நூல் : விதி வரைந்த பாத (சிறுகதைத் தொகுதி)
நூல்
ஆசிரியர் :
 ஹனீபா சஹீலா
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

லக்கியம் என்பது கற்பனை ஆற்றலையும், சிறந்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும். அதில் கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் என பல வடிவங்கள் காணப்படுகின்றன.

கவிதை என்பது சொல்ல வந்த விடயத்தை சொற்ப வரிகளுக்குள் உள்ளடக்கி வெளிப்படுத்துவதாகும். சிறுகதை என்பது சொல்ல வந்த விடயத்தை தெளிவாக குறிப்பிட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு வெளிப்படுத்துவதாகும். அல்லது கதாசிரியரே கதை சொல்லியாக இருந்தும் சொல்ல முடியும்.

செல்வி சஹீலாவின் விதி வரைந்த பாதை என்ற சிறுகதைத் தொகுதி 67 பக்கங்களில் 10 சிறுகதைகளை உள்ளடக்கியதாக
அண்மையில் வெளிவந்துள்ளது. விதி வரைந்த பாதை, கலங்காதே கண்மணி, உன்னோடு வாழாவிட்டால், கருவோடு கருகிய தாலி, நிம்மதியாகவே வாழ்ந்திருப்பேன், பாவம் இந்தப் பாவை இவள், கறுப்பு ஜுன், தீயில் கருகிய மொட்டு, மனதைத் திறந்த மடல், அமாவாசை பௌர்ணமியாகிறது போன்ற தலைப்பில் அமைந்த சிறுகதைகளே அவையாகும். புதிய எழுத்தாளர்கள் வரிசையில் தற்போது இவரும் இணைந்து கொள்கின்றார். அட்டாளைச் சேனையைப் பிறப்பிடமாகவும், கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரியின் முதன்மொழி தமிழ் கட்டுறு ஆசிரியப் பயிலுனராகப் பயிற்சி பெற்று, தற்போது கிண்ணியா மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுபவர்.

கிண்ணியா தி/அல்ஹிறா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் தனது பாடசாலைக் காலங்களில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும், தமிழ் மொழித் தினப் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது கலை இலக்கிய ஆற்றலை நன்கு வெளிப்படுத்தி பல பரிசில்களையும், சான்றிதழ்களையும் தனதாக்கிக் கொண்டவர். இவற்றுக்கு மேலாக கல்வியியற் கல்லூரி உள்ளகப் பயிற்சிக் காலத்தில்  கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறுகதை எழுத்தாளராக அறியப்படும் இவர் தினகரன் மற்றும் மித்திரன் வார
வெளியீடுகளில் தொடராக எழுதி வந்துள்ளார்

ஹனீபா சஹீலா தனதுரையில் ''வேர்கள் மண்ணுக்குள் வாழ்வது போல, நெஞ்சுக்குள் வலிகள் இருக்கும் வரை கலைப் படைப்புக்கள் வெளிவரத் துடிக்கும். சிறு சிறு வலிகள் வரிகளை வரையத் தூண்டுகின்றன. சிறகுகளை விறகுகளாக்க முனைவோருக்கு முன் விறகுகளையும் சிறகுகளாக்கத் துடிக்கிறது என் மனது. சிறு வயதில் வாசிப்பில் கொண்ட ஈடுபாடே என் விரல்களுக்குள் பேனையைச் சிக்க வைத்தது. சிக்கிய பேனா சிந்திய சில்லறைகளை சேமிக்கும் முயற்சியே இது'' என்கிறார்.

வெலிப்பன்னை ரஹ்மானிய்யா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் தேசமாணி அல்ஹாஜ் .டப்ளியூ.எம. அஸார் அவர்கள் தனது ஆசியுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''சமூகப் பிராணியான மனிதனின் சிந்தனைகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டும் நிறுத்திவிடாமல் பரந்தளவில் பயன்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் குறைவே. ஆனால், இளம் எழுத்தாளரான இவர் சமூகத்தோடு நெருக்கமாகி, சமூகத்தில் நடக்கும் உண்மைகளைத் தேடி சிறுகதைகளாகப் புனைந்து, அதை நூலுருப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கதே. மே/மது/ வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மகா வித்தியாலயத்தில் கட்டுறுப் பயிற்சிக்காக வந்த இவர், கற்பித்தல் நடவடிக்கையோடு  மட்டும் நின்றுவிடாமல் சிறுகதை, கவிதை போன்ற எழுத்தாக்கங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதோடு அவற்றைத் தொகுத்து நூலுருப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.''

அகம் சார்ந்த அழகான கதைகளுடன், சமூகம் சார்ந்த கதைகளும் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஆரம்ப எழுத்தாளருக்குரிய தன்மைகளைவிட்டும் தூரமாகி பல படைப்புக்களைப் படைத்தவர் போன்று அவர் எழுதும் விதம் வாசகரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளச் செய்கின்றது. அவர் இடைக்கிடை பயன்படுத்துகின்ற கவி வரிகளும், பழமொழிகளும் கதையின் சுவாரஷ்யத்தை அதிகரிக்கின்றது.

முதல் சிறுகதையான விதி வரைந்த பாதை (பக்கம் 09) என்ற கதை, காதலைப் பற்றி அழகாக பேசியிருக்கின்றது. காதலன் காதலை மறந்து போனதும், அவனது நண்பன் ஒரு சகோதரனாய் இருந்து ஆறுதல் சொல்கின்றான். அந்த ஆறுதலில் சகோதரத்துவமும், நட்பும் மிக அழகாக காட்டப்பட்டிருக்கின்றது. இறுதியில் அந்தப் பெண் ஒரு வைத்தியரைத் திருமணம் முடிக்கின்றாள். அவளது முன்னைய காதலன் காலத்தின் கோலத்தால்  விபத்துக்குள்ளாகி, ஒரு காலையும் இழந்துவிடுகின்றான். ஒரு நல்ல பெண்ணை இழந்துவிட்டதால் அவனது வாழ்க்கை விதி வரைந்த பாதை வழியே செல்கின்றது.

கலங்காதே கண்மணி (பக்கம் 19) என்ற சிறுகதையும் தனது கருவாக காதலையே கொண்டிருக்கின்றது. அண்ணால் ஏமாற்றப்ட்ட ஒரு பெண்ணுக்கு அவனது தம்பி வாழ்வு கொடுப்பதாக கதையோட்டம் காணப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் பலரும் காதலை ஒரு பொழுதுபோக்காகவே கொண்டிருக்கின்றார்கள்.

உன்னோடு வாழாவிட்டால் (பக்கம் 24) என்ற சிறுகதை, ஆழமான அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. தனது தோழியினூடாக காதலைச் சொல்கிறாள் சஜி. ஆனால் பர்ஸாத் அவளது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனது கல்யாணமும் நிச்சயமான பிறகு சஜி தனது தூய காதலை நிரூபிப்பதற்காக தண்டவாளத்தில் இறந்து கிடந்தாள். தனிமையாக கிடந்த அவளது கையை மாத்திரம் கண்டதும் பர்ஸாத் அந்த கை மீது முத்தமிடுகின்றான். அந்த சம்பவம் வாசகரின் உள்ளத்தை அப்படியே கசியச் செய்துவிடுகின்றது.

கருவோடு கருகிய தாலி (பக்கம் 29) என்ற சிறுகதை இல்லாமல் போன நமது கலாசாரத்தை பறைசாற்றுகின்றது. அதாவது ஒருவரின் மனது என்ன பாடுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் பலர் அடுத்தவரை புண்படுத்துகின்றனர். அவர்களை கண்டவாறு பேசி இதயத்தை துளைத்து அதில் அலாதி இன்பம் அடைகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் என்றால் அதனைச் சொல்லவும் தேவையில்லை. அவ்வாறானதொரு சமூகப் பிரச்சனையை கதாசிரியர் இந்தக் கதையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். காலப்போக்கில் அவள் கருத்தரிக்கின்றாள். அந்தச் சந்தோஷமான செய்தியை கணவனுக்கு தொலைபேசி வழியாக சொல்கின்றாள். அவளைப் பார்க்க ஆவலுடன் வரும் கணவன் விபத்துக்குள்ளாகிறான். அந்தச் செய்தியை அறிந்த அவள் மயங்கி கீழே வீழுந்து வயிறு அடிபடுகின்றது. அதனால் கருவும் கலைகின்றது. தற்போது இருவரும் இன்றி அவள் படும் துயரை இந்தக் கதையிலே துல்லியமாக பதிய வைத்திருக்கின்றார்.

நூலாசிரியர் ஹனீபா சஹீலாவின் முயற்சிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டியது ஏனைய எழுத்தாளர்களின் கடமையாகும். இளம் வயதிலேயே பல திறமைகளைக் கொண்டுள்ள நூலாசிரியர் சஹீலாவை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - விதி வரைந்த பாதை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஹனீபா சஹீலா
விலை - 200
ரூபாய்