நூல் : ஒப்பிலக்கியம்  அரிஷ்டாட்டிலும் இளங்கோவும்  
நூல்
ஆசிரியர் :
 . இரா. மனோகரன், எம்.ஏ., எம்.பில்.
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி

நூலாசிரியர் திரு. இரா. மனோகரன் அவர்கள் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்களின் மாணவர். ஆசிரியரின் மணிவிழாவை ஒட்டி ஆசிரியரின் அணிந்துரையுடன் மாணவர் எழுதி காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒப்பிலக்கிய நூல்.  ஒப்பிலக்கிய மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்.  அணிந்துரையில் இருந்து சில துளிகள்.

“மனோகரன் இந்த நூலில் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட கிரேக்கத்தோடு வணிக ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் தமிழகம் கொண்டிருந்த உறவினை, விரிவான சான்றாதரங்களோடு விளக்கிக் கொண்டு போகிறார்”.

நூலாசிரியர் திரு. இரா. மனோகரன் அவர்களின் இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் திருத்தப்பட்ட பதிப்பு இந்நூல்.  இந்த நூலில் 6 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி உள்ளார்.  நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கிய நூலான சிலப்பதிகாரம் தொடர்பான நூல்கள் ஆய்ந்து படித்து ஆராய்ந்து எழுதி உள்ளார்.  சில ஆய்வு நூல்கள் படிக்கும் வாசகர்களுக்கு சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்த நூல் பல விபரங்களுடன் எளிமையாகவும் இனிமையாகவும் சுவைபட எழுதி உள்ளார்.  பாராட்டுக்கள்.  தமிழ் அறிஞர்கள் தமிழண்ணல், கா. அப்பாதுரை, செண்பகம் இராமசாமி, மு. கோவிந்தசாமி, ஏ. ஜம்புலிங்கம், க. தில்லைவனம், கா. கோவிந்தன், க.ப. அறவாணன், கதிர் மகாதேவன், இப்படி பலரின் நூல்கள் படித்து ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரை வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

சமயம், தத்துவம், சமூகம் என்ற மூன்று வகையிலும் இலக்கியம், பண்பாடு எனும் துறைகளிலும் தமிழர் கிரேக்கர்களிடையே பரிமாற்றங்கள்  நடைபெற்றுள்ளன.  இன அடிப்படையில் இரு சமூகத்தில் உள்ள ஒப்புமைகள் கூறப்பட்டுள்ளன.  வணிகத் தொடர்புகளும், பண்டைய சமூகத்தில் கலப்புக்கள் ஏற்பட வழிவகை செய்தன.  அரசியல் உறவினால், இரு சமுதாயத்திற்கும், நெருங்கிய உறவு ஏற்பட வாய்ப்பு உண்டானது”.

நூலாசிரியர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி பெரம்பலூரில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். நூல்களைத் தேடிப் தேடிப் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் ஆய்வு மிக சிறப்பாக மேற்கொண்டுள்ளார். புதுவையில் பிறந்தவர் என்பதால் இயல்பாகவே தமிழ்ப்பற்றும் வந்து விடும்.  தமிழ், தமிழர் ஈடுபாட்டுடன் ஆய்வு செய்ததால் சிறப்பான பல தகவல்கள்  நூலில் ஆய்வின் முடிவாக எழுதி உள்ளார்.  பதச்சோறாக நூலில் உள்ள கிரேக்க தமிழ் இலக்கிய ஒற்றுமை உங்கள் ரசனைக்கு இதோ? கிரேக்க-சங்க அக இலக்கியப் பாடுபொருள் ஒப்புமைகள் நிலவு மறைந்தது.  இது நள்ளிரவு, காலம் கடக்கிறது, நான் தனிமையில் வாடுகிறேன் எனப் பொருள்படும்.  சாப்போவின் பாடலான

THE MOON HATH LEFT THE SKY
LOST IS THE PLEIADS LIGHT
IT IS MID NIGHT
AND TIME SLIPS BY
BUT ON MY COUCH ALONE ILIE

எனும் பாடலுக்கும்

நிலவே ... யானே புனையிழை நெகிழ்ந்த புலம்பு கொள் அவலமொடு கனையிருங் கங்குலும் கண்படையிலெனே (நற் 348) எனக்கூறும் வெள்ளிவீதியாரின் நற்றிணைப் பாடலுக்கும் உள்ள ஒற்றுமை எண்ணுதற்குரியது.

தொல்காப்பியத்திற்கும், கிரேக்க இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமையை எழுதி உள்ளார். 

ஒரு சிறப்பான அவல நாடகம் அமைய அரிஸ்டாட்டில் 6 வகையான உறுப்புகள் சிறப்பாய் அமைய வேண்டும் என்கிறார். அவைகளாவன.

கதைப்பின்னல், பாத்திரம், யாப்பு (சொல்லாட்சி), கருத்து, காட்சிஅமைப்பு, இசை (அ) பாடல். 

இவற்றுள் கதைப்பின்னலே அவல நாடகத்தின் உயிர்நாடி எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த இலக்கணப்படி பார்த்தால் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் அமையும்.

திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும் எனப் பன்மையில் கூறும் பாங்கினால் சிலப்பதிகாரத்தில் பாத்திரங்கள் குழுப்பாடலாலேயே அறிமுகம் செய்யப்பட்ட தன்மையை அறியலாம்.  இத்தகைய நாடக மரபுகள் கிரேக்க தேசத்தில் உண்டு என்பார் அறிவுநம்பி.  மேலும் குழுவாகப் பாடியபடியே பாத்திரங்களையும் அறிமுகம் செய்கிறார் இளங்கோவடிகள்.  இப்படி நுட்பமாக சிலப்பதிகாரம் படித்து இதனை ஒத்த சிந்தனையுள்ள கிரேக்க இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு படித்து நூல் முழுவதும் ஒப்பிலக்கிய ஆய்வினை நன்கு செய்துள்ளார். பாராட்டுக்கள்.

பெண்களை மதிக்கும் நிலை போற்றும் நிலை அன்றே தமிழ் சமூகத்தில் இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சிலப்பதிகாரம். ஒரு மண்ணை எதிர்த்து தனி ஒரு பெண்ணாகி நின்று கேள்வி கேட்டு மன்னரின் தவறை உணரச் செய்து குற்ற உணர்வால் மன்னனே டிகிறான்.  பெண்ணின் பெருங்கோபம் அதன் விளைவு உணர்த்தும் அற்புதமான வரலாற்று இலக்கியமான சிலப்பதிகார வரிகளையும், கிரேக்க இலக்கிய வரிகளையும் எடுத்து எழுதி அன்றைய பெண்களின் உயர்நிலை நன்கு உணர்த்தி உள்ளார்.  பாராட்டுக்கள்.

“கிரேக்கத்தில் பெண்கள் நிலையை விட தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்திருந்தது” எனலாம். இதனை

‘தேரா மன்னா’ எனக் கண்ணகி விளிப்பதும் 
மன்னன், 
பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று’

எனச் செப்புவதாலும் அறியலாம். கிரேக்கத்தில் ஆண்டிகொனியிடம் வழக்குரைக்கும் கிரியன் பெண்களை மிகவும் இழிவாகப் பேசுகிறான் என்பதை,

கிரியன் :  நான் ஒரு பெண்னால் வீழ்த்தப்பட அனுமதிக்க மாட்டேன். அதைவிட நான் வீழ்த்தப்பட்டே ஆக வேண்டுமானால் ஒரு ஆண் என்னை வீழ்த்தட்டும் பெண்களை விட எளிமையானவன் என்று நான் அழைக்கப்பட்டு விடக்கூடாது” என்பதன் வழி ஓரளவு அறிந்து கொள்ள இயலுகிறது.  தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் அரசவையில் விவாதிக்கும் உரிமை பெற்றிருக்கலாம்.

கிரேக்கத்தை விட தமிழ்ச் சமூகம் சிறப்பாகவே வாழ்ந்துள்ளது என்பதை இந்த நூலின் மூலம் அறிய முடிகின்றது.  “சிலப்பதிகாரத்தினுள் ஆங்கு, அவ்வழி, அதனால், அவளுந்தான், அவனுந்தான், அவரை எனும் சுட்டுச் சொற்களின் வழியே கதை மாந்தரை அறிமுகம் செய்கிறார்.  இது கதைக்கூற்று முறையில் கையாளப்படும் ஓர் உத்தியாகும்.  கிரேக்க வள நாடகங்களில் குழுப் பேச்சினர் முதலில் தோன்றி கதைக்களம், கதை நிகழிடம் மற்றும் கதைப்போக்கு இவற்றினை உரைத்தல் மரபு.  இம்மரபினைச் சோப்க்ளீஸ் நாடகங்களில் காணலாம்.  இவரது நாடகங்களில் இப்பாத்திரங்கள் முன் கதையுரைத்தலை நிகழ்த்துகின்றன.  இதனை அரிஸ்டாட்டில் பரோட் என உரைப்பார்.  இப்பாத்திர அறிமுகத்தினை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலும் செய்துள்ளார் என்பதை வரிகளுடன் சுட்டிக்காட்டி விளக்கி உள்ள பாங்கு மிக நன்று.  மொத்தத்தில் தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் தமிழர்களின் அன்றைய சிறப்பான வாழ்வையும் கிரேக்கத்தோடு ஒப்பிட்டு கூறும் ஒப்பற்ற நூல்.


வெளியீடு : காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600 024. விலை : ரூ. 60