நூல் :
மழலையர் மாருதம்
நூல்ஆசிரியர்:
தம்பிலுவில் ஜெகா
நூல் அறிமுகம்:
வெலிகம
ரிம்ஸா முஹம்மத்
கிழக்கிலங்கையில்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளரான ஜெனீரா அமானின் மழலையர்
மாருதம் எனும் நூல் வெளிவந்திருக்கின்றது. சிறுவர் உளவியல் கட்டுரைகளின்
தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்நூல் குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின்
மனநிலை போன்றவற்றை உணர்ந்து குழந்தைகளை சீராக வளர்ப்பதற்காக பல
விடயங்களைப் பற்றி பேசியிருக்கின்றது.
இந்நூலுக்கான அணிந்துரையை வழங்கியிருக்கும் கலாநிதி கே.எம். இக்பால்
அவர்கள் ஷஷமனித வாழ்வில் பிள்ளைப் பருவம் முக்கியமானது. பெற்றோர் தமது
பிள்ளைகளை உளவியல் ரீதியாக அணுகிட இந்நூல் உதவும். பிள்ளைகளின் உடல் உள
நலன்களைப் புரிந்துகொள்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு அவசியமாகும்.
இந்நூலில் உள்ள கட்டுரைகள் பிள்ளைகளின் உடல், உள தேவைகளை நிறைவேற்ற
உதவும்|| என்கிறார்.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். குழந்தைகள் நற்பிரஜைகளாக
வளர்வதற்கான அடித்தளம் முதலில் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றது.
வீட்டில் பெற்றோர் குழந்தைகளுடன் நடந்துகொள்ளும் முறை, குழந்தையின்
தேவையை அறிந்து அதை நிறைவேற்றும் முறை போன்ற குழந்தை வளர்ப்பிற்கு
இன்றியமையாதவையாகும். குழந்தைகளின் மனதைப் புரிந்துகொண்டு
அதற்கேற்றாற்போல செயற்படும்போது அவர்களின் உடல், உள ரீதியான
பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ள இயலும். ஒரு சிறந்த நிர்வாகியாக தாயும்,
தந்தையும் செயற்படும்போது குழந்தைகளின் மன வளர்ச்சியும்
ஆரோக்கியமானதாகவே இருக்கும். அவ்வாறில்லாமல் தான்தோன்றித்தனமாக
குழந்தைகளை செயல்பட அனுமதித்தால் குழந்தைகள் மனதளவில் சிதைந்து
நல்லொழுக்கமற்ற, சமுதாய துரோகியாக வளர்வதற்கு ஏதுவாக அமையும்.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அந்த கூற்றுக்கிணங்க
குழந்தைகள் விரல் சூப்புவதை சிறுவயதிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் வளர்ந்து பெரியவர்களானாலும் அவர்களால் அப்பழக்கத்தை
விடமுடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். விரல் சூப்பும் பழக்கமானது
குழந்தைகளின் பற்களை உறுதியற்றதாக்கி விடுகின்றது. அதுபோல் குழந்தைகள்
பிடிவாதக் குணம் உள்ளவர்களாகுவதற்கும் ஏதுவான காரணியாக அது அமைகின்றது.
எனவே வேறு விடயங்களில் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப வேண்டும்
என்பதாக அறிவுரை சொல்லியிருக்கின்றார் நூலாசிரியர்.
அன்பு உலகை இயங்கச் செய்கின்றது. அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை யாவருக்கும் அன்பு ஒரு ஆயுதமாக,
கேடயமாக இருக்கின்றது. அன்பு காட்டுபவர்களையே குழந்தைகள் அதிகம்
நேசிக்கின்றார்கள். தனிமையில் விடப்படும் குழந்தை கத்தி அழுகின்றது.
தாய் ஓடிவந்து உணவு ஊட்டிவிட்டு குழந்தை பசிக்காக அழுததாக
தீர்மானிக்கிறார். ஆனால் அன்பை எதிர்பார்த்து அதை பெற்றுக்கொள்ள
முடியாமல் தவிக்கும் குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றது.
எனவே தன் பக்கம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஏனைய குழந்தைகளை அடித்தும்,
கிள்ளியும் தனது செயல்களை மாற்றிக்கொள்கின்றது. அது பொறாமையாக
உருவெடுத்து விடுவதாக இந்த நூலில் உள்ள கட்டுரை அமைந்திருக்கின்றது.
நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு விடயத்தில் எத்தனை தூரம் குழந்தைகள்;
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நூலாசிரியர் மிக அருமையாக சுட்டிக்
காட்டியிருக்கின்றார்.
விருப்பு வெறுப்புக்கள் மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் வேறுபடும்.
குழந்தைகள் விடயத்தில் அது மிகவும் கரிசனை காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
குழந்தைகளுக்கு உணவூட்டுவது பெரும் பிரச்சினைகளில் ஒன்று. எல்லா
தாய்மார்களும் முகம்கொடுக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை இது. தாம்
விரும்பியவற்றை பிள்ளைகளுக்குத் திணிக்காமல் பிள்ளை விரும்பும் உணவை
அறிந்து அதைக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த உணவு ஆரோக்கியமானதாக
இருப்பது அவசியம். பிள்ளைகள் தம் பிஞ்சுக் கைகளால் தாமாக உணவை அள்ளிச்
சாப்பிடவே மிகவும் விரும்புவார்கள். ஆனால் உணவை சிதறி விடுவார்கள்
என்பதற்காக குழந்தைகளின் கையில் கொடுக்காமல் இருப்பது பிழையான செயலாகும்
என்று உணவூட்டல் சம்பந்தமாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷசிறு பிள்ளைகள் தானே.. வளர்ந்ததும் திருந்திவிடுவார்கள்| என்ற
கோட்பாட்டிலிருந்து பெற்றோர்கள் விலகிக்கொள்ளல் அவசியம். ஏனெனில்
பிள்ளைகள் பெரியவர்களானதும் திருந்திவிடுவதில்லை. சிறுவயதில் தாம்
பழகியவற்றை சரியென்றே அவர்கள் எண்ணுகின்றார்கள். பெற்றோர்கள்
கண்டிக்காத செயல்கள் சிறுவர்கள் உள்ளத்தில் சரியானவை என்ற பதிவையே
உருவாக்கிவிடுகின்றன. சின்னச் சின்ன பொருட்களை திருடுவது தெரிந்தாலே
ஆரம்பத்தில் அதைத் தடுக்க வேண்டும். திருடுவது தவறு, மற்றவர்களின்
பொருட்களுக்கு ஆசைப்படக் கூடாது என்று பிள்ளைகளிடம் ஆணித்தரமாக
எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் பிஞ்சு உள்ளத்தில் அது பதியும்.
அதைவிடுத்து அவற்றை இரசித்து சிரித்துக் கொண்டிருந்துவிட்டால்
எதிர்காலத்தில் அழுது தீர்க்க வேண்டியேற்படும்.
மழலையர் மாருதம் ஜெனீரா கைருல் அமானின் ஏழாவது நூல் வெளியீடாக
அமைந்துள்ளது. இவர் ஏற்கனவே பாலர் பாடல் (சிறுவர் பாடல் - 1991),
சின்னக்குயில் பாட்டு (சிறுவர் பாடல் - 2009), பிரியமான சினேகிதி (சிறுகதை
- 2009), மிதுஹாவின் நந்தவனம் (சிறுவர் கதை - 2010),
கட்டுரை எழுதுவோம் (03 - 05 ஆம்
வகுப்புக்களுக்குரியது - 2010),
முப்லிஹாவின் சிறுவர் கானங்கள் (சிறுவர் பாடல் - 2012)
ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்தவர்களாக அவர்களை மாற்றுவதற்குரிய
சிறந்த பல ஆலோசனைகளை முன்வைத்து மழலையர் மாருதம் என்ற நூலைத் தந்த
ஜெனீரா கைருல் அமான் பாராட்டுக்குரியவர். அவரது இலக்கியப் பணி தொடர
வாழ்த்துகின்றேன்!!!
நூலாசிரியர் - ஜெனீரா அமான்
நூல் - மழலையர் மாருதம்
தொலைபேசி - 0262236487
வெளியீடு - அல் அக்தாப் இலக்கிய மன்றம், கிண்ணியா
விலை - 200 ரூபா
www.tamilauthors.com
|