உடையக் காத்திருத்தல்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ளிமையான மொழியும் தன்னுணர்வு சார்ந்ததுமாய் கிராமியமணம் குன்றாமல் ஜொலிக்கும் கவிதைகள் கண்ணுக்குச் சற்றும் புலப்படாமல் மண்ணுக்குள் புதைந்து வாழும் மண்புழு தொட்டு கடலின் மிக ரகசியமான புதர்களில் நீந்தும் மீன் கூட்டங்கள் வரையும் நொடியில் உடையக் காத்திருப்பவைகள்தான் எனச் சொல்லும் கவிஞர் ஜமீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பே உடையக் காத்திருத்தல்.

1993 இல் சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கும் கவிஞர் ஜெமீலின் முதல் கவிதைத்தொகுதி தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள் யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும் தடாகம் இலக்கியவட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றிருப்பது குறித்துச் சொல்லப்படவேண்டியவை.

தென்னிந்தியப் பதிப்புகளுக்கு நிகரான தளக்கோலம். பிளவுகள் நிறைந்த கற்சுவரும் குருதி கசியும் ஒற்றைவிழியோடான பெண்ணின் பாதிமுகமுமாய் கவிஞர் நவாஸ்சௌபியின் அட்டை வடிவமைப்பு தலைப்போடு வெகுவாய் ஒன்றிநிற்கிறது.

உள்ளே
60 இற்குமதிகமான கவிதைகள் எளிமையான மொழியும் பரவலான களமும் தன்னுணர்வு சார்ந்துமாய் கிழக்கின் கிராமியமணம் குன்றாமல் ஜொலிக்கின்றன.

யுத்தம் தீர்ந்துபோனதற்கான ஆதாரங்களை ஊடகங்கள் மாறிமாறி முன்வைத்தபோதிலும் அது தந்த மாறாவடுக்கள் பாதிக்கப்பட்டோர் மனசை விட்டு அகலுவதாயில்லை.

கவிஞர் ஜமீலின்
• கூட்டி அள்ள முடியாதபடி சிதறித் தொங்கும் பள்ளிச்சிறார் பிணங்களையும்....
• அதற்குள் வெடித்துச் சிதறுகிறது பேருந்து....
• துப்பாக்கி இரைச்சலில் கிழிந்து பறக்கின்றன பூக்கள்....
• ஒரே இரவில் நூற்று மூன்று பேரைக் கொன்று குவித்த குரூரத்தை....
• புதைகுழிகளின் காடாகிறது பூர்வீக நிலம்....
     போன்ற வரிகள்கூட இதற்குச் சான்றுதான்.

உம்மா எனும் கவிதை அவலட்சணங்களுக்குள் மறைந்திருக்கும் தாய்மையின் மிக உன்னதமான பண்புகளிலொன்றான தியாகம் பற்றிப் பேசுகிறது. பெண்மையின் மெல்லிய உணர்வுகள் அவர்தம் அடிமைத்தளை, சுயபரிவு, ஆதங்கம் பற்றியெல்லாம் தன்மையில் பேசியிருப்பது வியப்பிற்குரியது. எதிர்ப்பாலினை தன்னிலைப்படுத்திப் பேசும் கவிதைகள் குறைவுதானே. அதிலும்

• என் நெடுந்துயர் நிர்க்கதி பற்றி விபரித்தபோது நீயென் உடலை மட்டுமே குறிவைத்துப் பேசினாய்...
•தெருநாய்களது வன்மங்களாலும் வக்கிரப் பார்வைகளாலும்
  விரட்டிக் குதறப்படுகிறது என் தாவணிக்காலம்...
• என் தரப்பின் சுயம் மட்டும் நசிந்தே கிடக்கிறது...
• பட்டப் படிப்புக்குக் கொட்டிய காலத்தையும் காசையும்
   சிறுகச் சிறுகச் சேர்த்திருந்தால் நிச்சயம்
  அவனை வாங்கி வாசற்படியில் கட்டிப் போட்டிருக்கலாம்.. .


எனப் பெண்வலி பேசுகிற இவர் வரிகளில் பாசாங்குகளில்லை. மேலும்

• பருவப் பெண்களின் கன்னக்குழிகளில் காணாமல் போய்விடுகிறேன்....

எனும் மென்மையான வரிகளில் சுயம் பாடத் தவறவுமில்லை.

வானத்தைத் துளைத்துக் கொண்டு விரையும் தற்கால விலைவாசி பற்றி ஆதங்கிக்கிறது ஒறுப்பு கவிதை. மேலும். சமூகநீதி இயற்கை அறம் பற்றியெல்லாம் கொஞ்சமாய் ஆயினும் வெகு அழுத்தமாய் சுட்டிப் போகின்றன சில கவிதைகள்.

இவைகளை விடவும் தொகுப்பில் எனை அதிகம் பாதித்தவை சாச்சாவின் ஆடுகள், சித்திரவதைக்காலம், கல், முன்பள்ளிப்பாடல், குட்டிநட்புக்காலம், காடு, பிரம்பு, அடையாளம், தத்தெடுத்தல் போன்ற கவிதைகளுள்ளிருந்த சில பரிதாபமான வரிகள்.

கவிஞர் ஜெமீல் ஆசிரியப்பணி புரிபவர் போலும் குழந்தை உளவியல் பற்றிய நல்ல புரிதலோடு பேசுகிறார்.

குழந்தையர்தம் உண்மையுலகிற்கும் அதன் கற்பனையுலகிற்கும் தெளிவான வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியாதது பிள்ளைப் பருவம். உடல், உள, சமுக, மனவெழுச்சி, மொழிவளர்ச்சி, விளையாட்டுத்திறன், அறநெறி வளர்ச்சி என்பன வளர்ச்சிபெறத் தொடங்கும் இப்பருவத்தில் ஒவ்வொரு குழந்தையினதும் குடும்ப, பள்ளி, சமூகச்சூழல் பாதுகாப்பும் அரவணைப்பும் நிரம்பியதாகக் காணப் படவேண்டியது மிக மிக அவசியமாகும். இதுவே அப்பிஞ்சு மனதின் பெருத்த எதிர்பார்ப்புங்கூட.ஆனாலும் மேற்சொன்ன குடும்ப, பள்ளி, சமூகச்சூழலில் இவ்வரவணைப்பு மறுக்கப் படுவதும் அப்பிஞ்சுகள் குரூரமான மனக்காயங்களுக்கு உட்படுத்தப் படுவதும் பெருங்கொடுமை.

பிரம்பாய் மாறி இவர் பேசுகிற

• ஒரு காட்டுமிராண்டியிடம் சிக்கி சிலரின்
   வகுப்பறைக் கனவுகளைச் சீரழித்தபோது....


என்ற வரிகளும் மேலும்

• சாளவாய் படிந்தபடி கவடு கிழிந்த காற்சட்டையோடு....
• சினெமாவில் பார்த்துப் பயந்த சிறைச்சாலை போன்ற என் பாடசாலை...
• படிப்பின் அவசியம் விபரிக்கப் படும் போதெல்லாம்
   சாச்சா வந்து வந்து போவார்
  பெரிய பெரிய கொம்புகளோடு...
• சீரழிகிறது என் முன்பள்ளிக் காலம் ஆடுகளோடு ஆடுகளாய்....

போன்ற உணர்வுபூர்வமான வரிகள் இல்லங்களிலும் பள்ளிகளிலும் நிகழ்கிற வன்முறையின் உச்சம் பற்றிப் பேசி உணர்வுகளைக் கசிய வைப்பவை.

பொதுவாகத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளுமே அருமையானவை. கவிஞர் அலறிச் சொல்வதுபோல
ஒற்றை வாசிப்பில் முழுக்கவிதையையும் உள்வாங்கி ஒரு கணப் பரவசத்தைத் தொற்றச்செய்பவை  இக்கவிதைகள். கவிஞர் ஜெமீலின் தொடர் கவிதை முயற்சிகளுக்கும் அதுசார் உயர்ச்சிகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.



sfmali@kinniyans.net