நூல் :
நீயென உறுதி செய்
(சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்)
நூல்
ஆசிரியர்
:
திரு. ப.
திருமலை
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா. இரவி
இனிய
நண்பர் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் எழுதியுள்ள நூல் நீயென
உறுதி செய்! நூலின் தலைப்பே வித்தியாசமாக தன்னம்பிக்கை தரும் விதமாக
உள்ளது. நூலாசிரியர் வழக்கறிஞர் என்ற போதும், வழக்கறிஞர் தொழில்
செய்யும் சராசரி எண்ணம் தவிர்த்து எழுத்துப்பணியில் இறங்கி அளப்பரிய
சாதனைகளை அமைதியாக நிகழ்த்தி வருகிறார். உடல்நலம் அவ்வப்போது குன்றிய
போதும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணித்து ஆய்வு செய்து
நேர்முகம் கண்டு பதிவு செய்து வரும் பண்பாளர். இவர் பணத்தை பெரிதாக
நினைத்து இருந்தால் பிரபல வார இதழில் பெரிய பதவியில் இருந்து பணம் ஈட்டி
இருக்க முடியும். ஆனால் தனது எழுத்தின் காரணமாக இந்த சமுதாயத்திற்கு
ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட இலட்சிய மனிதர்.
சிறந்த பத்திரிகையாளர் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. விழா மதுரை
பார்சூன் பாண்டியன் விடுதியில் நடந்தது. நேரில் சென்று வாழ்த்தி வந்தேன்.
இந்த நூல் படித்த போது அந்த விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர்.இவர்
என்பதை உணர்ந்து கொண்டேன். சாதனைப் பெண்கள் என்று வெளிச்சத்தில்
இருக்கும் உயர்தட்டு வர்க்கத்தை எடுக்காமல் மிகவும் அடித்தட்டு மக்களாக
போராடும் போராடிய 8
பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை
அவர்களுக்கு சமூகம் இழைத்த கொடுமைகளை வெளிச்சமிட்டு விழிப்புணர்வு
விதைக்கும் விதமாக எழுதி உள்ளார். பெண்கள் அனைவருமே படிக்க வேண்டிய நூல்.
ஆண்களும் அவசியம் படிக்க வேண்டும். ரத்தத்தில் ஊறிவிட்ட ஆணாதிக்க
சிந்தனையை அகற்றிட உதவிடும் நூல்.
வழக்கறிஞர், சமூகச் செயல்பாட்டாளர் கனிமொழி அவர்களின் அணிந்துரை
நூலிற்கு கூடுதல் உரம் சேர்ப்பதாக உள்ளது. கணவனை அடித்தே கொன்று தன்னை
வன்புணர்ச்சி செய்த காவல்துறையினருக்கு தண்டனை வழங்க வேண்டும்
என்பதற்காக மக்கள் கண்காணிப்பகத்தின் உதவியுடன் தனது மகன் மலைச்சாமியை
வழக்கறிஞராக்கி அவரையே இந்த வழக்கில் வாதாட வைத்து நீதிக்காக
நீதிமன்றத்தில் போராடி வரும் போராட்டத்தை நண்பர் ப.திருமலை அவர்கள் தன்
எழுத்தின் வலிமையால் காட்சிப்படுத்தி கண்களில் கண்ணீர் வர வைத்து
விடுகிறார். இவ்வளவு மோசமாக காவல்துறையினர் அன்று நடந்து கொண்டது மனித
சமுதாயத்திற்கு தலைகுனிவுத் தரும் கொடூரமாகும்.
இந்தக் கட்டுரை படித்த போது குற்றமற்ற அங்கம்மாளின் கணவர்
குருவையாவிற்கு திருட்டுப்பட்டம் கட்டி கொலை செய்த கொடூரத்திற்காக
போராடும் நிகழ்வு. சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் போராட்டத்தை நினைவிற்கு
கொண்டு வந்தது. சிலப்பதிகாரத்தில் கணவன் கோவலனை மட்டும் தான்
கொன்றார்கள். ஆனால் அங்கம்மாள் நிகழ்வில் கணவனை கொன்றதோடு மட்டுமன்றி
அங்கம்மாளை பல காவலர்கள் வன்புணர்ச்சியும் செய்து இருக்கிறார்கள்.
அங்கம்மாள் போராட்டம் வெற்றி பெற வேண்டும். விதி விலக்காக காவல்துறையில்
சில நல்லவர்கள் இருக்கிறார்கள் .எனக்கு நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.
அநீதி இழைத்த காவலர்கள் அவசியம் தண்டனை பெற வேண்டும் என்று நூல்
படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் முடிவுக்கு வருவார்கள் என்று உறுதி கூற
முடியும். அது தான் நூலாசிரியர் ப.திருமலை அவர்களின் எழுத்தில் வெற்றி
உள்ளதை உள்ளபடியே எழுதி உள்ளார். சோடனைகள் ஏதுமின்றி மிக இயல்பாக
எழுதியது கூடுதல் சிறப்பு.
தியாகம் பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் தோழி அமுதசாந்தி அவர்களைப் பற்றி
நான் நன்கு அறிவேன். தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டு
வாசகர்களுக்கு தன் முன்னேற்றப் பயிற்சியளித்தவர். உடலில் எந்தக்
குறையுமின்றி திடகாத்திரமாக இருக்கும் பலர் வாழ்வில் சலித்துக் கொள்வதை
பார்த்து இருக்கிறோம். ஆனால் உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில்
குறைவின்றி தனக்கு மட்டுமன்றி தன் போன்ற பிற மாற்றுத் திறனாளிகளுக்கும்
உதவி வரும் உயர்ந்த உள்ளம் படைத்த இவரை நூலில் பதிவு செய்த நூலாசிரியர்
ப.திருமலை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
தையல் பிரிவு கணினி மையம், தங்க இல்லம, மாலை நேரக் கல்வி மையம், சுய
உதவிக்குழு, நட்பு வட்டம், கலைக்குழு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மையம்
என எட்டுப் பிரிவுகளை உருவாக்கிகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கும்
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் தோழி அமுதசாந்தி வாழ்க
பல்லாண்டு என்று வாழ்த்திட வைத்திட்ட நூலாசிரியருக்கு நன்றி.
விருது
வழங்கும் போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் விருது பெறுபவர்
காலில் விழுந்து இந்தியாவே உற்றுப் பார்த்த உன்னதப் பெண்மணி
சின்னப்பிள்ளை பற்றிய பதிவு மிக நன்று. சமூக சேவகி என்ற பெயரில் உலவும்
சில போலிகள் பற்றியும் காட்சிபடுத்தியது சிறப்பு.
'கான்வென்ட் படிப்ப, நுனிநாக்கில் ஆங்கிலம், பேசும் போது துளிரும்
வியர்வையை கைக்குட்டையால் ஒற்றியெடுக்கும் லாவகம், மொடமொடவென காட்டன்
சேலை, அது கசங்காமல் கால் மேல் கால் போட்டு பேசும் தோரணை என வழக்கமான
சமூக சேவகிகளுக்குரிய எந்த அம்சமும் துளியும் எட்டிப்பார்க்காத பச்சை
தமிழச்சி தான் சின்னப்பிள்ளை' உண்மை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்
.விருது பெற்ற எந்த பந்தாவும் இன்றி மிக மிக எளிமையாக வாழ்பவர் .
சின்னப்பிள்ளை செய்து வரும் பெரிய செயல்கள் படம்பிடித்து உள்ளார். அழகு
என்பது புறத்தில் இல்லை, அகத்தில் உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக
வாழும் சின்னப்பிள்ளை பற்றிய பதிவு மிக நன்று. வினோலயா அவர்களின்
வாழ்த்துரை பின் அட்டையில் நூலின் சிறப்பை பறைசாற்றுகின்றது.
வீரப்பனை பிடிக்கிறோம் என்ற பெயரில் வந்த அதிரடிப்படைக்க்கு வெற்றிலை
வியாபாரம் செய்து வாழ்ந்து வந்த தங்கம்மாள் பற்றி மொட்டை மனு போட்டு
இருக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் காவல்துறை நடத்திய கொடூரங்கள்
படித்த போது காவல்துறையின் மீதான மதிப்பு மிகவும் குறைந்து விடுகின்றது.
காவல்துறையில் நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால்
பெரும்பாலானவர்கள் மனிதநேயமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது தலைகுனிவு.
தமிழகத்தில் பிரபலமான முதல் பெண் நாதஸ்வரக் கலைஞராகத் திகழ்ந்த
பொன்னுத்தாய் பற்றி பதிவு மிக நன்று. இப்படி எட்டு பெண்களின்
போராட்டத்தை ஏட்டில் பதிவு செய்து நூலாக்கி உள்ள நூலாசிரியர் திரு.
ப.திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்.
நூல் ஆசிரியர் : மூத்த
பத்திரிகையாளர் திரு. ப. திருமலை
அலைபேசி : 84281 15522.
புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11,
அப்துல் ரசாக்
2-வது
தெரு,
சைதாப்பேட்டை, சென்னை –
600 016. விலை
: ரூ.
120. பேச
:
044 42147828
www.tamilauthors.com
|