நூல் : அக்குரோணி  (கவிதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர் : மன்னார் அமுதன்
நூல் ஆய்வு:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்                                                  


ன்னார் அமுதன் எழுதிய அக்குரோணி என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் விட்டு விடுதலை காண் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே மன்னார் எழுத்தாளர் பேரவை வெளியீடாக, 86 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 50 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இத்தொகுதியில் தமிழ்மீது கொண்ட பற்று, மானிட நேயம், ஆன்மீகம், காதல், சமூகம், தனி மனித உணர்வுகள், போர்ச்சூழல், அகதி வாழ்வு, அரசியல், சாதியப் பிரச்சினை போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன. கவிஞர் மன்னார் அமுதன் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் போன்ற இரு வடிவங்களிலும் தனது கவிதை உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன் ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஊரின் பெயரையும் இணைத்து மன்னார் அமுதன் என்ற பெயரில் எழுதி வருகின்றார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளர்கள் வரிசையில் மன்னார் அமுதனுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது.

'இலக்கிய வடிவங்களில் ஒரு மொழியின் உச்சத்தை உணர்த்தக் கூடியது கவிதையே. கவிதையைச் சிறப்பாகக் கையாளக் கூடிய கவிஞர்களும் உள்ளனர். கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மாத்திரம் உள்ள கவிஞர்களும் உள்ளனர். கவிதையை முழு ஆக்கத்திறனோடு படைக்க முயலும்போது அம்முயற்சி வெற்றி பெறும். உள்ளார்ந்த ஆக்கத்திறனைக் கலைத்துவத்தோடு வெளிப்படுத்தும் போது சிறந்த இலக்கியப் படைப்புக்கள் உருவாகும். அதற்குப் பறந்த வாசிப்பும், பயிற்சியும் உறுதுணையாக அமையும்.

இலங்கையின் சிறந்த கவிஞர்களாக சுட்டக்கூடிய மஹாகவி, முருகையன், நீலாவணன் போன்றோர் மரபுக்குள் புதுமை செய்தவர்கள். அதே வேளை, புதுக் கவிதையைச் சிறப்பாகக் கையாளத்தக்க சிலரும் உள்ளனர். ஓசை பிழைக்காமல் எழுதிவிட்டால், அது மரபுக் கவிதையாகிவிடும் என்று நினைத்தலும் கூடாது. கவிஞனின் பாடுபொருள், அவனின் முழு எழுத்தாளுமை கலந்து, கலைத்துவத்துடன் வெளிவருதல் வேண்டும். மன்னார் அமுதனால் சாதிக்க முடியலாம் என்று கருதுகிறேன்' என்று கலாநிதி துரை மனோகரன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேமன்கவி அவர்கள் தனது உரையில் பின்வருமாறு கூறுகிறார். 'மன்னார் அமுதன் இன்று இலக்கியச் சூழலில் வேகமாய் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இளைய படைப்பாளி. இவரை இளைய தலைமுறையின் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவராகவே நான் பார்க்கிறேன். மன்னார் அமுதனின் விட்டுவிடுதலை காண் எனும் முதலாவது தொகுப்பிலிருந்து இரண்டாவது தொகுப்பான அக்குரோணி எனும் இத்தொகுப்பு வேறுபட்டு நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது. காலங்காலமாக... சொல்லப்பட்டு வரும் தமிழ்மொழி கொண்டிருக்கும் நெருக்கடியை மனங்கொண்டும் எழுத முனைந்த மன்னார் அமுதன் தமிழ் சமூகத்தின் வீழ்ச்சியைப் பற்றியும், தமிழ்மொழி எதிர்கொண்ட ஆபத்தினைப் பற்றியும் விஷேடமாக பேசியிருக்கிறார் என்பதே அவரது அக்குரோணி கொண்டிருக்கும் கவனத்திற்குரியதொரு விடயமாகும்'.

மன்னார் அமுதனைப் பற்றி, எஸ்.ஏ. உதயனின் கருத்து பதிப்புரையில் கீழுள்ளவாறு அமைந்திருக்கிறது.

'மன்னார் அமுதன் தனது கவித்துவ வீச்சினை சற்று நீளமாகவே வீசியபடியால் தான் இன்று மன்னாரின் முகவரி தலைநகரிலும் வாசிக்கப்படுகிறது. பட்டதும், சுட்டதுமான ஓர் இனத்தின் வீழ்ச்சியோடு தன் கவித்துவ வேட்கையில் இந்த கவிஞரும் மரித்துவிடாது, மீண்டு எழுகின்ற தார்மீக உணர்வுகளைத் தமது அக்குரோணி கொண்டு ஆழமாகவே விதைத்திருக்கிறார்.'

மன்னார் அமுதன் தனது உரையில் 'இன்றுவரை வெளிவருகின்ற அனைத்து இலக்கிய நூல்களும் கலை வடிவங்களும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் விளிப்புணர்வூட்டக்கூடிய கருத்துக்களையே மையக்கருக்களாகக் கொண்டுள்ளன. அவற்றை நாம் படிக்கிறோமா? அவற்றின் படி நடக்கிறோமா? இலக்கியமென்பது நமது சமூகத்தை இருக்கும் நிலையில் இருந்து ஒருபடி உயர்த்துவதற்காகவே அன்றி தாழ்த்துவற்காக அல்ல. கலை இலக்கிய அமைப்புக்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர்கள் உருவாக்கும் புதிய இலக்கியக் கொள்கைகள் முழுமையான விளக்கத்துடன் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்படிச் சென்றடையாவிட்டால் இலக்கியமும் மேல் நாட்டு நாகரீக மோகம் போன்ற ஒரு பகட்டான போதையாகி விடும்...' என்கிறார்.

வரம் தா தேவி என்ற கவிதையில்

ஆழி தமிழ்மொழி - அதன்
அடி நுதல் அறியேன்
பாடிப் பரவசம் கண்டதால் நானும்
பாவினைத் தொழிலாய் ஆக்கினேன் தேவி

என்று குறிப்பிடுகிறார். மன்னார் அமுதன் தமிழ் மீது கொண்ட பற்றைத்தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது. வரம் தா தேவி, தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும், தமிழாய்... தமிழுக்காய்... போன்ற கவிதைகள் தமிழின் பெருமை பேசுவதாய் எழுதப்பட்டு வாசகரின் கூடுதல் கவனத்தை ஈர்த்து விடுகின்றன.

நான் மனம் பேசுகிறேன் என்ற கவிதையில் மனித மனம் பேசுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பலவித எண்ணங்களைக் மனது கொண்டிருந்தாலும் மனிதன் அதை நிறைவேற்ற விடுவதில்லை. இறுதியில் மனிதன் நல்லவனாகவே மரித்துப்போக, மனம் மாத்திரம் நிறைவேறாத ஆசைகளுடன் வலம் வருவதாகக் கூறுகிறார் அமுதன். அதை பின்வரும் கவி வரிகளில் காணலாம்.

அன்றும் அவன்
நல்லவனாகவே
இறந்து விடுவான்
நிறைவேறாத ஆசைகளுடன்
வெளியில் வலம் வருவேன்

கவித் துளிகளாக எழுதப்பட்டிருக்கும் சில கவிதைகளில் ஏழ்மை என்ற கவிதையானது, வர்க்கப் பேதத்தை சுட்டிக் காட்டுவதாகவும், உழைப்பின் பெருமை பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. காசு தேவை என்ற காரணத்துக்காக வண்ணச் செருப்புக்களைக் கூவி விற்கும் சிறுவன், அவன் காலில் ஒரு செருப்பில்லை என்ற சிறிய விடயத்தைத்தான் அழகாக ஏழ்மை என்ற கவிதையில் இவ்வாறு தொட்டுக் காட்டியிருக்கிறார்.

வண்ண வண்ணச் செருப்புக்களைக்
கூவிக் கூவி விற்கிறான்
வெறுங் கால்களுடன்!

இது தான் காதலோ?, ஊரறியும்... உறவறியும்... நீயறியாய்... பெண்மனமே, கூதலும்... காதலும்..., இரவினில் பேசுகிறேன், சிரட்டையில மண் குழைத்து, உன் நினைவோடு... நானிங்கு..., மலரும் நம் காதல், காதல் கதை... இது மானிட வதை..., என் செல்லமே, பிரிவாற்றாமை, யாதுமாகி நிற்கின்றாய்..., போன்ற காதல் கவிதைகளும் இத்தொகுதியில் இடம்பிடித்துள்ளன. உதாரணமாக இது தான் காதலோ? என்ற கவிதையின் சில வரிகள் இதோ..

கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை - இன்றோ
மௌனம் காக்கிறாய்
வலிக்கிறதே!!!

மேலும் சிரட்டையிலே மண் குழைத்து என்ற கவிதையில் காதல் அழகாக கூறப்பட்டிருக்கிறது. சிறுவயதில் இருவரும் ஒன்றாகத் திரிந்ததையும், மரவள்ளி இலைகளை மாலையாக்கி விளையாட்டாக தாலி கட்டியதையும் தாம் காதல் புரிந்த பிற்காலங்களையும் பற்றியே இக்கவிதையில் பேசப்படுகிறது. இறுதியில் காதல் முறிந்துபோக சிறுவயதில் கூட இருந்த கரும்பும், அடுப்பும், நெருப்பும் அப்படியே இருக்க, பெண்ணோ கணவனுடனும், குட்டி மகனுடனும் வாழ்வதாக இக்கவிதை நிறைவு செய்யப்ட்டிருக்கிறது.

சுவரின்றி வீடு கட்டி
நெருப்பின்றி அடுப்பு மூட்டி
சிறட்டையிலே மண்குழைத்து
சோறென்று உண்கையிலும்...

எனத் தொடர்ந்து இறுதியில் இன்னொரு சிறுவனும் தனது குட்டித் தோழியோடு மண் குழைப்பதைப் பார்த்து ஏங்குவது போல் அழகிய மொழிநடையில் கூறப்பட்டிருக்கிறது.
கரைகளுக்கப்பால் என்ற கவிதையில் அகதிகளின் வாழ்க்கைப் பற்றிய விடயம் சொல்லப்பட்டிருக்கிறது. யுத்தம் தந்து விட்டுப் போன எச்சங்களாக வாழும் அவர்களின் அவல வாழ்க்கை கவிஞரின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் இந்த வரிகளில் புரியக்கூடியதாக இருக்கிறது.

காத்திருக்கும் அகதிக்கு
ஒத்தடமாய் இதமளிக்க
இன்றாவது கரை தொடுமா
கட்டு மரங்கள்

நாகரீகம் எவ்வளவு தான் வளர்ச்சியடைந்தாலும் பழைமைவாதிகளின் சாதிய சிந்தனை இப்போதும் முற்றாக ஒழிந்து போகவில்லை. காலத்துக்கேற்ப மாறும் உலகினில் மாறாததொரு விடயமாக சாதியம் காணப்படுவது துரதிஷ்டமேயாகும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டினால் தத்மது இனங்களுக்குள்ளேயே எத்தனையெத்தனை பிரிவினைகள்? போராட்டங்கள்? அவற்றையெல்லாம் கண்டித்து எழுதியிருக்கும் அமுதனின் சாதீ.. தீ... தீ... என்ற கவிதையில் சாதியால் நாம் சாதித்ததென்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சாதி சாதி சாதியென்று
சாவ தேனடா - சாதிச்
சண்டையினால் நீயும் நானும்
சாதித்ததென்னடா?
குளிப்பதற்கும், கும்பிடவும்
தனியிடங்களா? - நீரைக்
குவளையிலே குடிப்பதற்கு
இருமுறைகளா?

இவ்வாறு மனித வாழ்வின் அனைத்து பக்கங்களிலிருந்தும் சிந்தித்து சமூகம் பற்றியும், காதல் பற்றியும், போர்ச்சூழல் மனதில் விதைத்துச் சென்ற காயங்கள் பற்றியும் இன்னும் பல விடயங்கள் பற்றியும் மிக அழகாகவும், காத்திரமாகவும் எழுதியிருக்கும் அமுதனின் தமிழ்தொண்டு சிறப்பாய் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர்; - அக்குரோணி (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - மன்னார் அமுதன்
வெளியீடு - மன்னார் எழுத்தாளர் பேரவை
தொலைபேசி - 0714 442241
மின்னஞ்சல் முகவரி - amujo1984@gmail.com
விலை - 250/=



poetrimza@yahoo.com