நூல் : சித்திர கவி
நூல்
ஆசிரியர் :
  
புலவர் ஆறுவிரல் ஐம்பொறி
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி.

நூலாசிரியர் இயற்பெயர் தண்டபாணி.  புனைப் பெயர் ஆறுவிரல் ஐம்பொறி.  இவர் ஆசிரியராக பணியாற்றி, தமிழாசிரியர், தலைமையாசிரியர் என பதவி உயர்வுகள் பெற்று, 28-02-2005ல் ஓய்வு பெற்று, இலக்கியத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் உழைப்பாளி.  இவரது இரண்டு கால்களிலும் ஆறாறு விரல்கள் உள்ள சிறப்புக்கு உரியவர்.  வழக்கறிஞர், முன்னாள் மத்திய சட்டமன்ற இணை அமைச்சர் க. வேங்கடபதி, புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் ஆகியோர் அணிந்துரை மிக நன்று.

103 தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார்.  முதல் கட்டுரையான ‘விகடகவி பற்றிய விளக்கம் மிக நன்று.  ஒரு நாடு, ஓர் அரசன் கட்டுரையில், ஒரு நாடு, ஓர் அரசன் – இரண்டும் சரி.  ஓர் நாடு, ஒரு அரசன் – இரண்டும் தவறு என்ற இலக்கண விளக்கம் மிக நுட்பம்,.  திருக்குறள் இரண்டு சொற்கள் கட்டுரையில், திருக்குறள் பற்றி மிகச் சுருக்கமான விளக்கம் மிக நன்று.

“திருக்குறளுக்கு நிகரான நூல் வேறேதும் இல்லை.  உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் இது ஒன்றேயாம்.  இந்நூலில் காணப்படும் சொற்கள் அனைத்தும் தூயவை, இனியவை, அரியவை, நுட்பமானவை.

நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்கள் புலவருக்கு படித்தவர் என்பதாலும், தமிழாசிரியர் என்பதாலும் இலக்கணத்தை நன்கு அறிந்து, புரிந்து கட்டுரைகளை வடித்து உள்ளார்.
  தமிழாசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.  ஆசிரியர் பயிற்சி பாட வகுப்பில் இந்த நூலை பாடநூலாக்கலாம்.  புரியாத புதிர் போன்ற இலக்கணங்களையும் மிக எளிமையான உவமைகள் எழுதி புரிய வைத்துள்ளார்.

தமிங்கிலம் எழுதுவதை நன்கு சாடி உள்ளார்.
 

தூய தமிழில் எழுதுவோம்
தூய ஆங்கிலத்தில் எழுதுவோம் 
பேடிச் சொற்களைத் தவிர்ப்போம் 
நாம் பேடிகள் இல்லை என்பதை நிறுவுவோம்!

திருக்குறளில் வியப்பில் ஆழ்த்தும் திருக்குறளை பட்டியலிட்டு உள்ளார்.
  திருக்குறளை மேலோட்டமாக படிக்காமல், ஆழ்ந்து, அறிந்து, ஆராய்ந்து படித்துள்ளார் என்பதை பறைசாற்றும் விதமாக கட்டுரைகள் உள்ளன. திருக்குறளில் அடி, கால், இடை, வயிறு, முலை, நெஞ்சு, கை, தோள், நா, வாய், செவி, மூக்கு, கண், புருவம், நெற்றி, முடி – இப்படி அடி முதல் முடி வரை உடல் உறுப்புக்கள், சொற்கள் இடம் பெற்ற திருக்குறளை பட்டியலிட்டு வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.  சங்க இலக்கியங்களில் எண்களை கூட்டியும் கழித்தும், பெருக்கியும் சொல்லும் விதமாக அமைந்தவற்றை விளக்கி உள்ளார்.

இதழோடு இதழ் ஒட்டாத 128 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திப் பாடல் இயற்றினால் அப்பாடலுக்கு நீரோட்டம் (சித்திரகவி) என்று பெயர்.

இதுபோன்ற சிறப்புகள் தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது.
  தமிழின் சிறப்பை, தமிழ் இலக்கண சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார்.  தமிழனாகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள செய்யும் அற்புத நூல்.

கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரை நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ளது.
  அவரது வாழ்த்துரையிலிருந்து சிறு துளிகள்.

"
 நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி பற்றி:  “இனியவர், ஏற்றமிகு சிந்தனையாளர், எழுத்திலும், பேச்சிலும் பொருத்திப் பார்க்குமளவு எல்லா வகையிலும் சிறந்தவர்.  இப் பைந்தமிழறிஞரை, என் பாசமிகு நண்பரைப் பாராட்டி மகிழ்கிறேன், வாழ்த்தியும் பெருமையுறுகிறேன்.

சிலப்பதிகாரம் என்ற சொல் எப்படி வந்தது என்ற விளக்கம் நன்று.

சிலம்பதிகாரம் என்ற மென்றொடர் குற்றியலுகரம் உள்ள சொல், சிலப்பதிகாரம் என் வன்றொடர் குற்றியலுகரமானது.

இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் பல இலக்கிய நூல்கள் பற்றி எழுதி இருந்தாலும் உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றியே பல கட்டுரைகளில் புதிய கோணத்தில் ஆய்வு செய்து, பல அறியாத கருத்துக்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக கட்டுரைகள் வடித்துள்ளார்கள். பாராட்டுக்கள்.

தும்மல் பற்றி திருவள்ளுவர் எந்த, எந்த திருக்குறளில் எழுதி உள்ளார் என்ற அளவிற்கு நுட்பமாக எழுதி உள்ளார்.
  இந்த நூல் படித்து முடித்தவுடன் திருக்குறளை கையில் எடுத்து நூலாசிரியர் குறிப்பிட்ட கோணங்களில் ஒப்பிட்டு பார்த்து வியந்தேன்.

திருக்குறளில் எண்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அறிந்து வியந்தேன்.

“திருக்குறளில் அமைந்துள்ள முழு எண்களைக் காண்போம்.
  ஓர் எண்ணுக்க்கு ஒரு குறட்பா மட்டும் காட்டப்பட்டுள்ளது.  கொள்க அவற்றின் ஒன்று 875, குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 992, துணிவுடைமை இம்மூன்றின் 688, மடிதுயில் நான்கும் 605, ஐந்துடன் மாண்டது 632, நட்பரண் ஆறும் 381, எழுமையும், எழுபிறப்பும் 107, எண்குணத்தான் தாளை 9, ஒன்பது திருக்குறளில் இல்லை, பத்தடுத்த தீமைத்தே 450, நூறிழக்கும் சூதர்க்கும் 932, ஆயிரம் வேட்டலின் 259, கோடி தொகுத்தார்க்கும் 377, இத்தனை முழு எண்களைக் கூறிய திருவள்ளுவர் பகுப்பு எண் ஒன்றை மட்டுமே கூறியுள்ளார் என்பது உளங்கொள்ளத்தக்கது.

திருக்குறளில் விலங்கு என்ற சொல் வரும் திருக்குறள் எண் 410.
 

விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் வரும் திருக்குறளை பட்டியலிட்டு கூறியுள்ளார்.

தீயினால் சுட்டபுண் 129, நீரின்றி அமையாது 20, வளி வழங்கும் 245, நிலம் என்னும் நல்லாள் 1040, விசும்பின் மதிக்கண் 957 – இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன.
  திருக்குறள் எனும் கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து, தொகுத்து, பகுத்து நூலாக வழங்கி உள்ளார்கள்.  பாராட்டுக்கள்.  திருக்குறளின் பெருமையை  பறைசாற்றி பல நூல்கள் வந்துள்ளன.  ஆனால் இந்த நூல் ஆக சிறந்த நூலாக வந்துள்ளது. நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி
பூந்தமிழ்ப் பதிப்பகம், வீரசோழபுரம் 606 206.
(வழி) தியாகதுருவம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்,
அலைபேசி எண் : 94432 85843
  விலை : ரூ. 150