நூல் :
நீலாவணன் காவியங்கள் (கவிதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர் :
கவிஞர் நீலாவணன்
நூல் ஆய்வு: வெலிகம
ரிம்ஸா முஹம்மத்
கவிஞர்
நீலாவணன் 1931 இல் பிறந்தவர்.
பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் 1952
இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். அன்னார் இயற்கை எய்தும் வரை ஒரு
கவிஞராகவே வாழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கியத் துறைகளில் அவரது
பங்களிப்பு விரவிக் காணப்பட்டிருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக நிலை
நிறுத்தி இலக்கிய உலகுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். ஈழத்து
கவிதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பெரிய நீலாவணையிற்
பிறந்தவரான கேசகப்பிள்ளை சின்னத்துரை ஆகிய இவர் ஊரின் மீதுகொண்ட பற்றுக்
காரணமாகவே நீலாவணன் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்தார்.
நீலாவணன் காவியங்கள் என்ற தொகுதி நன்னூல் பதிப்பகத்தினூடாக 112
பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. இந்த நூல் கவிஞர் நீலாவணனின்
மூன்று காவியங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பட்டமரம், வடமீன்,
வேளாண்மை ஆகிய காவியங்களே அவையாகும். நீலாவணனை நிலவுக்கு ஈந்த அவர்
தாயார் தங்கம்மா தாளடிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்
நூலுக்கான பதிப்புரையை கவிஞர் நீலாவணனின் மகனான திரு. எஸ். எழில்வேந்தன்
வழங்கியுள்ளார். மிகப் பொருத்தமான முறையில் இரட்டை மாட்டு வண்டியில்
நெல்லு மூடைகளை ஏற்றிச்செல்லும் காட்சி நூலின் முகப்போவியத்திற்கு அழகு
சேர்த்திருக்கின்றது.
அண்ணன் நிலாவணனுக்கு என்ற தலைப்பில் திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள்
தனதுரையில் கவிஞர் நீலாவணன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'நம் காவிய மரபுகள் எப்படி இருந்தாலும் அவைகளை அப்படியே தூக்கி
வைத்துவிட்டு நவீன வாழ்வின் கதையை யதார்த்தமாகவோ குறியீடாகவோ செய்யுளில்
வடித்துக் காட்டிய மூவர்களில் நீயும் ஒருவன். மூத்தவர் மஹாகவி அடுத்தது
நீயும் முருகையனும். உன் வழியும் ஒருவிதமான கதை கூறும் காவியப்
பொலிவுடைய நெடும்பாடல்தான். உங்கள் காவியங்களைக் கதைப் பாடல்கள் என்றும்
சொல்லலாம். மரபுக் காவியங்களில் உள்ளது போலவே நவீன காவியங்களிலும் கதை
பிரதான அம்சம். கதையின் சரடு இல்லாமல் காவியப் பொருள் விரியாது. உனது
காவியங்களில் மூத்தது பட்டமரம். 1956
வாக்கில் எழுதியிருப்பாய். அடுத்தது
வடமீன். பட்டமரத்திலிருந்து வடமீன் பெற்றுள்ள பாய்ச்சலுக்குக் குறைந்தது
ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். வேளாண்மை அறுபதுகளின் நடுப்பகுதியில்
தொடங்கப்பட்டு அடுத்த பத்து ஆண்டுகளின் பருவங்களில் வளர்ந்திருக்கும்'.
பட்டமரம் காவியம் 39
விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. பண்ணையாரிடம் பணிபுரியும் பரந்தாமன்
பண்ணையாரின் மகளான பத்மாவைக் காதலிக்கிறான்;, அதனை அனுமதிக்காத
பண்ணையார் பரந்தாமனைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப்
புதைத்துவிடுகின்றார். பண்ணையாரின் மகளும், பரந்தாமனின் காதலியுமான
பத்மா கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். இவற்றைக் கண்ட
பட்டமரம் ஒன்று கதை சொல்வதாகவே இந்த பட்டமரக் காவியம் அமைந்திருக்கிறது.
இரசனைக்காக ஒரு சில வெண்பாவை இங்கு நோக்கலாம். (பக்கம் 06)
"பரந்தாம னுங்களது பாட்டைப் படித்தா(ல்)
இரங்காதாருள்ள மிரங்கும் - பறந்தோடிச்
சென்று தவம் நீங்கள் செயவேண்டா மிங்கேயே
என்று மிருப்போ மிணைந்து"
பத்மா வுரைத்தாள் பரந்தாமன் கேட்டதனைப்
"பத்மா விதென்ன பரிகாசம் - பித்திலையே!
ஏழைக் கணக்கனுக்கு ஈவா ரெவருன்னை
நாளை யெனக்கு நமன்!"
"ஏழை பணக்கார னில்லையன்பா! காதலுக்கு
கோழைபோன் றெல்லாங் கூறாதீர் - ஏழைதான்
எட்டி! மரமதனை ஏற்றே அரசொன்று
ஓட்டி வளர்த்திருப்ப தோர்!
அடுத்தது வடமீன் காவியம். இக்காவியம் 47
விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. தனது ஊரிலிருந்து கொழும்புக்கு வந்து
குடியேறிய தம்பதிகள் பற்றிய கதைதான் வடமீன் காவியம். கணவன் தன் வீட்டில்
வாடகைக்கு இருக்கும் இளைஞனோடு தொடர்புபடுத்தி தன் மனைவியை
சந்தேகிப்பதும், பின்னர் எப்படியோ பிரச்சினை தீர்வதுமாக இக்காவியம்
அமைந்துள்ளது. மாதாந்தம் சம்பளம் பெறுவோரின் திண்டாட்டங்கள், சிக்கல்கள்,
போராட்டங்கள் இக்கதையினூடு நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்காக
ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். (பக்கம் 14)
'பட்டிக்காட்டாளே, ஈது
பாராளு மன்றம் என்னுங்
கட்டிடம் கோட்டைப் பார்த்துக்
கடவையில் நடவும்; நில்! இம்
எட்டிவை காலை: 'காலான்'
இடறுதோ? கடவுளே... சீ!
கட்டதை இறுக்கி; 'கோல்பேஸ்'
கடற்கரை இதுதான் கண்ணே!
இறுதியாக வேளாண்மைக் காவியம். இது கவிஞர் நீலாவணனின் கடைசிக்
காவியமாகும். இக் காவியத்தின் படலங்களுக்கு கவிஞர் மிகப்பொருத்தமாக
குடலை, கதிர்ப்பருவம் எனத் தலைப்பிட்டுள்ளார். குடலைப் பருவமானது
பல்வேறு தலைப்புக்களில் 148
விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது. இது போலவே கதிர்ப் பருவமும்
பல்வேறு தலைப்புக்களில் 125
விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது.
வேளாண்மைக் காவியத்தில் உதாரணத்திற்காக சிலதைப் பார்ப்போம்.
ஆரங்கே? பொன்னம்மா உன்
அடுப்படி அலுவல் ஆச்சா?
நேரமும் கடந்து போச்சே!
நீ என்ன செய்கின்றாய் போய்ச்
சோறெடு, சிவசிவா... ஏய்
சுரைக் காயை என்ன செய்தாய்?
நீறினை நெற்றியிட்டு
நெஞ்சினை வயலில் விட்டுச்
சோறொடும் மீனைப்பிட்டுச்
சுவைக்கின்றார் கந்தப்போடி
சோக்கான கறிகா! தோலிச்
சுண்டலில்வை: முன் னால் நான்
கேட்காமல் அள்ளி வைப்பாய்,
கிழவனாய்ப் போனேன் பாரு!
காக்கையேன் பகல் முழுக்கக்
கறுபுறுக்கிறதோ? சேதி
கேட்கவோ, வீட்டுக் காரும்
கிளை வழி வருகின் றாரோ?...
ஆனாலும் இது ஒரு முற்றுப்பெறாத காவியமாக எழுதப்பட்டிருப்பதாகவே கவிஞர்
சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
எவ்வாறாயினும் இதனை படித்து பயன்பெற வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும்
கடமையாகும். இந்த அற்புதமான காவியத்தை நீங்களும் படித்து பயன்பெற உங்கள்
பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்!!!
நூல் - நீலாவணன் காவியங்கள்
நூலாசிரியர் - நீலாவணன்
வெளியீட்டாளர் - எஸ். எழில்வேந்தன்
தொலைபேசி - 0777 313720
விலை - 300/=
poetrimza@yahoo.com
|