நூல் :
மொழியின்
விழிகள்
நூல்ஆசிரியர்:
த. ராஜலிங்கம்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.
இரவி
கவிஞர்
இளந்தளபதி அவர்களின் அணிந்துரையும் இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன்
பதிப்புரையும் நன்று. நூல் ஆசிரியர் கவிஞர் த. இராஜலிங்கம், சட்டம்
பயின்ற வழக்கறிஞர் மட்டுமல்ல, தமிழும் பயின்ற கவிஞர். இது இவருக்கு
மூன்றாவது நூல். மொழியின் விழிகள் நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.
விழிகளின் மொழிகள் அறிவோம். ஆனால் இது மொழியின் விழிகள். சிந்திக்க
வைத்தது.
சொற்கள் நடந்தால் வசனம், சொற்கள் நடனமாடினால் கவிதை. இங்கே நூலில்
சொற்கள் களிநடனம் புரிகின்றன. விரவிக் கிடக்கும் சொற்களை வேண்டியபடி
இணைக்கும் கலையே கவிதை. நூலில் பல்வேறு தலைப்புகளில் புதுக்கவிதை எழுதி
உள்ளார். மலாலா தொடங்கி மழலையர் வரை கவிதை வடித்துள்ளார்.
கடவுளைப் பார்த்து வித்தியாசமான கேள்வி ஒன்று கேட்கிறார்,
பாருங்கள்.இக்கேள்வி மிகவும் மிகவும் நல்லவர்கள் சில நேரம் இளம் வயதில்
இறப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்புகின்றது
எது விதி?
கடவுள்களே
உங்கள் துறையில்
குழப்பங்களே
விளங்குது …
ஏன்?
பிரம்மன் படைத்து
விஷ்ணு காக்காமல்
சிவன் எப்போதும்
நல்லவர்களை மட்டும்
விழுங்குது?
உலகில் ஈடு இணையற்றது அன்பு. உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்ததும், விலை
மதிப்பற்றதும் அன்பு.
உயிர்களின் உன்னதம் !
இந்தப் பூலோகம்
அன்பு என்னும்
ஆக்சிஜனில்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இது மட்டும்
குறைந்து விட்டால்
உயிர்கள் ஊசல்
மனிதா!
இதை நீ அறிந்து கொண்டால்
வாழ்வில் இல்லை பூசல்.
கருப்பு வைரம், சிறையில் வாழ்ந்த சிங்கம், மாமனிதர் காந்தியடிகளை
நேசித்தவர் நெல்சன் மண்டேலா-விற்கான இரங்கற்பா நன்று.
நினைவின் சாரம்!
உன் தேச மக்கள் மட்டும்
அஞ்சலியில் அர்த்தப்படவில்லை
உலக மனிதர்கள்
அனைவரும்
வருத்தப்பட்டார்கள்
நீ
பாக்சிங்
விளையாட்டின் வல்லவன்
ஆனால்
மனிதர்களில் நல்லவன்.
கவிதை என்பது மின்னல் போல திடீரென வருவதுண்டு. கவிதை எழுத வேண்டுமேன்று
அமர்ந்தால் கவிதை வராமலும் போவதுண்டு. கவிஞர்களின் கவிதை எழுதும்
அனுபவம் தொடர்பான அனுபவப் பதிவு நன்று.
தருணத்தின் தாக்கம் !
இலவசமாகக் கொடுத்த
நாட்குறிப்பில்
கவிதை எழுதலாமென்று எடுத்தேன் ...
ஒரு வரி கூட எழுதவில்லை
ஆனால், பேருந்துப் பயணத்தில்
பயணச்சீட்டில் எழுதினேன்.
பாதிக்கு மட்டும்
இடமிருந்தது.
மீதிக் கவிதையோ
நினைவில் இருந்தது.
பெண்கள் கூந்தலுக்கு மலர் சூடுவது அழகிற்கு அல்லது நல்ல மணத்திற்கு
என்பதை நாம் அறிவோம். ஆனால் நூல் ஆசிரியர் வழக்கறிஞர் கவிஞர் த.
இராஜலிங்கம் அவர்கள் பெண்கள் கூந்தலுக்கு மலர் சூடுவதற்கு காரணம் வேறு
என்கிறார்.
மலர்களின் மகிமை !
மங்கைகள்
தங்கள் கூந்தல்களில்
மலர்களைச்
சூடிக் கொள்வதன் காரணம்
அழகுக்கு மட்டுமல்ல
காற்றைச் சுத்தப்படுத்தி
உயிர்களின்
சுவாசத்தையும்
சுத்தப்படுத்தத்தான்.
சொல் விளையாட்டு விளையாடுவது போல எதுகை, மோனை, இயைபு, முரண் சுவை யாவும்
கலந்து பல்சுவை விருந்தாக கவிதைகள் உள்ளன.
மகத்துவம் !
முளைப்பில்லா
உழைப்பைத்
தேட வேண்டாம்
களைப்பில்லா
வேலையைத்
தொடர வேண்டாம்
கண்ணீர்த்துளிகளின்
கணக்கு
கொஞ்சம் குறையும்
தினம் தினம்
இறந்து இறந்து
வாழாதே !
ஒவ்வொரு நாளும்
பிறந்து பிறந்து வாழு!
சோகத்திற்கு சோர்ந்து விடாமல் உழைக்க வேண்டும் என்ற வாழ்வியல்
கருத்துக்களை விதைக்கும் விதமாக பல கவிதைகள் நூலில் உள்ளன. பதச் சோறாக
சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
வெற்றியின் வேதாந்தம் !
வேதனை என்னும்
விதையை
விதைக்காமலா
சாதனை என்னும்
பயிர்
அறுவடை செய்யப்படும்.
போதனை என்னும் பொருள் இல்லாமலா
அறிவு என்னும்
ஆதாரம்
கிடைக்கப்பெறும்.
காதலனுக்கு காதலி நினைவு அழிந்து விடுவதில்லை. சிந்தையின் சிறு ஓரத்தில்
எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்ணே!
உன்
நினைவு
ஒன்றும்
நிறுத்தற்குறியல்ல
மாறாத நினைவுக்குறி.
இந்த நாட்டிற்காக உழைத்த மாபெரும் தலைவர், சிறந்த மனிதர் அவரையும் சாதி
என்ற சிறு வட்டத்தில் அடைத்து வருவது வேதனை. கப்பலோட்டிய தமிழர், செக்கு
இழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் அவர்கள் பற்றிய கவிதை நன்று.
கவிஞர்களின் பார்வையில் வ.உ. சிதம்பரனார்.!
வறுமை இல்லாத
வாழ்வு தான்
வாழையடி வாழையாகவே
வழக்கறிஞர் தொழில் தான்
அறியாத அர்த்தத்தில்
வாழ்ந்து
இன்னலே இனிமையென்று
சிறையில் செக்கிழுத்தாய்
செக்கு மாடுகளாய்
வலம் வந்த
வெள்ளையர்களை வெளியேற்றவே
வெகுண்டு எழுந்தாய்.
உன்னிலிருந்து தான்
தேசத்தில்
வெள்ளையர்களின் ஆயுள் வாசம்
சுதேசிக்கப்பல் மூலம்
ஆட்டம் காண ஆரம்பித்தது.
தமிழ் படித்தவர்களை விட தமிழ் அல்லது பிற துறை படித்தவர்கள் தமிழுக்குச்
செய்யும் பங்களிப்பு பாராட்டுக்குரியது. நூலாசிரியர் வழக்கறிஞர் கவிஞர்
த. இராஜலிங்கம் அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர் தொழிலுக்கு நடுவே
கவிதைகளும் எழுதுவதற்கு பாராட்டுகள்.
நூல்
விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
வாசகன் பதிப்பகம்,
167, AVR
வளாகம்,
அரசு கலைக்கல்லூரி எதிரில்,
செரி சாலை, சேலம்
– 636 007.
பேச
: 98429 74697
விலை : ரூ.
55
www.tamilauthors.com
|