நூல் : கடவுளிடம் சில கேள்விகள்
நூல்
ஆசிரியர் :
 வே. முல்லைத்தீபன்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

ன்று இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், நூல் விமர்சனங்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டி வருவது கண்கூடு. இந்த வகையில் முல்லைத்தீவைச் சேர்ந்த வே. தீபனும் தனது கவிதை, கட்டுரை போன்ற படைப்புக்களை தினக்குரல், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் களப்படுத்தி தனக்கென்ற ஒரு அடையாளத்தை பதித்துக்கொள்ள முயற்சிக்கிறார்

முல்லைத்தீபன் என்ற புனைப் பெயரிலேயே பெரும்பாலும் தனது கவிதைகளை பத்திரிகைகளில் களப்படுத்திவரும் இவர், கடவுளிடம் சில கேள்விகள் என்ற கவிதை நூல் மூலம் இலக்கிய வாசகர்களுக்கு விருந்து படைக்கின்றார். முல்லைத்தீபன் எனும் மண் வாசனையுடன் எழுத்துலகில் கால் பதிப்பது ஊரின் மீது தான் கொண்ட பற்றை, நேசித்தலை வெளிப்படுத்துகின்றது. தன் வலி சார்ந்த படைப்புக்கள் நிச்சயம் சமூகத்தில் ஒரு மாறுதலை உண்டு பண்ண முயற்சிக்கும் என்பது திண்ணம். அகம் சார்ந்த கவிதைகள், சமூக சீர்திருத்தக் கவிதைகள், போரியல் சார்ந்த கவிதைகள் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 28 ஆவது நூல் வெளியீடாக 75 பக்கங்களை உள்ளடக்கியதாக 25 கவிதைகளைத் தாங்கி இந்த நூல் வெளிவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவரான இவர் தற்போது தனியார் கல்வி நிறுவனத்தில் .பொ. சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கு வரலாறு, புவியியல் போன்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூலுக்கு கலாபூஷணம், தமிழ்மணி, கலாநிதி அகளங்கன் அவர்கள் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

``மண்பற்றுக்கொண்ட தீபன், முல்லைத்தீபனாக கவியுலகில் அறிமுகத்தைப் பெறுகிறார். கவிதை மட்டுமன்றி வில்லுப்பாட்டு, தாலளய நாடகம், இசை நாடகம், வடமோடி, தென்மோடி நாட்டக் கூத்துகள், சமூக நாடகங்கள் என கலைத் துறையில் பங்குபற்றி அனுபவம் பெற்றுள்ளார். செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் ஷநம்பி(க்)கை வை| என்ற தலைப்பில் கவிதை நூலொன்றைக் கையெழுத்துப் பிரதியாக 2009.11.03 இல் வெளியிட்டு யாவற்றையும் இழந்து வந்திருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். சிறுவயதிலிருந்தே கலை இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவர், வாசிப்பை சுவாசிப்பாகக் கொண்டவர். பாடசாலை அதிபரான தாய்க்கு தனித்த பிள்ளையாக, தந்தையை இழந்த துயரில் தவித்த பிள்ளையாக இருக்கும் இவரின் கவிதைகளில் இவரது அனுபவம் வெளிப்படுகிறது.'' 

அடுத்து இந்த நூலுக்கு கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் நயப்புரை ஒன்றையும், யாழ். பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளரான கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் அவர்கள் பதிப்புரை ஒன்றையும் வழங்கியுள்ளார்கள்.

நூலாசிரியர் வே. முல்லைத்தீபன் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ``கற்பனை என்பது வேறு. நினைவுகள் என்பது வேறு. அவ்வப்பொழுது என்னுள் எழும் உணர்வுகளுக்கு உயிரூட்டி எழுதப்பட்ட சில கவிதைகளை ஒன்று சேர்த்துள்ளேன். மனிதம் தொடர்பாக சமூகத்திடம் அதிகமதிகமாக கேள்விகள் கேட்க வேண்டும் போலுள்ளது. விடை காணாப் புதிர்கள் ஏராளம் எம்மில் மலிந்து போய்க் கிடக்கின்றன. விரக்தியம், வேதனையும் வெகுண்டெழும் போது வடிகால்களைத் தேட முற்படுகின்றேன். தனிமையின் கொடுமைகள் உதைக்கின்ற போது எழுதுகோலையே அதிகம் காதலித்ததுண்டு. உணர்வுகளும், வார்த்தைகளும் புணர்கின்ற போது ஏற்பட்ட பிரசவத் தொகுப்பே இந்நூலாகும். யாருக்காகவும் எவராவது இருக்கிறார்களா? என்றால்... எவருக்காகவும் எவரும் இல்லை என்பதே விடையாகும்.''

இனி இந்த நூலிலுள்ள ஒரு சில கவிதைகளைப் பார்ப்போம்.

வாழ்க்கை என்றால் ஒன்று மாறி ஒன்றைப் பிடிக்க ஆசைப்பட்டு இறுதியில் எதுவுமே கிடைக்காமல் போவது என்று ஒரு அறிஞர் கூறிய கருத்துக்களை நிதர்சனமாக்கியது போன்று முல்லைத்தீபனின் வாழ்க்கை (பக்கம் 01) என்ற கவிதை அமைந்திருக்கின்றது. வாழ்வென்றால் இதுவா.. இல்லை அதுவா என்று எதையோவெல்லாம் யோசித்து புரிந்துகொள்வதற்கு முதலே வாழ்க்கை நம்மைவிட்டு போய்விடுகின்றது என்பதை கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றன

வாழ்க்கை என்றால்
என்னவென்று
தெரிந்து
கொள்ளவே
வாழ்நாள்
முடிந்து போகிறது..
இப்படியிருக்கையில்
 
எப்படித்தான்
 
வாழ்க்கை
முழுமையாவது...?

நீ எங்கே...? (பக்கம் 13) என்ற கவிதை தொலைந்த காதல் பற்றி பேசுகின்றது. இதயத்தைப் பரிமாறியவர்கள் எல்லாம் இல்லறத்தில் சேர்வதில்லை. யுத்தத்தில் வாழ்ந்த மக்களுக்கு யுத்தமே ஒரு எதிரியாக மாறி விட்டதை இலக்கியங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அந்த வலி இந்த வரிகளினூடாகவும் வெளிப்பட்டிருக்கின்றதைப் பாருங்கள்.

நாடக மேடையிலே நான்
நடித்திருந்த
வேளை
நயனங்களாகியவள்
நீ!

வாழ்வுப் போரிலே - நான் 
வெற்றி
பெற்றிருந்த வேளை
வாழ்த்திக்
களிப்புற்றவள் நீ!

வேதனையிலே - நான் 
வாழ்ந்திருந்த
வேளை
விரதமிருந்தவள்
நீ!

ஒரு காலிழந்தே - நான்
ஊனமுற்றிருந்த
வேளை
ஊன்று
கோலாகியவள் நீ!

குருத்தின் கவலை.. (பக்கம் 18) என்ற கவிதை பெற்றோர் தம் பிள்ளைகளை எண்ணி சொல்வது போன்ற உவமானத்தை ஒத்ததாக இருக்கின்றது. தமது வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணியே கவலைப்படுவார்கள். அத்தகைய ஒரு உண்மையை இவ்வரிகள் இயம்பி நிற்கின்றன.

குருத்தோலையொன்று
வாய்விட்டு
அழுகிறது
காய்ந்து
விழும்
காவோலைகளை
நினைத்தல்ல
நாளை
துளிர்ப்பதற்காய்
காத்திருக்கும்
ஆயிரமாயிரம்
குருத்தோலைகளை
நினைத்து!

ஓரிதயத்தினுள்ளே... (பக்கம் 22) என்ற காதல் கவிதை உடல் உறுப்புக்களை வைத்து ஒரு வித்தியாசமான கற்பனையில் எழுதப்பட்டிருக்கின்றது. நாடிகளும் நாளங்களும் காதலுக்காக தூது செல்கின்றன என்று தன் கற்பனையை அழகாக வடித்திருக்கின்றார் கவிஞர் முல்லைத்தீபன்.

வலது
இதய
அறையில் - நீ
இருந்து
கொண்டு
இடது
இதய
அறையிலிருக்க
அனுமதித்தாய்
என்னை..

ஏக்கம் (பக்கம் 38) என்ற கவிதை சந்தம் பொதிந்த ஒரு கவிதையாக அமைந்திருக்கின்றது. கனிவிலும், வலியிலும் கழியும் காலம் பற்றி கவிஞர் எடுத்துரைக்கின்றார். போலியான இந்த உலகில் வேஷமாக பழகும் மக்களும், சந்தர்ப்பத்துக்கு விலகிடும் கயவர்களும் இருப்பதாகச் சாடி இருக்கின்றார். எல்லாக் காலத்திலும் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் வருகின்றனர். ஆனால் காலம் செல்லச்செல்ல உலகமானது கலியுகமாக மாறிவிட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மை. இன்று நம்பிக்கைக்காக பழகிவிட்டால், நாளை காலை வாரிவிடுபவர் அவராகத்தான் இருப்பார். ஒவ்வொருவருக்கும் இதில் தனித்தனி அனுபவங்கள் நிச்சயம் இருக்கலாம்.

கனவினூடே நகருது - நம்
கனிவான
நினைவுகள்
வலியுனூடே
வளருது - எம்
வாலிப
வயதுகள்

வேதனைகள் தந்திங்கு - மடல்
விழிகளும்
நனையுது..
பாகங்கள்
வலித்திங்கு - உடல் 
பாழ்பட்டுப்
போகுது

வேசமாய்ப் பழகியே - கடும்
நாசங்கள்
நடக்குது..
மோசமாய்
உருகியே - பெரும் 
பாசங்கள்
உடையுது!

வதங்கியே வெடிக்குது - மனசு
விம்மியே
வேகுது..
போலியே
உலகிது - இதன் 
பொய்மையே
விலகிடு!

தன் பரபமரிப்பில் இருப்பவர்கள் ஏழைகளாக இருக்கும்போது கோபுரங்களுக்h கொட்டிக்கொடுத்து புகழ் தேடுபவர்கள் பலர் உள்ளனர். வெறும் பெயருக்காகவும் பெருமைக்காகவும் இவ்வாறெல்லாம் நடப்பவர்கள் மனிதாபிமானம் துளியுமின்றி திமிராக நடந்துகொள்வதான வலியை கவிஞர் எங்களுக்கும் வெளிநாட்டில் சொந்தக் காரருண்டு (பக்கம் 55) என்ற கவிதையினூடாக பிரதிபலிக்கின்றார்.

கோபுரத்திற்கு
கொட்டிக்
கொடுப்பதுடன்
அதைச்
சுற்றியுள்ள
குடில்களுக்கு
ஆயிரத்திலாவது
கூரையமைத்துக்
கொடுத்தலென்ன
குறைந்தா
போய்விடும்?

வாசிப்பினூடாக இன்னும் தன் ஆளுமையை வளர்த்து எதிர்காலத்தில் இன்னும் நல்ல கவிதைகளை கவிஞர் முல்லைத்தீபன் தர வேண்டும். அவரது இலக்கிய முயற்சிகள் யாவும் வெற்றி பெற மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - கடவுளிடம் சில கேள்விகள்
நூலின்
வகை - கவிதை 
நூலாசிரியர்
- வே. முல்லைத்தீபன்
வெளியீடு
- வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
விலை
- 240 ரூபாய்