நூல் : தன்னம்பிக்கைச் சிந்தனைகள்
நூல்
ஆசிரியர் :
 சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்கள் மதுரையில் தமிழ்நாடு அரசு தமிழ்த்துறையின் சார்பில் உலகத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்க மேடையில் அமர்ந்திருந்த போது இந்த நூலைத் தந்தார்கள்.  

அன்று தமிழ்
  இலக்கியத்தில் மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்புரை-யாற்றினார்கள்.  தமிழ்த்துறை மற்றும் செய்தித்துறைச்  செயலர் முனைவர் இராசாராம் இ .ஆ .ப .அவர்களும் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்களின் பல நூல்கள் படித்து இணையத்தில் விமர்சனங்கள் பதிவு செய்துள்ளேன்.
  அவரது சிந்தனையின் சிறு தொகுப்பாக கையடக்க நூலாக வந்துள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, நூல் அளவில் சிறிதாக இருந்தாலும், கருத்தின் தாக்கத்தில் விஞ்சி நிற்கின்றது.  நூலில் உள்ள சிறந்த சிந்தனைகளை மேற்கோள் காட்டிட, பக்கத்தை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன்.  எல்லாப் பக்கங்களையும் மடித்து விட்டேன்.  நூல் விமர்சனத்தில் அனைத்தும் எழுதிடக் கூடாது என்பதால், திரும்பவும் மறுபரிசீலனை செய்து, சிலவற்றை மனமின்றி நீக்கிவிட்டு, மிகவும் பிடித்ததை பதச்சோறாக இங்கே எழுதி உள்ளேன். 

பெற்றோர்களிடம், வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றைக் கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.  அத்தகைய நட்பின் மேன்மையை உணர்த்திடும் வைர வரிகள் இதோ!

உப்பில்லாமல் கூட உயிர் வாழலாம் – ஆனால்
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது.

தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறிந்து மனம் உற்சாகம் அடைய உதவும் சொற்கள்.
 

மன உற்சாகம்

உங்களுக்கு என்னென்ன இல்லை
எனக் கவலைப்படுவதை விட
உங்களுக்கு ஏதாவது
சிறப்புத்தன்மை இருக்கும்
அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள!
உங்களிடம் இருக்கும்
நிறைகளைப் பற்றி எண்ணுவதால்
மனம் உற்சாகம் அடைகிறது
உத்வேகம் பிறக்கிறது
.

நம் மனதளவில் மட்டுமல்ல, நம் துணையிடம் குறையும் இருக்கும், நிறையும் இருக்கும்.
  குறையை மறந்து, நிறையை நினைந்து, மதித்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும், சிறக்கும்.

எனக்குத்தான் வாழ்க்கையில் துன்பம் என்று எல்லோருமே நினைக்கின்றனர்.
  அவர்களுக்கான ஊக்கம் தரும் சிந்தனைக் கருத்து மிக நன்று.

மன ஆற்றல்

எத்தகைய புயலையும் வெள்ளத்தையும்
தாங்கக் கூடிய ஆற்றல் மிக்கதாக
உங்கள் மனம் இருக்க வேண்டும்
சின்னச் சின்னத் தூறலையே
தாங்க இயலாத பொத்தல் குடிசையாக
அது இருக்கக் கூடாது.


மன உறுதி பெற தன்னம்பிக்கைக் கருத்துக்களையே வாசிக்க வேண்டும். சில பக்கங்கள் வெற்றிடமாக உள்ளன.
  அடுத்த பதிப்பில் தவிர்த்திடுங்கள்.  பக்கம் 24ல் வந்த சிந்தனையே பக்கம் 65லும் பிரசுரமாகி உள்ளது.

நாவடக்கம்

வளர்ந்து வரும் மனிதனுக்கு
நாவடக்கம் மிகவும் இன்றியமையாதது.


நேர்மறை சிந்தனை விதைக்கும் அறபுத வரிகள்.
  சில வரிகள் என்றாலும் தன்னம்பிக்கை பிறக்க வைக்கும் வரிகள்.

முயன்றால் முடியும்!

முடியாது என்பது மூடத்தனம்
முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பது தன்னம்பிக்கை
என்னால் மட்டுமே முடியும் என்பது ஆணவம்!
முடியும் என்று துணிந்து விட்டால்
மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும்!

மற்றவரின் குறைகளை மட்டுமே ஆராய்ந்து கண்டுபிடித்து குத்திக் காட்டும் பழக்கம் உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள்.
  அவர்களுக்கான அழகிய வரிகள்.

நல்ல மனம்

எல்லோரிடத்தும் குறைகள் உண்டு
அந்தக் குறைகளை மறந்து நிறைகளை மட்டும்
கண்டறிந்து பாராட்டுவதே
நல்ல மனம் படைத்தோருக்கு அடையாளம் !

நூலாசிரியர் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்டு பேசும் கூட்டங்களில் எல்லாம் மறக்காமல் உச்சரிக்கும் வைர வரிகள் இவை.

எழுந்தால் எதுவும் சாத்தியமே!

முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.

சிலர் ஒரு வெற்றி பெற்றவுடனே ஆணவத்தில் அடுத்து இயங்காமல் சோம்பேறியாகவே இருந்து விடுவார்கள்.
  அவர்களுக்கான வரிகள் மிக நன்று.

வெற்றி என்றால் ...

முதன்மையாக இருப்பதல்ல வெற்றி
முன்னேறிக் கொண்டே
இருப்பது தான் வெற்றி.

நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் படிக்கும் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
  பயனற்ற பக்கம் நிரப்பும் எழுத்துக்களை வாசகர்கள் வரவேற்பதில்லை.  படிக்கும் வாசகருக்கு சுறுசுறுப்பைப் போதிக்கும் எழுத்து இவை.

திசையெல்லாம் கிழக்கு!

படுத்துக் கிடப்பவனுக்குப் பகல் கூட இரவு தான் – ஆனால்
எழுந்து நடப்பவனுக்குத் திரும்பும் திசையெல்லாம் உதயம்.

இன்றைய இளைஞர்கள் இந்த வரிகளை வாழ்க்கையில் கடைபிடித்து நடந்தால் சாதிக்கலாம், சிறக்கலாம்.

முன்னேற்ற வழிகள்!

முன்னேற வேண்டுமானால் உழைப்பை நம்புங்கள்
காலந்தவறாமையை மேற்கொள்ளுங்கள் !
நல்லோரைச் சந்தித்து
உங்கள் திறமையை
வெளிப்படுத்துங்கள் !
சுயமுயற்சியுடன் சிந்தித்து செயலாற்றினால்
கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்!

“ஏழையாகப் பிறப்பது உன் குற்றமல்ல – ஏழையாகவே
வாழ்வது தான் உன் குற்றம்”
   என்ற புகழ் பெற்ற வரிகளை வழிமொழிந்து எழுதிய வரிகள் மிக நன்று.

சரித்திரம் படைக்க

பிறப்பு தரித்திரமாக இருந்தாலும்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்
என்ற எண்ணத்தோடு செயல்படுங்கள்.
 
வரலாறு உங்கள் வரலாறு பேசும்.

சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்களின் தன்னம்பிக்கை சிந்தனைகள்
  நூல் படித்து விட்டு வைத்துவிடும் புத்தகம் அல்ல.  கவலை. மனச்சோர்வு, சோகம் வரும் போதெல்லாம் மறுவாசிப்பு செய்து ஊக்கம் பெற்றுக்கொள்ளும் நூல்.
 

தன்னம்பிக்கை அறக்கட்டளை கவியரங்கம்,
24, பிருந்தாவன் கார்டன், மணியகாரம்பாளையம், கணபதி, 
கோவை-
641 006.

*****