நூல் : கண்ணீரினூடே தெரியும் வீதி
நூல் ஆசிரியர் :தேவமுகுந்தன்
நூல் ஆய்வு: த.அஜந்தகுமார்

அனுபங்களின் ஊடே எழும் அறச்சீற்றமாய் தேவமுகுந்தனின் கதைகள்

இலங்கைத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் 2000 ஆண்டிற்கு முற்பட்டவையாகவே இருந்து வருகின்றன. 2000 ஆண்டின் பின்னரான சிறுகதைகளின் வளர்ச்சி ஆழமாக நோக்கப்படவில்லை. தனிப்படைப்பாளிகளின் தொகுதிகளை புகழ்ந்துரையாக அல்லாமல் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்திக் செல்கின்ற போது அப்பணி ஓரளவு பூர்த்தியாவதை அவதானிக்கலாம். அந்தவகையில் 1992இல் ஒரு சிறுகதையை எழுதியிருந்தபோதிலும் 2008 இல் இருந்து சிறுகதைத் துறையில் இயங்குகின்ற நிர்மலன் என்ற புனை பெயரை உடைய தேவ முகுந்தனின் சிறுகதைகளை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

               இலங்கைத் தமிழ்ச்சிறுகதைப் பொருட்பரப்பில் தேசிய இனப்பிரச்சினை சார்ந்த கதைகளுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கின்றது. இன்றுவரையான இது சார்ந்த சிறுகதைகளின் போக்கை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. போராட்டத்திற்கு ஆதரவான கதைகள்.

  2. தமிழர் சார்ந்த தேசியத்தை முதன்மைப்படுத்தும் கதைகள்.

  3. இனப்பிரச்சினையினதும் போரினதும் விளைவுகளை பேசும் கதைகள்.

  4. போர் சார்ந்த இருபிரிவினரையும் விமர்சிக்கும் கதைகள்.

  5. போர் முடிவுற்றதான இச்சூழலில் கடந்த காலங்களில் பேசமுடியாத விடயங்களையும்     புனிதமாக நம்பப்பட்ட விடயங்களையும் மீள்விசாரணை செய்கின்ற கதைகள்.

இவ்வாறான தமிழ்ச் சிறுகதைகளின் வெளிப்பாட்டினை பின்வருமாறு கூறிச் செல்லலாம்.

  1. நாடகத்தன்மையான சாதாரண மொழியில் அமைந்த பத்திரிகைக் கதைகள்.

  2. அனுபவத்தினை சாதாரண மொழியில் வெளிப்படுத்தும் சிறுகதைகள்.

  3. அனுபவத்தினை நேர்த்தியாக வடிவச் செம்மையுடனும் மொழியாற்றலுடனும் வெளிப்படுத்தும் சிறுகதைகள்.

  4. சிறு அனுபவம் ஒன்றினைத் தனது கற்பனா ஆற்றலுடன் சங்கமிக்க வைத்து மாயா யதார்த்தத்தினை சித்திரிக்கும் தற்புதுமைசார்ந்த சிறுகதைகள்.

  5. சில நிகழ்வுகளை கதையாக அல்லாமல் புதுமையாக கட்டுடைப்பு| என்ற ரீதியில் அட்டவணை, வினாவிடை என்று அமைக்கும் மீகதைகள்.           

               இவை யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, புகலிடம் என்ற இடங்களிருந்து எழுதப்படும் போது அவ்விடத்தின் உணர்வுகளுடனும் உள்வாங்கல்களுடனும் அனுபவங்களுடனும் வெளிவந்து புதிய வாசிப்பை தருகின்றன.

               இந்தவகையில் அனுபவங்களை நேர்த்தியாக நல்ல மொழியில் சித்தரிக்கும் தன்மையன என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய - தமிழ்நோக்கிலிருந்து பெரும்பான்மையும் கொழும்பை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட கதைகளைக் கொண்ட தேவ. முகுந்தனின் சிறுகதைகளை உள்ளடக்கிய கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற தொகுதி காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கான பின்னுரையினை பேராசிரியர் எம்.ஏ நுஃமான் எழுதியுள்ளார்.

               "என்னைப்பாதித்த அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தச் சிறுகதைகளை எழுதினேன்" என்று கூறும் தேவ.முகுந்தனின் சிறுகதைகள் பெரும்பாலும் கொழும்பை மையமாகக் கொண்ட கதைகள். ஒரு கதை யாழ்ப்பாணத்தைக் களமாகவும் இன்னொரு கதை மலேசியாவைக் களமாகவும் கொண்டிருக்கின்றன.

               இவருடைய கதைகள்,

  1. கொழும்பில் சிங்களவர் மத்தியில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால் மிகுந்த வாழ்க்கை.(இடைவெளி, சிவா,இவன்,ஒரு சுதந்திர நாள்)

  2. தமிழ் இனம், மொழி சார்ந்த இருப்பை, தான் வாழும் இடத்தில் நிலைப்படுத்த எண்ணும் வேட்கை (இடைவெளி)

  3. போரின் அவலங்கள் எழுதும் கண்ணீரை இனங்கடந்து நோக்கும் மனிதாபிமானம் (கண்ணீரினூடாக தெரியும் வீதி)

  4. இலக்கிய உலகின் போலிகளைத் தோலுரிக்கும் எண்ணம் ('சின்ன' மாமா)

  5. கல்வி உலகில் நிகழும் முறைகேடுகளையும் விழலுக்கு இறைக்கும் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்தல் (வழிகாட்டிகள்)

  6. வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்க்கை (இவன்)

  7. ஒடுக்குமுறைக்கு புரட்சி தவிர்க்கமுடியாதது என்ற நிலை (மரநாய்கள்)

  8. கொழும்பில் வாழும் பணக்கார வர்க்கத்தினரின் மனோபாவக் கோளாறுகளையும் கேளிக்கையையும் எள்ளுபவை(கூட்டத்தில் ஒருவன்)     

இக்கதைகளில் பெரும்பாலானவை கொழும்பை மையமாகக் கொண்ட அனுபவங்களாக விரிவதனால் அங்குள்ள சிங்களவர்களுடான ஊடாட்டத்தைக் கொண்ட ஓர் இளைஞனின் பதிவுகளாகவும் கோபங்களாகவும் விளங்குகின்றன. தான் வாழுகின்ற இடத்தில் சந்திக்கின்ற இடத்தில் வந்து சேர்வன தனக்கு எதிரானதாகவும் தான் சரியாக இருந்தும் தன்னைப் பிழையான மதிப்பீட்டுக்கு ஆளாக்குவதாகவும் இருக்கின்ற போதும் எழுகின்ற அறச்சீற்றத்தினை முகுந்தனின் பெரும்பாலான சிறுகதைகளில் காணமுடிகின்றது. மேலும் கல்விமுறைகளிலும், சமுதாய நடைமுறைகளிலும் பிழையான வழிகளில் பயணம் நடக்கின்ற போது தானும் ஒருவனாய் இருந்து கொண்டு சகிக்க முடியாமல் எழுகின்ற  கோபத்தையும் இக்கதைகள் பேசுகின்றன. ஆயினும் அறச்சீற்றம் எதையும் சாதிக்க முடியாமல் இயலாமைப் பரப்பிலேதான் பெரும்பாலும் இயங்குகின்றது. சில இடத்திலேயே அது சாத்தியப்படச் செய்கின்றது (வழிகாட்டிகள் கதை) ஆயினும் எள்ளல் மதிப்பீட்டை செய்து அவர்கள் மீதான தனது சீற்றத்தைத் தணித்துத் கொள்கின்றார். அதை எங்களில் அழகாகத் தொற்றவைக்கவும் செய்கின்றார்.

               இவரது முதலாவது கதை மரநாய்கள் 1992 இல் எழுதப்பட்டது. இது தமிழர்கள் இராணுவத்துக்கு எதிராக கிளரவேண்டும் என்பதைக் கூறுகின்ற கதை. கோழி, மரநாய் என்பதை வைத்துக் கொண்டு மரநாய்களைத் துரத்த வேண்டும் என்று குறியீடாகப் பேசுகின்றது. ஆரம்பகாலக் கதை என்பதாலும் யாழ்ப்பாணச் சூழலின் குறித்த காலத்தில்  எழுதப்பட்ட கதை என்பதாலும் ஏனைய கதைகளில் இருந்து இது தனித்து நிற்கின்றது.

               கண்ணீரினூடே தெரியும் வீதி, இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம், ஒரு சுதந்திர நாள் ஆகிய சிறுகதைகள் போர் வாழ்வின் விளைவுகள், இனமுரண்பாட்டின் தருணங்கள், தமிழர்கள் கொழும்புச் சூழலில் அனுபவித்த துன்பங்கள் ஆகியவற்றைப் பேசுகின்றன. இதில் இரட்டைக்கோபுரம் தவிர்ந்த ஏனைய கதைகள் கொழும்பையே களமாகக் கொண்டவை.

               கிளிநொச்சியில் இருந்து கொழும்பில் பல்கலைக்கழகப்படிப்புக்கு வந்த ஒருவன்  தான் கிளிநொச்சி என்பதால் அனுபவிக்கும் துன்பங்களையும் இயக்கத்தில் இருந்த தன் தம்பி இறந்து போவதையும் கொழும்பில் தான் வாழ்ந்த இடத்தில் இராணுவ இளைஞர்கள் இறந்துபோன நிகழ்வுகளையும் கூறி எல்லோருக்கும் போர் மரணத்தையும் கண்ணீரையும் பொதுவாக பரிசளிப்பதை நடுநிலையில் நின்று மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்துள்ளார்.

அவருக்குத் தெரிய பிறந்து வளர்ந்து இறந்த பிள்ளைகள் என்று கூறுவதில் உள்ள வலி உணரத்தக்கது.

               தனது தம்பி இறந்ததுக்கு கதறி அழ முடியாமல் குமுது அங்கிளோடு பக்கத்தில் நடக்கிற இராணுவத்தினரின் செத்த வீடுகளுக்குப் போகவேண்டும் என்று ஆசிரியர் கூறுவது நகுலனுக்காக வெளியே அழமுடியாமல் அங்கே சென்று அழத்துடிப்பதையும் எங்கும் இளைஞர்களின் மரணம் ஏற்படுத்தும் வலியையும் இனங்கடந்து கண்ணீர்வீதியில் யாவரும் பயணப்படுவதையும் பதிவு செய்கின்றார்.

               இடைவெளி என்ற சிறுகதை 'தான் அலுவலகத்திற்கு சமுகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டுவெடிப்பு நிகழ்வதற்கான நிகழ்தகவு மிகவும் உயர்வாக இருக்கின்ற தமிழ்அலுவலர் ஒருவர் சிங்கள அலுவலர்களின் சந்தேகத்துக்கு ஆளாகி இறுதியில் பொலிஸ் விசாரனைக்கு செல்வதைக் கூறுகின்றது.

               லண்டனில் இருந்தபோது எழும்ப இயலாமல் காய்ச்சலில் படுத்தபோது தானே உணவு பரிமாறிய விக்கிரம, 9 வீதியால் வரும் போது போரழிவுகள் கண்டு கண்கலங்கிய பிரேமசிறி, அலுவலகம் வந்த முதல்நாள் தொடக்கம் ஒன்றாய் கன்ரீனுக்கு வந்த ஜயந்த யாவரும் இறுதியில் இவனை சந்தேகப்பார்வை பார்ப்பது மனதைப் பாதிக்கின்றது. நெருக்கத்தில் இருந்த உறவு இடைவெளி ஆகி நிற்கின்ற சூழலை அலுவலகம் ஒன்றினை மையமாக வைத்துப்பேசுகிறது.

               தமிழன் என்பதை நிலைப்படுத்தவும் இங்கு அவர் தயங்காமல் செயற்படுகின்றார். அதாவது இனநல்லுறவு வலுப்பட வேண்டும் என்று நினைக்கும் இவர் இதில் தமிழர் என்று ஒதுக்கப்படுவதைப் பொறுக்கமுடியவில்லை.

               சிங்களப்பேப்பர் எடுக்கும் அவர்கள் தமிழ்ப்பேப்பர்களை எடுப்பதில்லை. இதை வலியுறுத்தி போராட்டத்தின் பின்னே பெறமுடிந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டுநாட் சம்பளத்தை கழிப்பதாய் முடிவு எடுத்து சிங்களப்பகுதிக்கு மட்டும் செல்வதை அனுமதிக்கமுடியாமல் தமிழ்பகுதிக்கும் கொடுக்காவிட்டால் தமது சம்பளத்தைக் கழிக்கவேண்டாம் என வெளியேறுகின்றனர். இச்சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் சாந்தனின் கிருஷ;ணன்தூது சிறுகதையை ஞாபகப்படுத்துகின்றன. இக்கதையில் சாந்தனின் பாதிப்பு முகுந்தனில் சுவறியுள்ளது. சாந்தனின் தொடர்ச்சியாக தனது அனுபவம் வாயிலாக முகுந்தன் இயங்க முற்பட்டுள்ளார்.

               தமிழ்ப்பேப்பர் போடவேண்டும் என்று வலியுறுத்தும் போது தீவிரவாதி என்று சொல்லும் சூழலிலும் தமிழ்ப்பகுதிகளுக்கும் உதவி செய்யவேண்டும் என்ற போது ஷமுழுஇனவாதி| என்று பச்சை குத்தப்படுவதுமான சூழலின் பயங்கரம், இறுதியில் சிங்கள அலுவர்களால் பொலிஸ் விசாரணைக்கு ஆட்படுத்தி விடும் அவலத்தைப் பதிவு செய்கின்றது.

               சிவா என்ற கதை ஆறுவருடமாய் பயங்கரவாத தொடர்புடைய ஒருவன் என்று சிறையில் அடைக்கப்பட்டு வெளியில் வந்த ஒருவனை ஏனையவர்கள் முகம் கொடுத்து கதைக்க அஞ்சும் அவலத்தையும் இறுதியில்  மீண்டும் அவன் காணாமல் போய்விடுவதையும் பேசுகின்றது. இடைவெளி கதைபோலவே சிவாவுடன் நெருக்கமாக இருந்த சிங்கள நண்பர்களும் ஏன் சிங்களக்காதலியும் இறுதியில் அவனை பயங்கரமானவன் என்று நம்புவதைப் பதிவு செய்கின்றார்.

               "எப்படிச் சொன்னாலும் இவங்கள் இனி நம்பப் போவதில்லை இனி இவர்களின் கதைகளில் புத்தகம் துப்பாக்கி ஆகும். துப்பாக்கி கைக்குண்டாகும். கைக்குண்டு..... இங்கு படிக்கும் எல்லாத் தமிழருக்கும் வால் முளைத்திருப்பதாயும் நான்கு கால்கள் உள்ளதாயும் நம்புவார்கள்? நம்பாதவர்களை சிங்கள ஊடகங்கள் நம்பச் செய்யும்.

               "இரண்டைக் கோபுரம்" என்றகதை என்னதான் சிங்களவர்கள் தமிழர்களோடு மிகுந்த தாராளத்தோடு இயங்கி - அவர்கள் துயரில் நாம் கலந்து நின்றாலும் சந்தர்ப்பம் வருகின்றபோது தமிழர்கள் பற்றிய எதிர்மனப்பாங்கு அவர்களிடம் இருந்து பீறிட்டு ஷநான் வேறு நீ வேறு| என்பதைக் கூறுவதாக எழுதியுள்ளார்.

               சுனில் தனது மகனின் மரணச் சடங்கிற்கு போக முடியாமல் கட்டு நாயக்க விமான நிலையத்தாக்குதல் அமைந்துவிட்ட போது தனக்கு உதவியாக இருந்தது தமிழர் என்பதை யோசிக்காமல் ஒட்டுமொத்தமாக 'பறதெமிளு' என்று சொல்லிவிடுகின்றான். கதையின் இறுதிப் பகுதியில் ஆசிரியர் இந்தக் கோபத்தில் குறியீடாக சொல்லும் விடயம் மிக முக்கியமானது.

               "விமான நிலையத்தின் சுவரில் மலேசிய சுற்றலாத்துறையினரால் வரையப்பட்டிருந்த அடியில் இணைக்கப்பட்டும் மேலே தனித்தனியாகவும் இருக்கும் இரட்டைக் கோபுரத்தின் பெரிய படம்  கண்ணிற்பட்டது" இது தமிழர்  சிங்களவர் உறவு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டிவிடுகிறது.

               இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம் ஆகிய மூன்று கதைகளும் நெருங்கிப் பழகிய சிங்களவர்கள் இறுதியில் தமிழர் தொடர்பான எதிர்மனப்பாங்கையே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறுகின்றன. கொழும்புச் சூழலில் வாழ்ந்த ஒருவரிற்கு கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்கள் இவை என்று கூறலாம். ஆயினும் "பறத்தெமிள" என்று சுனில் சொல்வது போல தனது அனுபவங்கள் வாயிலாக  ஒட்டு மொத்த சிங்களவரையும் குற்றவாளிக் கூண்டில் முகுந்தன் ஏற்றி விடுகின்றார் என்ற தோரணையும் தோன்றிவிடக் கூடும்.

               "ஒரு சுதந்திரநாள்" என்ற சிறுகதை சுதந்திரதினம் ஒன்றில் இந்த நாட்டின் பிரஜைகள் என்று கூறப்படுகின்ற தமிழர்களில் ஒருவன் கொழும்பில் சுதந்திரமற்று இருக்கும் தன்மையை அழகாகப் பேசுகின்றது. மூன்றுவருடமாகியும் ஒருதரம் கூட பெற்றோரைப் பார்க்க வன்னிக்குப் போக முடியாமல் வீதியில் வெயிலிலும் கடும் சோதனை, கட்டாய பொலிஸ் பதிவு என்று முடங்கித் கிடக்கும் சூழலை சுதந்திரதினம் ஒன்றினை வைத்து சொல்வது சிறப்பாக உள்ளது.

               "இவன்" என்ற சிறுகதை பல்கலைக்கழகத்தால் வெளியேறி ஐந்து வருடமாகியும் வேலை இல்லாமல் திண்டாடும் இளைஞனின் துன்பத்தையும் வேலையில்லாத தமிழ் இளைஞர்களுக்கு அறைவாடகைக்கு கொடுக்க அஞ்சுவதால் வேலை செய்கிறேன் என்று ஷரிப்ரோப்பாக| வெளிக்கிட்டு நூலகம் சென்று நேரம் கடத்தும் பரிதாபத்தையும் இது அவனுக்கு "தட்டிவிட்டது" என்று நினைக்கும் நிலைக்கும் இட்டுச்செல்வதையும் பேசுகின்றது. இதிலும் தமிழ் இளைஞர்கள் கொழும்புச் சூழலில் சந்திக்கும் அவலம் ஆழமாகப் பேசப்படுகின்றது.

               வழிகாட்டிகள், கூட்டத்தில் ஒருவன் ஆகிய இரண்டு சிறுகதைகளும்  நுஃமான் கூறுவதைப்போல் இனமோதல் சூழலில் சமூகப்பிரக்ஞையற்ற உயர்வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தையைக் கிண்டலோடு விமர்சிக்கும் கதைகளாக அமைந்துள்ளன. தமிழர்கல்விக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், தமிழர்களில் சிலர் கஷ;டப்பட்ட பிரதேச கல்விநிலையை கௌரவ பீற்றல் பேசுவர்களாக இருப்பதையும் எள்ளலோடு விமர்சிக்கின்றார். பாடநூல் தாமதம், அலுமாரியோடு முடங்கும் பிரயோசனமற்ற ஆய்வுகள் தமது நலனை மட்டுமே சிந்திக்கும் கல்வி அதிகரிகள் என்று பலரையும் கறாராகப் பேசுகின்றார். இதில் வெளிப்படும் எள்ளல் மிக முக்கியமானது.

               "கூட்டத்தில் ஒருவன்" பாதை பூட்டப்பட்ட சூழலில் யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு உணவளிக்க அதிபர் உதவிகோரிய போது பழைய மாணவர்கள் கேளிக்கை நிகழ்வுகளில் தம்மைக்கரைத்து இறுதியில் மிகக்குறைந்த பணத்தை அனுப்புவதைக் கடுமையாக விமர்சிக்கிறது.

               "பலருக்கும் அலங்காரப் பொருள் போல் ஆகிவிட்ட பாலன் யேசு, மந்தைகள் சூழ நிற்க கன்னிமரியாளின் மடியில் உறங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள இவனின் கல்லூரியில் மய்ங்கிவிழும் சிறார்களின் நினைவு மனதில் வந்தது" என்று ஆசிரியர் கூறுவது மனதைத் தொடுகின்றது.

               "சின்னமாமா" என்ற கதை இலக்கியவாதி ஒருவரின் போலி முகத்தினைப் தோலுரிப்பதாக அமைகின்றது. இலக்கியம் இன்று புகழ்ந்துரைகளினதும் பொய்யுரைகளினதும் கூடாரமாக அமைவதைக் கூறுகிறது. எழுத்தாளர் திருநாவுக்கரசு பற்றிய அஞ்சலி நிகழ்வை விட உணவு பழக்கவழக்கம் பற்றி ஒரு ஆசிரியரைப் பேச வைத்திருக்கலாம் என்பது அத்தகைய பொய்யுரை நிகழ்வுகள் மீதான பலத்த சாட்டையடி எனலாம்.

               தேவ. முகுந்தனின் இவ்வாறான கதைகளைப் பார்க்கின்ற போது முகுந்தன் அவர்கள் மிக நேர்த்தியான ஒரு சமன்பாட்டை உருவாக்கி அதன்படி தனது முடிவைத் தருவதைக் காணலாம் அதாவது,

               தமிழர்கள் இப்படி இப்படி எல்லாம விட்டுக்கொடுப்புடனும் சினேகிதத்துடன் இருந்தார்கள். அச்சந்தர்ப்பங்களில் அவ்வாறே சிங்களவர்களும் இருந்தார்கள். ஆனால் இறுதியில் தமிழர்கள் சிங்களவர்கள் நேர்மையாக இருக்கவில்லை என்பதாக அமைப்பதைக்காணலாம். கதையின் முடிவுக்கான பலதகவல்களை ஆதாரங்களை சில இடங்களில் முகுந்தன் அதிகமாகக் கூறுவது பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது.

               கூட்டத்தில் ஒருவன் என்ற கதையில் 1300 ருபாதான் எஞ்சியது அதை மகிழ்ச்சியோடு அனுப்பினார்கள் என்பது யதார்த்தமாக இல்லை. தனது கோபத்தை வெளிப்படுத்துகின்றபோது இவ்வாறு செய்துவிடுகிறாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

               அதேபோல "சின்னமாமா" என்ற கதையும் இறந்து போன எழுத்தாளர் மீதான கடுஞ்சீற்றத்தில் எழுதப்பட்ட கதையாகத் தோன்றுகின்றது. தந்தை இறந்ததற்கு வராத எழுத்தாளரை விமர்சிக்கின்ற போது,         

               "தலைமன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரணச்சடங்கிற்கு வந்து போகும் நேரத்தில் சில சிறுகதைகளை எழுதலாம் என்று நினைத்தாரோ" என்பது கேலியின் உச்சமாகவும் யதார்த்தத்திற்கு முரணாகவும் உள்ளது.

               தான் நினைப்பது எல்லாவற்றையும் கூறிவிட வேண்டும் என்பது முகுந்தனிடம் இருப்பதைக் காணலாம். வழிகாட்டிகள் கதையில் அவர் கூறும் விடயங்கள் பல இதற்குச் சான்று பகர்கின்றன.

               ஆனால் முகுந்தனின் கதைகள் தமது கருப்பொருளை நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளன.

               "சின்னமாமா" கதையில் அஞ்சலியுரை - பழைய நினைவுகள் என்ற ரீதியில் கதையைக் கூறிய விதம் நல்ல உத்தியாகும். சிவா கதையில் திருமணக்காட்சி - உரையாடல் என்று கதை இடம்பெற்று உள்ளமையும் அழகாக வந்துள்ளது.

                    மரநாய்கள், இரட்டைக்கோபுரம் என்ற குறியீடுகளும் கதைகளுக்கு அழகாகப் பொருந்துகின்றன.

               முகுந்தன் நல்ல கதைசொல்லி என்பதற்கு இவரது கதைகள் சாட்சியாக நிற்கின்றன. தனது அனுபவங்களை - தனக்கே உரித்தான அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்துகின்றார். அந்த அறச்சீற்றத்தை இன்னும் சற்று நிதானத்துடன் இறுக்கத்துடன் பேசுகின்றபோது தேவ முகுந்தனின் கதைகள் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் வல்லபத்தைப் பெற்றுவிடும்.

 

mukunthan72@gmail.com