா மீனப் போல சூப்பரடி உன்னழகு...! நீ வளைஞ்சு நெளிஞ்சு நடக்கையில வாளை போல வளவளப்பு நீ பார்த்த பார்வை சுள்ளென்று சுங்கானாய் குத்துதடி...! என்று மீனவச் சூழலில் உள்ள விடயங்களை ஒப்பிட்டு அவற்றைப் படிமங்களாக, உருவகங்களாகப் பயன்படுத்தி மிகவும் அழகாக இக் கவிதையை முன்வைத்துள்ளார்.

இதே போன்ற சாயலில் அமைந்த கவிதை தான் சுருக்கு வலைக்குப் போற மச்சான் (பக்கம் 61) என்ற கவிதையும். சுருக்கு வலைக்குப் போற மச்சான் - வாக்கு சறுக்காம வந்திடுங்க அலவாக்கரை போல ஆறாம நானிருக்கேன்.. அந்தியில வந்திடுங்க - நேரம் பிந்திடாம வந்திடுங்க மடி நிறைய மீனைப் பிடிச்சிடுவ - இந்த மச்சா கழுத்த - எப்ப நிறைச்சிடுவ?

காதலை பாடாத கவிஞர்களில்லை என்ற கருத்து மாறி தற்போதுகளில் யுத்தத்தைப் பற்றிப் பேசாத கவிஞர்கள் நம் நாட்டில் இல்லை என்று கூறுமளவுக்கு யுத்தம் தனது அகோரத்தைக் காட்டிச் சென்றுவிட்டது. இருந்தாலும்; அதனால் ஏற்பட்ட வடுக்களும், காயங்களும் இன்னும் மாறாமல் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கின்றது. அமல்ராஜூம் நம்பிக்கை என்ற  கவிதையில் யுத்தம் பற்றி பேசியிருக்கிறார். ஆமைகள் அசுரவேகத்தில் ஓடினாலும், குயில்கள் கூடு கட்டினாலுங்கூட தமிழனின் தலையெழுத்து மாறுமா என்ற சந்தேகக் கணைகளை வாசகர்களின் நெஞ்சிலும் ஏவி விட்டிருக்கிறார். அந்த கவிதையின் இடையில் வரும் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. (பக்கம் 10)

..குண்டு வீச்சில்
குழந்தையும்
குடிசையும்
சிதறிக்கிடந்த
கோரமது
மறைந்துவிடும்
என்பதில்
நம்பிக்கையில்லை
...!

இறைவன் நமக்கு அளித்திருக்கும் கொடைகளை எண்ணிப்பார்த்து நாம் என்றாவது நன்றி செலுத்தியிருக்கிறோமா என்பது கேள்விக்குறியான விடயம். அது ஒரு புறமிருக்க இயற்கையின் நியதிகளை சர்வ வல்லமை படைத்த இறைவனைத் தவிர யாராலும் அசைக்க முடியாது என்பது உண்மை நிலையாகும். உதாரணத்திற்கு யாரும் நினைத்து மழை பெய்வதில்லை. யாரும் சொல்லி சூரியன் உதிப்பதில்லை. இந்த வரிசையில் யாருக்குமே தோன்றாத சின்ன விடயமொன்றை கருவாடு (பக்கம் 30) என்ற தலைப்பில் கூறியிருக்கிறார் கவிஞர். அதாவது உப்பு கரிக்கின்ற கடல் நீரில் பிறந்தாலும் மீன் உப்பாக பிறப்பதில்லை. அதை எடுத்து உப்பிட்டு காயவைத்தால் தான் அது உப்புக்கருவாடு எனப்படுகின்றது. இந்த விடயத்தை நறுக்கென்று சொல்லியிருக்கிறார் இப்படி.

உப்பான தண்ணீரில்
உப்பில்லா
மீன்பிடிச்சு
உப்பிட்டு
உலரவிட்டால்
கருவாடு

காலுக்கு போடுகின்ற செருப்பை அதிக விலைகொடுத்து வாங்குவோரும் எம்மத்தியில் இருக்கின்றனர்.   அதுபோல செருப்பே இல்லாமல் ஊர்சுற்றி வயிற்றுப் பசிபோக்கும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் விலைகூடிய செருப்புக்கள் காலைவாரிவிடும் சந்தர்ப்பங்களும் அமைந்துவிடுவது தவிர்க்க முடியாததாகின்றது. செருப்பு என்பது எமது கால்களுக்குரிய கவசமாக இருந்தாலும் நாம் அன்றாடம் பாவிக்கையில் அது படும் வேதனை குறைவு என்பதை பின்வரும் கவிதை வரிகள்   எடுத்துக்காட்டுகின்றன. அதாவது தினந்தோறும் பாவிப்பதைவிட எங்காவது கல்யாண வீடுகளில் செருப்புகளின் பரிதாபகரமான நிலையைப்பற்றி யோசித்திருக்கிறார் கவிஞர் அமல்ராஜ். கவிதை வரிகள் இவைதான். (பக்கம் 40)

காலுக்குக் கவசம்
கல்யாண
கச்சேரிகளிலும்
கருமாதி
வீடுகளிலும்
நீ
துவம்சம்

விஞ்ஞான வளர்ச்சி பாரிய அளவில் விருத்தியடைந்தாலும் நம்மவர்கள் அதில் எதை சரியாக புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது சிந்திக்கத்தக்க விடயம். கணனிசார் விடயங்களில் அதிக சிரத்தை எடுத்தக்கொள்ளும் இவர்கள் சமுதாய அக்கறையில் பங்கெடுத்துக்கொள்வதில்லை என்பது கண்கூடு. இன்று வைத்தியசாலைகள் உட்பட பொது இடங்களிலும் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டிருக்கின்றமை நாம் அறிந்ததே. அதற்கு மாற்றீடாக கடதாசிப்பைகளை பாவிக்கலாம் என்று கூறப்பட்டு வருகின்றது. எத்தனைக் காலங்கள் சென்றாலும் உக்கிவிடாத ஒரு பொருளாக பொலித்தீன் காணப்படுவதாலேயே இவ்வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பொலித்தீன் பைகளை உட்கொண்டு இறந்துபோன விலங்கினங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருந்தாலும் கூட, அத்தகைய சமூகத்துரோகம் செய்யும் பொலித்துPன் பாவனைகளில் இருந்து நாம் இன்னும் விடுபடவில்லை என்பது கசப்பான உண்மை. அதை எண்ணி ஆவேசத்துடன் பொலித்தீன் பை என்ற கவிதையை அமல்ராஜ் எழுதியிருக்கிறார். கவிதையின் சில வரிகள் இதோ.. (பக்கம் 59)

பாலான பாரை - நீ
சேறாக்க
வந்தாயோ?
பூக்கடையான
பூமியை
வேக்காடாக்கி
வேதனை
தர வந்தாயோ?

இவ்வாறு பல கோணங்களில் இருந்தும் சமுதாய அக்கறைப்பற்றியும், காதல், போர்ச்சூழல் மற்றும் இன்னோரன்ன விடயங்களைப் பற்றியும் சிந்தித்து கவிதை யாத்திருக்கும் கவிஞர் அமல்ராஜ் இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டு தமிழ்ப்பணி செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விழி தீண்டும் விரல்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர்
- அமல்ராஜ்
முகவரி
- 08 வட்டாரம், பேசாலை, மன்னார்
தொலைபேசி
- 077 5382544
வெளியீடு
- புனித வெற்றி நாயகி ஆலய பரிபாலன சபை
விலை
- 100/=


 

poetrimza@yahoo.com