நூல் :
கள்ளிப்பால்
நூல்
ஆசிரியர்
:
கவிஞர்
ஞா. தவப்பிரியா
நூல் அறிமுகம்:
கவிஞர்
இரா.
இரவி
ஈழத்தமிழர்களுக்கு
அடுத்தபடியாக தமிழ் உணர்வோடு வாழ்பவர்கள் புதுவைத் தமிழர்கள். ஹைக்கூ
இலக்கியத்திற்கு புதுவைத் தமிழ் நெஞ்சன் தொடங்கி பெரிய கூட்டமே
புதுவையில் இருக்கிறார்கள். ஹைக்கூ படைக்கிறார்கள். அந்த வரிசையில்
கவிஞர் ஞா. தவப்பிரியா படைத்துள்ள ஹைக்கூ கவிதை நூல் கள்ளிப்பால்.
கள்ளிப்பால் என்ற வாசித்தவுடனேயே நம் மனக்கண்ணிற்கு பெண் சிசுக் கொலை
வந்து விடுகின்றது. இந்த நூலை 'செஞ்சோலைச் செல்வங்களுக்கு' என்று
காணிக்கை ஆக்கி உள்ளார்.
தன் உடலுக்கு தீயிட்டு உயிரை பலி தந்து முத்துக்குமார் வைத்த கோரிக்கையை
நிறைவேற்றி இருந்தால் இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை காப்பாற்றி
இருக்கலாம். ஆனால் அன்றைய மைய அரசு செய்யத் தவறியதால் தமிழினத்தை
இழந்தோம். இப்படி பல்வேறு சிந்தனைகளை மலர்விக்கும் ஹைக்கூ.
பற்றியது
தமிழினத் தீ
முத்துக்குமார்
தமிழ்நாட்டில் தொலைக்காட்சித் தொடர் போதை என்பது மது போதையை மிஞ்சும்
அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனை உணர்த்தும் ஹைக்கூ.
தெளியாத போதை
தமிழ்நாடு
தொடர்கள்.
ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்லும் தலைவர்கள் இறங்கி மாடு
பிடிப்பார்களா? அவர்கள் உயிர் மட்டும் தங்கம். ஜல்லிக்கட்டு என்ற
பெயரில் வருடா வருடம் சிலர் சாவதும்இ பலர் காயமுறுவதும் காளைகள்
வதைபடுவதும் நடைபெற்று வருகின்றன. அவற்றை உணர்த்தும் ஹைக்கூ.
அய்ந்தாகிறது
ஆறறிவு
மஞ்சுவிரட்டு.
அரசியல் தலைவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ளாமலே எது
பேசினாலும் கை தட்டும் ஏமாளித் தொண்டர்கள் பற்றி எள்ளல் சுவையுடன்
வடித்த ஹைக்கூ நன்று.
எனதருமை
ஆட்டு மந்தைகளே
கைதட்டல்கள்.
உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விவசாயத்தை நசித்து
வருகின்றனர். இதனால் மனம் வெறுத்து விவசாயிகள் தற்கொலை செய்து
வருகின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
நீளும் தற்கொலை
இந்திய உழவன்
பசுமைப் புரட்சி.
நாம் தூங்கும் போது உள்மனம் துங்குவது இல்லை. அந்த உணர்வை உணர்த்திடும்
ஹைக்கூ.
இயங்குகிறது
உறங்கும் போதும்
உள்மனம்.
இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களையும் வென்று
விடுகிறார்கள் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள்.
விடியாதே
பொழுதே
பனித்துளி!
சில இல்லங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்று கவனம் ஈர்க்கும் வண்ணம் எழுதி
வைத்து இருப்பார்கள். படித்து இருக்கிறோம். அதனையும் எள்ளல் சுவையுடன்
உணர்த்தி உள்ளார்.
நாய்கள்
சாக்கிரதை
உள்ளே நரிகள்!
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்கிறார்கள். உலகில் தமிழர்கள் இல்லாத நாடே
இல்லை. ஆனால் அந்த தமிழருக்காக இலங்கையில் தனி நாடு அமைவது
தள்ளிக்கொண்டே போகிறது. ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் வரவில்லை.
ஏதிலி என்றால்
தமிழன்
அகராதி.
நூலில் தலைப்பில் உள்ள ஹைக்கூ சிந்திக்க வைக்கின்றது. நவீன உலகில்
பெண்கள் பல துறையிலும் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறார்கள்.
ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேலே சென்று வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
ஆனால் இன்றும் சிசுக்கொலை நடந்து வருவது வெட்கக்கேடு. மதுரையில்
குப்பைத் தொட்டியில்இ பிறந்த சில மணி நேரம் ஆன குழந்தையை ரத்தம் கூட
கழுவாமல் போட்டு விட்ட செய்தி படித்து அதிர்ந்து போனேன். ஆணாதிக்க
சமுதாயம் இன்னும் திருந்தவில்லை.
தாய்ப்பால்
புட்டிப்பால்
கள்ளிப்பால்!
நிலையாமை என்ற வாழ்வியல் தத்துவத்தையும் சொற்சிக்கனத்துடன் உணர்த்திடும்
ஹைக்கூ நன்று.
மீண்டும்
கூட்டுக்கு(ள்)
மயானம்!
மூடநம்பிக்கைகளைச் சாடும் விதமாகவும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன. அவற்றில்
ஒன்று.
விழுங்குகிறது
பஞ்சாங்கப் பாம்பு
தமிழனின் பண்பாடு.
ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்கு நீதி வழங்கிய மனுநீதிச்சோழன் வரலாறு
படித்து இருக்கிறோம். இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு வடித்திட்ட
ஹைக்கூ.
தலையில் விழுந்தது
ஆராய்ச்சி மணி
பணநாயகம்!
நூலாசிரியர்
கவிஞர் ஞா.தவப்பிரியா அவர்கள் மாணவர் தொண்டியக்கத்திலும்இ பூந்தோட்டம்
சிறார் சிந்தனைச் சிறகத்திலும்இ தம் அறிவாற்றலை வெளிப்படுத்தியவர்.
கள்ளிப்பால் என்ற இந்த நூலின் மூலம் அறிவார்ந்த துணிச்சில் மிக்க ஹைக்கூ
கவிதைகள் வடித்து வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
போதி பதிப்பகம், 8, காமராசர் தெரு, முத்தரையர் பதிப்பகம்,
புதுச்சேரி-9. விலை : ரூ. 100
|