நூல் :
'சுனாமியின் சுவடுகள்'
நூல் ஆசிரியர் :
எஸ். ஜெகன்
நூல் ஆய்வு:
வெலிகம
ரிம்ஸா முஹம்மத்
2004
ஆம் ஆண்டின் டிசம்பர் 26 ஆம் திகதி
உலகிலுள்ள மக்கள் தொகையின் கணிசமான பகுதியினரை தன் அகோரப் பசிக்குள்
இரையாக்கிக் கொண்ட நிகழ்வை நினைத்தால் இன்றைக்கும் பயங்கரமாகத் தான்
இருக்கிறது. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலத்திலும் கூட
வீடு வாசல்கள் அற்று அவதிப்படும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சம்பவம் நடந்த காலப் பகுதிகளின் ஆரம்பத்தில் மாத்திரம் அவர்களைப் பற்றி
பக்கம் பக்கமாக கட்டுரைகளும், கவிதைகளும், புகைப்படங்களும் என்று ஏராளம்
எழுதப்பட்டாலும், பேசப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் எல்லாம்
மறக்கடிக்கப்பட்டு விட்டனவோ என்னவோ? தென் மாகாணத்தின் கரையோரப்பகுதியைச்
சேர்ந்த வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட நான் நேரடியான சுனாமியின்
பாதிப்புக்களுக்கு உள்ளாகாவிட்டாலும் கூட சுனாமி விளைவித்து
விட்டுப்போன சோகங்களால் நன்கு தாக்கப்பட்டவள். ஆதலால் சுனாமியின்
சுவடுகள் என்ற இந்தக் கவிதைத் தொகுதியினுள் பொதிந்திருக்கும்
ஆத்மார்த்தமான வலிகள் என்னிலும் ஊடுருவிவிடுகிறது.
இத்தகைய விடயங்களை வைத்து நானாட்டான் எஸ். ஜெகன் தனது உணர்வுகளை
சுனாமியின் சுவடுகளுடாக தந்திருப்பது பாராட்டத்தக்கது.
அவஸ்தைகள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியரான ஜெகன் தனது இரண்டாவது
தொகுதியாக சுனாமியின் சுவடுகள் என்ற இத்தத் தொகுதியை
வெளியிட்டிருக்கிறார். கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின்
சமாசம் வெளியீடாக, 65 பக்கங்களில்
வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 52
கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
'மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளை இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு
சுனாமிப் பேரலைகள் கொடூரமாகத் தாக்கவில்லை. எனினும் தமிழர் தாயகத்தின்
வடக்கு மற்றும் கிழக்குக்
கரையோரம் இப்பேரலையின் சீற்றத்தால் சீரழிந்தமையும், அங்கு வாழ்ந்த
மக்கள் தமது இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றமையும் எம் இதயத்தை
உருக்கியதே. எனவே கவிஞர் சகோதரப் பாசத்துடன் எம் உறவுகளின்
இன்னல்களையும், அவஸ்தைகளையும் கவிதைகளாக வடித்துள்ளார்' என்று தனது
வாழ்த்துரையில் அ. பத்திநாதன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் தனது அணிந்துரையில் பின்வருமாறு
குறிப்பிட்டிருக்கிறார். 'பாரதிக்குப் பிறகு புதிய போக்கு ஒன்று
கவிதையில் தோன்றி வளர்ந்து வர அதற்குத் துணை நிற்பவர்கள் பலராயினர்.
புதுக் கவிதை என்று சொல்வது கூட அதன் அமைப்பு வடிவத்தில் பண்டைய
காலத்தில் இல்லாமல் இல்லை. கருத்தை வேகமாக சொல்ல, வேகமாக வாசகனிடம்
பதிய வைக்க புதுக் கவிதை வடிவம் துணை நிற்கிறது என்பது அதன் ஆதரவாளர்கள்
கூறும் கருத்து. ...ஆக மரபுக் கவிதையிலும் புதிய போக்குண்டு. புதுக்
கவிதையிலும் மரபின் சாயலுண்டு. ... கவிஞர் ஜெகன் தனக்கேயுரிய
பார்வையுடனும் சொல் வீச்சுடனும் மனித நேய மாண்பு கொப்பளிக்க
இக்கவிதைகளைத் தந்துள்ளமை பாராட்டத்தக்கது'
நட்பென்ற போர்வையில் நாடகமாடும் நரிகள் மலிந்த இந்த யுகத்தில் நாம்
வாழ்வதே பெரும் போராட்டம்தான். வெட்டும் குத்தும், குழிபறிப்புகளும்
அடுத்தவன் சொத்தை அபகரிப்பதும் கொடுத்த கடனுக்கு ஆப்படிப்பது
மாத்திரமன்றி, கடனைத் திருப்பிக் கேட்டால் கடன் கொடுத்தவரையே
பழிவாங்குவதும், இறுதியில் தான் கொடுத்த கடனை எப்படியேனும் பெற்றுக்
கொள்ளவதற்காய் காவல்நிலையம் வரை போக வேண்டிய சூழ்நிலையும் அன்றாடம்
நிகழ்கின்றன.
நல்லவர்களாக வேஷமிட்டுப் பழகி இடையில் நயவஞ்சகக் கத்தி வைப்பவர்களும்,
தம் தவறை மறைப்பதற்காய் நல்லவர்கள் மேல் பழிபோடும் பொய் மனிதர்களும்
தான்; இன்று பரவலாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் தான்தோன்றித் தனமாக
நடப்பது மாத்திரமன்றி நல்ல உள்ளங்களைப் பிரிப்பதற்காக சதித்திட்டங்களும்
தீட்டுகிறார்கள். உண்மையில் இவ்வாறானவர்கள் நல்லவர்களின் சாபத்தைத்
தவிர வேறெதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள்? ஆறறிவு படைத்த மனிதர்களே
இப்படி இருக்கும் போது அவர்களை சுமந்து கொண்டிருக்கும் பூமியைச்
சுற்றிக் காணப்படும் கடல் மாத்திரம் எவ்வாறு வேறுபட முடியும்? வஞ்சகம்
(பக்கம் 08) என்ற கவிதையும் கடலின் துரோகத்தையே சுட்டி நிற்கின்றது.
கவலை(க்) கட்டுக்கள் அவிழும் பொழுது புதிய கட்டுக்கள் போட்டு புலம்ப
வைத்தாய் - தாய் போல எமை சுமந்து தாலாட்டி தூங்க வைத்தாய் - அசந்து
தூங்கிய வேளை உயிர் குடித்தாய் - உப்புக் கடலே எம் உதிரம் அவ்வளவு
சுவையா? என்று வினாதொடுக்கிறார் கவிஞர் நாளாட்டான் ஜெகன்.
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்தவை வீடுகளும் காணிகளும்
மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் மேலான சொந்த பந்தங்களையும்;தான். கண்கள்
பார்த்திருக்க அலைகளின் ராட்சதப் பிடியில் சிக்கி உயிரிழந்த உறவுகளை
நினைத்து சோகத்தில் வாடும் மனிதர்கள் ஒரு புறம் இருக்க, அடித்தது
அதிர்ஷ்டம் என்று எண்ணி திறந்த வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட
திருடர்கள் மறுபுறமாய்... இது கூடப் பரவாயில்லை. சுனாமி அனர்த்தத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கென உலக நாடுகள் ஒருங்கிணைந்து அனுப்பிய நிவாரணப்
பொருட்களை நம் நாட்டு சில சுண்டெலிகள் சுரண்டிக்கொண்டதை சில பல்லவிகள்
(பக்கம் 10) என்ற கவிதையில்
இவ்வாறு கூறுகிறார்.
அலையில்
அகப்பட்ட நாங்கள்
அவதியுற்ற வேளை
பலர்
பங்கு கொண்டார்கள்
எம் சோகத்தில் அல்ல
சுனாமி நிவாரணத்தில்...
பதில் கூறு (பக்கம் 13) என்ற
கவிதையினூடும் கவிஞர் ஷஎத்தனை காதலுக்கு கவிதை சொல்லிய நீ - எத்தனை
இதயங்களுக்கு ஆறுதல் தந்த நீ - எத்தனை கண்களுக்கு கனவு கொடுத்த நீ -
எத்தனை மௌனங்களுக்கு வார்த்தை கொடுத்த நீ - அத்தனை உயிர்களுக்கும் ஏன்
மரணத்தைக் கொடுத்தாய் என்று கடலிடமே கேள்வியெழுப்புகிறார்.
சுனாமியால் வாழ்வின் ரணங்கள் (பக்கம் 24)
என்ற கவிதையில் கவிஞரின் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்.
மாமிச அரக்கியே வந்து பார் - உன் மமதைக்குப் பலியான மனித உயிர்களை -
மாடிக் கட்டிடங்களை மண் குடிசைகளை... கடலால் சூழ்ந்த கன்னித் தீவை
கடனால் சூழவைத்தாய் - சுனாமியே வந்து பார் அடுப்பில் நெருப்பு
எரியவில்லை எம் அடிவயிறு எரிகிறது - உலை கொதிக்கவில்லை எம் உள்ளம்
கொதிக்கிறது...!
ஊனம்+சமூகம் என்ற கவிதையானது (பக்கம் 39)
கலைந்து போன கனவுகளைப் பற்றிக்கூறுவதுடன் அவற்றால் தான் ஒருபோதும்
ஓய்ந்துவிடப்போவதில்லை என்பதையும் தன்னம்பிக்கையோடு கூறியிருக்கிறார்
நூலாசிரியர் நானாட்டான் ஜெகன்.
எங்கோ இருந்து ஏவப்பட்ட அம்புகளால் தமது சமூகம் எழ முடியாமல்
தவிக்கின்றபோது, தவிப்புக்களையும் தாகங்களையும் தாங்கிய தனது உள்ளம்
தளரவில்லை என்கிறார். உறவுகள் பறிபோனாலும் உணர்வுகளை இழக்கவில்லை
என்றும், கடலால் கனவுகளைத்தான் பொசுக்க முடியுமே தவிர கண்களை அல்ல
என்றும் கூறும் கவிஞர், விழுந்த அலை மீண்டும் எழுவது போல் தானும்
ஆகாயமாக எழுவதாகவும், அப்போது சுனாமி என்ன சூரியனால் கூட தன் வேட்கையை
வேக வைக்க முடியாது என்றும் கூறுவதினூடாக தன்னை மாத்திரம்
திடப்படுத்திக்கொள்வதன்றி சுனாமியினால் நொந்து போனவர்களுக்கு இதய
ஒத்தடமாகவும் இக்கவிதையை யாத்திருக்கின்றமை சிறப்பானதாகும்.
வலுவிழந்து போனேன் நண்பா (பக்கம் 41)
என்ற கவிதை சுனாமியால் இறந்து போன ஒரு நண்பனுக்காக எழுதப்பட்டிருக்கும்
விதம் எம்நெஞ்சிலும் துன்பத்தை தந்துவிடுகிறது. நீ என் அருகில்
இருக்கும்வரை வானம் எனக்கருகில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது என்றும்,
பூமி எனக்கருகில் பூத்துக் குலுங்கியது என்றும் சொல்லும் ஜெகன்,
இருவரின் இரகசியங்களையும் ஒட்டுக் கேட்கும் கட்டுமரம் உட்பட கடற்கரை
மணல் எல்லாமே நண்பனை ஞாபகப்படுத்திப்போகிறது என்கிறார். இறுதியில்
எல்லோருக்கும் பிடித்த தன் நண்பனை, ஆழிப்பேரலையும் விரும்பி கொண்டு
சென்றுவிட்டதாக கூறி எம் உள்ளத்தையும் நெகிழ்ச்சியடைய வைக்கிறார்.
கடல் அலையாய்க் காதல் (பக்கம் 59)
என்ற கவிதையில் காதலை கடலலைக்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. 'கடலலையைப்பார்
என்னைப்போலவே ஏதேதோ சொல்ல வருகிறது, ஆனால் கரை கூட உன்னைப்போலவே
கேட்காமல் போய்விடுகிறது' என்றவாறு கவிதை தொடர்கிறது. மேலும் அலை
நுரைபோல் அழுவதாகவும், அதற்கு ஒப்பீடாக நான் அழுகிறேன் கண்ணீராய்
என்றும் குறிப்பிடுகிறார். இறுதியில் அலையின் காதல் கடலுக்குள் மூழ்கி
விடுவதாகவும், தன் காதல் கனவாய் கலைந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
சுனாமி என்ற கருவை வைத்து ஒரு புத்தகத்தையே போட்டுவிடும் திறமை வாய்ந்த
நானாட்டான் ஜெகன், சமூகத்தில் மிகைந்து கிடக்கும் பல்வேறு பிரச்சனைகள்
பற்றியும் பல கவிதைத்தொகுதிகளை வெளியிடக்கூடிய வல்லமை மிக்கவராக
காணப்படுகின்றார். அவரது இலக்கியப்பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர்; - சுனாமியின் சுவடுகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - எஸ். ஜெகன்
வெளியீடு - கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம்
தொலைபேசி - 077 8062696
விலை - 150/=\
poetrimza@yahoo.com
|