நூல் :
எதுவும் பேசாத மழை நாள்
தொகுப்பாசிரியர் :
நபீல்
நூல் ஆய்வு:
கிண்ணியா எஸ். பாயிஸா அலி
தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்
இன்னும் முகையவிழாத பிறை
கொஞ்சம் கொஞ்சமாய் காந்தி
திரியாகிப் பற்ற வைக்கிறது
திசைகளை
புள்ளியாய் விரியும் பெருநாள்
உலகமகா பாவிகளின்
கிழிசல்களைத் தைத்து
கந்தல்களைத் துவைத்து
பெருநாளினை
எதிர்கொள்ள ஆவலோடு காத்திருந்த புனித நோன்பு நாளொன்றில் இகரம்
சேர்ந்திருந்த சகோதரர் நபீலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான உயிர்
எழுத்து பதிப்பகம் வெளியிட்ட எதுவும் பேசாத மழை நாளின் மூன்றாவது
கவிதையின் சில வரிகளிவை.
கவிதைகளூடே இதுகாலவரை கண்டுரசித்த பிறையினின்றும் மிகவும் மாறுபட்ட
வடிவேந்தி மிளிர்கிறது இன்னமும் முகையவிழாத இப்பெருநாள்பிறை.
பக்கமொன்றைத் தாண்டாத வகையிலான
50 இற்குமதிகமான கவிதைகள் எழுபது
பக்கங்களுக்குள் இத்தொகுப்பிலுண்டு.
கடலின் பல்வேறு வகிபாகங்களையும் தன் முதல் தொகுப்பின் வரிகளுக்குள்
விரிந்த காட்சிகளுடே நிகழ்த்திக் காட்டிய கவிஞர் இதிலே மழையின் பல்வேறு
பிறதிருப்பங்களையும் அது செயற்படுத்தும் வெவ்வேறு மந்திர வித்தைகளையும்
தானே மழையாகிப் பெய்திருக்கிறார்.
பகலை மூடும் இவரது மழை, மரங்களுக்கு கொண்டை முடிவதில் ஆனந்திக்கிறது.
தன் தாரைகளைத் திசையெங்கிலும் செழித்த மரமாக்கின்றது. ஈரமுற்றத்தில்
வைகறை பதிக்கின்றது.சின்னஞ்சிறிய பந்தலாகிச் சொட்டுகிற தறுவாயில்
வானவில் தொங்கும் மூலையில் தேனீரருந்துகிறது.குதிரைகள் பூட்டப்பட்ட
படையெடுப்பாக வெள்ளத்தை அலைய விடுகிறது.அடைமழையாகி
விளக்கேற்றுகிறது.கோபமாய் புள்ளியிடுகிறது.தூவானமாகி ஜன்னலருகே
பயம்பயமாய் தெறிக்கிறது.ஒரு கணத்தில் கனலாகி இவரை வறுக்கும் மழை மறுகணம்
ஒரு குழந்தை போலே பின்னால் அழுது கொண்டும் வருகிறது. மேலும் வேறோரு
கவிதையில் இம்மழையின் துவக்கத்தை கடல் படாது மழை படாது என வெகு
கச்சிதமாய் கூறுகிறார். கடைசியாகப் பெய்த மழை இரக்கமில்லாமல் தன் மணல்
வீட்டைச் சரித்ததாலோ என்னவோ தான் எழுதும் போது மட்டும் எதுவும் பேசாமல்
பொழியும் இம்மழை இவரைப் பயங்கொள்ளவும் வைக்கிறது.
தொகுப்பிலுள்ள வசீகரமான கவிதைகளிலொன்று கடல் தெருக்கள்.
மிக எளிய வரிகள் கொண்டு
அதிராதிருக்கும் தொனியில்,
சிணுங்கும் மீன்களென்ன யார் பாடினாலும் அழகுதானே.
அடியாழ நீரின் அற்புத அமைதியை அழகாய் மிதக்க விட்டிருக்கிறார் தன் கடல்
தெருக்கள் கவிதையில்.
யாழினிது குழலினிது என்பார், மக்கட் தம் மழலைமொழி கேளாதாரெனும்
தொன்மங்களுக்குள் எமை அழைத்துப் போகின்றன தொலைத்தவர்கள் தொலைந்தனர்
எனும், குழந்தைகள் தொடர்பான கவிதையின் சில வரிகள்.
மேலும், என்னைத்
தனிமையானவனாகவே
எப்போதும் பார்க்கிறேன்....
என் இமைகளும் இறகுகளும்
தனித்திருத்தலின் வலியை
கண்ணீராய் ஒழுக விடுகிறது எனப் பரிவினை அவாவி நிற்கின்றன பிரிவு
தொடர்பான சில வரிகள்.
பொருளாதார மேம்பாட்டுக்கான பெருநகரங்கள் நோக்கிய இடம் பெயர்வுகளும் அது
தொடர்பான பதிவுகளும் நமக்கொன்றும் புதிதில்லை.ஆனாலும் பெரும்பாலான
அண்மையக் கவிதைகளில் நகரவாழ்க்கையின் நேர், எதிர் இயல்புகளைக்
கூடுதலாகவே காணக்கிடைக்கின்றன.கடிகாரம் காட்டாத நேரம் இவ்வகைக்
கவிதைகளிலொன்று.
வேகமான விசித்திர வீதிகளில் அலைகிறேன்.
பெருநகரங்கள் எனை நீரால் நிரப்புகின்றன.
நிரம்பிக் கொண்டே இருக்கிறது வயிறு..........
..............................................................
எப்பொழுதும் கேட்க விரும்புகிற நம் நேரத்தை
அந்தக் கடிகாரம் காட்டுவதில்லை. விட்டுப்போக விரும்பாத கிராமத்தின்
பசுமையான நேரத்தைப் பெருநகரக் கடிகாரங்கள் எப்போதுமே காட்டியதில்லைதான்.
இதையேதான்
பரோல்லின் விடுமுறை பெற்று
வீடு மீளும் கைதியை ஒப்ப
நான் பெருநகரச் சிறை விலகி
வெளியே வருகிறேன்........
.....முடிந்தது விடுமுறை
பசி கொண்ட பூதமென வாய் பிளந்து காத்திருக்கிறது
பெருநகரம்
மீளாச்சிறைக்குள் நான் மீள.
என்கிறது கவிஞர் திருமாளவன் வரிகள்.
தொகுப்பிலுள்ள உணர்வுபூர்வமான கவிதைகளிலொன்று ஒரு நிலாக்கடல்.
தன் முகம் தடவி விட்டுப்போன வாப்பாவின் இறுதியாத்திரைக் கணங்களோடு
ஒன்றித்திருப்பவை.
புடைத்த விம்மலில் கடலைப் பார்க்கிறேன்.....
வாப்பா
நீங்கள் மடித்து ஒட்டிய காகிதம்
நான் அஞ்சல்காரன்....
தூரம் பாரமாகி கால் தள்ளாடுகிறது.
....மழை தேடி வானத்தை அண்ணாந்தேன்
வாப்பா
விண்மீன்களெல்லாம் உங்களுடையவை.
எனும் வரிகளோடு நாமும் வானத்தை அண்ணாந்தால் வானம் கறுப்பாகிக் கிடக்க
விண்மீன்களோ எம் விழிகளிலிருந்தும் துளிகளாய் உதிர்கின்றன.எவர் மனதையும்
இளக்கிப்போகும் மிக நெகிழ்வான வரிகள்.
இன்னும் சில கவிதைகளில் தன் இணை மீதான இறுக்கங்களை நெருங்கியும்
விலகிநின்றும் பேசுகிறார் கவிஞர்.
ஒருசில கவிதைகள் மறுவாசிப்பினைக் கோரிநிற்பவை.ஆனாலும் நாளின் மிகக்
குறுகிய பொழுதினில் மாத்திரமே எழுத்து சார்ந்துஇயங்கக் கூடிய
என்போன்றோரை விடவும் நவீன பின்நவீனச் சூழலில் தொடர்ச்சியாய்
இயங்குவோரால் இச்செறிவான வரிகளின் ஆழ அகலங்கள், குறைநிறைகள்,அவை
அடுத்ததாயும் பயணப் படவேண்டிய திசைகள் தொடர்பிலெல்லாம் விரிவாகப்
பேசப்படக்கூடும்.
தொகுப்பின் கடைசிக் கவிதை இது
அவ்வளவு வேகத்துடன் நீளும் நம் சத்தம்
பைத்தியத்தின் ஒலியெனக்
கதவுகளைத் தாழிடுகின்றனர்.
தன் கவிதைகள் தொடர்பில் கேட்டுச் சலித்த எதிர்வினைகளுக்குள்
முளைத்தெழுந்ததோ இக்கவிதை.
முதல் தொகுதிக்குப் போலவே இதற்கும் கவிஞர் சோலைக்கிளியே அணிந்துரை
எழுதியிருக்கிறார். கவிதைகளைப் பகுத்தும் பிரித்தும் தாம் வரைந்த
சட்டகங்களுக்கூடாக வாசகரை நோக்கச் செய்யாத கவிஞர் சோலைக்கிளியின்
நேர்த்தியான அணிந்துரையில் வாழ்க்கை அழகாக அழகாக ஒரு படைப்பாளியின்
படைப்புகளும் அழகாகும் ஆழமாகும் என்பதற்கு நபீலின் கவிதைகளும் எடுத்துக்
காட்டானவை.எனும் வரிகள் நூலின் கனதியைக் கூட்டக் கூடியவை.
கவிஞர் நபீலின் ஆழமான வாசிப்பனுபவங்களையும் கடுமையான உழைப்பையும்
இத்தொகுதியினூடே காணமுடிகிறது . சகோதரரின் தொடர் கவிதை முயற்சிகளுக்கு
என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
நூல்:
எதுவும் பேசாத மழை நாள்
ஆசிரியர்: நபீல்
வெளியீடு: உயிர் எழுத்து
பதிப்பகம் இந்தியா
விலை:
40.00
(இந்தியா விலை)
தொலைபேசி:
0714914153
sfmali@kinniyans.net
|