நூல் : மீண்டும் தலைப்புச் செய்திகள்
நூல் ஆசிரியர் :  
கவிஞர் திலீப் பீதாம்பரி
நூல் அறிமுகம்: கவிஞர் இரா. இரவி



மீண்டும் தலைப்புச் செய்திகள் – நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது. தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக புதுக்கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம், முனைவர் பு.மு.சாந்தமூர்த்தி ஆகியோரின் அணிந்துரையும் திரு. பி.எஸ். மனோகரன் அவர்களின் வாழ்த்துரையும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பவையாக உள்ளன. முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு, வலிகளுக்கு துவளாதே! துணிந்து போராடு! என நம்பிக்கை விதைக்கும் வைர வரிகள்.

தாய்க்கு வலி கொடுத்து
தரைக்கு வந்தவனே
நீயும்
வலிகளைத் தாங்கு
வாழ்க்கையை வாங்கலாம்.


சுறுசுறுப்பான சின்னமாக சிறிய எறும்பு உள்ளது. எறும்பு மழைக்காலத்திற்கு உணவை சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டது. வரிசையாக ஒழுங்காகச் செல்வதை மனிதனுக்குக் கற்றுத் தருவது. அப்படிப்பட்ட எறும்போடு ஒப்பிட்டு வடித்த புதுக்கவிதை நன்று.

சின்ன எறும்பு
தானே ஊர்ந்து ஊர்ந்து
மேலே செல்கிறது
எலும்புள்ளவன்
உந்துதல் இருந்தும்
இன்னும் நீ
உட்கார்ந்து இருக்கலாமா?


எலும்பே இல்லாத எறும்பு, இப்படி உழைக்கும் போது, எலும்புள்ள மனிதன் எப்படி உழைக்க வேண்டும்? என்ற சிந்தனையை உழைப்பின் மேன்மையை உணர்த்தியது சிறப்பு. கவிதைகளில் கவித்துவம் சற்று குறைவாக, வசன நடையில் இருந்தபோதும் உள்ளத்தில் உள்ளது கவிதை என்று ஏற்கலாம். பயன்மிக்க கருத்துக்களால் கவிதைகள் வெற்றி பெறுகின்றன.

அவமானம் கண்டு கவலை கொள்ளாதீர்கள் என்கிறார். வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள்,“அவமானங்களை சேகரித்து வையுங்கள், அவை, முன்னோக்கி செலுத்தும் உந்து சக்தி” என்று சொல்வார். அதுபோல இவரும் வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார். அவமானப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும். தொடக்கத்தில் நான் கவிதை எழுதிய போது உனக்கு இது தேவையற்ற வேலை என்று ரணப்படுத்தி அவமானப்-படுத்தியவர்கள் உண்டு. அவர்கள் இன்று பெருமைப்படுகிறார்கள்.

ஆப்பிளை விட
அதிக சக்தி
தரக்கூடியது அவமானம்
அது வர வர
வலிமையாவாய்!


"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்” என்ற கவியரசு கண்ணதாசன் வைர வரிகளை நினைவூட்டும் வண்ணம் வேறு கோணத்தில் சிந்தித்து வடித்த கவிதை ஒன்று.

பிரச்சனை வராத
வாழ்க்கை என்றால் – அது
பிரிக்கப்படாத உறை!


பயிற்சி, முயற்சி – வெற்றிக்கு வழிகள் என்பதை உணர்த்திடும் வண்ணம் பல்வேறு கவிதைகள் நூலில் உள்ளன.

ஆயத்தம் என்பதே
உன் ஆயுதம்
மடியும் வரை முடியும்
என்பதில் முரட்டுத்தனமாய் இரு!


தேசப்பிதா காந்தியடிகள் சொன்னது போல், 'செய் அல்லது செத்து மடி' என்ற வரிகளை நினைவூட்டும் விதமாகவும், உன்னால் முடியும் வரையல்ல, செயல் முடியும் வரை முயற்சி இருக்க வேண்டும் என்று சொன்ன மாமனிதர் அப்துல் கலாமின் வைர வரிகள் போல உள்ளது. பாராட்டுக்கள்!

நூல் அளவில் சிறிதாக இருந்தாலும் படிக்கும் வாசகர்கள் மனதில் பதிக்கும் கருத்துக்கள் பெரிதாக உள்ளன. பாராட்டுக்கள்.

தோல்விக்கு துவளாதே, தொடர்ந்து முயற்சி செய் என்ற கருத்தை பல்வேறு கவிதைகளிலும் வலியுறுத்தி உள்ளார்.

சிறுசிறு தோல்விகள்
சிறுசேமிப்புப் பாத்திரம் மாதிரி
சேமித்து வை !
அதுவே ஒரு நாள் உனக்கான
சாதனைப் பாத்திரம்!


உவமைகளும் மிக எளிமையாகவும், இனிமையாகவும் பயன்படுத்தி வாசகருக்கு சொல்ல வந்த கருத்தை சுவைபட உணர்த்தி உள்ளார்.

கடலின் ஆழம்
கப்பலுக்குத் தெரியாது
கரை சேருகிறது
பயணம் தொடங்கு!
பாதை தெளிவாகும்
தூரம் எளிதாகும்!


மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். கவலை என்ற பாரம் சுமக்காதீர்கள். கவலை கொள்வதால், கவலை தீர்ந்து விடாது. கவலையை மறந்து தீர்வு பற்றி சிந்தித்தால் கவலைகள் காணாமல் போகும் தூரம் என்பதை உணர்த்திடும் விதமாக உள்ள புதுக்கவிதை.

லேசான வலை
ஆயிரம் மீன்களை
அள்ளிக் கொள்ளும்
உன் பாரத்தை இறக்கு
மனசை லேசாக்கு.


வித்தியாசமான உவமைகள் மூலம் தன்னம்பிக்கைக் கருத்துக்களை நூல் முழுவதும் விதைத்து உள்ளார். பாராட்டுக்கள்!

உன் பாதை ஒரு
விமான ஓடுதளம் – அதில்
வேகத்தடை போட முடியாது
எக்காலத்திலும்.


சாலையில் பேருந்துகளுக்கு, மற்ற வாகனங்களுக்கு வேகத்தடைகள் உண்டு. ஆனால் விமான ஓடுதளத்தில் வேகத்தடைகள் இல்லை என்பதை அறிந்து சரியான இடத்தில் பொருத்தி எழுதியது சிறப்பு.

எதிர்மறையாக பேசுபவர்கள் பலர் உண்டு. அவற்றிற்கு செவி சாய்த்து நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்கிறார். தவளைகள் மலை ஏறும் போட்டி நடந்ததாம். அருகில் இருந்தவர்கள், உன்னால் இவ்வளவு பெரிய மலை ஏற முடியுமா? என்று சொல்லச் சொல்ல, எல்லா தவளைகளும் மலை ஏறும் முயற்சியை பாதியிலேயே கைவிட்டு நின்று விட்டன. ஒரே ஒரு தவளை மட்டும் மலை உச்சியை அடைந்தது ; அந்தத் தவளைக்கு கேட்கும் திறன் இல்லையாம். அதனால் தான் எதிர்மறையாளர்களின் குரல் காதில் விழாமல் முன்னோக்கி நகர முடிந்தது என்று ஒரு கதை படித்தேன். அதனை நினைவூட்டி வெற்றி பெற்றது இந்தக் கவிதை.

வேண்டுமென்றே
வசை பாடும்
ஆட்கள் வார்த்தைக்கு
வார்த்தை குத்தும் முட்கள்
எத்தனை முறை கீறினாலும்
மீறி வா!
ஏணிகள் போல
அவர்கள் மீதி ஏறி வா!


இப்படி பல கவிதைகள் நூலில் உள்ளன. நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளும் மேற்கோள் காட்டுவது மரபன்று, முறையன்று. நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள். குறைந்தபட்சம் நூலாசிரியரை அலைபேசியில் அழைத்துப் பாராட்டுங்கள்.

நூலாசிரியர் கவிஞர் திலீப் பீதாம்பரி அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க சௌராஷ்ட்ரா கல்லூரியில் பட்டம் படித்தவர். மனநல ஆலோசகர் சான்றிதழ் பெற்றவர். ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர், தன்முன்னேற்றப் பேச்சாளர், கவிஞர் என பன்முக ஆற்றலாளராக விளங்குகிறார். பாராட்டுக்கள்.

சிறிய வேண்டுகோள்: நூலில் ஆங்கிலச் சொற்கள் சில உள்ளன. அடுத்த பதிப்பில் அவற்றை தமிழாக்கம் செய்து விடுங்கள்.

 


கன்னம் புத்தக நிலையம், எண் 2/11, சிந்து நதி தெரு, கணபதி நகர், வில்லாபுரம், மதுரை – 625 012. அலைபேசி : 95004 83386
e-mail : adp.dilipgoodly@gmail.com



 

                         www.tamilauthors.com