நூல் :
காந்தி
ஓர் இதழியலாளர் !
நூல் ஆசிரியர்:
மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
இனிய
நண்பர் மூத்த பத்திரைகையாளர் ப.திருமலை அவர்கள் எப்போதும் இயங்கிக்
கொண்டே இருப்பவர். அவருக்கு உடல்நலம் ஒத்துழைக்காவிட்டாலும் அதையும்
மீறி ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைத்து வருபவர். காந்தி
அருங்காட்சியகத்தில் ஆற்றிய அரிய உரையை நூலாக்கி உள்ளார்.
‘காந்தி ஓர் இதழியலாளர்’ தலைப்பு, புதிய தலைப்பு, புதிய சிந்தனை. காந்தி
ஓர் இதழியலாளர் என்று ஒரு வரியில் படித்து இருக்கிறோம். ஒரு நூலாக
இப்போது தான் பார்க்கிறோம். ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலாசிரியர்
அமரர் அ.இராமசாமி அவர்கள் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு இது.
முனைவர் டி.ஆர்.தினகரன், முனைவர் மா.பா.குருசாமி இருவரும் காந்தி
அருங்காட்சியகத்தில் தலைவர், செயலராக இருந்து அறப்பணியாற்றி
வருகிறார்கள். அவர்களின் அறிமுகவுரை மிக நன்று.
நூலின் தொடக்கத்திலேயே ஊடகத்தின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும்
படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர் ப. திருமலை அவர்கள்.
‘இந்திய விடுதலை’ என்ற ஒன்று மட்டுமே அவர்களது இலக்காக இருந்தது. ஆனால்
இன்றைய பெரும்பாலான ஊடகங்களின் இலக்கு என்பது முழுக்க முழுக்க மக்களின்
நலன் சார்ந்ததாக உள்ளது எனக் கூறுவதற்க்கில்லை. மூத்த பத்திரிகையாளர்
என்பதால் மென்மையாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய ஊடகங்களின் இலக்கு
பணம் ஈட்டுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கின்றது. பரபரப்பிற்காக போட்டிப்
போட்டு நச்சுக் கருத்தைப் பரப்புகின்றனர்.
“சுதந்திர போராட்ட வீரரான காந்திஜி முந்தியவரா? ஊடகப் போராளியான
காந்திஜி முந்தியவரா? என்ற கேள்வி எழுமாயின், பின்னவர் முன்னவருக்குக்
குறைந்தது 20 ஆண்டுகள் முந்தியவர் எனலாம்”.
நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள வைர வரிகளின் படி ஆராய்ந்து பார்த்தால்,
காந்தியடிகளை விடுதலைப் போராட்ட வீரராக, அகிம்சைவாதியாக உருவாக்கியதே
இதழாளர் என்ற அனுபவன் தான் என்ற முடிவுக்கு வர முடியும்.
காந்தியடிகள் சிறந்த இதழியலாளர் என்பதை இதழாசிரியரான சலபதி ராஜீவின்
விளக்கத்துடன் குறிப்பிட்டு நிறுவியது சிறப்பு.
காந்தியடிகளின் பொறுப்பில் இருந்த இதழ்களின் பட்டியல் மிகத்துல்லியமாக
ஆண்டுகளுடன் குறிப்பிட்டுள்ளார். காந்தியடிகள் பற்றி எல்லோரும்
சத்தியசோதனை படித்து விட்டு மேலோட்டமாகவே பேசுவார்கள். ஆனால்
நூலாசிரியர் மூத்த பத்திரைகையாளர், காந்தியடிகள் இதழியலாளர் என்பதற்கு
ஆதாரமான அனைத்து நூல்களையும் படித்து ஆராய்ந்து குறிப்பெடுத்து
உரையாற்றி அதனை மிகச் சிறப்பாக நூலாக்கி உள்ளார், பாராட்டுக்கள்.
இந்தியன் ஒப்பீனியன், யங் இந்தியா, ஹரிஜன், ஹரிஜன் பந்து, ஹரிஜன் சேவக்,
நவஜீவன் இப்படி பல்வேறு இதழ்களுக்கு காந்தியடிகள் பொறுப்பாசிரியராக
இருந்து உள்ளார். ஆங்கிலம், இந்தி, குசராத்தி என மூன்று மொழி
இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்து கட்டுரை, தலையங்கம் எழுதி,
படித்தவர்களிடையே விடுதலை தாகத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை
நூலின் மூலம் அறிய முடிந்தது.
நூலாசிரியர், மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை போன்ற அறம் சார்ந்த
ஊடகவியலாளர்கள் சிலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
110-ல் 9 பேர் இந்தியாவில் படுகொலை செய்யப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என்று அறிவித்துள்ளார்.
பத்திரிகையில் செய்தி படித்தேன் .
காந்தியடிகள் இதழியலாளராக இருந்து அதில் எழுதிய கருத்துக்கள் நூலில்
உள்ளன. குறிப்பாக மத ஒற்றுமைக்கு, மனித நேயத்திற்கு உரக்கக் குரல்
தந்தது மட்டுமன்றி எழுத்திலும் வடித்துள்ளார்.
“இந்தியர்கள் ஒன்றாக இருக்கும்படி வலியுறுத்தினார். நான் இந்து அல்லது
முஸ்லீம், கிறித்தவன் அல்லது பார்சி என்ற எல்லா மதத்துவேசமும்
மறக்கப்பட வேண்டும். வங்காளி, மதராசி, குசராத்தி, பஞ்சாபி என்ற வட்டார
வித்தியாசங்கள் மறைய வேண்டும். மனிதர்களில் பிராமணன், சத்திரியன்,
வைசியன் மற்றும் சூத்திரன் என்று பிரிக்கும் உயர்ந்த, தாழ்ந்த எண்ணங்கள்
கைவிடப்பட வேண்டும். ஒற்றுமையின்றி இருந்தால் நாம் எப்படி போராட
முடியும்?”
நூலில் இதனைப் படித்த போது, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
அவர்களும் இறுதி மூச்சு உள்ளவரை பேசினார், பேசியதோடு நிற்கவில்லை,
குடியரசு, விடுதலை உள்ளிட்ட இதழ்களில் இதழியலாளராக இருந்து தொடர்ந்து
எழுதி வந்தார். அவை என் நினைவிற்கு வந்தன.சென்னையில் பெய்த மழையால்
வந்த வெள்ளத்தின் துன்பத்தை மதங்களை கடந்து, சாதிகளைக் கடந்து மனிதம்
உதவியது .மனிதநேயம் வென்றது. . காரணம் இது பெரியார் பிறந்த மண் .பெரியார்
பேசி எழுதி பக்குவப்படுத்திய மண்
நூலாசிரியர், மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களிடம் ஒரு
வேண்டுகோள். பெரியார் ஓர் இதழியலாளர் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதிட
வேண்டும். அதற்கும் நான் விமர்சனம் எழுத வேண்டும் என்பது என் ஆசை.
இந்தியன் ஒப்பினியன் இதழ் ஆசிரியராக இருந்த காந்தியடிகள் ஆற்றிய பணியினை
மிகச் சிறப்பாகவும், விரிவாகவும் எழுது உள்ளார். காந்தியடிகள் பற்றி
அறிந்திராத பல புதிய தகவல்கள் நூலில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
காந்தியடிகள் தனது 21ஆவது வயதிலேயே
சைவன் என்ற வாராந்திர ஆங்கிலப் பத்திரிகையில் புலால் உண்ணாமை, இந்தியா
உணவு பழக்கவழக்கங்கள், மதத் திருவிழாக்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ்
கட்டுரைகள் எழுதியுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது.
காந்தியடிகள் டால்ஸ்டாயை வாசித்ததன் காரணமாகவே அகிம்சை, ஈடுபாடு வந்தது.
அகிம்சைக் கருத்தின் ஆணிவேர் திருக்குறள் என்பதை காந்தியடிகளுக்கு
அறிமுகம் செய்து வைத்தவர் டால்சுடாய். நான் அடிக்கடி குறிப்பிடுவது
உண்டு. காந்தியடிகளின் குரு டால்சுடாய். டால்சுடாயின் குரு திருவள்ளுவர்
என்று. காந்தியடிகள் ஓர் இதழியலாளராகக் தனி முத்திரைப் பதித்திடக்
காரணமும் திருக்குறள் என்றால் மிகையன்று.
தாகூரின் கடுமையான விமர்சனத்திற்கும், காந்தியடிகள் மிக மென்மையாக
எழுதிய வரிகள் இதழியலாளர் என்ற பக்குவத்தை பாங்காக உணர்த்தி உள்ளார்
நூலாசிரியர்.
“மகாகவியின் கண்ட விமர்சனம் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்றாலும் அது
அவரது உரிமை. அதனை நான் எதிர்ப்பதற்கில்லை. ஒரே மாதிரியான கைராட்டையின்
சுழற்சியானது, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல”.
இப்படி பல அரிய தகவல்களை அறிந்திட உதவிடும் உன்னத நூல். அன்று தலைவர்கள்,
கருத்து வேறுபாடுகளை எவ்வளவு மென்மையாக ,மேன்மையாக எழுதி உள்ளார்கள்.
ஆனால் இன்று தமிழகத்தின் நிலை, எண்ணிப்பார்க்க வெட்கமாக உள்ளது.
படங்களைக் கிழிப்பதும், எரிப்பதும், போராடுவதும் என வேறு எந்த
மாநிலங்களிலும் நிகழாத தலைகுனிவு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. வேதனை,
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்த மாமனிதர் காந்தியடிகளின் புதிய கோணம் பற்றி
எழுதி அவரது புகழுக்கு மகுடம் சூட்டி உள்ளார்.
இனிய நண்பர் மூத்த பத்திரைகையாளர் ப.திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்
தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்.
வெளியீடு : காந்தி
நினைவு அருங்காட்சியகம், மதுரை.
விலை : ரூ. 50
பக்கங்கள் : 80
|