நூல் : பச்சைத் தேவதைகள்
நூல்
ஆசிரியர் :
 கவிஞர் மரிய தெரசா
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் மரிய தெரசா அவர்கள் காரைக்காலில் பிறந்தவர்.  தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பட்டம் பயின்றவர்.  முனைவர். ஆசிரியர் பணிபுரிந்து வருபவர்.  ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி.  ஏழு லிமரைக்கூ வடிவ கவிதை நூல் எழுதியுள்ள ஒரே கவிஞர் என்ற புகழுக்கு உரியவர்.

“பச்சைத் தேவதைகள்” நூலின் தலைப்புக்கு ஏற்றபடி மரம், செடி, கொடி பசுமையின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் நூல் முழுவதும் லிமரைக்கூ வடிவில் கவிதை வடித்துள்ளார்கள்.
  மரங்களின் முக்கியத்துவத்தையும் மழையின் தேவையையும் நன்கு உணர்த்தி உள்ளார்.  ஒரே மைய தலைப்பில் ஆழ்ந்து சிந்தித்து மிக நுட்பமாக எழுதி உள்ளார்கள்.  நூல் ஆசிரியர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஆசிரியர் என்பதால் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார்கள்.  பாராட்டுக்கள். 

இந்த நூலை
 “புன்னகை அரசி, புதுக்கவிதை படைப்பாளி, புவிமேல் பற்றுடை பூங்கோதை புதுமல் வைகைச் செல்வி அவர்களுக்கு” என்று எழுதி காணிக்கை ஆக்கி உள்ளார்கள்.  தொடர்ந்து பல நூல்கள் எழுதி வருவதால் ஒவ்வொரு நூலையும் ஒருவருக்கு சக படைப்பாளிகளுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறார்கள். எனக்கும் ஒரு நூல் காணிக்கையாக்கி இருந்தார்கள்.

நூலின் முதல் லிமரைக்கூ முத்தாய்ப்பாக உள்ளது.
  எந்த செயலையும் தள்ளிப்போடாமல் உடன் முடி என்று அறிவுறுத்தும் விதமாக உள்ளது.

இன்றே மரம் நடு
பசுமைக்கு இதுவே சிறந்த வழி
இதற்கு ஏன் கெடு?

அறிவியல் கருத்துக்களையும் கவிதையில் விதைத்து விழிப்புணர்வு ஊட்டுகிறார்.


ஓசோனில் ஏற்படுகிறது ஓட்டை
       
அறிந்தும் இதன் உபயோகம் ஏன்
நிறுத்துவோம் நம் சேட்டை!

பொன் விளையும் பூமி என்பார்கள்.
  பூமியை நன்றாகப் பேணி காத்தால் வளங்கள் கொழிக்கும், பசுமை செழிக்கும் என்பது உண்மை.

நமக்கு உதவும் மண்
அதன் பயன் அறிந்து பேணிட
வாழ்வு ஆகும் பொன்!

சாலை போடுகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டி சாய்க்கின்றனர்.
  ஆனால் வெட்டி வீழ்த்தும் அளவிற்கு மரங்களை நட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

மழை வேண்டி அலைகிறாய்
மரங்கள் நட நீ மறுக்கிறாய்
வீணான கவலையில் திளைக்கிறாய்!

வருங்கால சந்ததிகள் வளமாக வாழ நாம் பூமியின் வளத்தைப் பேணுவது நலம்.
  பூமி என்பது தங்க முட்டை போடும் வாத்து போன்றது.  அளவோடு பயன்படுத்தினால் தந்து கொண்டே இருக்கும்.  தங்க முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தை அறுத்த கதை போல பூமியை சிதைப்பதை நிறுத்த வேண்டும்.

நாளைய நம் சமுதாயம்
வறட்சியில் வாடி மடிவதா சொல்
உன் கரங்களில் சமுதாயம்!

மழைநீர் சேகரிப்பு என்பது அவசர அவசியம் இன்று.
  இன்னும் பலர் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் உணராமல் உள்ளனர்.  அவர்களுக்கான லிமரைக்கூ ஒன்று.

நீரின்றி வாடுபவர் பலர்
அறியாது இதன் அருமை வீணாக்கிபவர்
புவியில் பலர் உளர்!

பசுமை அழிந்து வருகின்றது.
  மழை பொய்த்து வருகின்றது.  வறட்சி வாட்டி வருகின்றது.  இதற்கு காரணம் நாம் தான்.

பசுமை பசுமை எங்கே
இதற்கு காரணம் நாம் தான்
மீண்டும் உருவாக்குவோம் இங்கே

பல வருடங்களுக்கு முன்பு பாலித்தீன் என்றால் என்னவென்றே அறியாது இருந்தது சமுதாயம்.
  ஆனால் இன்று எங்கும் எதிலும் பாலித்தீன் பரவி, விரவி விட்டது.  இதனை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும் குறைத்திடவாவது நாம் முன் வர வேண்டும்.  பழையபடி மஞ்சப்பை தூக்கி செல்வோம் கடைகளுக்கு.  இதில் இழுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்வோம்.

வாழ்க்கை அல்ல வேடிக்கை
பாலித்தீன் உபயோகம் ஏற்படுத்தும் தீமை
மாற்று உனது வாடிக்கை!

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள்.
  எனவே எதையும் அளவோடு பயன்படுத்தினால் பாதிப்பு இல்லை.  எதிலும் அளவு மீறும் போது ஆபத்து நிகழும் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

பூமி ஒரு கேணி
வசந்தத்தை அள்ளி அள்ளி வழங்கும்
காத்திடுவோம் அதனைப் பேணி!

பசுமை செழிக்க வறட்சி அழிய ஒரே வழி மரம் நடுவதே என்பதை தொடர்ந்து நூல் முழுவதும் லிமரைக்கூ கவிதைகளால் வடித்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வு விதைத்து உள்ளார்கள்.


வறட்சியால் மீளா தொல்லை
மரங்களை நட்டு மழையை மீட்போம்
தட்டாதீர் என் சொல்லை.

சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பயனுள்ள பல தகவல்களை, கருத்துக்களை லிமரைக்கூ வடிவில் வடித்து நூலாக்கி வழங்கி வரும் உண்மையான படைப்பாளி முனைவர் மரிய தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
  இன்னும் தொடர்ந்து எழுதி சாதனைகள் நிகழ்த்திட வாழ்த்துக்கள்.


.......................................................................................................................

நூல் ஆசிரியர் :
 
கவிஞர் மரிய தெரசா அலைபேசி : 92821 11071