நூல் :
வானம் என் வாசலில்
நூல் ஆசிரியர் :
கவிஞர்
பா.கிருஷ்ணன்
நூல் அறிமுகம்:
கவிஞர்
இரா.இரவி
நூலாசிரியர்
பா.கிருஷ்ணன் அவர்கள், முகநூல் நண்பர் நீண்ட நாட்களாக தொடர்பில்
இருப்பவர். தினமணி நாளிதழில் தலைமை நிருபராக பல்லாண்டுகள் பணிபுரிந்த
அனுபவம் மிக்கவர் .பண்பாளர். .திரைப்பட நடிகர். தமிழ் வளர்ச்சித்
துறையில் சென்னையில் நடந்த திருக்குறள் கருத்தரங்கில் நேரடியாக
சந்தித்து மகிழ்ந்தேன். என்னோடு அவரும் கட்டுரை வாசித்தார். தமிழ்த்தேனீ
இரா. மோகன் அவர்கள் கருத்தரங்கத் தலைமை வகித்தார். மதுரை தியாகராசர்
கல்லூரியில் உலகத்தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த புதுக்கவிதைக்
கருத்தரங்கில் என்னோடு கட்டுரை வாசித்த போது இந்த நூல் வழங்கிச்
சென்றார்.
நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. கவிதை நூல் என்பதை பறைசாற்றி
விடுகின்றது. இந்த நூலை தனது ஞானகுரு மகாகவிக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
பாராட்டுக்கள். கவிஞர் சக்திஜோதி அவர்களின் அணிந்துரை நன்று. அட்டைப்பட
வடிவமைப்பு, உள் அச்சு, புகைப்படங்கள் யாவும் நேர்த்தியாக உள்ளன.
நூலில் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. கவிதையின் எடுப்பு,
தொடுப்பு, முடிப்பு மிகச் சிறப்பு.
தேடித் தேடி !
தேடுதல் ஒரு வலி
தேடுதல் ஒரு சுகம்
தேடுதல் ஒரு நிஜம்
தேடுதல் ஒரு உயிர்
தேடலே நானாய் மாறும்போது.
வாழ்வின் வெற்றிக்கு மூலகாரணம் தேடலே. தேடல் இருக்கும் வரை வெற்றிகள்
வசப்படும். நல்ல கவிதை ; பாராட்டுக்கள்.
முகம் பற்றிய கவிதை மிக நன்று. எல்லோருக்கும் முகம் ஒன்று என்றாலும்,
இல்லத்தில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம் அரங்கத்தில் ஒரு முகம் –
இப்படி முகம் மாறி வருகின்றது. அது பற்றிய சிந்தனை நன்று.
முகம் !
எத்தனை முகங்கள் இங்கே ! எல்லோருக்கும்?
முகம் தெரிந்தவர் / முகம் மறைத்தவர்
முகம் இழந்தவர் / முகத்தை அழித்தவர்
இப்படியாக / இன்னொரு முகத்தில் / என் முகம் புதைக்க
இஷ்டமில்லை / இருந்தாலும் / முகம் கெடாமல்
வாழ்வு தேடவும் / என் முகம் கூட்டத்தில்
பளிச்செனத் தெரியவும் / எனக்கு ஆசை!
கனவு காணுங்கள் என்றார் மாமனிதர் கலாம். அவர் சொன்ன கனவு பற்றியும் ஒரு
கவிதை வித்தியாசமாக எழுதி உள்ளார்.
கனவுகள்
தொல்லை தந்த கனவுகளோடு / போரிட்டுப் பார்த்தேன்
தோற்றுப் போனேன்
கட்டித் தழுவிய கனவுகளை நான் / காதலித்தேன்
காணாமல் போனேன்
கனவே கனவே கனவாய் இருந்திடு
வாழ்க்கை வேடம் / அணிந்து கொள்ளாதே
அதுவரை / கனவே, கனவே / காதலிப்பேன் உன்னை.
எல்லோரும் கனவில் காதலித்து மகிழ்வார்கள். இவர் கனவையே காதலித்து
மகிழ்கிறார். வாழ்த்துக்கள்.
காதல் – அன்றும், இன்றும், என்றும் இனிமையான ஒன்று. காதல் திரைப்படங்கள்
இன்றும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. காதல் பாடாமல், கவிஞர் உண்டா?
நூலாசிரியர் பா. கிருஷ்ணன் அவர்களும் காதல் கவிதை பாடி உள்ளார்.
வித்தியாசமான கவிதை. காதல் உணர்வை படம் பிடித்துக் காட்டும் கவிதை.
செய்து பார்!
வலி எங்காவது / சுகமாக இருக்குமா? / இருக்கும்.
மௌனத்தில் எங்காவது / வார்த்தைகள் உண்டா? / உண்டு.
பசியே நம்மைத் தின்ன முடியுமா? / முடியும்.
தனிமையில் அமைதியும் / தொலைந்து போகுமா? / போகும்.
வியாதியே மருந்தாய் / ஆவது சாத்தியமா? / சாத்தியம்.
காதல் செய்து பார் / இவை நிஜமென அறிவாய்.
காதலுக்காக அடி வாங்கிய காதலனுக்கு வலி தெரிவதில்லை. விழியால் -
காதலர்கள் பேசிக்கொள்வதும் உண்மை. பசியும் மறந்து போகும் – காதலி
வருகைக்கான காத்திருப்பு நேரத்தில். காதல் நோயிற்கான மருந்து காதலியிடமே
உண்டு. இப்படி காதல் பற்றி உணர்ந்து வடித்த கவிதை நன்று. நூலாசிரியர்
கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்கள், திருக்குறளை ஆழ்ந்து படித்தவர். அதனால்
அவரது கவிதையில் திருக்குறள் காமத்துப்பால் பாதிப்பை உணர் முடிகின்றது.
புரிதல் என்ற தலைப்பிலான கவிதையும் வித்தியாசமான சிந்தனை.
புரிதல்!
பிறந்த பின் ஆண்டுகள் / ஓடிய பின்னர்
புரிந்து கொண்டேன் / பிறந்தேன் என்பதை
நிகழ்தலில் இல்லை / நிகழ்வது என்பது
புரிதலின் போதே / நிகழ்தல் அறிந்தேன்
காதல் செய்ததோ / இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ / ஐம்பது வயதில்.
தத்துவம் உணர்த்தும் கவிதையும் நூலில் உள்ளது. வாழ்வின் வெறுமையை
உணர்த்துகின்றது.
என்னுடைய நான்!
தாயின் இருட்டறையிலிருந்து / சதை பூசி வெளிச்சத்தில்
வந்து விழுந்தேன்.
அன்று / என்னுடைய நான் / என்னிடம் இருந்தது
கண்கள் திறந்தேன் / அழுதேன்.
என்னுடைய நான் / காணாமல் போனது
கல்வியில் நுழைந்தேன் / அறிவைப் பெற்றேன்
கௌரவம் கிடைத்தது / அந்தஸ்து உயர்ந்தது.
என்னுடைய நான் காணவில்லை.
நூலின் தலைப்பில் உள்ள கவிதை ‘வானம் என் வாசலில்’ வானம் பற்றிய ஆய்வுரை
என்றே சொல்லலாம். எல்லோரும் ரசிக்கும் வானத்தை நூலாசிரியர் பார்த்த
வித்தியாசமான பார்வை நன்று.
வானம் என் வாசலில்!
இன்று / காலை புலர்ந்தபின் / கதவைத் திறந்தேன்
என் வாசலில் வானம் காத்திருந்தது
ஆஹா வானமே வா! வா! / வாய் நிறைய அழைத்தேன்
வானத்திடன் நான் கேட்டேன்? / வானமே நீ
ஆணா? பெண்ணா? / நிஜமா? கற்பனையா?
பெரிதா? சிறிதா? ... புரியாமல் நான்
தவித்து வருகிறேன் / ஆண்டுகள் பலவாய்!
மொட்டை மாடியில் / அண்ணாந்து படுத்தபடி
உன் ஆடையின் பூக்களை / எண்ணிப் பார்த்திருக்கிறேன்
கடலின் ஓரத்தில் நீ சிரிப்பதைக் கேட்டுத்
துள்ளியிருக்கிறேன் சந்தோசத்தில்.
கவிதைகள் நன்று. நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு
பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். சிறிய வேண்டுகோள். அடுத்து
எழுதும் கவிதைகளில் வடசொற்கள் தவிர்த்து எழுதுங்கள்.
பாகி எழுத்துலகம்,
76, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவான்மியூர்,
சென்னை-41.
www.tamilauthors.com
|