நூல் :  பாரதியின் கருத்துப்பேழை
நூல் ஆசிரியர்
கவிஞர் திருச்சி கௌதமன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின்
அட்டைப்பட வடிவமைப்பு , உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள மின்னல் கலைக் கூடத்திற்குப் பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் நூலை காணிக்கை ஆக்கி உள்ள விதத்தில் வித்தியாசப்படுகிறார் 

"உழைத்து உடனிருந்து உயிர் காக்கும் என் வாழ்க்கைத் துணை ஜெகதீஷ்வரிக்கு ."--- கவிஞர் திருச்சி கௌதமன் !

" எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும்  தெய்வமன்றோ." ----- மகாகவி பாரதி !

பாரதி கலைக் கழகம் நிறுவனர் திரு . பாரதிசுராஜ் அவர்களின் அணிந்துரையும் , பாரதி நெல்லையப்பர் மன்ற  நிறுவனர் திரு . எதிரொலி  விசுவநாதன் வாழ்த்துரையும் ,பதிப்பாளர் பொதிகை மின்னல் ஆசிரியர் , கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நூலிற்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளன .கவிஞர் வசீகரன் பதிப்புரையில் முடிப்பு வரிகள் மிக நன்று .

தமிழுக்கு மகுடம் பாரதி !
தரணிக்கு
அவனே சாரதி !

மகாகவி பாரதியின் கவிதைகள் கட்டுரைகள் படித்து ,ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக வழங்கி உள்ளார் . பாரதியின் புகழ் மகுடத்தில் பதிக்கும் வைரக்கல்லாக உள்ளது நூல் பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் அரசுப்பணியில் இருந்து ஒய்வுபெற்ற பின் இலக்கியப்பணியில் ஒய்வுஇன்றி இயங்கி வரும் படைப்பாளி பல்வேறு சிற்றிதழ்களில் ஹைக்கூ கவிதைகள் எழுதிய கவிஞர் கட்டுரை எழுதுவதிலும் தனி முத்திரைப் பதித்துள்ளார் .

கட்டுரைகளின் தலைப்புகளே பாரதியின் ஆற்றலை பறைசாற்றும் விதமாக உள்ளன .பாரதியும் பெண்மையும் , பாரதியின் தராசு, பாரதியின்  சிவநேயம் ,வள்ளலார் அடிச்சுவட்டில் பாரதி , பாரதியின் பதஞ்சலியோக சூத்திரங்கள் விளக்கம் ஒரு பார்வை ,சித்தர் நெறியில் பாரதி,பாரதியின்  பாப்பாப் பாட்டு , பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு பார்வை, பகவத் கீதை முன்னுரையில் ஒரு துளி ஒரு பார்வை. இப்படி நூலில் மொத்தம் 9 கட்டுரைகள் உள்ளன .

பாரதியின் பாடல்களை திரும்பத் திரும்ப படித்து , உள்வாங்கி கட்டுரை வடித்து உள்ளார் .பாரதியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு பயன் தரும் நூல் இது .மகாகவி பாரதி உடலால் உயர் வாந்த காலம் 39 ஆண்டுகள்தான் .ஆனால் பாடலால் வாழும் காலம் நூ ற்றண்டு கடந்தது. நிலையானது .முக்காலமும் வாழும் முத்திரைப்பாடல்கள்.  

இது போன்ற நூல்கள் பாரதியின் ஆற்றலை எடுத்து இயம்பி பிரமிக்க வைக்கின்றன பாரதியின் கவிதைப் பேழையை  ஆராய்ந்து கருத்துப்பேழை வழங்கி உள்ளார் .

கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு 
கட்சிக்கும்
அக்து பொதுவில் வைப்போம் !

இந்த இரண்டு வரிகளை ஆண்கள் மனதில் கொண்டால் நாட்டில் வன்முறைகள் பெருமளவு ஒழிந்துவிடும் .மனைவி எப்படி?ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டுமென்று ஒரு கணவன் எதிர்ப்பார்க்கிறானோ அதுபோல ஒழுக்கமாக கணவனும் நடந்துகொண்டால் குடும்பத்தில் சண்டை வராது . வாழ்க்கை இனிக்கும் .ஆண்களுக்கும் ஒழுக்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் வைர வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்துள்ளார் .

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவிலோங்கி
இவ்வையம் தழைக்குமாம் !

ஆணாதிக்க சிந்தனை அகற்றிடும் அற்புத வரிகள் .

மகாகவி பாரதி தராசு இதழில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை நன்று .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற வள்ளலாரின் கருத்தை பிரதிபலிக்கும் நம் பாரதி .

சாதியிலே மதங்களிலே  சமய நெறிகளிலே 
சாத்திரச்
சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே !

என்ற கவிதை வள்ளலாரை வழிமொழிந்து பாடியது என்பதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .ஆய்வு நுட்பத்திற்கு எடுத்துக்காட்டு .

மகாகவி பாரதியார் சித்தர்களைப் போல தத்துவப் பாடல்களும் பாடி உள்ளார் என்பதையும் எழுதி உள்ளார் .

காற்றையடைப்பது மனதாலே -இந்தக் 
காயத்தைக்
காப்பது செய்கையிலே !

மகாகவியின் பாப்பா பாடல் யாவரும் அறிந்த ஒன்று .

ஓடி விளையாடு பாப்பா - நீ 
ஒய்ந்திருக்கலாகாது
பாப்பா !

மகாகவியின் பாப்பா பாடல் பற்றி கவிமணி தேசிய விநாயகம் அவர்கள் எழுதிய கவிதை பலரும் அறியாத ஒன்று .இந்த நூலில் உள்ளது .

பாப்பா பாட்டிலே - நெஞ்சைப் 
பறி
கொடுத்தேனடா- சீனி 
சக்கரை
எதுக்கடா

பாரதியின்  புதிய ஆத்திச்சுடி வரிகள் படித்தாலே படிப்போர்க்குப் புத்துணர்வு பிறக்கும் .பாரதியின்  புதிய ஆத்திச்சுடி வரிகளை வாசகன் கடைபிடித்தால் வாழ்வில் சாதிக்கலாம். செம்மையான வாழ்க்கை வசமாகும் .  இந்த நூலில் இவர் எழுதியுள்ள பாரதியின்  புதிய ஆத்திச்சுடியின் வரிகளுக்குகான விரிவான விளக்கம் மிக நன்று .நல்ல யுத்தி .பாரதி எழுதியபோது நினைக்காதையும் இந்த நூல் ஆசிரியர் நினைத்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள்

புதிய ஆத்திச்சுடியின் வரிகளுக்குகான விரிவான விளக்கம் .பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ !

கேட்டினும் துணிந்து நில் !

தொல்வி ,வறுமை ,நஷ்டம் ஏற்பட்ட காலத்தில் தளர்ச்சியுராமலும், பொறுமை , வஞ்சகம் , சூது ஆகியவற்றால் பிறரால் கேடு விளைவிக்கப்பட்ட காலத்தில் அஞ்சாமலும் ,துணிவுடனும் செயலாற்ற வேண்டுமெனக்  கூறுகிறார் 

வாழ்வியல் நெறியை மிக அழகாக எழுதி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் அவர்கள் மொத்தத்தில் பாரதி என்ற கடலில் மூழ்கி  நல்ல முத்து எடுத்து கோர்த்து முத்து மாலையாக்கி வழங்கி உள்ளார் பாராட்டுக்கள்.
 

மின்னல் கலைக் கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. விலை ரூபாய் 60 அலைபேசி 9841436213.