நூல் :
ஊற்றை மறந்த நதிகள்
தொகுப்பாசிரியர் :
சுலைமா சமி இக்பால்
நூல் ஆய்வு:
கிண்ணியா எஸ். பாயிஸா அலி
பெண்மையின் அகவுலகினைப் புரிந்து கொள்ள உதவும்
ஊற்றை மறந்த நதிகள்
கடந்த
நவம்பரின் இறுதி வாரம். மிக்க அன்புடன் சோதரி பாயிஸா அலிக்கு என்ற
முத்தான இருவரிகள் பதிந்த சகோதரி சுலைமா சமி இக்பால் அவர்களின் ஊற்றை
மறந்த நதிகள் நாவல் கரங்கிட்டிய வேளை அதனைப் பிரிக்கக் கூட
முடியாதளவிற்குப் பெருஞ்சுமையாய் அழுத்திக் கொண்டிருந்தது இறுதித்
தவணைப் பரீட்சை விடைத்தாள் குவியல்கள்.
ஒருவாறு எல்லாம் முடிந்து நாவலைக் கையிலெடுத்து ஒவ்வொரு பக்கமாய்
புரட்டப் புரட்ட நதியைப் போலவே தங்குதடையின்றிப் பாயுமவரது மொழியும் கதை
சொல்லும் பாங்கும் இதுதான் அவரது முதல் நாவல் என்பதையே என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாதிருந்தது.
தர்காநகரைப் பிறப்பிடமாகவும் மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரி
சுலைமா மூன்று தசாப்தங்களாக எழுதிவருபவர்.ஏற்கனவே மூன்று சிறுகதைத்
தொகுதிகளை வாசகர் தளத்திற்குத் தந்தவர்.ஏராளமான இலக்கியப் போட்டிகளில்
பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றெடுத்தவர். இந்த நாவல் கூட இந்தியப்
பதிப்பகமொன்றினால் நடத்தப் பட்ட நாவல்போட்டியில் தெரிவுசெய்யப் பட்ட
நாவல்தான். தேசியசாஹித்தியக் குழுவினால் இறுதிசுற்றுக்கும் தெரிவு
செய்யப் பட்டிருந்தது. இவ்வாறாக முதல் நாவல் முயற்சியே சர்வதேசப்
புகழைப் பெற்றுக் கொடுத்திருப்பது இவரின் எழுத்தாளுமைக்குத் தக்க சான்று
என்றுதான் சொல்ல வேண்டும்.
நூலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதாகவும் கனதி சேர்ப்பதாகவும் பிரபல
எழுத்தாளர்களான நாகூர்கனி, திக்குவல்லை சப்வான், புர்கான் பீ இப்திகார்
ஆகியோரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. கணவனில் தீரா அன்பும்
குடும்பத்தில் நிறைவான பற்றும் பாசமும் இறையுணர்வும் கொண்ட அப்பாவிப்
பெண்ணொருத்தி தன் கணவனாலும் அவனின் குடும்பத்தாலும் எவ்விதம் ஏமாற்றப்
படுகிறாள்? தன் வாழ்வை சிதைத்த அவர்களை, சின்னத்திரைகளுக்குள் வன்மம்
மிகைத்த முகங்களோடு சதாவும் அலைகிற வில்லிகளைப்போல பழிவாங்கப்
புறப்படுகிறாளா இல்லை, தன்னை ஒரு புழுவிலும் துச்சமாய் மிதித்துத்
துவைத்தவர்களையே பொங்கும் தாய்மையுணர்வோடு மன்னித்துமீண்டும் ஏற்றுக்
கொள்கிறாளா? என்பதுதான் ஊற்றை மறந்த நதிகளின் கதைக்கரு.
தன் பேர்சொல்லும் வாரிசுகளைப் பெற்றுத் தந்ததோடு, சுகதுக்கங்களில்
இரண்டறக் கலந்து பொருளாதார இதர துறைகளிலும் தன் வளர்ச்சிக்காய் உழைத்த
அன்புத் துணையாள் நோயில் நொந்துதவிக்கிற கணங்களில் அவளுக்கு ஆறுதல்
தராமல் இன்னொருத்தியோடு உல்லாசங்காணும் கணவன், எல்லாம் இழந்து
ஊனமாய்திரும்பிவருகையில் அரவணைத்துக் கொள்ளும் அவளின் அன்பை, பாசத்தை
இபரிவைச் சுற்றிப் பாய்கிற நதியின் கரைகளில் படரும் வெண்ணுரைகளின்
தண்மைக்குள் வெம்மை களைந்து பூரிக்கிறது பூமி.
ஆனாலும் நாவலின் இறுதிப் பக்கங்களில் அன்சார் , பஸ்லியா போன்ற
துர்மனங்களின் அவலமான முடிவுகளின் மூலம் தெய்வமும் இன்றே
கொல்லுமென்பதைநிரூபித்துச் செல்கின்றது இந்நாவல். இது வாசகருக்கு
நிறைவைத் தருகிற விடயம்.
தர்காநகர், பாணந்துறை, களுத்துறையென சம்பவங்கள் பரவுகிற வேளையில்
உரையாடல்களுக்குள் விரிகிற தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழிக்குள்,
மண்வளச் சொற்களுக்குள் மணம் வீசும் கலாசார, பாரம்பரிய பழக்கவழக்கங்களை,
சடங்கு சம்பிரதாயங்களை எவரும் வாசித்து சுவாசித்து மகிழ்வர்.
உண்மையில் பெண்மையின் அகவுலகம் மிகவும் பரந்தது, விரிந்து விசாலித்தது.
அறிவும் உணர்ச்சியும் ஒருங்கே பிணைந்து நிற்பது. பரவலான சமூகக்
கணிப்பீடு போல என்றைக்குமே அது சமையற்கட்டுக்குள்ளாகவே
தன்னைச்சுருக்கிக்கொள்வதில்லை. இந்நாவலூடே சகோதரி சுலைமா சமி
சொல்லியிருக்கிற அநேக விடயங்கள் இதற்குத் தக்க சான்று பகரக் கூடியவை.
இஸ்லாமிய நாவல்களின் வரவு குறைவாக இருக்கிற நிகழ்தருணங்களில் சுலைமா
போன்ற பெண்படைப்பாளிகள் உருவாக்கப் படுவதன் மூலம் தமிழிலக்கியம்
முற்றிலும் புதிதான கிளைகளை, புதிதான பரிமாணங்களைத் தனக்குள்ளே
கண்டடைதல் கூடும்.
இச்சந்தர்ப்பத்தில், சகோதரிக்கும் அவரது வாழ்வோடும் எழுத்தோடும் ஒன்றிப்
பயணிக்குமவர் துணைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
sfmali@kinniyans.net
|