நூல் : கண்திறவாய்
சிரியர் :   தாஸிம் அஹமது
நூல் ஆய்வு:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

டலில் ஏற்படும் ரணங்களை மருந்துகள் போக்கிவிடும். மனதில் தோன்றிய பிணிகளை நல்ல கவிதைகள் போக்கிவிடும். இறைவன் எல்லோருக்கும் எல்லா அருட்கொடைகளையும் கொடுப்பதில்லை. ஆனால் கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அகமது அவர்கள் தொழில் ரீதியாக வைத்தியராயிருந்து பலரை குணப்படுத்துகிறார். மறுபக்கம் கவிஞராக இருந்து இதயப் பிணிகளை போக்குகின்றார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

சாதாரண கவிதைகளை விட, ஆன்மீகம் சார்ந்த அல்லது நன்மை பயக்கும் விடயங்களைக் கற்றுத் தரக்கூடிய கவிதைகளை வாசிக்கையில் வார்த்தைகளில் விபரிக்க முடியாத திருப்தி மனதில் குடியேறி விடுவதுண்டு. அத்தகையதொரு மாமருந்தாக கண் திறவாய் என்ற கவிதைத் தொகுதி காணப்படுகின்றது. வெள்ளையில் ஒரு புள்ளி, சுழற்சிகள், ஆசுகவி போன்ற கவிதைத் தொகுதிகளை இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் கண் திறவாய் என்ற இந்நூலானது 136 பக்கங்களில் அமைந்துள்ளது. கண் திறந்தால், அரங்கக் கவிதைகள், முஸ்லிம் பெண்ணே, பாமடல் போன்ற தலைப்புக்களின் கீழ் கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

'நான் எழுதியுள்ள பல்வேறு பாவினங்களில் அமைந்துள்ள கவிதைகளுள் இஸ்லாமிய எழுச்சிக் கவிதைகள்தாம் அதிகமானவை. அவற்றைத் தொகுத்து வெளியிடுவதற்கு தகுந்த சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தேன். அச்சந்தர்ப்பம் மலேசியாவில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது கிடைத்தது பெரும் பேறென கருதுகிறேன்' என்கிறார் நூலாசிரியர் தாஸிம் அகமது அவர்கள்.

அவன் என்ற தலைப்பிடப்பட்ட முதல் கவிதை ஏக இறைவனான அல்லாஹ்வின் அருட்கொடைகளை இயம்பி நிற்கின்றது. அல்லாஹ்வின் சக்தியை தெளிவாக சொல்லிக் காட்டுகின்றது. அதன் சில வரிகள் இதோ..

இரவின் அமைதியிலே
இவ்வுலக
முறங்குகையில்
ஒருவன்
மட்டுந்தான்
உறங்காதிருக்கின்றான்

நீலக்கடலினிலே
நெளியும்
அலையாகிக்
கோலச்
செறிவுகளை
கொண்டு
வருகின்றான்

சோலை மலர்களிலே
தூய
வடிவாகிச்
சீலச்
சுவைகளினைச்
சிந்தத்
தருகின்றான்

கண் திறவாய் என்ற கவிதை நம்மையெல்லாம் நிறுத்தி வைத்து கேட்கும் கேள்விகளாக உள்ளன. கவிஞர் தொடுத்திருக்கும் கேள்விகளுக்கான விடைகள் இருக்கின்றதா? பாருங்கள்.

நாம் இங்கே எதற்காகப் பிறந்துள்ளோம்
நரகத்தின்
வாயில்களைத் திறப்பதற்கா
தூய்மைமிகு
வாழ்வு தந்த முன்னோரின்
சுவடுகளை
அழித்திங்கே இன்புறவா?
நாமமது
முஸ்லிமென இருந்துகொண்டு
நாசத்தின்
எல்லைகளை மிதித்திடவா?

ஏக்கம் என்ற கவிதை ஓசை நயம்மிக்கதாகவும், கருத்துச் செறிவு உள்ளதாகவும் காணப்படுகின்றது. ஒரே மூச்சில் முழுக் கவிதையையும் வாசிக்கத் தூண்டுகிறது.

நித்திரையை நாடுகையில் என் சமூகம் தூங்கும் - அந்த
நிலை
கண்டு பொறுக்காது நெஞ்சமுமே ஏங்கும்
எத்தனையோ
கனவுகளை என் மனதும் காணும் - அதில்
இஸ்லாத்தின்
சமூகமொன்றே எப்பொழுதும் தோணும்

கண்ணிரண்டும் நல்லவற்றைக் காண்பதற்கே திறக்கும் - சில
காட்சிகளைக்
கண்டிடவே மனங்கூசி வெறுக்கும்
உண்மையுள்ள
இடந்தேடி பார்வையுமே போகும் - நெஞ்சில்
உறுதியுடன்
சேர்ந்திடுமோர் அமைதியுண்டாகும்

இவ்வாறு காத்திரமான பல கவிதைகள் இந்தத் தொகுதியில் காணப்படுகின்றன. அதிலும் முஸ்லிம் பெண்ணே என்ற மகுடத்தின் கீழ் காணப்படுகின்ற கவிதைகள் எல்லாம் அந்தாதிக் கவிதைகளாக காணப்படுகின்றன. அவை மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றன

முதல் பந்தியின் நாலாம் வரியில் தொடங்கும் சொல், இரண்டாம் பந்தியின் முதல் சொல்லாக காணப்படுகின்றது. ஒவ்வொரு இடியிலும் இவ்வாறு காணப்படுகின்றமை ஆச்சரியமளித்தது. உதாரணத்துக்கு முஸ்லிம் பெண்ணே என்ற கவிதையின் சில அடிகள் இதோ..

சாந்தியும் சமாதானமும் மலர்ந்திடுக
சன்மார்க்க
வழி வந்த முஸ்லிம் பெண்ணே
சூழ்ந்திடும்
பாவ இருள் நீக்கவே
தூயோனைப்
பிரார்த்தனை செய் முஸ்லிம் பெண்ணே

தூய இஸ்லாத்தின் வழி நடந்து
துன்பங்கள்
போக்கிடுவாய் முஸ்லிம் பெண்ணே
நாயனருள்
கிட்டுமுன் வாழ்விலென
நம்பிக்கை
வைத்திடுக முஸ்லிம் பெண்ணே

உலக மக்களுக்கு இறைவன் அளித்ததொரு பெரும் கொடை புனித அல்குர்ஆன். அதன்வழி நடப்பவர்கள் ஒருபோதும் வழிதவறமாட்டார்கள்.  குர்ஆனை வெறுமனே வீடுகளில் அடுக்கி வைத்தல் பெரும் பாவமாகும். புனித குர்ஆன் பற்றியும் இங்கே அந்தாதிக் கவிதைகள் நீள்கின்றன.

திருக்குர்ஆன் கூறுகின்ற வழி நடப்பாய்
தீமைகளை
அகற்றிடுவாய் முஸ்லிம் பெண்ணே
பெருமானார்
மனைவியரின் வரலாற்றை
பெருமையுடன்
எடுத்தோது முஸ்லிம் பெண்ணே

பெருமையெல்லாம் பெண்களுக்கே என்கின்ற
பெருமானார்
மொழியறிவாய் முஸ்லிம் பெண்ணே
அருமையெலாம்
திருமறையின் அருள் மொழியில்
அமைந்துளதை
நீ காண்பர் முஸ்லிம் பெண்ணே

முஸ்லிம் பெண்ணே என்ற கவிதையில் (பக்கம் - 113) சாந்தி என்று தொடங்கிய சொல் தெளிவு என்ற கவிதையிலும் (பக்கம் - 127) சாந்தி என்ற சொல்லால் நிறைவுற்றிருக்கிறது.

ஆற்றல் மிகு கொண்டவர்கள் சமூகத்தின்
ஆக்கத்துக்
குதவுகின்றார் முஸ்லிம் பெண்ணே
போற்றிடுக
அவர் பணியை இதனாலே
புத்துணர்வு
அவர் பெறுவார் முஸ்லிம் பெண்ணே

புத்துணர்வு பெற்றவரை சமூகந் தன்னில்
புதியவரை
உருவாக்க முஸ்லிம் பெண்ணே
ஒத்துழைத்த
லுன் கடனாம் முஸ்லிம் பெண்ணே
உள்ளத்தைப்
பண்படுத்து என்றும் சாந்தி!

தனது அன்றாட வேலைப்பளுக்களுக்கும் மத்தியில் இஸ்லாமிய சமூகம் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில், இஸ்லாமிய கருத்துக்கள் உள்ளடங்கிய கவிதைகளை யாத்து இவ்வாறு புத்தகமாக்கியிருக்கிறார் டாக்டர் தாஸிம் அகமது அவர்கள். அல்லாஹ் அவருக்கு மென்மேலும் அறிவையும், ஆற்றலையும் வழங்குவாயாக!!!

நூலின் பெயர் - கண் திறவாய் (கவிதைகள்)
நூலாசிரியர்
- தாஸிம் அஹமது
வெளியீடு
- எஸ்.ஜே. வெளியீட்டகம்
தொலைபேசி
- 0112438801
மின்னஞ்சல்
- doctorthassim@gmail.com
விலை
- 300 ரூபாய்