நூல் :  திமிரும் நீயும் ஒரே சாயல்
நூல் ஆசிரியர்:
கவிதாயினி ஷர்மிவீரா
நூல் அறிமுகம்:   
கவிஞர் இரா.இரவி

ந்த நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் முகநூலில் பதிந்தவுடன் பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். 2015 முகநூல் பதிவில் முக்கிய இடம் பிடித்தது. காரணம் நூலின் தலைப்பு மிக வித்தியாசமாக இருந்தது. நூல் ஆசிரியர் பெயர் ஷர்மிவீராவும் வித்தியாசமாக உள்ளது. இவர் நூலை அன்புக் கணவருக்கு காணிக்கையாக்கி உள்ளார். அவரது மொழியிலேயே காண்க. "என் முதல் காதலாய் என்னில் பாதியாய் என்னும் முழுவதுமாய கரைந்த என் அன்புக்கணவருக்கு இக்கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன். நன்றி!, நன்றி!, நன்றி!!!"

சங்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்தததாக ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றுள் அவ்வை ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நிற்கிறாள். தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், பட்டிமன்றங்களில் குறிப்பிடுவது போல, “நமது அவ்வைப் பாட்டி கடவுச்சீட்டு இன்றி, விசா இன்றி அமெரிக்கா சென்று விட்டாள்” என்பார்கள். ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்ற வாசகம் அமெரிக்காவில் வைத்துள்ளனர்.

இன்றைய கணினி யுகத்தில், ஆண்கள் அளவிற்கு பெண் கவிஞர்கள் எண்ணிக்கை இல்லாவிடினும், நூலாசிரியர் கவிதாயினி ஷர்மிவீரா போன்ற பெண்பாற் புலவர்கள் வீரியமாக, வித்தியாசமாக பெண்ணியம் தொடர்பாக காதல் பற்றியும் எழுதி வருகிறார்கள். அவர்களை வரவேற்போம். மதுரையில் வாழ்ந்த போதும் கவிஞர் ஆத்மார்த்தியுடன் எனக்கு நட்பு இல்லாமல் இருந்தது. சென்னையிலிருந்து முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்படுத்தினார்கள். கவிஞர் ஆத்மார்த்தி அவர்களின் அணிந்துரை அழகுரை.

சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தின் போது மிகத்துடிப்புடன் செயல்பட்டு சேவைகள் செய்த பாவை மலர் ஆசிரியர், பாரதி கண்ட புதுமைப்பெண் முகநூல் தோழி முனைவர் ம. வான்மதி அவர்களின் அணிந்துரை தனித்தன்மையாக இருந்தது.

நூலாசிரியர் கவிதாயினி என்னுரையில் பெற்றோர்கள், தமிழ் ஆசிரியை, நண்பர்கள், புகுந்த வீடு என்று அனைவரையும் மறக்காமல் நன்றி கூறியது நன்று.

பெரும்பாலான கவிஞர்களுக்கு முதல் நூல் காதல் கவிதை நூலாகவே அமையும். இவருக்கும் அப்படியே. இனிவரும் காலங்களில் சமுதாய சீர்திருத்தக் கவிதைகளும் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை முதலிலேயே வைத்து விடுகின்றேன்.

நேற்றைய பொழுதை எண்ணி
இன்றைய நிஜத்தை
இழந்து விடாதே!

வைர வரிகள் எனலாம். இந்த நொடியை, இந்த நிமிடத்தை இனிமையாக வாழ் என்ற ஜென் தத்துவம் பொல உள்ளது கவிதை. பாராட்டுக்கள்.

காதல், ஆசை, பாசம்
மூன்றுக்கும் அர்த்தமாய் வந்த
உன்னை எப்படி மறவேன்!


காதல் கவிதையின் தனிச்சிறப்பு என்னவென்றால், படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்வித்து விடும். இந்த நூலில் பல கவிதைகள் அவரவர் நினைவுகளை அசை போட வைக்கின்றது.

வண்ணத்துப்பூச்சியை ரசிப்பது தனி சுகம். அது நம் தோளில் வந்து அமர்ந்தால் சுகமோ சுகம். அந்த அனுபவத்தையும், காதலையும் நினைவூட்டும் விதமான வரிகள் இதோ!

என் மேல் அமர்ந்த
வண்ணத்துப் பூச்சி போல
வருடுகிறாய் மனதை.
வர்ணங்களால்
வாழ்க்கையில்
அழகாய் வந்தமர்ந்தாய்
யாரும்
எதிர்பாராத தருணத்தில்!


கவிதைகள் என்ன செய்யும்? எப்படி இருக்கும்? என்பதை அவரது வரியிலேயே காண்க.

சில கவிதைகள்
நெஞ்சை அள்ளும்
சில கவிதைகள்
நெஞ்சைக் கிள்ளும்
எதுவாயினும்
உனக்கே சமர்ப்பணமாய்
என் காதல்!


படைப்பாளியின் ஆற்றல் என்பது படைக்கும் போது வித்தியாசமாக படைக்க வேண்டும். கவிதாயினி ஆண்பாலாக மாறியும் கவிதை வடித்துள்ளார், பாருங்கள்.

நீ செய்யும்
சிறு குறும்புகளையும் ரசித்தேன்
மனமுவந்து
சிரித்தேன்.
என் பின்னால் பல பேர்
என்னப் பார்த்து சிரித்தனர்
நான்
பைத்திக்காரன் என்று!!!


தனியாக யாருமில்லாத நேரத்திலும் நினைவுகளின் காரணமாக சிரிக்கு பழக்கம் காதலர்களுக்கு உண்டு. இருபாலருக்குமே உண்டு. காதல் நோய் ஆட்கொண்டால் சிரிப்பு தானே வந்து விடும். தானாக சிரிப்பதைப் பார்த்த மற்றவர்களோ, பைத்தியமோ என்று எண்ணுவது இயல்பு. அதனைக் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

மிக நெகிழ்ச்சியான கவிதைகளும் உள்ளன. காதல் கவிதைகளில் காமம் வரும். ஆனால் நூல் இழை போல இருக்க வேண்டும். அதிகமானால் கொச்சையாகி விடும். ஆனால் நூலாசிரியர் மிக மென்மையாகவும் மேன்மையாகவும் காதலை எழுதி உள்ளார்.

நீ என்னை
உணர்ந்து கொண்ட போது
நாம் நம்மை
ஒரு போர்வைக்குள்
பகிர்ந்து கொண்டோம்.
நான் வேண்டுவதெல்லாம்
என் மரண நேரத்திலும்
உன் மடியின் ஓரமாய் ஓரிடம் !


பொதுவாக ஆண் கவிஞர்கள் காதலியின் அழகை, மானே! தேனே! என்று வர்ணிப்பது இயல்பு. நூலாசிரியர் அவரை பெண்ணழகு பற்றி வித்தியாசமாக எழுதி உள்ளார்.

தமிழ்ப்பெண்ணின் அழகு!
என்
தாயகத்தை உணர்த்தும்
பெண்ணின் அழகு
என் தமிழ்ப் பெண்களின்
வர்ணிக்கவியலா அழகு
கார்கூந்தலின்
அலைவரிசை
நெற்றியின் நடுவே
வகிடிடப்பட்ட அழகு!
இரு புருவத்தின் மத்தியில்
செதுக்கப்பட்ட நிலவாய்
அவளது குங்குமம்!
பனித்துளிகள் வந்து
ஓய்வெடுக்கும் இடமாய்
அவளது இதழ்கள்!
நானிலம் அனைத்தும்
அடங்கும் இடமாய்
அவளது இடை!


நூலின் பாதிப்பக்கம் தான் வந்துள்ளேன். மீதியை மேற்கோள் காட்ட இடமில்லை. விமர்சனத்தில் முழுக் கவிதையையும் எழுதுவது முறையன்று என்பதால் மேற்கோளை இத்துடன் முடிக்கின்றேன். மீதியை வெள்ளித்திரையில் காண்க என்பது போல நூல் வாங்கிக் காண்க. இனிய நண்பர் வாசகன் பதிப்பகம் ஏகலைவன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார், பாராட்டுக்கள். படங்கள் அச்சுக்கோர்ப்பு, அட்டைப்பட வடிவமைப்பு யாவும் மிக நன்று!.


 


வாசகன் பதிப்பகம், 167, AVR வளாகம்,
அரசு கலைக்கல்லூரி எதிரில்,
சேலம்
636 007. பக்கங்கள் : 96, விலை : ரூ. 75