நூல் :  அன்ன யாவினும்
நூல் ஆசிரியர் :  மன்னார் அமுதன்
நூல் அறிமுகம்:  கவிஞர்.அஷ்ரப் சிஹாப்தீன்

ன்னார் அமுதனின் 'அக்குறோணி' கவிதைத் தொகுதிக்கு நயவுரை வழங்கியோரில் நானும் ஒருவன். அதன் பின்னர் அமுதனின் இந்தக் கவிதைத் தொகுதி உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. அக்குறோணி கவிதைகளின் போக்கிலிருந்து வித்தியாசப்பட்ட கவிதை சொல்லும் வகையில் இக்கவிதையில் அமைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

'அன்னயாவினும்' தொகுதியின் ஒரு சிலகவிதைகளை மன்னார் அமுதன் அவ்வப்போது முகநூலில் இட்டு வந்த போது படித்திருக்கிறேன், அவரைப் பாராட்டியிருக்கிறேன்.

கவிதையை முழுமையாகத் தருவதில் அமுதன் முழுமையடைந்திருக்கிறார் எனச் சொல்வதில் எனக்குள் குழப்பங்கள் கிடையாது. ஒரு கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எந்தப் பாணியை விரும்புகிறதோ எந்த வார்த்தைகளை விரும்புகிறதோ எந்தச் சொற்களை விரும்புகிறதோ அவை அத்தனையையும் கொண்டதாக அமைவதே முழுமையான கவிதை. இந்த வகையில் ஒரு நல்ல கவிஞனாக அமுதன் முழுமையடைந்து விட்டார் என்று சொல்வேன்.

இந்த முழுமை அவரது வாசிப்பாலும் வயதினாலும் உணர்வினாலும் அனுபவத்தினாலும் மாத்திரம் வந்திருக்கிறது என்பதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கும் மேலாக கவிதை என்பது என்ன என்ற நிறைவான சிந்தனையும் உணர்வும் புரிதலும்தான் அந்த முழுமைக்குக் காரணம் என்று சொல்ல முடியும்.

தன்னைப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் எவ்வாறு முழுமை பெறுவதில்லையோ அப்படியேதான் கவிதை என்ற கலை வடிவமும். எல்லாக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும். ஒரு கலை வடிவம் அதன் நேர்த்தியால், வடிவத்தால் அழகும் பொலிவும் பெறுகிறது. அந்த நேர்த்தியையும் அழகையும் கவிதையில் கொண்டு வருவதற்கு கவிதை என்றால் என்ன என்ற ஆழ் உணர்வும் ரசனையும் கவிஞனுக்கு இருக்க வேண்டும். அது மன்னார் அமுதனுக்கு இருக்கிறது.

இந்தத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது எந்தக் கவிதையில் ஆரம்பித்துப் பேசுவது என்கிற பெரிய சவாலைத்தான் நான் எதிர் கொண்டேன். அவ்வப்போது நான்கு கவிதைகளைப் படிப்பதும் மூடிவைப்பதுமாகக் காலத்தைக் கடத்தியபடியே இருந்தேன்.

இந்தக் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையை, அதன் போக்கை, அதன் சவால்களை, அதன் ஆபத்துக்களைத்தான் மொத்தமாகப் பேசுகின்றன. ஆனால் எந்தவொரு பக்கத்துக்கும் சாராமல், வலிந்து இழுக்காமல், மனம் போன போக்கில் போகாமல் ஒரே நேர் கோட்டில் இவை பயணம் செய்கின்றன. ஒரு இலங்கையனாக, ஒரு சிறுபான்மையினனாக, ஒரு தமிழனாக, ஒரு இலக்கியவாதியாக, ஒரு வடபுலத்தானாகவெல்லாம் இக் கவிதைகளில் தோற்றம் தருகிறார் அமுதன். ஆனால் எந்தப் பக்கமும் தூக்கலாகப் பேசப்படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஓர் அம்சம்தான்.

சொற்களைக் குளிர் நீரில் துவட்டிச் 'சுள்'ளென வலிக்க அடிக்கும் அழகில் இக்கவிதைகள் குளித்து நிற்கின்றன. கிண்டலாகட்டும் கோபமாகட்டும் அழுத்திச் சொல்வதாகட்டும் - எதுவாக இருந்த போதும் அதற்கென காரமான, ரௌத்ரமான எந்தச் சொற்களும் இக்கவிதைகளில் கிடையாது. ஒரு சாதுவைப் போல எழுந்து நடக்கும் இக்கவிதைகள் சில இடங்களில் மின்மினிப் பூச்சிகள் பறக்கும் அளவுக்கு ஓங்கி அறைந்து விட்டுச் செல்கின்றன.

'காடு பிடித்திருக்கிறது
இங்கு
ஆத்திரத்தைக் காட்டவும்
அறைந்து சாத்தவும்
கதவுகள் இல்லை!'


(காடு பிடித்தல்)



'நீங்கள்தான்
போதி மரப் புத்தனையும்
சிலுவை மர இயேசுவையும்
பிரசவித்ததாய்க்
கூறித் திரிபவர்களாயிற்றே!'


(தீர்ப்புக் கூறிகள்)


'கிறீஸ் பேய்கள்
கொண்டு சென்ற இரத்தத்தில்
அவர் படித்திருக்கலாம் -
இரத்தம் ஒரே நிறமென்பதை!'


(புத்தனின் சொற்கள்)

மேலே நான் தந்திருப்பவை தனித்துப் பார்த்தாலும் அதிர்வு தரும் கவிதைத் துளிகள். ஆனால் கவிதையை முழுமையாகப் படிக்கும் போது இவற்றின் தாக்கம் வலிமை மிக்கதாக இருக்கும்.

சில கவிதைகள் ஒரு முழுத் திரைப்படத்தைப் போல மனதுக்குள் காட்சிகளை விரிக்கின்றன. அவ்வாறு விரித்து விட்டு வெறுமனே அவை கடந்து போய்விடுவதில்லை. அவை நமக்கு எதையோ உணர்த்திவிட்டுச் செல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 'மன்னரின் நகர் வலம்' என்ற கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக் காட்ட முடியும். அதிகாரத்தைக் கொண்டு எதையெதையால்லமோ அலங்கரிக்க முடியும். எதையெதையெல்லாமோ சாதிக்க முடியும். ஆனால் மக்களின் மனங்களை வெல்லுவது சாத்தியமற்றது என்பதை மிக அழகிய முறையில் சொல்லிச் செல்கிறது இந்தக் கவிதை. 'அழிப்பதும் பதிப்பதும்', 'ஆல முடிகண்டன்', 'அந்த ஒருவன்' போன்ற கவிதைகள் கதையாயும் காட்சியாயும் விரியும் அழகு ரசிக்கத்தக்கது!

எல்லாக் கவிதைகளிலும் கவிஞனின் செய்தி ஒன்றிருக்கிறது. சிலவற்றில் நேரடியாகவும் சிலவற்றில் மறைவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. மாற்றியமைத்தலுக்கான கோஷமாக அல்லாமல் ஒரு எழுந்தமானத் தகவல் போல அச்செய்தி கவிதையுடன் இழையோடுகிறது. கவிஞனின் பார்வையும் கவிதை சொல்லும் முறையும் மனச்சாட்சியின் தராசு முள்ளில் அமர்ந்திருக்கிறது. ஆயினும் சரியானது எது என்பதை கவிதை சொல்லப்படும் விதத்தின் மூலம் அமுதன் வாசகனுக்கு உணர்த்தும் திறமையையும் நுட்பத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

பிரபல்யமும் விளம்பர ஆடம்பரமும் கொண்டபடி தென்னிந்திய இலக்கிய மாபியா முதலாளிகள் நடத்தும் சஞ்சிகைகளில் கவிதை என்ற பெயரில் வரும் வான்கோழி எழுத்துக்களின் வாலில் தொங்கிக் கொள்வதிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டிருக்கிறார் அமுதன். அவற்றை அவர் உள்வாங்கியிருந்தாலும் கூட யாராலும் கவனிக்கப்படாத, இலக்கிய மாபியா முதலாளிகளின் அருட் கடாட்சம் படாத அல்லது அந்த வலைக்குள் அகப்படாத, அகப்பட விரும்பாத அற்புதமான கவிதைகளைத் தரும் கவிஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் கவிதைகளைப் படித்து - பாலை மட்டும் உறிஞ்சியெடுக்கும் அன்னம் போல அமுதன் ஆகிவிட்டிருக்கலாம் என்பது எனது முடிபு.


ஒரு சிறந்த படைப்பாளிக்குத் தெளிவுதான் முதலில் தேவைப்படுவது. தெளிவு கொள்ளும் அளவு படைப்பாளி தெளிந்திருக்கிறான் என்றால, தன்னை அறிந்திருக்கிறான் என்றால் எதை எப்படிச் சொல்ல வேண்டும் என்கிற வித்தை கைகூடிவிடும். எந்த வார்த்தை மந்திர வார்த்தை என்பது புரிந்து விடும். அந்தத் தெளிவை அமுதன் பெற்றிருக்கிறார் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தெருவில் கிடக்கும் நீரில் வானத்தைப் பார்க்கலாம். ஆனால் வெறும் மண்ணில் வானம் தெரிவதில்லை. விளம்பரங்களாலும் நவீனம் என்ற பெயராலும் மண்ணில் பார்க்கப்படும் வானத்தின் அழகு சோபிப்பதில்லை. காரணம், அதில் உண்மை இல்லை. உண்மை இல்லாதவை மக்களின் ரசனைக்கு உட்படுவதுமில்லை. இந்த நிலைக்குள் தள்ளப்பட்டு விடாமல் தனது சாதாரண வார்த்தைகளை வெகு சரளமாககக் கவிதைகளில் பயன்படுத்தி மெல்லிய போக்குடன் தெளிந்த நீரோட்டம் போல கவிதைகளைத் தந்திருக்கிறார் அமுதன்.

மிக அண்மையில் நான் படித்து மகிழ்ந்த தொகுதி என்று இந்தக் கவிதைத் தொகுதியை கவிதை பயிலும் இளந் தலைமுறைக்கு நான் சிபார்சு செய்ய விரும்புகிறேன்.



அஷ்ரஃப் சிஹாப்தீன்

0777 303 818