நூல் :  வள்ளுவர் வழியில் வாழ்வு
தொகுத்தவர்:
கவிஞர் சி. சக்திவேல்
நூல் அறிமுகம்:  கவிஞர் இரா. இரவி


நூல் ஆசிரியர் கவிஞர் சி.சக்திவேல் அவர்கள், விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் முதல்வராக முத்திரை பதித்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு, தொடர்ந்து இலக்கியப்பணி செய்து வருகிறார்கள். மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் தொடர்ந்து கவிதை பாடி வருகிறார். கவிதை நூலின் வெற்றியினைத் தொடர்ந்து திருக்குறள் தொடர்பான கதைகளைத் திரட்டி 30 தலைப்புகளில் 30 குறள்களுடன் தொகுத்து வழங்கி உள்ளார். பாராட்டுகள்.

“திருக்குறள் ஓர் ஆழ்கடல். அள்ளக் குறையாத அமிழ்தம். தெள்ளத் தெளிந்த நீரோடை. இனிமைச் சுவை கூட்டும் இன்பக்கலவை. திருக்குறளைத் தொடாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்.”

நூலின் முன்னுரை திருக்குறளின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இருக்கா இயன்றது அறம்.

                                           திருக்குறள்
35

இந்தத் திருக்குறளை சிறுகதை மூலம் விளக்கி உள்ளது சிறப்பு, அது அறம் என்ற விளக்கமும் நன்று.

அறவழி நடந்தாலும் அதனை உயிரற்ற முறையில் நடைமுறைப்படுத்தக் கூடாது. அன்பும், தியாகமும் நிறைந்த வாழ்க்கை முறை தான் அறத்திற்கும் அடிப்படையாகும்.
சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராசர் முதலியோர் குற்றங்களுக்கு இடங்கொடுக்காமல் வாழ்ந்த மாமேதைகள். அதனால் அவர்களது வாழ்க்கை என்றென்றும் அறத்தை தூக்கி நிறுத்துவதாக அமைத்துள்ளதை அறியலாம்.
அறம் வழி வாழ்ந்தவர்களின் பட்டியலிட்டு அறத்தின் சிறப்பை வலியுறுத்தியது சிறப்பு. சிறுசிறு கதைகள் மூலம் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூலாசிரியர் பேராசிரியர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மன்னன் அதியமான், ஒளவை இருவரும் நெல்லிக்கனியை மாறிமாறி உண்ண வேண்டிய நிகழ்வை,

அன்றரிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
போன்றுங்கால் பொன்றாத் துணை

                                                               திருக்குறள் 30

இளைஞராக உள்ளவர், பிறகாலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும். ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய், நாளை, நாளை என்று நாளைக் கடத்தாமல் அறம் செய்து வாழ்ந்தால் இறந்த பின்னும் வாழ்வாய் என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.

திருமணத்தில், வாழ்த்தில் அன்றும், இன்றும், என்றும் சொல்லப்படும் ஒப்பற்ற திருக்குறளை,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

                                                 திருக்குறள்
45

ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிகிடையே அன்பு பாராட்டும் தன்மையும், அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்.

இல்லறத்தை நல்லறமாக்க் கொண்டு வாழும் விக்கிரமத் தேவர் விசாலாட்சி இணையரின் கதை சொல்லி விளக்கிய விதம் நன்று.

அக்பர், பீர்பால் அறிவார்ந்த சிறுகதைக்கு அற்புதமான திருக்குறளைப் பொருத்தி எழுதியது சிறப்பு.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

                                                                 திருக்குறள்
430

அன்பு, அறன், பண்பு வலியுறுத்தும் அற்புதமான திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான சிறுகதையும் இணைத்து வித்தியாசமான நூல் எழுதி உள்ளார்கள்.
வள்ளுவர் வழியில் வாழ்வு என்று தலைப்பிட்டு வாழ்வியல் கருத்துக்களை வாழ்வோடு இணைத்து வடித்த யுத்தி மிக நன்று.

இந்த நூலில் இவர் மேற்கோள் காட்டி உள்ள திருக்குறள் எண்கள் இதோ!
1, 35, 36, 45, 430, 72, 247, 428, 807, 80, 997, 226, 121, 684, 39, 443, 787, 259, 245, 497, 483, 612, 421, 315, 151, 168, 333, 625, 684, 243. திருக்குறளில் 1330 திருக்குறள்களும் அருமை என்றாலும் அவற்றில் 30 மிகச் சிறப்பான திருக்குறள்களை தேர்ந்தெடுத்து சிறுகதைகள் சொல்லி திருவள்ளுவ முத்துமாலை வழங்கி உள்ளார்.

திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்த போதும் இந்த நூல் மிக வித்தியாசமான நூல்.

30 கட்டுரைகளுக்கும் பொருத்தமான தலைப்பு எழுது உள்ளார். பதச் சோறாக ஒன்று.
பொறாமை பொல்லாதது!

தலைப்பைப் படித்தவுடனேயே சொல்ல வரும் திருக்குறல் என்ன என்பதையும் அறிய முடியும்.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

                                                     திருக்குறள்
168

பொறாமை என்னும் தீமையின் வடிவத்தைப் பெற்றவர் தம் செல்வத்தையும் அழித்துத் துன்ப நெருப்பினும் மூழக்ச் செய்து விடும்.

ஆம், மனிதர்கள் பலர் தன்னிலும் முன்னேறியர்கள், வெற்றி பெற்றவர்கள், சாதித்தவர்களைக் கண்டு பெருமை கொள்ளாமல் பொறாமை கொள்ளும் போது துன்பத்தில் விட நேரிடும் என்பதை அன்றே திருவள்ளுவர் வலியுறுத்தியதை நூல் ஆசிரியர் அறிவுறுத்தியது நன்று.

கனகராசு சிறுகதை மூலம் ஊர்மக்களுக்கு தீங்கு செய்தவனுக்கு, அவனுக்கு ஊர்மக்கள் உதவி செய்த்து கண்டு வெட்கி தலைகுனிந்த கதை நன்று. இந்தக் கதைக்கு “இன்னா செய்தாரை திருக்குறள் இன்னும் பொருத்தமாக இருக்கும். படிக்கும் வாசகருக்கும் இது தொடர்பான மற்ற திருக்குறளையும் நினைவூட்டி வெற்றி பெறும் படைப்பு, பாராட்டுக்கள்.

வள்ளுவர் வழியில் வாழ்வு !
நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தென்றல் நிலையம், 12, பி.மே. சன்னதி, சிதம்பரம்-608 001.
ரூ. 40.





                         www.tamilauthors.com