நூல் : கூடுகள் சிதைந்தபோது
நூல் ஆசிரியர் அகில்
நூல் ஆய்வு:
-மா.பாலசிங்கம்

அகில் எனத் தமிழிலக்கிய உலகால் அறியப்படும் எஸ்.அகிலேஸ்வரன் யாழ்ப்பாணத் தீவகத்திலுள்ள சிற்றூர்களிலொன்றான சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட கனடாப்புகலிடவாசி. தமிழிலக்கியத்தில் சரவணையைப் பரம்பல் செய்த முன்னோடிகளாக சரவணையூர் மணிசேகரன்> தில்லைச்சிவன் ஆகியோரைச் சுட்டலாம். இந்த முன்னோடிகளின் தமிழிலக்கியப் பணிக்கு மேலும் வலுவூட்டிச் சரவணையின் தமிழிலக்கிய வளத்தை மேலும் நீட்சிப்படுத்துபவராக அகில் முகிழ்ந்திருப்பது அவ்வூர் மக்களை மட்டுமின்றி அனைத்து தமிழிலக்கிய அபிமானிகளையும் பேருவகைப்படுத்தும்.

கனடா> இலங்கை ஆகிய தேசங்களில் வெளியாகும் பத்திரிகைள்> சஞ்சிகைகள் வெளியிட்ட: சர்வதேச ரீதியில் பரிசு பெற்ற மூன்று சிறுகதைகள் உட்பட 14 சிறுகதைகள் 'கூடுகள் சிதைந்தபோது" தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன. கனடாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் வாழ்வின் செம்மை> இளைய தலைமுறையினரின் கலாசார> பண்பாட்டுக் கட்டுடைப்பு> ஈழத்து இனவாத யுத்தத்தின் மனித உரிமைகள் கண்டு கொள்ளப்படாமை> சொந்த மண்ணிலேயே தமிழன் இடம்பெயர்ந்த துர்ப்பாக்கிய நிலை என்பவற்றின் காண்பியமாக இத்தொகுப்புக் கதைகள் உள்ளன.

அகிலின் கதை எடுத்துரைப்புப் பாணி-பிசிரற்ற செம்மையானதாகவும் வாசகரைக் கதைக்குள் இழுத்துச் செல்லும் காந்த ஈர்ப்பு உள்ளதாகவும் உள்ளது. இத்தகையதொரு பாணி அகிலின் எடுத்துரைப்பில் சுவரி இருப்பது  அவருக்குக் கிடைத்த வரமெனலாம். மேற்கோள்களையோ குறியீடுகளையோ கதைக்குள் குவிக்காமல்> எமது தொப்புள் கொடி உறவுகளின் வாய்ப்பாடான 'ஈழத்துப் படைப்புகள் நேரடியானவை" என்பதுக்கும் அஞ்சாது> யாழ்ப்பாணத்துப் பேசு மொழி வார்த்தைகளையும் கதைஞரின் உரையில் இடுக்கி அனைத்து வாசகருக்கும் பொதுமையாக்கிச் சிறுகதைகளைப் புனைந்துள்ளார்.

உலக மயமாதலின் செறிவு தமிழ் மண்ணில் வேர் கொண்டிருக்கும் தங்களையும் ஆக்கிரமித்துள்ளதென்பதைக் 'கண்ணீர் அஞ்சலி" ஆனந்தி புலப்படுத்துகிறாள். புகலித்தில் மட்டுமின்றிச் சொந்த மண்ணிலும் காலாதி காலமாகத் தமிழனோடு சேர்ந்து வந்த காதலை இன்றைய யுவதிகள் இப்படியாகச் சீரழிப்பதை கண்ணீர் அஞ்சலி> இது இவர்களின் காலம் என்ற இரு சிறுகதைகளும் வெளிப்படுத்தித் தமிழ் மரபின் பிசங்கலை உணர்த்துகின்றன.

'இப்ப அங்க தொண்டை கிழியக் கத்துறவரின்ர மகன் விரும்பி முடிச்ச பெட்டையும் நல்ல சாதிப் பெட்டை தானே......" வெளியில் எல்லாம் பேசலாம் என்ற சிறுகதையின் இப்பேச்சாடல் சில முற்போக்காளருக்கு மனநெருடலை உண்டு பண்ணலாம். ஆனால்> அதில் உண்மை உண்டு. என்.கே.ரகுநாதனின் பிரபலமான சிறுகதை 'நிலவிலே பேசலாம்" ஞாபகத்துக்கு வந்தது. வெளியில் எல்லாம் பேசலாம் சிறுகதையின் உள்ளே சென்ற பின் இரு சிறுகதைகளுக்குமிடையில் வேற்றுமை காணப்பட்டது. அகில் மீனவர் சமூகத்துக்குள்ளான பிரச்சினையைத் தான் பார்த்துள்ளார்.

'நீங்க எங்கட பிள்ளைகளுக்கு எங்கட ஆக்களுக்க பாருங்க. இல்லையென்றால் வெள்ளாள அல்லது பிராமணச் சாதியில என்றாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால்> மீனவ சமூகம் மட்டும் வேண்டாம்! என்பது இயல்பான பேச்சாக இல்லை! யதார்த்த நிலையைக் களங்கப்படுத்துகிறது.

தாங்களே தாழ்த்தப்பட்ட சாதிகளாக இருந்து கொண்டு> அவர்களே தங்கள் சாதிக்குள் சாதி பார்க்கும் போக்கும் பஞ்சம சாதிகளுக்குள்ளும் உண்டு. அதை உள்ளீடாகக் கொண்டு சிறுகதைகளும் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இதையும் பஞ்சமர்களுக்குள் வைத்துப் பார்த்திருப்பின் கூடுதலான யதார்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கும்.

சாதியத்தைப் பேசும் இன்னொரு சிறுகதை 'பெரிய கல் வீடு". சமகால ஈழத் தமிழ் சமூகத்துக்கு மிகவும் தேவையானது. யுத்த சூழலில் வசதி வாய்ப்புகள் உள்ளோர் தம் வாழ்விடங்களை விட்டு வெளிநாடுகளுக்கும் சிங்களப் பிரதேசங்களுக்கும் இடம்பெயர> அவர்களது நில புலன்களையும் வீடு வாசல்களையும் இன்றும் கட்டிக் காத்துக் கொண்டிருப்பவர்கள் சொந்த மண்ணுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்ட பஞ்சமர்களும் பஞ்சப்பட்டதுகளுந்தான். உதவியொத்தாசையற்ற உயர்சாதி வயோதிபருக்கும் இவர்களே பாதுகாவலர்கள். இந்த நிலையில் 'தம்பி ஊரில இருக்கிற கல்வீட்டை எங்கட பேரில எழுதித் தாங்க. அங்க ஆரோ எல்லாம் எங்கட ஆக்களின்ரை வீடுகளில் இருக்கின. வீடு எங்கட பேரில இருந்தால் பாதுகாப்புத்தானே" எனத் துண்டும் வேணாம் துணியும் வேணாம் என ஓடித்தப்பியவர்கள் எப்படிக் கேட்க முடியும்! 'தங்கம் இருக்கும் மட்டும் அந்த வீட்டில் இருக்கட்டும்" என்று பஞ்சமப் பெண்ணுக்குச் சாதகமாக  பதில் கொடுத்தது அருமை. நேர்மையானது. மனிதாபிமானது. கதைஞர் அகிலைப் பாராட்ட வேண்டும்.

உயிரைக் காப்பாற்றுவதற்காக அடிப்படை உரிமைகளை இழந்த தமிழர்கள்> சொந்த புலங்களை விட்டு பல தேசங்களுக்குச் சிதறினர். இச்சிதறல் தோற்றுவித்த ஒரு அனுபவத்தை 'வலி" மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது. புலச் சிதறலில் புலம் பெயர்ந்தோர் பன்றிகளோடு பன்றிகளாகத் தேசங்களைக் கடந்திருக்கின்றனர். இத்தகு நிஷ;ரூரங்களுக்கு மத்தியிலும் குடும்பத்தோடு புகலிடம் சென்று> தன் பொறுப்புகளை உணராது வாழ்ந்த தேடல் சிறுகதையின் முரளிக்கு ஏற்பட்ட அவல நிலை அனைத்துப் புகலிட வாசிகளுக்கும் சிறந்த படிப்பினையாகின்றது.

சீனியர் ஹோம்களில் வாடும் அன்னையர்களை புலம்பெயர் வாழ்வு உருவாக்கியிருக்கின்றதென்பதை 'அம்மா எங்கே போகிறாய்?" அழுத்தமாக வெளிக்காட்டுகிறது. அத்தகைய நிலையிலும் இத்தாயாரின் பிள்ளைப் பாசம் வற்றாமல் என்றாவது ஒரு நாள் தன்னை அழைத்துச் செல்ல மகளோ> மனனோ வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் காத்திருப்பதையும்  கதை உணர்த்துகின்றது. இத்தகைய கொச்சை மகன்களுக்கும் மகள்மாருக்கும் 'அப்பம்மா> அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உங்களை மாதிரி வயதான பிறகு நானும் அவையள இங்கதான் கொண்டு வந்து சேர்க்க வேணும்?" என உறுத்தல் சிறுகதையில் அபிப்பிராயத்தை தரும்  இளங்கோ போன்ற மகன்மார் பிறக்க வேண்டுமென்ற கருத்தை வாசகனின் மனதில் படரவைக்கிறார் அகில். பதிபக்தியைத் தக்க வைத்து> இந்த உலக மயமாதல் யுகத்திலும் அதற்கு வலுவூட்டிக் கொண்டிருப்பவர்கள்> பெற்றோரைத் தகுந்த முறையில் பராமரிக்காத பிள்ளைகளேயென்பதை 'ரேடியோப் பெட்டி" இடித்துரைக்கின்றது. கதைஞர் அகிலின் படைப்புத் திறனுக்குக் கட்டியம் கூறுகிறது. கிறுக்கன் சாதியக் கதையாக இருக்குமென்ற ஆவலைத்தூண்டிவிட்டு இரு செல்லப் பிராணிகளின் தியாகத்தை முன்னிறுத்தியிருப்பது நெஞ்சைப் பிழிகின்றது. 'ஓர் இதயத்திலே" சிறுகதை இரு இளைஞரின் வாழ்வைச் சித்தரித்து கணவன்> மனைவி உறவை நெறிப்படுத்துகின்றது. சிங்கள வாசகரும் வாசிக்கத் தக்கதாகப் 'பதவி உயர்வு" சிங்களத்தில் மொழி மாற்றப்பட வேண்டும். 'அண்ணாநகரில் கடவுள்" அப்படி எதற்குத் தான் தேவை! கூடுகள் சிதைந்தபோது மனித உரிமைகளுக்குச் சாவுமணி அடித்த முள்ளி வாய்க்கால் போர் அனர்த்தங்களின் குறுந்திரைப்படம். ஆக> அதீத கோஷங்கள் எழுப்பாது> ஓங்கி ஒலிக்காது பசு மரத்தின் வேராகக் கூடுகள் சிதைந்த போது சிறுகதைத் தொகுப்பின் சிறுகதைகள் வாசகருக்கு ஊட்டத்தைச் சொரிவதோடு> போர்க்கால> கள> புலம்பெயர் இலக்கியங்களின் சங்கமமாகவும் திகழ்கின்றது.

 

நன்றி -தினக்குரல் (13-01-2013)