நூல் :
இவன்தான் மனிதன்
(சிறுகதைத்
தொகுதி)
நூல் ஆசிரியர் :
சூசை எட்வேட்
நூல் அறிமுகம்:
வெலிகம
ரிம்ஸா முஹம்மத்
சூசை
எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள்
மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது
படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத்
திறமையை வெளிக் காட்டுகின்றது.
கருத்துக் கலசம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம் மிக அருமையானது.
திருக்குறள் இரண்டு அடிகளில் எழுதப்பட்டிருப்பது போல அன்றாட வாழ்வில்
நடக்கும் விடயங்களை மையப்படுத்து இரு அடிகளில் அவர் கூறும்
நற்சிந்தனைகள் மிகப் பிரபலமானவை.
அஸ்ரா பிரிண்டர்ஸ் மூலம் 216
பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவன்தான் மனிதன் என்ற அவரது சிறுகதைத்
தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன.
மகுடத் தலைப்பான முதல் கதை (பக்கம் 11)
அருமை நாயகம் என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனித்துவ
வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போன்ற நல்ல
குணங்களை உடைய மனிதர் அவர். நேரத்துக்கு வேலை என்ற கட்டுப்பாடான
மனிதர். கண் விழித்தவுடனேயே சாமி படத்தருகில் போய் நின்று ஆண்டவா
எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு என்று பிரார்த்திப்பார். நல்லறிவு
கிடைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பது அவரது
நம்பிக்கை. அப்புறமாக அருகில் இருக்கும் சிறிய அறைக்குப் போய் வயதான
தன் தாய் தந்தையை முதல் காட்சியாக கண்டால்தான் அன்றைய பொழுது இனியதாக
அமையும் என்பது அவரது மனிதநேயத்தை குறித்து நிற்கின்றது. இன்று தாய்
தகப்பனைப் பாரமாகக் கருதும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறிருக்க தாய் தந்தை மீது அதிகளவு பரிவும் பாசமும் காட்டும் அருமை
நாயகத்தின் செயல் சந்தோசமாகயிருக்கின்றது.
ஐந்தரை மணிக்கு தனது பிள்ளைகள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கு பாடம்
சொல்லிக் கொடுக்கின்ற அவர், வீட்டு வேலைகளைச் செய்வதிலும் அதிகமாக
மனைவிக்கு ஒத்தாசை புரிவார். அதுபோல மாதச் சஞ்சிகைகளுக்கு சந்தா
செலுத்தி அவற்றை வாசிக்கும் அவரின் பழக்கத்துக்கு, மனைவியிடமிருந்து
எந்த ஆதரவும் இருக்கவில்லை. இது எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது
அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சின்ன வயது யுவதி அவருடன் தனியாகப்
பேச வேண்டும் என்றும், அவருக்கு மாத்திரமே தன் பிறந்த நாள் விருந்து
தருவதாகவும் கூறி ஒரு பார்சலை கொடுக்கின்றாள். ஆனால் அவர் அந்த
கடிதத்தை கிழித்து வெள்ளைப் பூக்களை சமாதியின் மேல் வைத்தபோல அவளிடம்
கொடுக்கின்றார். தீய எண்ணங்களுக்கு அடிமையாகாத மனிதரான அருமை
நாயகத்தைப் போல் ஒரு கணவர் அமையும் பெண்கள் பாக்கியம் செய்தவர்கள்
என்று நினைக்கத் தோன்றுகிறது.
எது மனித சாதி (பக்கம் 42) என்ற சிறுகதையில் சாதி வெறி தத்துவார்த்தமாக
முன்வைக்கப்படுகின்றது. கண்மணி - கந்தசாமி தம்பதியர் வசிக்கும் அந்தப்
பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகின்றது. குறிப்பிட்ட
தூரத்துக்கு சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டும் என்ற நிலை
கண்மணிக்கு.
அங்கிருந்த வெள்ளாம் பகுதியில் வசிக்கும் பசுபதியின் வீட்டில் கிணறு
இருக்கின்றது. அதில் தூய நீர். அதிலிருந்து குடத்துக்கு நீர் நிரப்பி
வர கண்மணி சென்றிருந்த சமயம் பசுபதிக்கு புத்தி தடுமாறுகின்றது.
கண்மணியை வளைத்துப் போடும் நோக்கில் அவரே கிணற்றிலிருந்து நீரை
வார்த்துக் கொடுக்கின்றார். வலிய குரக்கன் வேண்டுமா என்கிறார். கண்மணி
தன்னிடம் காசு இல்லை என்றபோதும் பிறகு தருமாறு சொல்லிவிட்டு குரக்கனை
உரப்பையில் போடுவதற்கு உதவி செய்கின்றார். கண்மணி இரு கையையும் மேல்
உயர்த்தி தாங்கிப் பிடிக்க முயன்றபோது அவர் கண்மணியைத் தொடுகின்றார்.
அதிர்ச்சியடைந்த கண்மணி அவரைத் தள்ளிவிட்டு உரப்பையையும் வீசிவிட்டுச்
செல்கின்றாள்.
கந்தசாமிக்கும் கண்மணிக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. காரணம்
கண்மணி வீட்டில் ஒரு விசேடம் நடக்கும்போது வெள்ளாம் பகுதியிலிருந்து
வெகு நேரம் கடந்து ஆட்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு சிற்றுண்டிகள்,
பலகாரங்கள், தேநீர் என்பவை வழங்கப்பட்டும் அவர்கள் அவற்றை மறுத்து,
கடையிலிருந்து சோடா வாங்கி வரச் சொல்கின்றார்கள். சோடா கம்பனியில் வேலை
செய்பவர்கள் என்ன சாதி என்று யாருக்குத் தெரியும்? பனங்கட்டி வேண்டும்
போது பனங்கட்டி தயாரிப்பவர் யார் என்று புரியாமலா இருக்கும்? என்று
கதாசிரியர் கேட்டு நிற்கும் கேள்வி நியாயமானது. அது மாத்திரமன்றி
கந்தசாமிக்கு இன்னொரு கசப்பான சம்பவமும் நடக்கிறது. முருகேசு என்பவரின்
தலைமயிர் வழிப்பதற்காக கந்தசாமி, அவர் வீட்டுக்குச் செல்கின்றார். அவர்
மலசல கூடத்துக்கு அருகாமையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து
கொள்கின்றார். கந்தசாமி உயரமானவன் என்பதால் அவனுக்கு குனிந்து குனிந்து
வேலை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம்
முருகேசர் எண்ணிப் பார்க்கவில்லை. திடீரென வான மண்டலம் அதிர்ந்தது.
கூக்குரல்கள் கேட்டன. முருகேசர் ஓடிப்போய் பதுங்குக் குழிக்குள்
பதுங்கிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தவரும் பதுங்குக்
குழிக்குள் தஞ்சம் புகுகின்றனர். ஆனால் ஒருவர் கூட கந்தசாமியைக்
கூப்பிடவில்லை. இதிலிருந்து ஒரு ஆபத்தில் கூட சாதியத்தைத் தான்
பார்க்கின்றனரே தவிர மனிதத்தை அல்ல உன்பது புலனாகின்றது.
தாழ்வு மனச்சிக்கலால்... (பக்கம் 82) என்ற கதை கணவன் மனைவிக்கிடையில்
ஏற்படும் சிறு சிறு பிணக்குகள் பற்றி பேசியிருக்கின்றது.
சத்தியமூர்த்தி ஒரு முறை கமலா என்பவளின் கடைக்குப் போய் நீண்ட நேரம்
அவளுடன் கதை;ததை அவரது மனைவி மனோண்மணியிடம் வந்து சிலர்
முறையிடுகின்றனர். அன்றிலிருந்து சத்தியமூர்த்தி எதைச் செய்தாலும் அவரை
மாலாவுடன் இணைத்து திட்டிவிடுவாள் மனோண்மணி. மனோண்மணியின் இயல்புகள்
சத்தியமூர்த்திக்கு ஒத்துப்போவதைவிட கமலாவின் இயல்புகள் ஒத்துப்போயின.
எனவே அவர் சாதாரணமாகத்தான் கமலாவோடு கதைத்துவிட்டு வருவார். ஆனால்
மனோண்மணிக்கு இது அடியோடு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும்
கருத்து மோதல்கள் ஏற்பட்டு மனோண்மணி பிறந்த வீட்டுக்குச்
சென்றுவிடுகின்றாள்.
மனோண்மணியின் சகோதரியின் கணவன் வீட்டு வளவிலேயே பட்டறை போட்டு தன்
தொழிலை நடத்தி வருகின்றாள். அவரது உதவிக்கு நான்கு அடியாட்கள் வேறு.
சகோதரி ஆசிரியை. அவர்களின் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமானது.
ஆத்மார்த்தமானது என்று மனோண்மணி எண்ணி கவலைப்படுவாள். அவளுக்கு அமைந்த
வாழ்க்கை போல தனக்கும் நல்ல புருஷன் அமைந்திருக்கக் கூடாதா என்று அவள்
ஏங்குவாள். சில நாட்களின் பின்னர்தான் மனோண்மணிக்கு தன் சகோதரியின்
வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள புரிந்தன. அவளது கணவன் சந்தேகக் குணம்
பிடித்தவன். அவள் பாடசாலைவிட்டு ஒருநாள் நேரம் பிந்தி வீட்டுக்கு
வந்தவுடன் அவன் போட்ட கூச்சலும் அதற்கு அவள் மறுத்துப் பேசுவதும்
கேட்டது. பாடசாலையில் உள்ள இன்னொரு சக ஆசிரியருடன் மனோண்மணியின்
சகோதரியை தொடர்புபடுத்தி அவன் பேசி விடுகின்றான். பின்பு அவளை அடி
அடியென்று அடிக்கின்றான். இவை மனோண்மணிக்குள் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன. தனது கணவன் சாதாரணமாக ஒரு பெண்ணுடன் பேசியதைத்தான்,
தான் தப்பாக நினைத்துள்ளேன் என்ற உண்மை மனோண்மணிக்குப் புரிவதாக கதை
நிறைவுசெய்யப்பட்டிருக்கின்றது..
சின்னச் சின்ன சிக்கல்கள் ஒரு குடும்பத்தையே அழித்துவிடும். நம்மைச்
சூழ நடக்கின்ற பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்கின்றபோது
அவற்றிலிருந்து நாம் எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று அறிய
முடிகின்றது. அவ்வாறான பிரச்சினைகளை தனது கதைக்குள் கருவாக்கி
அவற்றிற்கான தீர்வையும் தரும் வலிமை கதாசிரியர் சூசை எட்வேட்டுக்கு
இருக்கின்றது. அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
நூல்
- இவன் தான் மனிதன்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - சூசை எட்வேட்
வெளியீடு - அஸ்ரா பதிப்பகம்
விலை -
250 ரூபாய்
|