நூல் : கூடுகள் சிதைந்தபோது
நூல் ஆசிரியர் :அகில்
நூல் ஆய்வு: விமலா ரமணி

அகில் அமைத்த அழகான கூடுகள்

திரு அகில் அவர்கள் எழுதிய 'கூடுகள் சிதைந்தபோது ' என்கிற சிறுகதைத் தொகுப்பு எண்ணங்களின் தொகுப்பு. வண்ணங்களின் தொகுப்பு. புலம் பெயர்ந்த மககளின் துன்பங்களின் சோகத் தொகுப்பு.

முன்னுரையில் பேராசிரியர் திருஇசிவ தம்பி அவர்கள் குறிப்பிட்டது போல் சிறுகதை இலக்கண வகைகளை துல்லியமாகப் படம் பிடித்து காட்டும் வகைகளில் அமைக்கப்பட்ட சிறுகதையின் வடிவங்கள்.
வில்லிலிருந்து விடுபடுகிற அம்பு தன் இலக்கை நோக்கிப் பாய்வதைப்போல் சிறுகதையின் கருத்தும் வாசகனின் நெஞ்சத்தில் பாய வேண்டும் படித்து முடித்தபின் அவன் மனதில் ஒரு ஆழமான எணணத்தைப் பதிக்க வேண்டும்.

அந்த எண்ணக் காயம் அவன் மனதில் வடுவாகப் பதிந்து எனறென்றும் இந்தச் சமுதாயப் புண்ணைப் பற்றிய நினைவுகளை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த முறையில் இந்தத் தொகுதியில் வெளிவந்துள்ள
14 சிறுகதைகளும் முத்துக்களாக எண்ண முத்துக்களாக வண்ண முத்துக்ளாகச் சுடர் விடுகின்றன.

ஆணி முத்தைப் போல் அறிவு முத்து என்றான் பாரதி
இதிலே ஆணி முத்துக்களும் அறிவுமுத்துக்களுஊ் சிந்தனை முத்துக்ளும் கரம் கோர்க்கின்றன.
ஒவ்வொரு கதையிலும் கதாசிரியரின இதய 'வலி ' தெரிகிறது.

கூடுகள் சிதைந்தபோது அவர் சிந்திய கண்ணீர் அஞசலி நம் தேடல்களை பூர்த்தி செய்கின்றன.

பன்றிக் குட்டிகளோடு மனிதப் பன்றியாக அந்தக் கழிவுகளோடு அந்தத் துர்நாற்றத்தோடு ஒரு டிரக்கில் பயணிக்கிற புலம் பெயர்ந்த ஒரு மனிதனின் அவல நிலை.

முதியோர் இல்லத்தில் தன் கடந்தகால சோகத்தோடு கண்ணீர் வடியக் காத்திருக்கு விசாலாட்சி.
 
கடலில் குளிக்கப்போன பிரிகேடியர் சில்வாவின் மகன் மற்றவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தான் உயிர் இழந்த பரிதாபத்தின் போது தான் தன் ராணுவ வாழ்வின் இரக்கமற்ற தன்மையும் தன் மகனின் மேன்மையும் புரிந்து கொண்ட சில்வா தனக்குத் தரப்பட்விருந்த விருதைத் தியாகம் செய்து அப்பாவி மக்களைக் கொன்றதற்கு எனக்கு விருது தேவை இல்லை என்று கூறிக் கண்ணீருடன் கதறுகிற வேதனை,

பழைய ரேடியோப் பெட்டியை தூக்கி எறிய முடியாமல் அந்தப் பழமை நினைவுகளுடன் காலம் கழிக்கும் பூரணம் மாமி,

ஊரில் பெரிய கல்வீடு என்ற பெருமையுடன் வாழ்ந்தவர்கள் போர் வந்ததும் இடம் பெயர்ந்துவிட அந்த வீட்டோடு தன் நினைவுகளைப் பதித்து கொண்ட தாய் யுத்ததத்தில் மரித்துவிட அனைவராலும் ஒதுக்கப்பட்ட தங்கம் அந்தத் தாய்க்கு இறுதிக் கடன்கள் செய்து அந்த யுத்த பூமியிலேயே வாழ்ந்து வரும் நிலையும், நண்பனுக்காகக் கண்ணீர் அஞசலி.

உயிர்களித்து அன்பு வேண்டும் என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு கிறுக்கன். மாறிவரும் புதிய யுகத்தின் பிரதிநிதிகளாய் வாழும் இளைய தலை முறையின் முற்போக்கு.

யுத்தத்தின் காரணமாகக் கருவுற்ற தன் மனைவியை அழைத்தபடி பங்கர் பங்கராகப் பதுங்கி குண்டுச் சத்தத்தின் பின்ணணியில் நம்பிக்கைப் புகை நடுவே தன் வாழ்வைத் தேடி மூச்சிரைக்க ஓடி இறந்து கிடக்கும் சிதைந்தக் குருவிக் கூட்டைப் பார்த்து இறந்துவிட்ட தன் மனைவி சசிக்காக அழுவதா அவன் வயிற்றில் கருவாகவே கரைந்து போன அந்தப் பிண்டத்திற்காக அழுவதா என்று புலம்பும் கணவனின் பரிதாப நிலை கூடுகள் சிதைநத நிலையில் மனம் மட்டும் முள்ளி வாய்க்கால் காட்டுக்குள் சுற்றித் திரிய அத்தனையும் இழந்த நிலையில் அவன் கால் வலி எடுக்க வேறு வழியின்றி மேலே நடந்துபோகிற அவலம்.

வாழ்க்கை என்பது விட்டுக் கொடுத்தல் என்பதைப் புரிந்துகொண்ட நண்பர்கள்.

முதியோர் இல்ல்த்திற்கு அனுப்ப வேண்டி கூட்டிச் சென்ற அப்பம்மாவை உணர்வுகளின் தர்க்கத்தாலும அப்பாவிக் குழந்தையின் கேள்விகளாலும் மனம் திருந்தும் மகனும் மருமகளும்,

கடவுளே தான் படைத்த உலகைக் காணவேண்டி வந்து இப்படிப் பட்டப் பிரபஞ்சத்தை நானா படைத்தேன் என வேதனைப் பட்டு கடைசியில் அவரே மனிதர்களால் சிறையில் அடைக்கப் பட்டு திணறும் நிலை.

நண்பனின் தேடலில் சந்தித்த சோகம்.

அப்பப்பா ஒன்றா ? இரண்டா ? எத்தனை உணர்வுகள் எத்தனை செய்திகள்.

எத்தனை சமுதாயப் பார்வைகள்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடினானே பாரதி.

அத்தனையிலும் துன்பம் மட்டும் துரத்தி வருகிற நிலை.

அகில் அற்புதமாகத் தன் எழுத்துக்களில் புலம் பெயர்ந்த மக்களின் அவல நிலையைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட களங்கள்இ வேறுபட்ட உணர்வுகள், வித்தியாசமான மனிதர்கள். ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்ற வள்ளலாரின் வாக்கு.

வயிற்றிற்குச் சோறிட வேண்டும் என்ற பாரதியின் தத்துவம்.
நினைவு நல்லது வேண்டும் என்கிற நேர்மை.

அத்தனையும் அத்தனையும் அழகான இலங்கைத் தமிழில் கதைகளாகக் கவிதைகளாக விகசித்து விரிகின்றன. யதார்த்தங்கள் சக மானுடனின் துன்பம் அறியப்பட வேண்டிய அவசியம். அத்தனையும் அழகாக வலியுறுத்துப்படுகின்றன.

கருணை என்பது பிழியப் படுவதல்ல,
பொழியப் படுவது என்பதைப் புரிய வைக்கும் சிறுகதைகள்.

இதில் வரும் அத்தனை கதாபர்த்திரங்களும் இன்னும் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு நம்முள் எழுகிறது.

புத்தகத்தை படித்து முடித்தவுடன் நம்மையும் அறியாமல் நம் விழியோரததில் ஏற்படும் கசிவு தான் அகில் அவர்களின் வெற்றிக்கான விலாசம். பாராட்டுக்கள்.


 

வெளியீடு வம்சி திருவண்ணாமலை விலை ரூபாய் 120