நூல் :
சிறகு தரித்த
சிலுவைகள்
(கவிதைத்
தொகுதி)
நூல் ஆசிரியர்:
புலவூரான் ரிஷி
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
இலங்கையைப்
பொருத்தளவில் கவிதைகளுக்கான பங்களிப்பு கணிசமான முறையில் அதிகரித்து
வருவதை அவதானிக்க முடிகின்றது. இளங்கவிஞர்கள் மத்தியில் புதிய
சிந்தனைகளுடனும், வீச்சுடனும் குறிப்பிடத்தக்க சிலர் தோன்றுகின்றார்கள்.
புதியவர்களின் வருகை இலக்கியத்துக்கு அணி சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.
இதில் குறிப்பிடத்தக்கவர்களே இலக்கிய உலகில் தொடர்ந்தும் காத்திரமான
பணிகளைப் புரிந்து நிலைத்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அந்த வகையில் புலவூரான் ரிஷி இளங் கவிஞர்களுள் குறிப்பிட்டு
சொல்லக்கூடியவர். சிறகு தரித்த சிலுவைகள் என்ற அவரது கன்னிக் கவிதைத்
தொகுதி செந்தணல் வெளியீட்டகத்தால் 120
பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது.
எழுத்தாளர் மைதிலி தயாபரன் அவர்கள் இந்த நூலுக்கு வழங்கிய அணிந்துரையில்
கீழ்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
கவிதைகள் இதுதான் என்று ஒரு வரையறையை யாருமே செய்துவிடாது இருப்பதால்
யாரும் அதைக் கையாண்டு உருவாக்க முடியும் என்ற எண்ணத்தை இன்றைய
இளைஞர்கள் கொண்டுள்ளனர். இதனால் இலக்கியத்திற்குள் நுழைவதற்கு ஒரு
திறவுகோலாகவே கவிதை என்ற வடிவத்தைப் பாவிக்கின்றனர். எமது தலைமுறையினர்
அடுத்தடுத்து சந்தித்த பொருளாதார, அரசியல், சமுதாய நெருக்கடிகள் இளம்
சமுதாயத்தினரை வெகுண்டெழச் செய்து தங்களது தாக்கங்களை உணர்வுகளை
வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகின்றன. அவற்றால்
உந்தபப்பட்ட எமது இளந் தலைமுறையினர் தங்களுடைய ஆதங்கங்களை
வெளிப்படுத்துவதற்கு முக்கியமாகக் கவிதை வடிவத்தைப் பாவிக்க
முனைகின்றனர்.
இனி புலவூரான் ரிஷியின் சிறகு தரித்த சிலுவைகள் கவிதைத் தொகுதியிலுள்ள
37 கவிதைகளில் சில கவிதைகளைப் பார்ப்போம்.
கனவு மெய்ப்பட வேண்டும் (பக்கம் 15)
என்ற கவிதை உலகம் எப்படி மாறுவதை கவிஞரின் மனம் விரும்புகிறது என்பதை
எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றுமை இதில் வலியுறுத்தப்படுகின்றது. ஒற்றுமை
என்ற ஒன்று இல்லாததால்தான் இன்று உலகத்தில் பல்வேறு பிரச்சினைகள்
தோன்றியிருக்கின்றன.
மசூதியும் கோயிலும்
கூடிக்குலவுகின்றது
பௌத்தம் கிறிஸ்துவை
பற்றுகின்றது
.......
சீதனக் கொடுமை இன்றி
மங்கைக்கெல்லாம் மணமாயிற்று
காதலர்களின் தற்கொலை
அறவே இல்லை
அணுவுலைகளின் கொதிப்பு
அழிந்தே போயிற்று
பணத்துக்குள் பாசம் (பக்கம் 33)
என்ற கவிதை வெளிநாட்டில் வசிப்பவர்களின் இதயத் தவிப்பை, மனக் குமறலை,
ஆதங்கங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. தாய் தந்தையை,
சொந்த நாட்டை, மனைவி மக்களை விட்டுப் பிரிந்து பாலைவன பூமியிலும்,
குளிர் வாட்டும் தேசங்களிலும் வசித்து தம் குடும்பத்தின் நினைவுகளுடன்
காலத்தைக் கடத்தும் நம்மில் பலர் தொலைபேசியினூடாகத் தான் தமது வாழ்வைக்
கொண்டு நடத்துகின்றனர். குறுஞ்செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும்தான்
அன்பை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஊடகங்களாக அவர்களுக்கு அமைந்துவிட்டன.
சாம பொழுதொன்றில்
அலைகளை கிழித்துக்கொண்டு
தொலைபேசித் திரையில்
வந்து விழுகிறது
குறுஞ்செய்தி
.....
கண்ணீர் விழுந்த
திரையில் கலங்கல்
காட்சிக்குள்
இன்னும் சிலதும்
சொப்பனம் (பக்கம் 86) கவிதை காதலை
சுமந்திருக்கின்றது. காதல் வயப்பட்ட ஒரு கவிஞனின் நினைவுகள்
எவ்வாறிருக்கும் என்பதை இக்கவிதை நிதர்சனப்படுத்துகின்றது.
வாடைக் காற்று
வண்ணம் தெளிக்க
உன் முகம் பார்த்து
வெட்கிப் போன செவ்வானம்
உன் வாசத்தை முகர்வதற்காய்
ஈர மண்ணில் ரகசியமாய்
புதைந்து போன நண்டுகள்
பசுமையின் மீட்டல் (பக்கம் 110)
என்ற கவிதை கடந்த கால ஞாபகங்களை மீட்டிச் செல்கின்றது. குழந்தைப்
பருவத்தில் ஒவ்வொருவக்கும் ஒவ்வொரு விதமான சுவாரஷ்யமான சம்பவங்கள்
நிகழ்ந்திருக்கும். இன்றுகளில் அவற்றை நினைத்துப் பார்த்தால் பசுமையான
நினைவுகளில் நெஞ்சம் நிம்மதியடைகின்றது. தற்காலத்தில் குழந்தைகளின்
குழந்தைப் பருவத்தை முழுவதுமாக சாப்பிட்டிருக்கும் தொலைக்காட்சி, கணிணி,
தொலைபேசிகளிலிருந்து சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டும். குழந்தைப்
பருவத்தின் சௌந்தரியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
சிரட்டையும் ரின்களும்
அடுக்கிய புளிச்சல் விளையாட்டு
.....
காட்டு மரவள்ளியின் செத்த காயில்
ஈக்கு கொழுவி பள்ளி மேசையில்
சுத்தி விட்ட பம்பரம்
அப்பாவின் தொப்பையில்
சறுக்கிய மகிழ்வு
அம்மாவின் சேலைத் தவிப்பை
சப்பிக்கொண்டே படுத்த இராக்கள்
யதார்த்தமான படைப்புக்கள் வாசகர் மனதில் நிலைத்து விடுகின்றன.
கற்பனையான படைப்புக்கள் வாசகனை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. கவிஞனின்
சொல்லாடலில்தான் கவிதையின் உயிர் தங்கியிருக்கின்றது. புலவூரான் ரிஷி
இன்னுமின்னும் வாசிப்பில் முனைப்புக் காட்டி இன்னும் பல காத்திரமான
படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்.
நூல் - சிறகு தரித்த சிலுவைகள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - புலவூரான் ரிஷி
வெளியீடு – செந்தணல் வெளியீட்டகம்
விலை - 250 ரூபாய்
|