நூல் : கற்றபின் நிற்க ... !
நூல் ஆசிரியர் :  
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்.
நூல் அறிமுகம்:  கவிஞர் இரா.இரவி


ற்றபின் நிற்க ... நூலின்       தலைப்பே திருக்குறளை நினைவூட்டி படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடுகின்றது.  நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள், பெருங்கவிக்கோ வா.மு.சேது இராமன் என்ற புலிக்குப் பிறந்த புலி.  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப இலக்கியத்தில் தடம் பதித்து வருபவர்.  தமிழ்ப்பணி என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்து முத்திரை பதித்து வருபவர்.  வணிகவியல் பட்டம் பெற்ற போதும் வங்கிப்பணிக்கு செல்லாமல் தந்தையின் வழியில் இலக்கியப்பணிக்கு வந்தவர்.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேராசிரியர் முனைவர் மின்னூர் சீனிவாசன் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக இருந்து வரவேற்கின்றது. கவிக்கோ ஞானச்செல்வன் பெருங்கவிக்கோ வா.மு. சேது இராமன் ஆகியோரின் வாழ்த்துப்பா நன்று.

பல்வேறு மேடைகளில், நாடுகளில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  60 கட்டுரைகளாக வடித்து உள்ளார்.  உரையின் தொகுப்பு என்பதை முன்னுரை படித்தாலே அறிய முடியும்.  உரை போல அன்றி தரமான கட்டுரையாக வடிவமைத்த்து சிறப்பு.  முதல் கட்டுரை மலேசியாவில் அறிஞர் இராபர்ட் கால்டுவேல் இருநூற்றாண்டு விழாவில் ஆற்றிய அற்புத உரை.  60வது கட்டுரை மலேசிய முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச்சங்கப் பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீட்டு விழா உரை.  உரைகளை கட்டுரையாக்கி நூலாக்கி இருப்பது நல்ல யுத்தி.  உரை முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு குறித்த உரத்த சிந்தனையாக வளம் சேர்க்கும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.

தமிழ் அறிஞர் கால்டுவேல் வரலாறு சுருக்கமாக நூலில் உள்ளது.  தகவல் சுரங்கமாக உள்ளது. நூலில் இருந்து சிறு துளிகள்.

“அறிஞர் இராபர்ட் கால்டுவேல் அவர்கள், 1814இல் அயர்லாந்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிளாடி எனும் சிற்றூரில் பிறந்தார்.  அவரது பூர்வீகம் சுகாட்லாந்து.  டப்னில் ஓவியப்படிப்பு முடிந்து கிளாசுகோ பல்கலைக்-கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  1838ஆம் ஆண்டு சமயப்பணிக்காகத் தமது 24வது வயதில் சென்னைக்கு வந்தடைந்தார்.  தமிழகம் முழுவதும் கால்நடையாகவே பயணம் செய்து,. தமிழர் தம் பண்பாட்டில் திளைத்துள்ளார்.  மூன்றாண்டுகள் தமிழிலும் சம்ற்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றார்.

இடையன்குடியில் சமயப்பணி ஆற்றிய கால்டுவெல் அங்கு வாழும் மக்களுக்கு 9 பள்ளிக்கூடங்கள் நிறுவியுள்ளார். பெண்கல்விக்கு பெரும்-பணியாற்றியுள்ளார்.  தம் 77ஆம் அகவை வரை தமிழகத்தில் அரும்பணி ஆற்றிய கால்டுவேல் 1891ஆம் ஆண்டு காலமானார்.  அவரது உடல் இடையங்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

அறிஞர் கால்டுவேல் பற்றி வரலாற்றை சுருக்கமாக எழுதி, அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியுள்ள நூல் ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  2-வது கட்டுரையான விழிமின் எழுமின் விவேகானந்தரின் உலகச் சிந்தனைகள் கட்டுரையில் இரண்டு திருக்குறள்களுடன் தொடங்கி அவரது வாழ்க்கை வரலாறு, போதனை, சாதனை என அனைத்தும் எழுதி உள்ளார்.

சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை கட்டுரையில் தமிழின் மேன்மையை உணர்த்தி உள்ளார்.  சிலப்பதிகாரம் ஆய்வுக்கட்டுரை உள்ளது. மறைமலையடிகள் பற்றி, பெரியார், அண்ணா வளர்த்த தமிழ் பற்றி, கன்பூசியசும், திருவள்ளுவரும் ஒப்பீடு – இப்படி பல கருத்துக்கள் நூலில் உள்ளன.

சித்தர் பாடல்களின் சிறப்பு, அமெரிக்கா, வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தினரின் தமிழ் உணர்வு பற்றி பதிவு செய்துள்ளார்.  புலம் பெயர்ந்த தமிழர்கள் யாவரும் தமிழ் உணர்வோடு வாழ்கின்றனர்.  தமிழ்நாட்டு தமிழர்கள் தான் தமிழ் உணர்வே இன்றி வாழ்கின்றனர் என்ற வருத்தத்தை உணர்த்தியது நூல். 

அமெரிக்காவிலும் ஆடல்கலை வளர்ந்து வருவதை சுட்டி உள்ளார்.  பன்னாட்டு தமிழுறவு மாநாடுகள் பல வெளிநாடுகளில் நடத்திய அனுபவம் நூலாசிரியருக்கு இருப்பதால், பல நாடுகள் பற்றியும் நன்கு அறிந்து இருக்கும் காரணத்தால் பன்னாடுகள் பற்றிய தகவலும் நூலில் உள்ளது.

மலேசியாவில் திருக்குறள் வகுப்பு நடத்தியதையும் அழகிய கட்டுரையாக வடித்து உலகப் பொதுமறையின் சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார்.  மகாகவி பாரதியார் பாடல்கள் கூறி ஆற்றிய உரை அருமை.  தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்திய கட்டுரை நன்று.  மலேசியா சாதனைத் தலைவர் டத்தோ சீறீ சாமி வேலு அவர்கள் பற்றிய கட்டுரை ஒரு நூலில் பல்வேறு தகவல்கள். தமிழ் நெஞ்சர் உதயன் இதழ் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களைப் பற்றிய உரை மிக நன்று.

இலண்டனில், மலேசியாவில், சிங்கப்பூரில் பெற்ற, கற்ற அனுபவங்களை தொகுத்து கட்டுரையில் வடித்து உள்ளார்.  தமிழன் இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு உலக நாடுகள் அனைத்திலும் தமிழர் உள்ளனர்.  நூலாசிரியர், தந்தையைப் போலவே பல நாடுகள் பயணித்து தமிழ்மொழியின் அருமை, பெருமை பற்றி ஆற்றிய உரைகள் சிறப்பு.

வெளிநாடுகள் மட்டுமன்றி, வெளிமாநிலங்களும் சென்று டில்லி, பெங்களூர் என்று பல நகரங்களில் தமிழ், தமிழர் பற்றி உரை நிகழ்த்தி இன உணர்வை ஊட்டி வந்த மலரும் நினைவுகளை, தேதிகளுடன் பதிவு செய்துள்ளார்.

நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள், கையில் சிறுகுறிப்புடன் தான் பேசுவார்.  மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேசும் போது அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன்.  பேசி முடித்து விட்டு வந்தபின் அப்படியே அவற்றை கட்டுரையாக்கிய திறமை கண்டு  வியந்து போனேன்.  நினைவாற்றல் மற்றும் தமிழ்ப்புலமை பிரமிக்க வைத்தது. மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேசிய பேச்சும் இந்த நூலில் உள்ளது .

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேசிய புகைப்படத்தை அனுப்பி வைத்து இருந்தேன்.
  பல நாடுகள், பல மாநிலங்கள் சென்று உரையாற்றிய படங்கள் இருந்த போதும், மதுரையில் அவர் உரையாற்றிய, நான் அனுப்பிய புகைப்படத்தை அட்டையில் பிரசுரம் செய்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.  தொடர்ந்து எழுதுங்கள், பாராட்டுக்கள்.

தூய தமிழில் நூல் உள்ளது .வடமொழி எழுத்துகள்  இன்றி உள்ளது. பாராட்டுக்கள் .தினத்தந்தி  நாளிதழின்  இலக்கிய விருது பெற்ற பெருங்கவிக்கோ வா.மு.சேத இராமன் அவரது மூத்த புதல்வர்  தமிழ்ப்பணி இதழ் ஆசிரியர் நூல்ஆசிரியர் கவிமுரசு வா.மு.. திருவள்ளுவர்  போன்றவர்கள் எழுத்துக்கள் கண்டு தமிழ் என்றும் சாகாது என்று மகிழ்ச்சி கொள்ளலாம் .
 

தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.  பக்கம் : 256  விலை : ரூ. 200.

 

    

 

 

 

 

 

 

 

             

 www.tamilauthors.com