நூல் : கொல்வதெழுதுதல் 90
நூல் ஆசிரியர் :ஆர்.எம். நௌஸாத்
நூல் ஆய்வு: வெலிகம ரிம்ஸா முஹம்மத்

ண்வாசனை மணக்கும் விதமாக படைப்புக்களை எழுதுவது எல்லோராலும் முடிந்த விடயமல்ல. அதை இயல்பான மொழிநடையாக எழுதி தன் நிலையை நிரூபித்திருக்கின்றார் ஆர்.எம். நௌஸாத். கிழக்கு மாகாணத்தின் பள்ளிமுனைக் கிராமத்தின் சொல்லாடல்கள் நாவலின் கனதிக்கு கட்டியம் கூறுகின்றன. கொல்வதெழுதுதல் 90 என்ற நாவலை வெளியிட்டிருக்கும் இவர் ஏற்கனவே வல்லமை தாராயோ? (2000) என்ற சிறுகதைத் தொகுதியையும், நட்டுமை (2009) என்ற நாவலையும், வெள்ளி விரல் (2011) என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்டுமை நாவலுக்கு சுந்தர ராமசாமி 75 பவள விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. அதேபோல் வெள்ளி விரல் சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் உயர் இலக்கிய விருதான அரச சாகித்திய விருதும், கிழக்கு மாகாண மாகாண சபையி;ன் சாகித்திய விருதும் கிடைத்துள்ளன. 1990 காலப் பகுதிகளில் நடைபெற்ற அரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டே இந்த நாவலை ஆசிரியர் நகர்த்திச் செல்கின்றார் என்பது நோக்கத்தக்கது

இந்த நாவல் பற்றி குறிப்புரை தந்திருக்கும் எம்.எம்.எம். நூறுல்ஹக் அவர்கள் 'ஒரு கிராமத்தின் தேர்தல் கள நிலவரங்கள், கொலைக் கள விபரங்கள், வர்க்க முரண் நிலைகள், காதலுணர்வுகள் ஆகியன வெகு யதார்த்தமாக இதில் சித்தரிக்கப்பட்டள்ளன. அதேவேளை அப்பாவிக் கிராமத்து மனிதர்களின் மனவியல்புகள், வர்ணனைகள், பேச்சோசைகள் என்பன கதையோட்டத்தின் ஊடே அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளன. நாவலாசிரியர் ஒரு திறமையான கதைசொல்லி என்பதை அவரது எழுத்துக்கள் நிறுவியிருக்கின்றன' என குறிப்பிட்டிருக்கின்றார்.

அரசியல் வரலாற்றின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அரசியல் தலைவன், தொண்டன், கட்சிப் பிரமுகர்கள், ஊர் மக்கள், தேர்தல் கால சூடுகள் போன்றவை பற்றி மட்டுமல்லாமல் கிராமிய வாழ்க்கை, காதல் உணர்வு, ஏழ்மை போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சமூக நாவலாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலின் கதாநாயகன் ஒரு அரசியல்வாதி என்பதை விட, அவரால் உருவாக்கப்படும் முத்து முஹம்மத் என்ற பாத்திரமாகும். வாழ்க்கையில் படக்கூடாத கஷ்டங்கள், அவமானங்கள் போன்ற அனைத்து தாழ்வுகளையும் சந்திக்கும் முத்து முஹம்மது, மைமுனா என்ற தன் மச்சினியைக் காதலிக்கின்றான். அவளும் முத்து முஹம்மதுவை மனதாரக் காதலிக்கின்றாள். மைமுனாவின் தாயாருக்கு இருவரது காதல் பிடிக்கவில்லை. வெறுமனே ஊர்ப் பொதுக் கூட்டங்களில் பாடல்களை பாடிக்கொண்டு திரியும் முத்து முஹம்மதுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் வளம் இருப்பதாக நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பொன்மானத் தேடி நானும் பூவோடு வந்தேன் என்ற பாடலை முத்து முஹம்மத் அடிக்கடி பாடுவதாகவும், அதன்போது மைமுனா கூட்டத்தில் இருக்கிறாளா என்று அவன் கண்கள் தேடுவதாகவும் குறிப்பிட்டுள்ள விதத்திலிருந்து அவர்களது காதல் உணர்வு மிக மென்மையாக இழையோடுவதை அறிய முடிகின்றது.

அதே போல அவனது காதலிக்கு வலைவீசும் சப்பு சுலுத்தான் என்ற பாத்திரமும் இந்த நாவலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவலின் விறுவிறுப்புக்கும், அடுத்த கட்ட நகர்வுக்கும் சப்பு சுலுத்தானின் நடவடிக்கைகள் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவல் மேலீட்டுக்கு அவனது செயல்கள் காரணம் என்பது அவதானத்துக்குரியது. ஏனெனில் இன்றைய காலத்திலும் சரி, என்றைய காலத்திலும் சரி.. சப்பு சுலுத்தான் போன்ற விஷமிகள் நம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். பெண்களை ஏமாற்றி வெளிநாட்டு ஆசையை வளர்த்து, பின் கொழும்புக்கு கூட்டிச் சென்று அவர்களது வாழ்வை இருட்டாக்கிவிட்டு, அந்தக் காசில் மனசாட்சியே இல்லாமல் சொகுசாக வாழ்கின்றார்கள். அதுவும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு பெண்களின் கற்பு சுலுத்தான் போன்றவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது என்பது நாவலின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.

கன்னிவெடிபட்டு கால் முடமாகிப் போனதால் ஷமுட உதுமான்| என்ற காரணப் பெயர்கொண்டு அழைக்கப்படும் ஊர்வாசியின் மனைவி, சுலுத்தானுடன் கொழும்புக்குச் சென்று அவனால் வாழ்க்கை இழக்கிறாள். அதை முத்து முஹம்மத் அடிக்கடி மைமுனாவுக்கு ஞாபகப்படுத்தி சுலுத்தானோடு பேச்சு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகின்றான். கிராமிய மணம் கமழும் சொற்றொடர்கள் இந்த நாவலில் தாராளமாகவே விரவிக் கிடக்கின்றதெனலாம். பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடும் சொற்களிலிருந்து அவர்களது அன்றாட வாழ்வியலை தரிசிக்க முடிகின்றது. உதாரணமாக கீழுள்ள உரையாடலைக் குறிப்பிடலாம்.

'ஐஸ்பளம் வாங்கித்தந்த ஆரு? சப்பன் எங்க?|'

'அவன் சுல்தான்! நெக்கில்ல... தம்பிக்கு வாங்கிக் கொடுத்த'

'மைமுனா! அந்த நாய்க்கிட்ட ஒன்டும் வாங்காதண்டு செல்லிரிக்கன்... ல்லா..? ஞ்சப்பாரு நான் வாங்கித்தாரன்.'

நாவலின் இடையே திடீரென முட உதுமானின் மனைவி நஞ்சு குடித்து இறந்து போகின்றாள். அவளது மையத்துக்கு வருகை தரும் தலைவர், முதல் முறையாக முத்து முஹம்மதுவுடன் பேசுகையில் அவன் பெறும் சந்தோஷம் கண்முன் தெரிகின்றது. ஒரு சாதாரண இளைஞனாக ஊருக்குள் இருக்கும் முத்து முஹம்மது தலைவர் மீது கொண்ட பற்றால் தலைவரின் நியமிப்பின் பேரில் இளைஞர் அணித் தலைவனாக ஆகிவிடுகின்றான்.

மைமுனாவின் தாய் மைமுனாவை வெளிநாட்டுக்கு அனுப்ப சம்மதிக்கின்றாள். முத்து முஹம்மது அதற்கு சம்மதிக்காதபோது மைமுனாவையும், அவளது தங்கைகளையும் பாரமெடுத்து வீடு வளவு வாங்குவதற்கு உன்னால் முடியுமா என்று கேட்கும் கேள்வியால் முத்து முஹம்மது சர்வாங்கமும் ஒடுங்கிப் போகின்றான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளுக்கு உதைத்துவிட்டு அவன் தரையில் உட்கார்ந்து அழுவதில் அவனது இயலாமை வெளிப்படுகின்றது.

மைமுனா வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளை சப்பு சுலுத்தான் செய்து முடித்துவிட்டு கொழும்புக்கு அழைக்கின்றான். மைமுனாவையும் அவளது தம்பி யாஸீன் மற்றும் முத்து முஹம்மதுவை அழைத்துக்கொண்டு மைமுனாவின் தாய் கொழும்புக்கு பயணமாகின்றாள்.

மருதானையில் உள்ள ஷயூக்கே லொஜ்| என அழைக்கப்படும் விடுதியில் அவர்களை இரண்டு வாடகை அறை எடுத்து தங்க வைக்கின்றான் சுலுத்தான். முத்து முஹம்மதுவை அழைத்து வந்தது அவனுக்கு எரிச்சலாக இருப்பதை வெளிப்படையாகவே காட்டிக்கொள்கின்றான். விமானமேறும் நாளில் எம்.பி யின் ஒப்பம் வேண்டும். அதற்கு முத்து முஹம்மது உதவி புரிய வேண்டும் என்று பொய்யைச் சொல்லி அழைத்துப்போய் இடையில் கைவிட்டு விடுகின்றான் சுலுத்தான். அவனது சூழ்ச்சியால் முத்து முஹம்மதுவும் கூடவே சென்ற யாஸீனும் கொழும்பில் வழிதெரியாமல் திக்குமுக்காடித் தவிக்கும் காட்சியில் முத்து முஹம்மது வாசகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றான்.

அங்கிருந்த பொலிஸாரிடம் அழுது மன்றாடி எம்.பியின் பெயரைச் சொல்லி அவரது வீட்டுக்கு சென்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுடன்.. சுலுத்தான் ஏமாற்றிய விதத்தைக் கூறி அவரது மேலீட்டால் யூக்கே லொஜ் செல்கின்கிறான். சுலுத்தான் மைமுனாவை வெளிநாட்டுக்கு அனுப்பியதுடன் யாஸீனை முத்து முஹம்மது கடத்தியதாக பொய் சொல்லி மைமுனாவின் தாய் மனதையும் மாற்றுகிறான். அதனால் மைமுனாவின் தாய் முத்து முஹம்மதுவை குறை சொல்கின்றாள்.

மைமுனா வெளிநாடு போன பின்பு பள்ளிமுனைக் கிராமத்துக்கு போகவே பிடிக்கவில்லை முத்து முஹம்மதுக்கு. அவளில்லாத அந்தக் கிராமத்தை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் ஷஷபொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன். நா வந்த நேரம் அந்ந பூவங்கு இல்ல|| என்ற பாடலை முத்து முஹம்மத் முணுமுணுக்கிறான். இதன் மூலம் மைமுனா மீது அவன் வைத்திருந்த உருக்கமான காதலின் வலி வாசகர் மனதிலும் கசிகிறது. எனவே எம்.பியே கதியென்று தன்னை எம்.பிக்காகவே அர்ப்பணித்துக்கொள்கின்றான் முத்து முஹம்மத்;. அவரது வழிகாட்டலின் கீழ் தான் கொஞ்ச கொஞ்மாக முன்னேறி, அரசியல் கற்று, தலைவரின் பேச்சு நுணுக்கங்களை ஆராய்ந்து ஒரு சராசரி நகரத்து இளைஞனாக மாறிக்கொண்டிருந்தான். தலைவரைக் கொல்ல வந்த முயற்சியில் தன் உயிரைத் துச்சமென மதித்து அவரைக் காப்பாற்றியதில் முத்து முஹம்மதுவுக்கு தனது இடது கையில் மூன்று விரல்களையும் இழக்க நேரிடுகின்றது. தலைவருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த அவனை பலரும் பாராட்டுகின்றனர். இந்தக் காரணத்தால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் வயற்சேனை பிரதேசத்தின் தவிசாளராக முத்து முஹம்மதுவை கட்சி நியமிக்கிறது. இதனால்  பலருக்குள் பொறாமைத்தீ கொளுந்து விட்டெரிகின்றது. இடையில் மைமுனா அனுப்புகின்ற கெஸட் முத்து முஹம்மதுக்கு கிடைக்கின்றது. சுலுத்தான் அவளது பெண்மையை சூரையாடிய சோகத்தை கெஸட் பாடி நிற்கின்றது. அந்த ஆத்திரத்தில் சுலுத்தானைக் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றான் முத்து முஹம்மது

இப்படியே நாட்கள் செல்ல முட உதுமானின் மகன் இயக்கத்தில் சேர்ந்து, தன் நண்பனொருவனுடன் வந்து சுலுத்தானை கொலை செய்கின்றான். தன் தாயை கொழும்புக்கு அழைத்துச் சென்று அவளது வாழ்க்கையை மட்டுமல்லாமல் தனதும், தன் தந்தையினதும் வாழ்க்கையை இல்லாமலாக்கிய சுலுத்தானை பலி வாங்கும் அவனது நோக்கம் அல்லது குறிக்கோள் நிறைவேறியதில் வாசகர்கள் ஆறுதலடையலாம். சுலுத்தான் போன்ற அயோக்கியர்கள் சமூகத்தில் இருக்கவே கூடாது என்ற மனநிலையில் நாவலைப் படிக்கும் வாசகர்கள் சுலுத்தானின் மறைவில் திருப்தி காணுவார்கள் என்பது நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்

இவ்வாறான சூழ்நிலைகளில் முன்னேறி எம்.பியின் மனதில் இடம்பிடித்து அவருக்கு விசுவாசமாக இருக்கின்றான் முத்து முஹம்மத். இலங்கை இஸ்லாமிய கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளராகவும், பள்ளி முனை இளைஞர் தலைவராகவும், முன்னாள் வயற்சேனை பிரதேச சபைத் தவிசாளராகவும் இருந்த முத்து முஹம்மது, தற்போதைய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்துள்ளான். அவன் தன் இளம் மனைவி மைமுனா சகிதம் வருவதாக நாவல் நிறைவடைகின்றது.

வாசிக்கிறோம் என்ற உணர்வை மறந்து பள்ளிமுனையில் வசிக்கச் செய்த நாவலாக இதைக் கொள்ளலாம். பள்ளிமுனைக் கிராமத்தை சுற்றிப் பார்த்து, அங்குள்ளவர்களுடன் உரையாடி.. அவர்களுடன் சிலநாட்கள் வாழ்ந்த ஒரு அனுபவம் நாவலை வாசித்து முடிக்கையில் உணர முடிகின்றது. இவ்வாறு ஒரு நாவலின் ஊடாக வாழ்வியலை தரிசிக்கச்செய்தநாவலாசிரியர் ஆர்.எம். நௌஸாதுக்கு வாழ்த்துக்கள்!!!

நாவல் - கொல்வதெழுதுதல் 90
நாவலாசிரியர்
- ஆர்.எம். நௌஸாத்
வெளியீடு
- காலச்சுவடு பதிப்பகம்
விலை
- இந்திய 150 ரூபாய்