நூல் : அறுவடைகள்
நூல் ஆசிரியர் :  வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நூல் அறிமுகம்:  கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்


ழத்தில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்று வந்த யுத்த செயற்பாடுகள் அல்லது விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்து எழுத்தாளர்களும், இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற தேசங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் புத்தி ஜீவிகளும், கல்விமான்களும், எழுத்தாளர்களும் தாம் வாழும் நாடுகளில் இருந்த வண்ணம் இலக்கியப் பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர்.

அங்கெல்லாம் நாளாந்தம் நூல் வெளியீடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் இலங்கையிலும் நூல் வெளியீடுகள் நடைபெற்ற வண்ணம் இருப்பதை நாம் அறிகிறோம். இதுதவிர நூல் வெளியீட்டு விழாக்கள் ஏதுமின்றி நூலாசிரியர் தனிப்பட்ட ரீதி
யாக நூல்களை விநியோகித்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது முன் எப்போதும் இல்லாத வகையில் நூல்கள் அதிகமாக வெளிவந்துமிருக்கின்றன. இவற்றை எல்லாம் எவரும் ஒன்று விடாமல் படித்திருப்பார்கள் என்றோ, விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள் என்றோ சொல்ல முடியாது. அதே போன்று வெளிவருகின்ற நூல்கள் யாவும் விமர்சனத்துக்கு அல்லது திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் என்றும் எவருக்கும் சொல்ல முடியாது.

எது எப்படியாயினும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அநேகமான நூல்களை வாசித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். குறிப்பிட்ட சில விமர்சகர்களுக்குள்ளே இவர் இன்று பேசப்படக்கூடிய ஒருவராகக் காணப்படுகிறார். இவர் பல்துறை இலக்கியத்துடன் வானொலி, தொலைக்காட்சியினூடாக தனது ஆளுமைகளை வெளிக்காட்டி வரும் காத்திரமான எழுத்தாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது திறமையை வெளிக்காட்டிக் கொள்வதில் 'பூங்காவனம்' என்ற அவரது காலாண்டுச் சஞ்சிகை சாட்சி பகர்கின்றது. பெண்களால் வெளிவரும் சஞ்சிகைக்குள்ளே ஷஷபூங்காவனம்|| எனும் அவரது சஞ்சிகை மூலமாக மூத்த பெண் படைப்பாளிகளை நேர்கண்டு அவரது அனுபவங்களை வெளிக்கொணர்வதோடு இளம் படைப்பாளிகளை கைதூக்கி விடுவதில் திறமைசாலியாகவும் இவர் காணப்படுகிறார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த காலத்துக்குள் 10 நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது தொழில் சார்ந்த துறையுடன் கூடியதான கணக்கீடு சம்பந்தமான மூன்று நூல்கள் உட்பட கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் ஆகிய துறைகளில் தனது நூல்களை வெளியிட்டுள்ளார். தனது 02 ஆவது விமர்சன நூலான அறுவடைகள் என்ற 11 ஆவது நூலை இவர் அண்மையில் வெளியிட்டு வைத்தார்.

உண்மையில் அறுவடையைப் பெறுவதற்கு விதைப்புச் செய்திருக்க வேண்டும். ரிம்ஸா முஹம்மத் ஏற்கனவே பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் தனது விமர்சனம் என்ற விதையைத் தூவி அதிலிருந்து பெற்றுக் கொண்ட
24 கவிதை நூல்களையும், 10 சிறுகதை நூல்களையும், 02 நாவல்களையும், 02 சிறுவர் இலக்கிய நூல்களையும், ஏனைய பல்துறை சார்ந்த 05 நூல்களையும என்று மொத்தம் 43 நூல்களைப் பற்றிய விமர்சனங்களைத் தனது அறுவடையாகப் பெற்று வாசகர்களுக்குத் தந்திருக்கிறார். இந்தப் பெரு முயற்சி பாராட்டத்தக்கது.

இந்த நூலை இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன. இது நூலாசிரியரது எழுத்துப் பணிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
250 பக்கங்களைக் கொண்ட கனதியான இந்தப் புத்தகத்துக்கு, அணிந்துரையை சோ.பத்மநாதனும், வாழ்த்துரையை வவுனியூர் இரா. உதயணனும் (இலண்டன்), நூலுக்கான பின்னட்டைக் குறிப்பினை கலைவாதி கலீல் அவர்களும் வழங்கி சிறப்பித்து இருக்கின்றார்கள். திரு.இரா உதயணன் அவர்கள் இலண்டனில் இருந்து வருகை தந்து, நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டுக் கொடுத்துள்ளார்.

கே.எஸ்.சிவகுமாரன், மா.பாலசிங்கம், கே.விஜயன், தம்பு சிவசுப்பிரமணியம் போன்ற மூத்த தலை சிறந்த விமர்சகர்கள் வரிசையில் தற்போது வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இணைந்திருக்கிறார் என்று இரா உதயணன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டியிருக்கிறார்.

கவிஞர் சோ.பத்மநாதன் அவர்கள் ரிம்ஸாவின் எழுத்துப் பணிகளையும், திறமைகளையும் மெச்சியிருப்பதோடு விமர்சன நூலில் இடம்பெற்றுள்ள ஆழியாளுடைய கருநாவு தொகுதியில் இருந்து கவிதை ஒன்றினையும் எடுத்துக் காட்டித் தந்திருக்கிறார்.

இலங்கை அரசியலில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய சூழ்நிலையில் சிறந்த பத்திரிகையாளர்கள், நீதிக்காக போராடியவர்கள் பலர் அநியாயமாக கொல்லப்பட்டனர். அத்தகையவர்களில் 'சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அநியாயமாக சாவை எதிர்கொண்டவர். அதன் எதிர்வினையாக எழுதப்பட்ட ஒரு கவிதையை இவ்வாறு பதிவு செய்கிறார்.

'வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால'

இதனால்தான் போலும் இந்த நூலை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நூலாசிரியர் சமர்ப்பணம்; செய்து திருப்தியடைகிறார். அதேபோன்று அறுவடைகள் நூலில் பழைய புதிய எழுத்தாளர்கள் உட்பட ஆண், பெண் எழுத்தாளர்கள் என்ற பேதமின்றி சகலரது நூல்களையும் பற்றிய விமர்சனத்தைத் தந்திருக்கிறார்.

மூத்த எழுத்தாளர் என்ற வகையில் சகல துறைகளிலும் ஆளுமை மிக்க முன்னாள் தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதியான கலைவாதி கலீல் அவர்களது 'ஓ பலஸ்தீனமே! நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும' என்ற கவிதை நூலைப் பற்றிய விமர்சனத்தை அறுவடைகள் நூலில் பதிவு செய்திருக்கிறார். பலஸ்தீனம் ஓர் அரபு ராஜ்ஜியம். அதனைக் கைப்பற்றிக்கொள்ள இஸ்ரேல் பல காலந்தொட்டு பிரயத்தனம் செய்து வருகிறது. அங்கு யுத்தம் ஓய்ந்தபாடில்லை. மக்களது வாழ்க்கை அவலம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. சிறுவர் முதல் முதியோர் வரையில் ஆண் பெண் என்றில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாடற்ற இஸ்ரேலியர்கள் பலஸ்தீனப் பிரஜைகளை நாடற்றவர்களாக மாற்றி வருகிறார்கள். இதனால் பலஸ்தீன முஸ்லிம்களின் உயிர்களும், உடமைகளும் பரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எந்த விதத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது. சமாதான முயற்சிகளும் முடிவுற்றதாகத் தெரியவில்லை.

இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட காஸா மேற்குக் கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது கொலை செய்யப்பட்ட யதார்த்தபூர்வமாக சித்திரங்களை தத்ரூபமாக வரையும் திறமை கொண்ட நஜீ அல் அலியின் சித்திரங்களுக்கு இவ்வாறு உயிர் கொடுத்திருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள்.

உயிர் நீங்கி ஓயாத போதும்
உதிரமே உடலாய் மாறும்
கரம் வீழ்ந்து சாய்ந்த போதும்
குருதியே கரமாய் மாறும்
ஒரு கரம் ஓயும் போது
மறு கரம் கையை மாற்றும்
ஒரு உயிர் சாயும் போது
மறு உயிர் கல்லை ஏந்தும்
பச்சிளங் கரங்களுக்கும்
பாரிய வலிமையுண்டே
நிச்சயம் அல் அக்ஸா
நிச்சயம் பலஸ்தீனம்

இக்கவிதையின் மூலம் பலஸ்தீனர்கள் இறுதி வரையில் போராடும் விதம் குறித்தும், அது எத்தகைய ஆக்ரோஷமான போராட்டம் என்பதையும் விளக்கும் அவர், இளம் சிறார்கள் கூட பிஞ்சுக் கரங்களிலே கல்லேந்திப் போராடுகிறார்கள். நிச்சயமாக அது பலஸ்தீனத்தை நிறுவிவிடும் என்பதை எடுத்துக் காட்டுகிறார். பலஸ்தீனப் போராளிகளுக்கு ஆயுதப் பற்றாக்குறை நிலவுகிறது என்பதனால் அவர்கள் கல்லெடுத்து கரங்களினால்;தான் போராடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுபோன்று,

கையின் உறுதி கல்லின் வலிமை
காபிர் கூட்டம் நடு நடுங்கும்
வெள்ளப் பிறையும் வெண்போர் வாளாய்
துள்ளி எழுந்தே துணை செய்யும்

என்ற கவிவரிகளினூடே கற்களின் பயன்பாட்டால் காபிர் கூட்டம் அஞ்சி நடுங்குகிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் இந்நூலிலே எஸ். முத்துமீரான் அவர்களது 'அண்ணல் வருவானா?' என்ற கவிதை நூலைப் பற்றிய விமர்சனம் காணப்படுகிறது. எஸ்.முத்துமீரான் அவர்கள் ஒரு வழக்கறிஞராக இருந்துகொண்டு இலக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு தனது பங்களிப்புகளைச் செய்து வருகிறார். மூத்த படைப்பாளியும், கவிஞருமான இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். சமுதாயத்தில் நடக்கும் அவலங்களையும் அசிங்கங்களையும் எடுத்துக்காட்டி ஏழைகளைச் சுரண்டும் மனித மிருகங்களை அம்பு கொண்டு அழிப்பதற்கும், சாதிவெறியை விதைத்து சுகங்காணும் இனவெறியர்களை, ஏன் மதம் என்ற பெயரால் பெருந் தவறு செய்து மக்களை ஏமாற்றி வரும் காடையர்களையும் அழித்து உலகைக் காக்க அண்ணல் ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதை தனது ஷஷஅண்ணல் வருவானா?' கவிதைத் தொகுதி மூலமாக வேண்டி நிற்கின்றார்.

அறுவடைகளில்
10 சிறுகதை நூல்களைப் பற்றிய விமர்சனங்களை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். சகல நூல்களும் முதல் தரமாகக் காணப்படுவதோடு தரமான எழுத்தாளர்களால் அவை எழுதப்பட்டிருக்கின்றன. இதிலே மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் அவர்களது 'நினைவுகள் அழிவதில்ல' என்ற நூலைப் பற்றிய விமர்சனமும் அதே போன்று இன்னொரு மூத்த படைப்பாளியான வெலிப்பண்ணை அத்தாஸின் 'தியாகம்' என்ற சிறுகதைத் தொகுதியைப் பற்றிய விமர்சனமும் இடம்பெற்றுள்ளது. இளம் படைப்பாளியான யோ. புரட்சி என்பவர் தனது 'ஆஷா நாயும் அவளும'| என்ற நூலில் எழுதியிருக்கும்; சிறுகதைகளில் அனேகமானவை யுத்தகால சூழ்நிலையில் மக்களது பிரச்சினைகளையும், அவலங்களையும் பற்றிப் பேசுபவையாக இருப்பதை அறிய முடிகிறது.

மேலும் நாவல்கள் என்ற வகையில் இரண்டு நாவல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒன்று ஆர்.எம். நௌஸாத்தின் 'கொல்வதெழுதுதல்
90'. இவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பள்ளிமுனைக் கிராமத்தவராவார். இவர் ஏற்கனவே இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும், ஒரு நாவலையும் வெளியிட்டிருக்கிறார். 'கொல்வதெழுதுதல் 90' என்ற நாவல் 1990 காலப்பகுதியில் நடைபெற்ற அரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மற்றது முன்னாள் கல்விப் பணிப்பாளரும், பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திக்வல்லை கமால் எழுதிய ஷஷவீடு|| என்ற நாவல் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் கலாபூஷணம் பி.ரி. அஸீஸின்
08 ஆவது நூலான 'தென்றலே வீசி வ' என்ற சிறுவர் பாடல் தொகுதியைப் பற்றிய குறிப்புகளையும் வெலிப்பண்ணை அத்தாஸின் 'பூவும் கனியும' என்ற நூலைப் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார்.

இதுதவிர ஏனையவை என்ற பகுதிக்குள் நாடறிந்த எழுத்தாளர் கலாபூஷணம் பி.எம். புன்னியாமீன் எழுதிய 'ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உல' என்ற நூலைப் பற்றியும், கலை இலக்கியப் பார்வைகள், திறனாய்வு என்ற கே.எஸ். சிவகுமாரனின் இரண்டு நூல்கள் பற்றியும், திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூலைப் பற்றிய குறிப்புக்களையும் நூலாசிரியர் வெகு சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

எப்படியோ ஒரு சிறந்ததொரு விமர்சனத் தொகுப்பு நூலினை ரிம்ஸா தந்திருப்பது தற்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி ஒரே பார்வையில் படைப்பாளிகளையும், கவிஞர்களையும் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை எல்லோருக்கும் பயன்படும் வகையில் தந்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷமாகும்.
43 நூல்கள் பற்றிய குறிப்புக்களை ஒரே பார்வையில் ஒரு தொகுதியில் ஒன்றுசேரக் காண்பது மகிழ்ச்சிக்குரியது. இலக்கியவாதிகள், இலக்கிய அபிமானிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை வைத்திருப்பது பயனளிக்கும். நூலாசிரியரின் இலக்கியப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்!!!


நூல் - அறுவடைகள்
நூல் வகை - விமர்சனம்
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி -
0775009222
மின்னஞ்சல் -
poetrimza@gmail.com
வெளியீடு - இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்
விலை -
600
ரூபாய்