நூல் :
எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு
நூல்
ஆசிரியர்:
கவிஞர் பாலமுனை பாறூக்
நூல் ஆய்வு:
வெலிகம
ரிம்ஸா முஹம்மத்
எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. நவீன
குறுங்காவியம்
கலாபூஷணம்
பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற நவீன
குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88
பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987)
கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு
(2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம்
ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல
சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை
அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி
விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை
தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும்.
இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு
பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த
நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த
யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை,
அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட
பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி
போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது.
இந்த நூலுக்கு கனதியை சேர்க்கும் முகமாக தனது நேரத்தை ஒதுக்கி சிரமம்
பாராது பாலமுனை பாறூக் அவர்களின் எல்லாப் படைப்புக்களையும் முழுமையாக
அவதானித்து 17 பக்கங்களில் தனது அணிந்துரை ஒன்றை முதுநிலைப் பேராசிரியர்
எம்.ஏ. நுஃமான் அவர்கள் வழங்கியுள்ளார். அவர் தனதுரையில்,
ஷஷபாலமுனை பாறூக் 1970 களின் தொடக்கத்தில் கவிதைத் துறையில் காலடி
வைத்தவர். இலங்கை இலக்கிய உலகில் முற்போக்குச் சிந்தனை முனைப்பாக
இருந்த காலகட்டம் அது. பாலமுனை பாறூக்கும் அச்சிந்தனையால்
ஈர்க்கப்பட்டவர் என்பதில் ஐயமில்லை. இஸ்லாமியப் பற்றும், சமூக உணர்வும்
மிக்க ஓர் இடதுசாரியாக இவரை நாம் அடையாளங் காணலாம். இக்காவியத்தில்
வரும் பிரதான பாத்திரத்துக்குப் பெயர் இல்லை. அவன், இவன் என்ற
படர்க்கைப் பெயலாலேயே அவன் குறிப்பிடப்படுகிறான்|| என்கிறார்.
எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு, பாம்பை நோக்கிய பயணம், சிறகுப் பட்டை
சிலுப்பிய சேவல், காலைத் தைத்த வேலிக்கு வைத்தமுள், பூட்டி இருந்த
உறவினர் வீடு, எல்லை வீதி சொந்த வீதி, உறைந்து போய் இருந்த ஊர், கோழிக்
காக்கா குஞ்சு முகம்மது, மாசிலா மணி மேசன், எடுபிடிகளும் கெடுபிடிகளும்,
வேலி போட முடியாத நட்பு, சமாதான சகவாழ்வு, விழித்துக் கொண்ட பஸ் தரிப்பு
நிலையம் ஆகிய பதின்மூன்று தலைப்புக்களில் இக்காவியம் விரிவடைந்து
செல்கின்றது.
பிரார்த்தனை மட்டுமே எஞ்சியிருந்தது
பேச்சு ஏனோ
அடைபட்டிருந்தது..
சொந்த வீட்டைப் பார்க்க வந்தவன்
சுற்றி வளைப்பில்
அகப்பட்டிருந்தான்.. (பக்கம் 25)
என்று இந்தக் காவியம் தொடங்குகிறது. தனது சொந்த ஊருக்கு வரும் அவன்
தன்னுடைய குடும்பத்தினரைக் காணாது அல்லாடுகின்றான். இலங்கையில்
பிறந்தமையா அல்லது இலங்கையின் கிழக்குப் பகுதியில் பிறந்தமையா அவனை
இவ்வாறு அல்லல்பட வைக்கிறது? சொந்தங்களும் இல்லாமல் சொந்த மண்ணும்
அந்நியப்பட்டு கிடக்கும் அவனுக்கு ஆறுதல் என்ன என்ற கேள்வியை கவிஞர்
முதலிலேயே நமக்குள் உருவாக்கி விடுகின்றார்.
நாலா பக்கமும்
கடலாய்ச் சூழ்ந்துள
இலங்கைத் தீவில்
இவனொரு பொதுமகன்
எப்பிழை செய்தான்?
எதனைக் கேட்டான்?
கிழக்கில் பிறந்தான்
இது பிழை யாகுமா? (பக்கம் 34)
வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளின்போது நாம் இறைவனிடமே முறையிடுகிறோம்.
அதாவது நமது துன்பத்தை, பிரச்சினைகளை நீக்கித்தருமாறு இறைவனிடம்
பிரார்த்திக்கின்றோம். அந்த ஒரு பிரார்த்தனையைத் தவிர அவனிடம் இன்று
எதுவுமே இல்லை. ஒரு ஜடம் போல அவனது நிலைமை ஆகிவிட்டது என்பதைக் கீழுள்ள
வரிகள் உணர்த்துகின்றமையை அவதானிக்கலாம்.
எஞ்சி யிருந்தது
பிரார்த்தனை மட்டுமே
எங்குதான் செல்வான்?
எல்லை வீதி, சொந்த வீடு
வந்து சேர்ந்தான்
நடைப் பிணமாக! (பக்கம் 40)
அவ்வாறு ஊருக்குள் வந்தவனை திடீரென கண்ணுற்ற பார்வதி அக்கா அவனை
எழுப்புகிறாள். அவனது நிலையறிந்து உண்ணக்கொடுத்து, ஆறுதல்
படுத்துகின்றாள். அந்தப் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவள். சகோதரர்கள்
போன்று பழகியவர்கள் யுத்த வெறியனின் கண்பட்டதால் இன்று திக்குத் திசை
தெரியாமல் மருளுகின்றனர். பார்வதி அக்காவின் மன வேதனை இவ்வாறு
எடுத்தாளப்பட்டுள்ளது.
என்னடா தம்பி இப்புடிக் கிடக்க கண்ணீர் மல்கிக் கசிந்து கரைந்தாள்.
ஷஇன்னடா தம்பி ஒழும்பு ஒழும்பு| என்று அவனைப் பிடித்து எழுப்பி உண்ணக்
கொடுத்தாள். கண்பட்டுப் பெய்த்திடா தம்பி என்னமா இருந்தம் ஒரு தாய்
வகுத்துப் புள்ளைகள் போல.. (பக்கம் 41)
தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஒன்றாகவே சேர்ந்து தொழில்
செய்து தமது வணக்கஸ்தலங்களை உருவாக்கியதையும், ஒருவருக்கொருவர் பரஸ்பர
அன்பு காட்டி வாழ்ந்தததையும் கவிஞர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
வண்டிக்கார முஸ்லீம்கள் தமிழர் ஒன்றாய்ச் சேர்ந்து ஒற்றுமையாகவே
காட்டினிற் சென்று கம்புகள் வெட்டி கோயிலைப் பள்ளியைக் கட்டிக் கொண்டதை..
ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்ததை இவ்வூர் கோயிற் பள்ளிக் குறிப்புகள்
சொல்வதால் அப்பொழு தவரோ அடிக்கடி சொல்வார்.. (பக்கம் 42)
ஆண்களை எல்லாம் படைக்கு அழைத்துச் செல்லும் நிலமை அன்று காணப்பட்டது.
அவ்வாறு கோழிக் காக்கா குஞ்சு முகம்மதும், மேசன் மாசிலாமணியும்.
பலவந்தமாக ஏற்றிச் செல்லப்படுகின்றனர். பணயக் கைதிகளாய் அவர்கள்
பிடிபட்டிருக்கின்றமையை வாசகர்கள் உணரலாம். அப்பாவி மக்கள் இவ்வாறு
அடிக்கடி காணாமல் போவதைக்கண்டு உள்ளங்கள் துடித்துப் போவதைக்
காவியத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதனை வாசிக்கையில்
வாசகர்களின் மனதும் ஒருவித அச்சத்துக்கும், வேதனைக்கும் உட்படுவதை
மறுக்க முடியாது.
வடக்குத் திசையில் ஒரு கிலே மீற்றர் ஓடி முடித்தவன் வங்கி வளைவில் வாகை
நிழலில் நின்று பார்த்தான். கூட்டம் இருந்தது பேச்சடிபட்டது. அந்தப்
பக்கம் நேற்று கோழி வாங்கச் சென்ற முகம்மது காக்கா ஊரை வந்து
சேரவில்லயாம். இந்தப் பக்கம் மேசன் வேலையாய் வந்த இருவர் பணயக் கைதியாய்
பிடிபட்டிருப்பதாய் காற்று வந்து காதில் சொன்னது. கேட்டு மனசு
துடியாய்த் துடித்தது. அப்பாவிகளும் தொழிலாளர்களும் அடிக்கடி இப்படி
அமுங்கிப் போவதை அகதியாவதை எண்ணிப் பார்த்து மனசு துவண்டது.. (பக்கம்
49)
இவ்வாறு மனசை உலுக்கும் சம்பவங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம்
வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர்; - எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு..
நூல் வகை - நவீன குறுங்காவியம்
நூலாசிரியர் - கவிஞர் பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
தொலைபேசி - 0775367712
விலை - 200 ரூபாய்
|