நூல் :  இனிது இனிது காதல் இனிது
நூல் ஆசிரியர்
பாலகுமாரன்
நூல் ஆய்வு:
 
இப்ராஹிம், பெங்களூர் 

உனக்கென்ன
சாமி
,பூதம்,கோயில்குளம்
ஆயிரமாயிரம்

ஜாலியாய்

பொழுது
போகும்

வலப்பக்க கடல் மண்ணை
இடப்பக்கம்
இறைத்திறைத்து
நகக்கணுக்கள்
வலிகின்றன
அடியே
!நாளையேனும்
மறக்காமல்
வா

டங்கலோ, தயக்கமோ இன்றி ஒரு விஷயத்தை பற்றி சலிக்காமல் பேசிக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருக்கலாம் என்றால் அது காதலாகத்தான் இருக்க முடியும் இல்லையா? மேலும் சினிமாவும், டீவியும் காதலை திகட்டும் அளவிற்கு நிறைய கற்பித்துவிட்டதால் காதலை பற்றிய ஞானம் சாதாரண மனிதனுக்கு கூட அதிகமாக இருக்கும்.இப்படி கூறு கட்டி கூவி விற்கப்பட்டிருக்கும் காதலை பற்றி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் புதிதாக என்ன எழுதிவிடப்போகிறார் என்ற ஐயம் எழும்?எனக்கும் எழுந்தது.

அத்தியாயம் அத்தியாயமாக குட்டி குட்டி காதல் கதைகளால் காதலாகி உருகி வழிகிறார். ஒரு சம்பவம் அல்லது கதையை சொல்லி, காதலின் வகைகள்/நிலைகளை சொல்லி அதை பகுத்தாய்ந்து ஒரு நெருக்கமான நண்பனை போல "இத பாருப்பா.....இது தான் காதல்....இதை இப்படி புரிந்து, இப்படி நடந்து கொண்டால்,சில விஷயங்களை தவிர்த்து விட்டால்,சிலவற்றை இழந்து விட்டால்... உலகின் மிக உயரிய காதல் கிட்டும், இதில் பயப்பட, சிறுமைப்படவென்று எதுவுமே இல்லை" என்று உள்ளங்கை தெளிவாய் சொல்கிறார். சமுதாய உயர்வு தாழ்வு ஏதுமின்றி ஏழை,பணக்காரன் என எல்லாவகை காதலையும் அலசுகிறார்.

தானுண்டு தன வேலையுண்டு எனப்போகும் எழைப்பையன்  ,வாலிபத்தின் போக்கினால் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உட்பட்டு வாழும் சாதாரண ஏழை தமிழ் பெண்ணை நேசிக்கத்தொடங்கி பின் அதனால் வரும் பிரச்சனைகள், பின் வீட்டை விட்டு விலகி முன்னேறிக்காட்டி, அதை  பார்த்து  பெண் வீடும், பையன் வீடும் அசந்து மகிழ்ந்து போய் பெயரன் பேத்திகளை எடுத்துக்கொஞ்சி....  (90 களின் சினிமாவை போல) நிறைய கதைகள் இப்படி சுபமாய் வந்து முடிகின்றது. காதலென்றால் ஆணும் பெண்ணும் கூட்டாக முன்னேறுவது, அல்லது முன்னேறத்தூண்டுவது.அறியாத வயதில்,படிக்கும் வயதில் கூட காதல் வரலாம் ஆனால் அது பொறுப்புணர்வை அதிகரிக்கவே வேண்டும்,காதல் நம்மை வீழ்த்தி சாய்க்கக்கூடாது,எடுத்து நிறுத்த வேண்டும்.பெண்ணில் ஆணும், ஆணில் பெண்ணுமாக முயங்கித்திளைத்தல் காதலில்லை.உண்மையான காதலில் எவ்வித சிறுமைக்கும் இடமில்லை அப்படி இருந்தால் அது காதலே இல்லை. இன்னும் எவ்வளவோ "ஆரம்பகால" காதலர்களுக்கு கோனார் தமிழ் உரைக்கு ஈடான ஒரு புத்தகம் இனிது இனிது காதல் இனிது.படிக்கும் போதே ஒரு நெகிழ்ச்சி, உள்ளுக்குள்ளே ஒரு இளகல்,நாற்பது,ஐம்பது வயதுக்காரர்கள் சிலரை தன் கால  ஏடுகளை  பின்னுக்கு புரட்டிப் பார்க்கச்செய்ய கூடியது, சிலரை படிய வாரிய தலையும்,மடித்து விட்ட கையுமாக மீண்டும் சென்று பஸ் ஸ்டாண்டில் நிற்க வைக்கத் தூண்டிவிடும்  புத்தகம்.எதற்காக எழுதப்பட்டதோ அதன் பயனை அடைந்துவிட்டாற் போல ஒரு நிறைவு.

பாலகுமாரன் எழுதிய எல்லாவற்றிற்கும் கையை கட்டி,தலையை ஆட்டியபடி ஒப்புக்கொள்கிறேன் மிகச்சில விஷயங்களைத்தவிர......

மேலே மேலே சொன்னவை எல்லாம் தமிழர்களின் தெய்வீகக்காதல் மட்டுமே  உலகில் எல்லோருக்கும் "பொதுவான" காதல் இல்லை. அதாவது பதினான்கு வயதில் காதலித்து, படிப்பில் முன்னேறி, நல்ல வேலையில் சேர்ந்து, மிகப்போராடி குடும்பத்தின் அனுமதி பெற்று அல்லது அனுமதி பெறாமல் ஓடிப்போய் வறுமையை விடுத்து முன்னேறி,குழந்தை பெற்று-சுத்தத்தமிழனின் காதல்......விக்ரமன் படங்களை போல.ஏதோவொரு ஆணும் பெண்ணும் சந்திக்கும், அவர்களிடையே காதல் மலரும் இடங்களும், சம்பவங்களும் தான் புதிது புதிதாக இருக்கின்றது மற்றபடி முடிவுகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றே.இது ஏற்புடையதாக இல்லை.

காதல் பாறைகளின் இடுக்குச்செடிகளை போல எப்போதும் ரகசியமாகவே இருக்கிறது,காதலிக்க தொடங்கியவுடன் அப்பா அம்மாவின் தோள் மீது கையை போட்டுக்கொண்டு அவர்களிடம் அதை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கிறது? ஜாதி, சமுதாய அந்தஸ்து, ஈகோ இவைகளால் பலியாகும் காதல் எத்தனை? எத்தனை? காதல் கொண்டு,அதை ரகசியமாக காப்பாற்றி,அந்த இன்பத்தில் வருடங்கள் தோறும் ஊறித்திளைத்து,தொட்டும் தொடாமலும் தூரங்கள் காத்து,அவன் அவளுக்காகவும்அவள் அவனுக்காகவும் நிறைய இழந்து, சமுதாயத்தில், பொருளாதாரத்தில் தனியாக ஊன்றி நிற்கும் அளவிற்கு முன்னேறி, சேரும் எதிர்பார்ப்புடன் இறுதியில் அந்த காதல் வளையை விட்டு வெளிவரும் போது மேலே சொன்ன மூன்று காரணங்களால் சீரழிந்து போகக்கூடும். காதலித்த வருடங்களை விட காதலுக்காக போராடிய வருடங்களே அவர்களுக்கு அதிகமாக இருக்கக்கூடும். வெற்றியே கிட்ட வாய்ப்பில்லாமல் அந்த போராட்டம் எவ்வளவு வருடங்கள் தான் போக முடியும்,அதற்க்கும் ஒரு அறுநிலை(Breaking-Point) உண்டல்லவா? அந்நிலையில் பிரிவதை தவிர வேறென்ன வழி இருக்க முடியும்? ஆனால் அதை பற்றியெல்லாம் எங்குமே சொல்லப்படவில்லை என்பது தான் நெருடலே.ஒரு வேளை காதல் இனிது என்று  தலைப்பில்  வைத்துவிட்டு பிரிதலை பற்றி எழுதினால் முரணாக இருக்கும்  என்று விட்டு விட்டாரோ என்னவோ?

உடற்சேர்க்கைக்கு,சமுதாய ஒழுக்கத்திற்கும் பயந்து மேலே பூசப்பட்ட பூச்சு தான் காதல்,Testosterone-Estrogen போன்ற வாயில் நுழையாத பெயர்களின் எளிய வடிவம் தான் காதல்....விரிவாக  சுருக்கி சொல்வதென்றால்...

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்த வேதிப்பொருட்கள் சில ஏதோவொரு விகிதத்தில்,சமயத்தில் சேர்ந்து ஒரு புரதத்தை (protein) உண்டாக்கின.அந்த புரதத்திற்கு நேரங்கெட்ட நேரத்தில் உயிர் வந்து தொலைத்து DNA வாக ஆகி அது ஒரு செல்லாக,பாக்டீரியாவாகவும் உருவெடுத்தது.அப்படி பல செல்களாக சேர்ந்து கட்டமைத்து தான் ஒரு ஜீவராசி உண்டாகி இருக்கும்.அப்படி வந்த உயிர்களுக்கு எது அவசியமானதோ எது  தேவைப்பட்டதோ அதை இயற்கையே நிறைவேற்றிக்கொடுத்தது அல்லது ஒரு உயிருக்கு என்ன தேவையோ, என்ன அதன் எதிர்பார்ப்போ அது அதற்காக முனைகிறது. அந்த முனைதல் எல்லாம் அதன் ஜீன்களில் பதிவாகியபடியே பல சந்ததிகளை காலம் காலமாக கடக்கிறது, பின்னர் ஏதோ ஒரு காலத்தில் அந்த முனைப்பின் பலனை அடைகிறது. உதாரணமாக ஒட்டகசிவிங்கி எல்லாம் ஆடுகளை  (அது எப்படி ஆடாக உருவெடுத்திருக்கும் என்பது வேறு கதை ) போல தான் இருந்திருக்கும், உயரத்தில் இருக்கும் இலை, தழைகளை தின்ன அது காலம் காலமாக முயற்சி செய்து ஒட்டகசிவிங்கியாக ஆகி இருக்கும்.பறவைகளுக்கு சிறகு வந்ததும்,மீனிற்கு நீந்தத்தெரிந்ததும், மனிதனுக்கு இடம் பெயர  கால்களும், பற்றிக்கொள்ள  கைகளும் வந்தது அப்படித்தான் .

மேலே சொன்ன அதே வகையில் தான் உருவான ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரை,தான்னுடைய சந்ததிகளை பெருக்க முனைந்திருக்கும். அப்படி வந்த உயிர்களில் ஆண் பாலின சுரப்பிகளான டெஸ்டோஸ்ஸ்ட்ரோன்  (Testosterone) அதிக அளவில் சுரந்து ஆணாகவும்,பெண் பாலின சுரப்பிகளான ஈஸ்ட்ரோஜன் சுரந்து பெண்ணாகவும் ஆகியிருக்கும்(இந்த சுரப்பிகள் மட்டும் ஆண், பெண்ணாக ஆவதற்க்கு  காரணமில்லை),இரண்டும் சேர்ந்து புது உயிர் ஒன்றை படைக்கும் வித்தையை கற்றிருக்கும்இதே நிகழ்ச்சி பல கோடி வருடங்கள் தொடர்ந்த படி இருக்கும் போது ஒன்றை ஒன்று தேடும் ஒரு பாங்கு, இயற்கையாகவே  ஒரு ஈர்ப்பு உருவாகி இருக்கலாம்.அந்த ஈர்ப்பில் மனிதனோ, மற்ற உயிரினங்களோ தன்னுடைய துணையை தேடி புணரத்தொடங்கியிருக்கலாம்.இது தான் படைப்பின் முதல் காரணமே: உயிர் உருவாகுதல்-->வேறொரு உயிரை உண்டாக்குதல்-->உயிர் அழிதல்.பெற்ற உயிரை தக்க வைத்துக்கொள்ள  உணவு, உறைவிடம் போன்றவைகளை மனிதனே தேடிக்கொண்டான்.அதில் ஓரளவு நிறைவு  பெற்றதும், மனிதக்கூட்டம் சேர்ந்து வாழத்தொடங்கியதும் சும்மா இராமல் இறைவன், மதம், சமுதாயம், நாகரீகம், கலாசாரம், அரசியல், செல்வம், காதல், கல்யாணம் போன்ற எல்லாவற்றையும் காலத்திற்கேற்ப உருவாக்கினான் : அதன் நோக்கம் அத்துமீறலை தவிர்க்கவும், மனித இனம் ஏதாவது  ஒரு ஒழுங்கிற்கு  கட்டுப்பட்டு நிற்பதற்கு மட்டுமேயன்றி வேறில்லை.

காதல் எப்போதும் ஆண்-பெண் மூலக்கூறுகளின் ஈர்ப்புதான், உடற்கூடல் என்பதை மறைமுகமாக வைத்துக்காப்பது மனித இனத்தின் கடமையாகி விட்டது. காதல் என்பதை தவிர வேறு எதைச்சொல்லியும் ஒரு ஆனா பெண்ணையோ, பெண் ஆணையோ நெருங்க இயலாது அல்லவா? இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் தெய்வீகம், ஜீவகாருண்யம், மனதை பறிகொடுப்பது, கண்ணால் செய்வது காதல், காதலில் காமத்திற்கு இடமில்லை, உடலை  பற்றி சிந்தனை வந்தாலே அது மகா பாபம் என்றெல்லாம் நம் எழுத்தாளர்களும், சினிமாகாரர்களும் வியாபார நோக்கங்களுக்காக ஜிகினாதனங்கள் செய்து வைத்திருக்கின்றனர். காதல் என்பது ஒரு தொடக்கம் தான்,அது திருமணம் என்ற புள்ளியை நோக்கி நகரத்தானே செய்கிறதுஎனவே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் செய்வது காதலே இல்லை அது காம வெறியாட்டம் என்று பாலகுமாரன் சொல்வது எந்த வகையில் சேர்த்தி?. பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்வோம் இல்லையேல் பிரிவோம் என்று வாழ்கிறார்கள் அவர்கள் அது அவர்களின் நாகரீகம். சாகும் வரை ஒருவனோடு/ஒருத்தியோடுதான் தான் என்று தொடங்கி அவன் குடிகாரனாக,கூத்திக்கள்ளனாக ஆனாலும் மனைவி சைக்கோவாக, சந்தேகப்பேயாக இருந்தாலும் ரப்பரில் கட்டியது போல இழுத்துக்கொண்டு வாழ்வதில் என்ன பயன்?அப்படி செய்வது தான் பூரணமான காதலாகுமா?ஆனால் இதை தானே தமிழ் சமூகம் தொன்று தொட்டு சொல்லி வருகின்றது.

இந்த  விஷயத்தில் பாலா கூறியது-தமிழ் தான் உலகிலேயே சிறந்த மொழி, தமிழர் தான் உலகில் சிறந்த குடியினர் என்று சொல்லும்  அறிவிலித்தனத்திற்கு ஒப்பானது.பல வகையான வாசகர்கள் படிக்கும் பத்திரிக்கைக்கு  தொடராக எழுதியதாலோ என்னவோ, சில இடங்களில் சமரசம் செய்து கொண்டதாகவும் பெரியதாக வாசிப்பனுபவம் எதுவும் தராமல் வெற்றுக்கவர்ச்சியாக இருக்கிறது. "இனிது இனிது காதல் இனிது நல்ல நாவல் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஒரு முதிர்ந்த வாசகனால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் சலிப்படையாமல் படிக்க முடியவில்லை என்பதே உண்மை.

மலை உருவானதற்கும், கடல் கொந்தளிப்பதற்கும், மரங்கள் அசைவதற்கும் இன்னும் உலகில் நடக்கும் எல்லாவற்றிர்க்கும் ஒரு தர்க்க முறை (Logic) உண்டு. காதலும் அப்படி ஒன்று தானே ஒழிய வேறில்லை. மேலும் வெறுங்கூந்தலுக்கு குஞ்சம் சூட்டி நீளமும், அழகும் சேர்ப்பதை போல மேலே சொன்ன உடல் ரீதியான விஞ்ஞானத்திற்கு காதல் என்ற பெயர் சூட்டி அழகு பார்க்கலாம். அது அழகாகவும் இருகின்றது, ஒப்புக்கொள்ளவும் முடிகின்றது.

 

ahamed.ibrahim7@gmail.com