நூல் : கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !
நூல்
ஆசிரியர் :
 மூத்த பத்திரிக்கையாளர் . திருமலை !
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி

முனைவர் . அருள்ராஜ் அவர்களின் பதிப்புரை மிக நன்று.  அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானதாக உள்ளது.  கச்சத்தீவு என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.  தமிழகத்தின் அனுமதி பெறாமலே நடுவணரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது.  நம்மால் இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே நம் மீனவர்கள் சென்றால் கண்மூடித்தனமாக சுடுவது, தாக்குவது, கைது செய்வது என கோரத்தாண்டவம் ஆடி வருகின்றனர் சிங்கள இராணுவத்தினர்.  இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்தியாவில், தமிழகத்தின் அனுமதி இன்றி தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும். கொடுத்ததைத் திரும்பப் பெற முடியுமா? என கேள்வி கேட்பவர்களுக்கு விடை சொல்லும் விதமாக நூல் எழுதியுள்ளார் நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் . திருமலை அவர்கள்.

கச்சத்தீவுப் பகுதிக்கு சென்று வலைகளை உலர வைப்பதற்கும், ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று தாரை வார்த்த போது குறிப்பிடப்பட்ட ஒப்பந்தத்தையும் இலங்கை இராணுவம் கடைபிடிக்கவில்லை.  ஒருவர் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அதை ரத்து செய்யும் உரிமை நமக்கு உண்டு என்பதை மைய அரசு உணர வேண்டும்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற விதமாக பேராயக்கட்சி செய்த தவறையே பாரதீய ஜனதா கட்சியும் செய்து வருகிறது.  இலங்கைக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் கருத்து பதிவு செய்திட்ட அவலத்திற்கு கண்டனத்தை நூலில் நன்கு பதிவு செய்துள்ளார்.

கச்சத்தீவு மீதான, இராமனாதபுரம் இராஜாவின் ஜமீன்தாரி உரிமையின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பது வலுவான வாதமாகும்.  கச்சத்தீவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தொடர்பாக இராமநாதபுரம் சேதுபதி தொடர்ந்து பலரிடம் ஒப்பந்தங்கள் செய்திருக்கிறார்.

கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமானது என்பதை பல்வேறு ஆவணங்களின் விபரம் தேதிகளுடன் மிக நுட்பமாக நூல் வடித்து உள்ளார்.  நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர். எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் மேம்போக்காக எழுத மாட்டார்கள். கட்டுரை தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி, ஆய்ந்து, அறிந்து, ஆராய்ந்து எழுதும் ஆற்றல் மிக்கவர்.  கச்சத்தீவு பற்றியும் மிகப் பெரிய ஆய்வு நடத்திய பின்பே இந்த  நூலை எழுதி உள்ளார்.

கச்சத்தீவு தொடர்பாக நடக்கும் வழக்கிற்கு இந்த நூலையே நீதிமன்றத்தில் ஆவணமாக வழங்கினால் கச்சத்தீவு நமக்கு கிடைக்கும்.  நமது மீனவர்களும் நிம்மதியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வர வேண்டும்.  மன நிம்மதி வரும்.

கச்சத்தீவை நாம் பெறாத வரை இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவதும், சுடுவது, வலைகளை அறுப்பதும், கைது செய்வதும் பிறகு விடுதலை என்று நாடகம் ஆடுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.  இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை திரும்பப் பெறுவதே இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நூல் வடித்துள்ளார் பாராட்டுக்கள்.  கச்சத்தீவை திரும்பப் பெறுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்கும்.  சீனா போன்ற நாடுகள் கச்சத்தீவை ஆக்கிரமிப்பதை தவிர்க்க முடியும்.

பாகிஸ்தான், காஷ்மீரை கேட்டால் கொடுக்கக் கூடாது என்று நாட்டுப்பற்றுடன் சொல்லும் நாம் அன்று கச்சத்தீவை இலங்கை கேட்டபோது கொடுக்கக் கூடாது என்று உரக்கக் குரல் கொடுக்காமல் தவறு செய்து விட்டோம்.  அன்று செய்த தவறை சரிசெய்ய கச்சத்தீவை உடனடியாக திரும்பப் பெறுக என உரக்கக் குரல் கொடுக்க உதவிடும் நூல் இது.  கச்சத்தீவு பற்றிய புரிதலை உண்டாக்கும் உன்னத நூல்

கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா (தானம்) வழங்கியவுடன் இராமநாதபுரம் இராஜா ராமசேதுபதி நிருபர்களிடம்மத்திய சர்க்காரின் முடிவு துக்ககரமானது.  கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லைஎன்று விம்மினார்.

அவர் அன்று சொன்னது இன்றும் நமது மீனவர்கள் தினந்தோறும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு தான் இருக்கிறார்கள்.  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க காரணமாக உள்ளது கச்சத்தீவு இழப்பு.

எம்.பி. யாக இருந்த நாஞ்சில் மனோகரன்தேசப்பற்றற்றவர்களின் நாகரீகமற்ற செயல் இது! எனக் கண்டித்தார்.  இந்திய மண்ணை அடகு வைத்த இந்த மோசமான ஒப்பந்தத்தைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாகக் கூறினார்.  ‘தேசவிரோதமான, தேசபற்றற்ற ஒப்பந்தம் இது.  இது போன்ற மோசமான ஒப்பந்தத்தை எந்த நாடும் கையெழுத்திடாதுஎன்றார்.  இப்படி கச்சத்தீவை தாரை வார்த்த போதே பாரவர்டு பிளாக் கட்சி உறுப்பினர் மூக்கையாத்தேவர், முஸ்லீம் லீக் உறுப்பினர் முகமது ஷெரீப் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கண்டனக் குரல் முழுவதும் இந்த நூலில் உள்ளன.  நூல் அளவில் சிறிதாக இருந்தாலும் கருத்தாழம் மிக்க நூல்.  இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட ஒப்பந்தம்.  எனவே இந்த ஒப்பந்தம் செல்லாது என்று வாதாட உரிமை உண்டு”.

கச்சத்தீவைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு உரியதுஎன்பதற்கு போதிய ஆவணங்கள் உள்ளன.  இலங்கையிடம் ஒரு ஆவணமும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாகஎன்று கிராமத்து பழமொழி ஒன்று சொல்வார்கள்.  அந்த கதையாக கச்சத்தீவு ஆகிவிட்டது.  எனவே உடனடியாக நீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும்

முயன்றால் முடியாதது எதுவுமில்லைமுயற்சி திருவினையாகும் என்றார் வள்ளுவர்.  கூடிய விரைவில் கச்சத்தீவைத் திரும்பப் பெறுவோம்.  அந்த வெற்றிவிழாவில் நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் . திருமலை, பதிப்பாளர் முனைவர் . அருள்ராஜ் அவர்களைப் பாராட்டுவோம், இது நடக்கும்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் வாசிக்கப் பட்ட  ஹைக்கூ


கச்சத்தீவு !

கவிஞர் இரா .இரவி !



யாருடைய தீவில்
யாரடா விரட்டுவது
கச்சத்தீவு !

ஒண்ட வந்த பிடாரி
ஊர்க்காரனை விரடியதாம்
கச்சத்தீவு !

தானம் தந்த இடத்தில
தந்தவனைச் சுடுவானாம்
கச்சத்தீவு !

விடுவானாம் சீனாக்காரனை
விடமாட்டானாம் தமிழனை
கச்சத்தீவு !

பிச்சைப் பெற்றவன்
பீத்திக் கொள்கிறான்
கச்சத்தீவு !

உதவலாம் நண்பனுக்கு
பகைவனுக்கு உதவுவது மடமை
கச்சத்தீவு !

கடைத்தேங்காய் எடுத்து
வழிப் பிள்ளையாருக்கு
கச்சத்தீவு !

தமிழனைக் காக்க முடியாதவர்களுக்கு
தமிழன் நிலம் தானம் தர உரிமை உண்டா ?
கச்சத்தீவு !

விடவில்லை வணங்கிடவும்
விடவில்லை வலை உலர்த்த
கச்சத்தீவு !

ஒப்பந்தம் மீறுகிறான்
கையொப்பம் இனி செல்லாது
கச்சத்தீவு !

அப்பாவி மீனவனுக்கு விட்டு
அடப்பாவியே வெளியேறு
கச்சத்தீவு !

தமிழர் வளத்தைச் சுரண்டி
சிங்களன் வளம் கொழிக்கிறான்
கச்சத்தீவு !

எங்கள் தீவில்
எங்களை விரட்ட யாரடா நீ
கச்சத்தீவு !

எம் இனம் அழித்த
ஈனனுக்கு இனி இடமில்லை
கச்சத்தீவு !

சீரழித்த சிங்களனுக்கு
இடமில்லை வெளியேறு
கச்சத்தீவு !

தானம் தந்த கை முறிக்கும்
தரமற்றவனே வெளியேறு
கச்சத்தீவு !
 

...........................................................

பாபுஜி நிலையம்,
39A/48, மரக்கடை சாலை,
இராணி
தோட்டம்,
நாகர்கோவில்
-629 001.