நூல் :  சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
நூல் ஆசிரியர்: திரு கே.எஸ்.சுதாகர்
நூல் விமர்சனம்:   
எம்.ஜெயராமசர்மா - மெல்பேண்


ல்வேறு காரணங்களால்தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள்.நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாசாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம்.அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள்.அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில்வாழ்கின்றவர்

மனத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.அந்த எண்ணம் அவர்களைவிட்டு என்றுமே அகலமாட்டாது. இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதா? அல்லது பாசப்பிணைப்பு என்பதா? எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

இந்தளவு விளக்கம் ஏன் என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை.ஒரு முக்கிய விஷயத்தைதொட விரும்பியதால்தான் இந்த விளக்கம் எல்லாம்.புலம்பெயர் வாழ்க்கையை நடத்தும் திரு கே.எஸ்.சுதாகர் 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' என்னும் சிறுகதைத்தொகுதியை எங்கள் கைகளிலே தவள விட்டிருக்கிறார்.அந்தத் தொகுதியில் உள்ள கதைகளை வாசிப்பவர்களுக்காகவேதான் இந்தவிளக்கம் சொல்லவேண்டியேற்பட்டது.

பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்டதே இந்தத்தொகுதி. இதில் இலங்கையைக் களமாகக் கொண்ட கதைகள், இலங்கையையும் அன்னியநாட்டையும்களமாக இணைத்து நிற்கும் கதைகள், அன்னிய நாட்டைமட்டும் களமாகக் கொண்டகதைகள் என இக்கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' சிறுகதைத்தொகுதிக்கு ஒருவிமர்சனம் தேவைதானா? என்னுள் எழுந்துநின்ற கேள்வி! நல்ல விஷயத்தை வாசித்தால், நல்ல விஷயத்தைப் பார்த்தால், அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லவே வேண்டும். சுவையான ஒரு உணவை உண்ணுகின்றோம். அதனைப்பற்றிக் கட்டாயம் எங்கள் கருத்தைச் சொன்னால் குறைந்தா போய்விடுவோம்.ஆனால் பலபேர் எந்தவிதமான அவிப்பிராயமும் அற்றவர்களாக இருந்துவிடுவதும் உண்டு.பிடித்தால் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது? என்ன என்ன விதத்தில்சுவையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது? இதை மனம் திறந்து சொல்லிப் பாருங்கள்! சமைத்தவரும் சந்தோஷப்படுவார். சுவைத்தவர்களும் சுகத்தை அடையலாம்தானே!

கதைத்தொகுதியைப் பற்றிச்சொல்லவந்துவிட்டு சாப்பாடுபற்றிச் சொல்லுகிறேன் என்று மனத்துள் நினைக்காதீர்கள்! கதைகளும் எங்களுக்கு நல்லசுவையான உணவுதானே! 'செவிக்கு நல்ல உணவு கிடைத்தால்' அது மகிழ்ச்சிதானே!.அந்த மகிழ்ச்சிதான் என்னுள் எழுந்த விமர்சனம் ஆகும்.

கே.எஸ்.சுதாகரை விமர்சனம் செய்வதா அல்லது அவரது கதைகளை விமர்சனம் செய்வதா? வள்ளுவரைவிமர்சனம் செய்தால் குறளை விமர்சனம் செய்தமாதிரி.குறளை விமர்சனம் செய்தால் வள்ளுவரும் அதில் வந்துவிடுவார்.ஆனால் நான் --- சுதாகரைப் பற்றியும்சொல்லப்போகிறேன். அவரது கதைகளைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகின்றேன்.சுதாகர் கலைத்துறை சம்பத்தப்பட்டவர் அல்ல.அவர்படித்தது பொறியியல் துறை.பெரும்பாலும் கலைத்துறை சார்ந்தவர்களே எழுத்துத் துறையில் புகுந்து வெழுத்துக்கட்டி நிற்பார்கள்.ஆனால் விதிவிலக்கானவர்களும்இருக்கத்தான் செய்கிறார்கள்.சுஜாதாவை தமிழ் எழுத்துலகில் மறந்துவிடமுடியாது.அவர் விஞ்ஞானத்துறையைசார்ந்தவர்.பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவசேகரம, டாக்டர் இந்திரகுமார், டாக்டர் ஞானசேகரன் இவர்கள் துறைவேறாக இருந்தபோதும் அவர்களும் கலை இலக்கியத்துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர்களாகவே விளங்குகிறார்கள். இவர்களது வரிசையிலே பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுதாகரும் இணைந்துகொள்கின்றார்.

சுதாகரை நேரே பார்ப்பார்களுக்கு---இவரா இக்கதைகளை எல்லாம் எழுதியிருப்பாரோ என்னும் ஐயம் கூடஏற்பட்டுவிடும்.அந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாதவர் போல இவரின் தன்மை காணப்படும். அந்த அளவுக்குஅடக்கமானவர். 'அடக்கமுடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்' என்பது இவரைப்பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றும்.

அநேகமான நூல்கள் வரும்பொழுது அதில் இடம்பெறும் ஏதாவது ஒரு விஷயத்தின் பெயரே தலைப்பாகப்போடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் சுதாகரின் 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்'என்னும் பெயரில் எந்தக்கதையையும் நீங்கள் உள்ளே காணவே முடியாது. இது ஒரு வித்தியாசமான சிந்தனை.பொறியியலாளராக இருந்து பொறுமையுடன் நல்ல கதைகளைத் தந்தமைக்கு ஒரு பாராட்டு. புதியமுறையில் தலைப்பைத் தேர்ந்து வைத்தமைக்கு மேலும் ஒரு பாராட்டு.

பகுதி 2

சுதாகரின் கதைகளைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் .... அவரது தமிழ் பற்றியும் அதனை அவர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைப்பற்றியும் சொல்லியே ஆகவேண்டும்.அவர் படித்தது ஆங்கிலத்தில். ஆனால் அவரின் தமிழ்நடையோ நல்லதோர் தமிழ்ப்புலமைகொண்டவரது நடைபோன்று அமைந்திருக்கிறது. இது அவரின் தமிழ் வாசிப்பால வந்ததோஅல்லது அவர் வாழ்ந்த குடும்பச் சூழலோ தெரியாது.இதுவும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம்.

வாசிக்கின்றவர்கள் மனத்தில் அலுப்புத்தட்டாமல் செய்கிறது அவரது தமிழின் போக்கு.சம்பவங்களை அவர் சொல்லும் பொழுது வாசகர்களையும் கூடவே கூட்டிச் சென்று விடுகிறார்.அவரின் கதை மாந்தர்கள் அழுதால் எமக்கும் அழுகை வருகிறது.அவர்கள் கோபப்பட்டால் எங்களுக்கும் கோபம் வந்து விடுகிறது. அவர்களது: சிரிப்பு, அவலம்,அன்பு, பாசம்பரிவு எல்லாம் எங்களுடனும் வந்து ஒட்டிக்கொள்கிறது. கதையல்ல ... நிஜம் என்னும் ஒரு வித உள்ளுணர்வை ஏற்படுத்திவிடுகிறது. இந்த மாயத்துக்குக் காரணம் சுதாகர் கையாண்ட எழுத்து நடையாகும்.

கதைக்கு, கவிதைக்குக் கட்டாயம் கற்பனை வேண்டும். ஆனால் கற்பனையே முழுவதும்ஆகிவிட்டால் அந்தக்கதை உயித்துடிப்பு சற்றுக்குறந்தது போலக்கூட ஆகிவிடலாம்.சுதாகரும்கற்பனை வளம் மிக்கவரானாலும் அவரின் கதைகளில் அவரும் வருகின்றார்.அவர் அனுபவித்தவாழ்க்கையும் வந்து நிற்பதையும் காணலாம்.நடந்த சம்பவங்கள் நல்ல எழுத்தாளின் கற்பனையில் கலக்கும் பொழுது யாவரையும் தன்னுள் ஈர்க்கும் வல்லமையைப் பெற்றுவிடும்.அப்படிஒரு ஈர்ப்பை தனது கதைகள் வாயிலாக சுதாகர் வரச்செய்துள்ளார். இது அவரது எழுத்து ஆழுமை
யையே காட்டி நிற்கிறது எனலாம்.

புலம் பெயர்ந்து வருபவர்கள் படும் சோதனையும், வேதனையும்,விரக்தியும்... சுதாகரின் கதைகளில் நாங்கள் பார்க்கலாம். புலம்பெயர்வால் ... உறவுகளின் இன்பத்திலோ, துன்பத்திலோ, கூடப்பங்கு கொள்ள முடியாதநிலை ஏற்படத்தான் செய்யும்.அப்படி ஏற்படும் பொழுது அதற்குள் அகப்பட்டவர்மனம்படும் பாட்டை சுதாகர் காட்டும் பாங்கு அவருக்கே உரித்தான உத்தியாகும்.

புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டவரைப்பார்த்து பயப்படுவது இயல்புதானே! அது மட்டுமல்லஅவர்களை முழுவதுமாக நம்பியும் விடுவார்கள்.இதனால் அங்குள்ளவர்கள் நேர்மையின் பிறப்பிடம், இருப்பிடம், எனவும் எண்ணியும் விடுகிறார்கள்.ஆனால் அவ்ர்களும் எங்களைப் போன்றவர்கள்தான்.நிரத்தால் வேறுபட்டு இருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான்.ஏமாற்றுதல், பணம்பண்ணுதல்இபித்தலாட்டம் செய்தல், யாவும் எங்கும் உள்ள இயல்பான குணங்கள்தான்.இதனைக் காட்டுகிறது 'விளக்கின் இருள்'என்னும் முதலாவது கதை. 'ரியல் எஸ்டேட்' வியாபாரம்அவுஸ்த்திரேலியாவில் கொடிகட்டிப்பறக்கிறது.மக்களை எப்படியெல்லாம் மயக்குமொழி பேசி மடக்கமுடியுமோ அப்படியெல்லாம் மடக்கி தமது வலைக்குள் விழப்பண்ணிவிடுவார்கள். வீடுவாங்கியவர்கள் பின்னர் படும் அவஸ்த்தையினை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.வீடு வாங்கிய பகுதிகளில் ஏதாவதுவிபரீதங்கள் ஏற்பட்டாலும் வியாபாரம் செய்தவர்களோ அல்லது அது சம்பத்தப்பட்ட அதிகாரிகளோகூடகாணாததுபோலவே இருந்தும் விடுவார்கள். வாங்கிய வீட்டில் இருக்கவும் முடியாமல், அதனை விற்கவும்முடியாமல் வாங்கியவர்கள் படும் வேதனையை நரகவேதனை என்றுதான் எடுக்கவேண்டும்.அந்த வேதனையினை வெளிப்படுத்தும் பாங்கில்த்தான் ' விளக்கின் இருள் ' கதை எழுதப்பட்டிருக்கிறது.

பகுதி 3

வீடு வாங்கினாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் வீடுவாங்கிய சிலநாளில் .... அங்குவசிப்பதே பெரிய ஆபத்து என்று வந்தால் எப்படி இருக்கும்? கஷ்ட்டப்பட்டு உழைத்துச் சேமித்த பணத்தை வைத்து வங்கியில் கடன் பட்டு வீடுவாங்கியவர்கள் படும், பட்ட, மனக் குமுறலை -- உண்மையின் அடிப்படையில்சொல்லி நிற்கும் கதைதான் ' விளக்கின் இருள் ' கதையாகும்.

என்ன என்ன புதைத்தார்களோ தெரியாது. எப்படி முன்னர் இருந்ததோ தெரியாது. ஆனால் வீடுகளைக் கட்டிக்குவித்து விடுவது நடைமுறையாக இருக்கிறது.அதனை வியாபாரம் செய்கின்றவர்களும் கொஞ்ஞமேனும் --- அதனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படுகின்றனர். மாட்டிக்கொள்பவர்கள் வீடுகளை வாங்கியவர்கள்தான்.

இந்தக்கதை அறிவு பூர்வமான அணுகுமுறை கொண்ட ஒரு கதையாகும். இனிமேல் வீடு வாங்க இருப்பவர்களுக்கு நல்ல ஒரு அறிவுறுத்தலைத் தரும் வகையில்இக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. மிகச்சிறந்த கதை என இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புத்தகத்தின் முதற்கதையாக அதாவது திறவு கோலாக இக்கதையை முதல்வைத்தமைக்குக் கட்டாயம் சுதாகரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

பேராதனைப் பல்கலைக்கழகம் படிப்பின் உச்சமாயும் இருக்கும்.பலவேளை இடிப்பின் உச்சமாயும் மாறிவிடும்.இனத்துவேஷம் கல்விக்குள் நுழையக்கூடாது. நுழைந்துவிட்டால் அது ஒரு புற்று நோய்தான். அன்றும் இருந்தது.இன்றும் அது அங்கு இருக்கிறது.

பல்கலைக்கழகம் என்றாலே கிண்டலும் கேலியும் மலிந்து காணப்படுவது இயல்பு.அவற்றை 'இரண்டு சம்பவங்களில்' அனுபவித்து சுதாகர் வெளிப்படுத்தி இருகிறார்.பல்கலைகழக மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் பேசும் வார்த்தைகள் கூட வில்லங்கமானதாகவே இருக்கும். அவையெல்லாம் அனுபவமாக பரவிக்கிடக்கிறது.சண்டைக்காரன் கூட சமயத்தில் மாறி உதவிக்கரம் நீட்டுவதும் உண்டு என்பதைமிகவும் நயத்தோடு காட்டியிருப்பதை படிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். இக்கதையை வாசித்ததும் -- முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்த காலமே படமாக மனத்தில்ஓடியது.தங்களின் அரசியல் ஆதாயத்துக் காக அன்று தொடக்கம் இன்றுவரை படிக்கும் மாணவர்களைப் பகடைக் காயாக்குவது அரசியல் வாதிகளின் ஒரு ராஜதந்திரமாகவே இருந்து வருகிறது. அதனை 'இரு சம்பவங்களில்' சுதாகர் சுட்டிக்காட்டுகின்றார்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை தேடும் படலம் என்பதே ஒரு திருவிளையாடற்படலம்தான்.முன் அனுபவம் பின் அனுபவம் உள்ளூர் அனுபவம் என்று வேலை தேடுபவர்களை கதிகலங்கச் செய்துவிடுவார்கள் வேலை கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள்.அதனை அனுபவித்தரால்த்தான் இப்படி ஒரு கதையை எழுதமுடியும். அந்தக்கதைதான் ' இருவேறுபார்வைகள் '. இந்தக்கதையை நகர்த்திச்செல்லும் பொழுது அதனை நோயாளி ஒருவர் வைத்தியரோடும் வைத்திய நிலையத்தோடும் படும் அவதிகளைத் தொடுத்து-- வேலைக்கான அனுபவத்தை விளக்கிக்காட்டும் பாங்கைரசிக்காமால் இருக்கவே முடியாது. இது நல்ல ஒரு உத்தியாக அமைகிறது.

இலங்கையும் புலம்பெயர் பகுதியும் கதைக்களமாக அமையும் கதைதான் ' காட்சிப்பிழை'.இடம் மாறினாலும் வயது ஏறினாலும் .. இருக்கும் நிலையில் மாற்றம் வந்தாலும் இயற்கைக் குணம் என்பது மனிதனை விட்டு மாறவே மாட்டாது. அது நல்லதாக இருந்தால்அதனை வரவேற்கலாம். ஆனால் அது ஆணவநிலை ஆனால் எப்படி அனுமதிப்பது? இலங்கையில் இருந்த குணம் எங்கு போனாலும் மாறிவிடவில்லை. தான் என்னும் முனைப்பு சாகும் தறுவாயில்கூட மாறமறுப்பதையும் --- அதே நிலையில்த்தான் இளமையும் மாறாதுஇறுமாப்புடன் நிற்பதையும் இக்கதை காட்டி நிற்கிறது.

ஒவ்வொருவரும் காணும் காட்சி அவரவர் பிழைகளை அடையாளப்படுத்தியே விடும்.அப்படி ஒரு நிலையைத்தான் ' காட்சிப்பிழை ' தெரிவிக்கிறது.அதில் வரும் ' தெமட்டக்கொட'அங்கிள்கள் இன்னும் எம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் இக்கதையைப் படிக்கட்டும்.ஏன் ... பாலகிருஷ்ணர்களும் படித்தாலும் நல்லதுதானே!
இலங்கையின் துயரம் ---- எவ்வளவு தூரத்துக்குப் போனாலும் எம்மனதை விட்டு அகலேமாட்டாது. கண்ணீரும், கம்பலையும், கலந்த சோகம்தான் பலரது வாழ்வாகி விட்டது தமிழர்வாழ்வில். அந்தச் சோகத்தைச் சொல்லவே முடியாது. என்றாலும் ஒரு துளியை துணிவாக சொல்லிவிடுகிறார் சுதாகர். அதுதான் ' ஒர்கடிதத்தின் விலை'. தமிழ்த்தாயின் வேதனை, சோதனை இக்கட்டான சூழ்நிலை ... யாவற்றையும் இக்கதை மிகவும் திறம்பட எடுத்துச் சொல்கிறது.வாசித்துப் பாருங்கள்! அழாமல் இருக்கவே மாட்டீர்கள்.

கண்டபாவனையில் கொண்டைமுடித்தல், கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழிபொல்லாச் சிறகை விரித்தாடிய நிலை, இதைப்பற்றி நாங்கள் அறிதிருப்போம். இப்படி இருப்பவர்கள் எங்களில் அநேகம் பேர்.விடுப்புப் பார்ப்பதும், மற்றவர் எதைச்செய்தாலும் அதற்கு எதிராகப்போட்டி போடுவதும், பின்பு தேவையில்லாமல் மூக்கு உடைபடுவதும் காணக்கூடியசம்பவங்களே.இதில் தெரியாதவர்கள் சிக்கல்பல்பட்டாலும் அதை வேறுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நெருக்கமான குடும்பங்களே ஏட்டிக்குப் போட்டியாக எண்ணம் கொண்டு செயல்பட நினைப்பதும்அந்த நினைப்பால் சிலவேளை அவமானமும, மனக்குமுறலும், வந்து சேருவதையும் ... நகைச்சுவையோடு தரும் கதைதான்'சேர்ப்பிறைஸ் விசிட்'. கதை முழுவதும் சிரிப்பாய்க் குவிகிறது. இதனைஒரு நகைச்சுவைக் குறும்படமாக எடுத்தாலும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெறும்.

பகுதி 4.

நிர்ப்பந்தம் காரணமாக வெளிநாடுவருபவர்கள் ஒரு வகையினர். வேலையைத் தேடிக்கொண்டு வெளிநாடு வருபவர்கள் மற்றொருவகயினர்.நாட்டின் அசாதாரண நிலையினால் தம்நாட்டை விட்டு வெளிக்கிட்டு வெளிநாடு வந்தவர்கள் தாம் படித்தபடிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தங்களது குடும்பத்தாருடன் படும் சோகவரலாறு சொல்லுந்தரமன்று. அந்தச் சோகவரலாற்றை தனக்கே உரித்தான பாணியில் ஓரளவுஉண்மையும் கற்பனையும் கலந்து சொல்லுவதுதான் ' பறக்காத பறவைகள்'.எந்தவேலை கிடைத்தாலும் அதனை ஏற்றுச்செய்யும் மனோ நிலை வந்தேயாக வேண்டும்என்று இக்கதையைப் படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்.

காலநிலை முற்றிலும் மாறுபட்டது. அதனைச் சமாளித்தே ஆகவேண்டும்.பேப்பர் போடுவது தொடக்கம் பாரம் தூக்குவது வரை எதையும் எப்போதும் செய்வதற்குத்தயாரானால்த்தான் தன்னையும் பார்த்துக் குடும்பத்தையும் பார்க்கமுடியும். இதில்ரோஷம், மானம், பார்க்கவே கூடாது. எனது படிப்பென்ன நானிருந்த நிலை என்ன என்ற எண்ணம் எந்த நேரத்திலும் வந்துவிடவே கூடாது.அப்படி வந்தால் வருமானம்பாடு திண்டாட்டம்தான்.அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தில் அடங்கி ஒடுங்கிப்போகவேண்டியதுதான்.இதுதான் வெளி நாட்டு உண்மை வாழ்க்கை நிலை என்பதைதனக்கே உரித்தான தமிழ்நடையைக் கையாண்டு காட்சிப்படுத்துகின்றார் சுதாகர்.

வேலைதேடும் படலம், வேலைகிடைத்ததும் அதில் வரும் அடுத்தபடலம், அந்தவேலை கூடநிரந்தரமற்றது என்று ஏங்கவைக்கும் பரிதாபப் படலம், இவற்றுக்கிடையே ..... பிள்ளை பற்றியோ, மனைவி பற்றியோ, ஏன் தன்னைப்பற்றியோ எண்ணமுடியாத ஒருசிக்கலான நிலை அத்தனையும் சொல்லிநிற்பதுதான் ' பறக்காதபறவைகள்'. ஆசைமகள்அன்போடு கேட்ட பறவை பற்றி சொல்ல மறந்த-- சொல்லவே முடியாமல் உருவாகிய இக்கட்டான நிலைதான் இந்தக்கதை. பறக்க முடியாப் பறவைகள் ஆகிவிட்டோம் என்றுகுடும்பத்தின் தலைவன் சொல்லும் பொழுது கூடவே நாமும் அந்தக்குடும்பத்துக்குள்நுழைந்துவிடுகிறோம்

வெளிநாட்டில் வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பதும் ஒருவித கனவுதான்.அந்தக்கனவு உண்மையானது அல்ல. இங்கும் பல் உருவங்களில் பிச்சுப் பிடுங்கல் களும்வரத்தான் செய்யும். பெரும்பாலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இந்தச் சச்சரவுகள் ஏற்படுகின்றன. கணவன் வேலைசெய்ய மனைவி வேலை செய்யாது வீட்டில் இருக்கும்பொழுது தேவயற்ற செலவுகள் செய்யக் கணவன் சம்மதியான்.மனைவிக்குத் தேவையானதுஎன நினைப்பது கணவனுக்குத் தேவை அற்ற ஒன்றாக கண்ணில்படும். அங்கே வாக்குவாதம் வரும்.அது சிலவேளை விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சரியம் அல்ல. அப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்த நிலையைத்தான் ' ஒருவகை உறவு ' கதை காட்டுகிறது.

கணவன் மனைவி உறவு இறுக்கமானது.அந்த உறவுகூட பொருளாதாரம் சம்பந்தம் படும்பொழுது எப்படி முறுக்கமாக மாறுகிறது என்பதை அனுபவமாக்கி தரும் கதைதான் ' ஒருவகைஉறவு'.

கணவன் மனைவி முறுகல் முற்றி கடைசியில் குடும்பமே இரண்டுபட்டு நிற்கும் நிலையை சுதாகரின் எழுத்து படமாக்கித்தருகிறது. சிவாஜியும் பத்மினியும் போட்டி போட்டு நடித்த பல நல்லதமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் இருவரும் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்காது பாத்திரமாகவே வாழ்ந்து ( நடிப்பால் ) காட்டியிருப்பார்கள்.அப்படித்தான் இந்தக் கதையின் நாயகியும்நாயகனும் சுதாகர் என்னும் கைதேர்ந்த எழுத்தாளரால் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டி இருக்கும் இக்கதையும் ஒரு முத்துத்தான்.பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சமயத்தில் இப்படி ஆகிவிடுகிறார்கள் என்பதை மிகவும் அற்புதமாகச் சித்திரித்துள்ளார் சுதாகர் அவர்கள்.

இலங்கையும் வெளிநாடும் சங்கமிக்கும் சோகக்கதைதான் ' அசலும் நகலும் ' இது நடந்துமுடிந்த கதியை அல்ல.இப்போதும் இக்கதை ஈழத்தைப் பொறுத்தவரை தொடர்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இருந்தும் .... பல வேளைகளில் எதுவுமே இல்லாதவர்கள் ஆகியும் விடுவார்கள்.ஆனால் வெளிநாட்டில் உள்ள உறவுகளின் நட்புகளும், சுற்றி இருப்போரும் --- சோகத்தைக்கூட சுறு சுறுப்பான கேளிக்கையாக்கியும் விடுவார்கள். அதையே நவநாகரிகம்என்று எடுத்தும் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் எல்லாமே ஒருவித நாடகம்தான். ஆனால் ஊரில்இருப்பவர்களோ பழைய பஞ்சாங்கள் ஆகவே இருந்துவிடுவார்கள். எல்லாமே கானல் நீர்தான் என்பதை' அசலும் நகலும் ' சொல்கிறது. நன்மைக்கோ தின்மைக்கோ ஊருக்கு வரமுடியாத ஒரு சோகமும் ஊரில் உள்ளவர்கள் அங்குள்ள அசாதாரண சூழலில் சிக்குண்டு சாவிலும் கூட --- தனிமைப்படுத்தப்பட்டுத் தத்தளிக்கும் பரிதாபமும் படமாக ஓடுகிறதுதான் ' அசலும் நகலும் ' கதையாகும்.

கிண்டலும் கேலியுமாக ஆரம்பித்து சீரியசாகி நிற்கும் கதைதான் ' கற்றுக் கொள்வதற்கு 'கற்றுக்கொள்வதற்கு -- என்று தலைப்பு வைத்ததுகூட மிக மிகப் பொருந்தம்தான். சிலரை நாங்கள்சாதாரணமாக எடை போட்டுவிடுவோம்.ஆனால் அவர்களோ எங்களின் நினைப்புக்கு அப்பால் செயற்படுபவர்களாக இருப்பார்கள் அதைப் பார்க்கும் பொழுது நம்மையே நாம் நம்பமுடியாத ஒரு நிலைக்குள் வந்து நிற்போம்.அப்படி ஒரு நிலையைத்தான் இக்கதையில் காண்கின்றோம். பின்தங்கியவர்கள் படிப்பறிவற்றவர்கள் , என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களும் சில விஷயங்களில் எம்மைவிடத் தீவிரமானவர்களாக இருந்தும் விடுவார்கள்.அப்பொழுது நாம் நினைப்போம் ... இவர்களிடம் கற்றுக்கொள்வதற்கு .. நிறைய இருக்கிறது ... என்ற உண்மை நிலையாகும்.

கதைக்களமும், கருப்பொருளும், புதிதாக இருப்பதால் இந்தக் கதை ஒரு புதுக்கதைதான். ஏனென்றால் நாங்கள் அனைவரும் நல்லபடி ' கற்றுக் கோள்வதற்கு'.

அக்கா என்பவள் குடும்பத்தின் அம்மாதான்.அருமையான,அன்பான, பாசமான, பரிவான இபுரிந்தஉணர்வுள்ள, அக்கா வாய்த்தால் --அதைவிட மேலான குடும்பம் இருக்கவே முடியாது. அப்படியான ஒருஅக்காவை தேடிக்கொண்டுவந்து விடுகிறார் சுதாகர்.' எதிர்கொள்ளல்' கதையில்த்தான் அந்த அக்காவருகிறார்.அக்காவை பன்மையில் சுட்டுவதற்குக் காரணம் அவர் தாயாக, தந்தையாக, உற்றநல்ல துணையாக வருவதே காரணமாகும்.

பழனி என்றொரு தமிழ்ப் படம் வந்தது. அதைப்பார்த்தால் அழதாவர்கள் இருக்கவே முடியாது. அதே போல் துலாபாரம் என்றொரு படமும் வந்தது மனத்தை அழவைத்தபடம்.

அதே போன்ற ஒரு உணர்வுதான் 'எதிர்கொள்ளல்' கதையை வாசித்ததும் வரும். பாசமிக்க அக்காவும் -- பரிதவிக்கும் தம்பியும்-- கதிகலங்கி நிற்கும் கணவனும்... எம்முடனே வந்துவிடுகிறார்கள்.தம்பியாலும் எதிர் கொள்ள முடியவில்லை. அக்காவின் கணவனாலும் எதிர் கொள்ள முடியவில்லை. படிக்கும் எங்களாலு அந்தச் சோகத்தை எதிர்கொள்ளும் தைரியமும் வரவே இல்லை.

நாட்டுச்சூழல் வாட்டுவதும், துன்பத்தைக் கூட கிட்ட நின்று பார்க்க முடியாத வெளி நாட்டுவாழ்க்கையின் பரிதாபமும், 'எதிர்கொள்ளல்' கதையிலே சங்கமிக்கிறது.அதே நேரம் அக்கறையான செய்தி ஒன்றையும் இக்கதை வாயிலாக எங்களுக் கெல்லாம் சொல்லி நிற்கிறார் சுதாகர்.தம்பியும் அழுகிறான். அத்தானும் கலங்குகிறார். வாசிக்கும் நாம் எம்மாத்திரம். நாங்களும் கண்கலங்குகின்றேம்.அப்படி ஒரு உருக்கதைக் காட்டுவதுதான் ' எதிர்கொள்ளல்' கதையின் சிறப்பாகும்.

இந்தக் கதைத் தொகுப்பில் நிறைவாக இருக்கும் கதைதான் ' புதியவருகை'. வெளி நாட்டில் நடக்கும் பிரசவம் பற்றி இவ்வளவு சுவையாகவும் விஸ்த்தாரமாகவும் எப்படித்தான் சுதாகரால் சொல்ல முடிந்ததோ என நினைக்கையில் பிரமிப்பே ஏற்படுகிறது.ஒரு மருத்துவரோ அல்லது ம்கப்பேற்றுத் தாதியோ சொல்லுவது போல இந்தக் கதையின் போக்கு செல்கிறது. ஒரு பிரசவத்தைப் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது.குழந்தை பற்றியும், பிரசவம் பற்றியும், உள்ள கருத்து நிலையும் சூசமாகச் சொல்லப் படுகிறது. கதையோடு நாங்களும் போகிறோம். பிள்ளைகள்
பற்றியும், குடும்பம் பற்றியும், ஒப்பீடும் நடத்தப்படுகிறது.

ஒரு புதுக்கரு இக்கதையில் உருவாகி நிற்கிறது. ஏனென்றால் இது பிரசவம் பற்றிய நோக்குத்தானே!வெள்ளைக்கார மாது ஒரு நல்ல பாத்திரம். அந்தப்பாத்திரம் கதையோடு ஒடிவரும்விதம் சுதாகரின் நகாசுவேலை என்றுதான் சொல்ல வேண்டும்.

வெள்ளைக்கார மாது இந்தக்கதையில் ஏன் என்று எண்ணும் பொழுது ... அந்த மாதுதான்கதையை நிறைவு செய்யும் கைங்கரியத்தில் பங்கேற்கிறார் என்பதும் புலப்படுகிறது.

புதுக்கரு.புதுக்கதை.புதிய முடிவு. இதுதான் ' புதிய வருகை'பனிரெண்டு முத்துக்களைக் கொண்டு கோர்க்கப்பட்ட அழகிய -- இலக்கியம் என்னும்ஆரம்தான் சுதாகரின் ' சென்றிடுவீர் எட்டுத்திக்கும் ' என்ற கதைத் தொகுதியாகும். பனிரெண்டும் பலவற்றைசொல்லி நிற்கின்றன.

இலக்கியம் படைப்பது என்பது ஒரு பிரசவம்தான்.கருவைச் சுமப்பதும்,அதனை நல்ல முறையில்பெற்றெடுப்பதும் சாதாரண காரியமல்ல. அப்படியொரு பிரசவம்தான் இக்கதைத் தொகுதியும்.கருவைச்சுமந்து அதை நல்லமுறையில் காத்து அழகிய பிள்ளையாக அனைவருக்கும் விரும்பக் கூடிய பிள்ளையாகத் தந்த சுதாகரை மனமாரப் பாராட்டியே ஆகவேண்டும்.

அவசரம், அவசரம், எதற்குமே நேரம் போதவில்லை என்ற நிலையில் உள்ள சூழலில்பொறுமையாக பொருள்பொதிந்த கதைகளை எப்படித்தான் இவரால் எழுதமுடிந்ததோ என்பதேஆச்சரியம்தான்.என்றாலும் கிடைத்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல கதைகளைதந்த எழுத்து மன்னன் சுதாகரை வாழ்த்துகிறேன்.அவர் இன்னும் இது போன்ற பல நல்ல படைப்புகளைப் படைக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மீண்டும் எனது மனம்உவந்த வாழ்த்துக்களைக் கூறி நிறைவு செய்கின்றேன்