நூல் :  புத்துமண் (நாவல்)
நூல் ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
நூல் மதிப்புரை
முனைவர் இரா.செல்வி

புத்துமண் நாவலில் சூழலியல் பதிவுகள்

முன்னுரை:

புதிய சூழலியல் விழிப்புணர்வு தோன்றியுள்ள சூழலில் உலகெங்கும் உள்ள கலை இலக்கியப் படைப்பாளிகள் தமது படைப்புகளில் சூழலியல் பேரழிவு குறித்தும் அந்தப் பேரழிவில் இருந்து உலகையும் மனித குலத்தையும் காப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். சூழலியல் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றனர். இக்கட்டுரை சுப்ரபாரதிமணியனின் 'புத்துமண்' நாவலில் சித்திரிக்கப்பட்ட சுற்றுச் சூழல் அழிவுகளையும் அழிவிலிருந்து இந்தப் பூமியைக் காப்பதற்காக முன்வைத்த அரசியல் சிந்தனைகளையும் போராட்டத்தையும் ஆராய்கிறது.

கதைச்சுருக்கமும் மணியன் கதாப்பாத்திரமும்

புத்துமண் நாவலில் படைக்கப்பட்ட 'மணியன்'; கதாப்பாத்திரம் கற்பனை கதாப்பாத்திரம் அல்ல. நடைமுறையில் வாழ்ந்த மனிதர். அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களைச் சற்று கற்பனை கலந்து ஆவணப்பதிவுகளாக நாவலில் சித்திரித்துள்ளார் நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன். மணியனின் மனைவி சிவரஞ்சனியும் மகள் தேனம்மையும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். மணியன் நாத்திகர். அறுபது வயதைத் தாண்டியவர். அதிகாரம் கூடாது என்பதற்காகப் பதவி உயர்வை ஏற்காது சாதாரண அரசு ஊழியராகவே விருப்ப ஓய்வு பெற்ற மணியன் உன்னத மனம் கொண்டவர். வீட்டில் வெட்டியாகப் பொழுது போக்க விரும்பாத அவர் தி.க கட்சிகளோடும் இடது சாரி கட்சிகளோடும் தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தும் கட்சி கூட்டங்கள், சமூக நீதிப் போராட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வார். பலர் அவரை தங்கள் கட்சிகளில் சேரச் சொல்லி வற்புறுத்துவார்கள். ஆனால் அவர் பொதுமனிதனாக வாழவிரும்பினார். வனதினம், தாய் மொழி காப்பு தினம், முதலான தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று வருவார். சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்துப் பத்திரிகைகளுக்குக் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். திருப்பூர் வாசியான அவர் சாயப்பட்டறைகள் பற்றிய பொதுவிசாரணை, குறைகேட்பு நாள் என்று மாவட்ட ஆட்சியர் கூட்டங்களுக்குச் சென்று வந்ததோடு சாயப்பட்டறை சம்பந்தமான வழக்குகள் திருப்பூர் நீதிமன்றங்களிலோ கோவை நீதிமன்றங்களிலோ வரும்போது தவறாது கலந்து கொள்வார். மணியன் சில நண்பர்களுடன் சேர்ந்து வழக்கும் தொடர்திருந்தார். இதனால் பெரிய சாயப்பட்டறை முதலாளிகளின் பகையைச் சம்பாதித்துக் கொண்டார.;

இதற்கிடையில் மகள் தேனம்மைக்குத் திருமணம் செய்து வைக்கிறார். மனைவி இறந்த பின் வீட்டை விற்று மகளுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு மீதிப்பணத்தைக் கொண்டு சுற்றுச் சூழல் பணிகளில் ஈடுபடுகிறார். பெரிய சாயப்பட்றை முதலாளிகளின் தூண்டுதல் காரணமாகக் காவலாளிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்புகின்றனர். அத்தோடு விடாமல் சாயப்பட்டறை முதலாளிகள் நைஜீரியன் ஒருவனுக்குப் பணம் தந்து மணியனை அடிக்கச்செய்கின்றனர.; அந்த நைஜீரியன் பலமாகத் தாக்கியதில் மணியன் செத்துப் பிழைக்கின்றார். மனநலம் பாதிப்புக்குள்ளாகி ஈழத்தமிழர் விடுதலைக்காக முத்துக்குமாரும் செங்கொடியும் தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டது போல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் ஏதாவது தற்கொலை முயற்சியால் உடம்பை அழித்துக் கொள்ளலாம் என்றும் மீத்தேன் வாயு எடுப்பதை முன்வைத்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்றும் மணியனின் மனம் எண்ணுகின்றது. மகள் தேனம்மை மணியனை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட அழைத்துப் போய் அங்கிருக்கும் சூழல் பிடிக்காததால் அழைத் வந்துவிடுகிறாள். இறுதியில் மணியன் உடல் உபாதை காரணமாக இயற்கை மரணம் அடைகின்றார.; ஆதிக்க வர்க்கங்களின் வன்முறை தாக்குதலால் ஒரு சூழலியல் போராளியின் வாழ்வு அவலத்தில் முடிகிறது.

புத்துமண் நாவல் காட்டும்; சுற்றுச் சூழல் பிரச்சினைகள்

புத்துமண் நாவலில், முதன்மைப்பாத்திரமான மணியனின் பெரியப்பா மகன் இராமசாமி வால்பாறையில் புலி அடித்து இறந்தார் என்றும் ஜம்மனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அவரது உறவினர்கள் அடித்துச் செல்லப்பட்டனர் என்றும், பெரியாண்டி பாளையத்துக் குளமும் சாமளாபுரம் குளமும் வற்றிப்போனது குறித்தும், திருப்பூரில் சாயப்பட்டறை கழிவுகள் தேங்குவதால் ஓரத்துப்பாளையம் அணை நீரில் அமிலம் கலந்து அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு உடம்பு முழுக்க கொப்புளங்கள் ஏற்படுவது பற்றியும் மணல் கொள்ளை, பறவை அழிவு, எண்டோசல்பானால் ஏற்படும் அபாயம் எனச், சூழல் பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 29 அத்தியாயங்கள் கொண்ட புத்துமண் நாவலில் அத்தியாயங்கள், கவிஞர் ஒடியன் லட்சுமணனின் சுற்றுச் சூழல் கவிதை வரிகளுடன் ஆரம்பிக்கின்றன. உதாரணத்துக்கு 4-வது அத்தியாயத் தொடக்கத்தில் கூறப்பட்ட கவிதைவரிகள் பின்வருமாறு.

'கீழிருந்து வந்தவர்கள் நீர்நிலைகளில் தோட்டா போட்டு வளர்ந்த மீன்களையும் குஞ்சுகளையும் ஒருங்கே கொன்று குவிக்கின்றார்கள். குட்டிகளையும் சூழ்கொண்ட மிருகங்களையும் கொல்வது பழங்குடி மக்களின் வழக்கம் அல்ல. அப்படிச் செய்பவர்களைப் பார்த்து 'உன் உடலின் ஒரு பாகத்தையே உண்பாயா' என்று கேட்கிறார் ஓர் ஆதிவாசி' ( புத்துமண். ப.
19)

இருத்தலியலும் புத்துமண் நாவலும்

இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக எல்லா வகையான அதிகார மையம் கொண்ட இயக்கங்களுக்கு எதிராக உருவானதே இருத்தலியம். இருபதாம் நூற்றாண்டில் பல இருத்தலியல் தத்துவ அறிஞர்கள் அகநிலைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இருத்தலியல் தத்துவத்தை உருவாக்கினார்கள். இவர்களில் ஒருவர் ஷான் பால் சார்த்தர். பிரெஞ்சுக்காரர். ஹிட்லரின் பாசிச சிறையில் சிறிது காலம் அடைக்கப்பட்டிருந்தவர். சோசலிசம், முதலாளியம் ஆகிய இரண்டிற்கிடையில் மூன்றாவது பாதைத் தேர்வு செய்வதற்குப் பிரெஞ்சு மத்தியதர வர்க்கம் எடுத்துக் கொண்ட முயற்சியே சார்த்தரின் இருத்தலியம்.

இருத்தலியர்களுக்குள் இடது சாரி,வலதுசாரி அணியினர் உள்ளனர். இடது சாரிகள் மனித இருத்தல் குறித்த சிந்தனையை முதலாளித்துவத்துக்கு எதிரான விமர்சனமாக மாற்றினர். (நா.முத்துமோகன்.ப.
733) ஹெய்டேகர் என்ற இருத்தலியலாளர் தினசரி எந்திரகதியான வாழ்வில் நாம் சலிப்படைந்த பிறகு அதில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டு கீறல்கள் விழுந்த பிறகு தன்னந்தனி மனநிலையில் நாம் சென்று சேரும் எல்லையே உண்மையானது என்றார.;(மேலது.ப.1003) பொதுவாக இருத்தலியலாளரகள் மனித உன்னதங்களைக் கொண்டு சமூகமாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நம்பினார்கள்.

இருத்தலியம் போன்ற தத்துவங்கள் தோல்வியின் தத்துவங்கள் என்கின்றார் பெரி ஆண்டர்சன் என்ற மார்க்சியர். 'நெருக்கடியின் தத்துவங்கள், இயலாமையின் தத்துவங்கள் என்றும் அவற்றைக் கூறலாம். இருப்பினும் நேர்மையான சில விஷயங்களை அது தொடாமல் இல்லை'. (மேலது.ப.733) என்றார். தனிமனிதனின் உக்கிரமான அனுபவங்களின் வழியாகத்தான் உலகின் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும் என்ற இந்த இருத்தலியல் சிந்தனைப்படி புத்துமண் நாவலையும் அதன் முதன்மைப்பாத்திரமான மணியனையும் அப்பாத்திரம் மேற்கொண்ட சூழலியல் போராட்டங்களையும் சித்திரித்துள்ளார் நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன்.

எந்த இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பாத அதேசமயம் அந்த இயக்கங்களின் செயல்பாடுகளில் உடன்பாடு இருக்கும் போது மட்டும் கலந்து கொள்பவராக மணியன் வாழ்ந்தவர் என்பதை ஜூலியா என்ற கதாப்பாத்திரம் கூறுவதிலிருந்து மணியன் இயக்கங்கள் மீதோ சமூக மாற்றத்திற்கான போராட்டங்களின் மீதோ நம்பிக்கையற்றவராக இருந்துள்ளார் என்பதை அனுமானிக்க முடிகிறது.

'இருத்தலியர் என்ற முறையில் தனிமனித சுதந்திரத்தைச் சார்த்தர் பெரிதும் சிலாகித்து எழுதியபோதிலும் புரடசிகளை நோக்கி மக்கள் திரட்சி கொள்ளும் போது படிப்படியாக தனிமனித நிலைப்பாடுகள் குழும உணர்வாக ஒன்றுபடுவதை ஆராய்ந்தும் இருக்கின்றார்'. (மேலது,ப.
957). போரை அடுத்து வந்த ஆண்டுகளில் தான் முன்வைத்த 'இருத்தலிய பயம்' தற்காலிகமானதே, அது ஒரு மத்தியதர வர்க்க உணர்ச்சியே என்று சார்த்தரும் தன்னைச் சுய விமர்சனம் செய்துகொண்டார்' தனிமனிதவாதம் பேசிய சார்த்தர் பிரான்சில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் ஒடுக்கப்பட்ட போது ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான ஒட்டு மொத்த இயக்கம் தேவை என்கி;றார்.(மேலது. ப.869) இன்றைய நாளில் நாவலாசிரியர் சுப்ரபாரதி மணியன் புத்துமண் நாவலில் மணியனை இருத்தலியராகப் படைத்திருப்பது விவாதத்துக்குரியது.

நடைமுறையில் மணியன் இருத்தலிய சிந்தனையாளராக இருந்தாரா? இல்லை சுப்ரபாரதிமணியனின் இருத்தலியல் சிந்தனையில் மணியன் இருத்தல்வாதியாகப் படைக்கப்பட்டுள்ளாரா? தெரியவில்லை. இருத்தல் வாதியான சார்த்தர் ஒப்புக்கொண்டது போல 'ஒட்டுமொத்த இயக்கம்' ஒன்றின் அவசியத்தை சுப்ரபாரதி மணியனும் ஒப்புக்கொள்கிறார் என்பதை அவர் நாவலில் குறிப்பிடும் கேரளாவைச் சேர்ந்த ஜான்சி ஜேக்கப்பின் 'ஓருலகு ஓருயிர்' என்ற இயக்கமும் பசுமை இயக்கத் தலைவர் வெ. ஜீவானந்தம், மணியனுக்கு எழுதிய கடிதமும் உணர்த்துகின்றன.

சூழல் அழிவுக்கான காரணங்களும் தீர்வுகளும்.

இயற்கை குறித்துக் கவலைப்படாத வளர்ச்சி என்ற பெயரில் வெறும் இலாப நோக்கத்தையும் சுயநலத்தையும் கருத்தில் கொண்ட தங்களால்தான் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது என்பதை உணராத ஏகபோக முதலாளிகளின் குரல்களைப் பின்வரும் புத்துமண் நாவலில் இடம் பெறும் உரையாடல்கள் உணர்த்துகின்றன.

'வாட்டர் விசயத்தில் சீனாவும்; பெருங்கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. சுற்றுச் சூழல் கேடு அங்கும் அதிகமாகிவிட்டது என்கிறார்கள். இன்னும் அதிகமாகாமல் இருக்க இந்தாண்டு பனியன் உற்பத்தியை நமக்கு அதிகம் தள்ளிவிடப் போகிறார்கள். நமக்கு இன்னும் நிறைய ஆர்டர் வரும். குவியும்' ( புத்துமண் ப.
57)

பனியன் கம்பனி முதலாளிகள் இவ்வாறு மகிழ்ந்து பேசிக் கொள்வதுடன் மணியன் என்றொரு நபர் இப்போதைக்குச் சூழலியல் அரசியல் பேசுவது பேஷன். பேஷனை மணியன் பிரதிபலிக்கின்றார் என்றும் ஒரு கோடி சூரிய வெளிச்சத்தில் பிரதிபலித்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை என ஆணவத்துடன் பேசுவதில் இருந்து சூழலியல் பேரழிவுக்கான காரணத்தை நாவல் தௌ;ளிதின் உணர்த்துகின்றது.

'மண் அரிப்பு, நீர் அரிப்பு, மரபியல் வளங்களின் தேய்வு ஆகியவற்றினால் உருவான பட்டினியால் உலகின் மக்கள் தொகையில் நான்கில் ஒருபகுதியினர் பாதிக்கப்பட்டிருக்கும்போது முடிவேயில்லாத வளர்ச்சி என்ற கானல் நீருக்குப் பின்னால் ஓடிக்கொண்டும் வளங்களை அழிக்கும் தொழில் நுட்பத்தைப் பெருக்கிக்கொண்டும் இருப்பது புதுவிதமான இனப்படுகொலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இயற்கையைக் கொலை செய்வதன் மூலம் மக்களைக் கொன்று குவிப்பது கண்ணுக்குப் புலப்படாத வன்முறையாகும். இது அமைதிக்கும் நீதிக்கும் பெரும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது'( வந்தனா சிவா. உயிரோடு உலாவ. ப.30) என்ற வந்தனா சிவா அவர்களின் பெண்ணியச் சூழலியல் சிந்தனையும் ஈண்டு நோக்கத்தக்கது.

வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியகொள்கைகளின் அடிப்படையிலேயே ஏதோ பெருந்தவறு உள்ளது. அந்த தவறு என்பது மேற்கத்திய தந்தை வழிச் சமூகத்தின் புதிய திட்டமாக விளங்கும் நவீன அறிவியல் அறிவும் பொருளாதார வளர்ச்சியும் ஆகும். இயற்கை மற்றும் கலாச்சாரங்களின் அழிவுகளுக்குக் காரணமாக விளங்கும் இந்த நவீன அறிவியலையும் வளர்ச்சியையும் எதிர்த்து மூன்றாம் உலக நாடுகளில் பெண்களும் விவசாயிகளும் பழங்குடிகளும் போராடி வருகின்றனர் என்று தனது நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார் வந்தனா சிவா.(மேலது, ப.
15) வளரச்சி குறித்த இந்தச்; சூழலியல் பெண்ணியச் சிந்தனையுடன் நாவலில் கூறப்பட்ட, பசுமை இயக்கம் வெ. ஜூவானந்தம், மணியனுக்கு எழுதிய கடித செய்தியும் உடன்படுகின்றது எனலாம்.

இன்றைய வளர்ச்சி எப்படி உள்ளது? யாருக்காக உள்ளது? இந்த வளர்ச்சியால் முன்னேறியவர்கள் யார்? எங்களுக்கும் வாழ்வு வரும் என்று இலவுகாத்த கிளியாக ஏமாந்து நொந்து செத்தவர்கள் எத்தனைபேர்;? நாளைய தலைமுறைக்கு இந்த மண் வேண்டாமா? அவர்களுக்கு இந்த உயிர் நீர் தேவை இல்லையா? அவர்களின் மூச்சுக்காற்றை இன்றே நாம் களவாடுவதா? டாலர்களைத் தின்ன முடியுமா? மஞ்சள் உலோகம் பசியாற்றுமா? கணினிகள் கொஞ்சி உறவாடுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கும் பசுமை இயக்கம் வெ.ஜீவானந்தம் இரசாயனக் கழிவுகளும் பசுங்குடில் வாயுக்களும் பருவநிலை மாற்றமும் பூமி சூடாதலும் நம் முன் விரியும் சூழலியல் பேரழிவுகள் என்று மணியனுக்கு எழுதிய கடிதத்தில் விரிவாக விளக்கிக் கூறி 'காலம் தாழ்ந்துவிடவில்லை. முடிவு நம் கைகளில்தான். நாம் பாத்திரத்து மீனா? குளத்து மீனா? நிதானமான சூரியஒளியின் நீடித்த இதமான வெப்பமா? விரைந்து கொதிக்கப்போகும் பாத்திரத்தின் அதிவேக வெப்பமா? மீனுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது.'(புத்துமண்.ப.59) என்று உவமை கொண்டு விளக்குகின்றார்.

மேற்கத்திய ஆணாதிக்க முதலாளிய சமூகத்தின் விளைவுகளான நவீன அறிவியலும் பொருளாதார வளரச்சியும்தான் இயற்கை அழிவுகளுக்குக் காரணம் என்பதை நாவலில் கூறப்பட்ட பின்வரும் நைஐPரியா நாட்டு கென்சரோவிவாவின் கவிதைவரிகளும் உணர்த்துவதாகவுள்ளது.

'இயற்கைக்கு விரோதமானவைகளே இன்று / நம் நிலத்தை ஆள்கின்றன.
எனது வானத்தின் கூக்குரலைக்கூட கேட்க முடியாதவாறு /
பசித்தவர்களின் அழுகையை / விநோதமான பிணிகளின் விசும்பலை /
செத்துக்கொண்டு இருக்கும் / பூமியின் குரலைக் கேட்க முடியாதவாறு /
செவிடுகளாக /இரத்தம் பீறிடக் காயம்பட்ட பூமி /பாலை நிலங்களைப்
பிரசவிக்கிறது / நாம் இயற்கைக்கு விரோதமான காலத்தில் வாழ்கிறோம் /
மறுபடி இதை நாம் இயற்கையானதாக ஆக்கவேண்டும். /
நமது பாடல்களின் மூலம் /நமது அறிவார்ந்த சீற்றத்தின் மூலம்.


ஆகவே சுப்ரபாரதிமணியனும் அறிவார்ந்த சீற்றத்துடன் சூழல் அழிவுக்குக் காரணமான ஆணாதிக்க முதலாளியத்தையும் அதுநிகழ்த்தும் அதிகாரத்தையும் விஷம் கக்கும் நாகத்துடன் உருவகப்படுத்திப்; பாம்புகள் வாழிடமான புற்றுமண்ணைத் தன் நாவலுக்குப் பெயராகச் சூட்டியிருக்கின்றார்.

மேலும் சூழலியல் போராளிகள் யாவரும் ஒருமித்த சிந்தனை பெறுவதும் ஒருங்கிணைவதும் முழுமையான சமதர்ம பெண்ணியச் சூழலியல் பேரியக்கம் ஒன்று உருவாவதும் காலத்தின் தேவையாகின்றது. சூழலியம் பற்றி எம் ஃபில் ஆய்வு மேற் கொண்ட ஜீலியா என்ற ஆய்வு மாணவி சிற்பியின் 'என் மகஜே ' முதலான மொழிபெயர்ப்பு நாவல்களை ஆய்வுசெய்வதாகப் புத்துமண் நாவலில் கூறப்பட்டுள்ளது. ஜூலியா போன்ற சமூக அக்கறை கொண்ட பெண்கள் சூழலியல் ஆய்வு மேற்கொள்வது, சூழலியல், மாபெரும் பேரியக்கமாக வளர்வதற்கான அறிகுறியாகும் என்பதையும் இந்நாவல் உணர்த்துகின்றது.

முடிவு:

புத்துமண் நாவல், நடை முறையில் வாழ்ந்தவராகக் கருதப்படும்; சூழலியல் போராளி மணியன் பற்றியும் பசுமை இயக்கம் தலைவர் வெ. ஜூவானந்தம், தி.க கட்சி தலைவர்கள், பொதுஉடைமைவாதிகள், ஏனைய சூழலியலாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனர்கள், தலித்போராளிகள் எனப் பலரோடு அவருக்கு இருந்த தொடர்பும் நட்;புப் பற்றியும் விவரிக்கும் இருத்தலியல் நாவல் ஆகும்

பேரியக்கங்களிலும் சமூகமாற்றங்களிலும் நம்பிக்கை இன்றித் தனி ஒரு மனிதனாய் மனிதநேய உணர்வுடன் வாழ்ந்த (சித்திரிக்கப்பட்ட) மணியன் தனிப்பட்ட முறையில் உன்னத மனிதன். உன்னத மனிதன் தனிமனிதனாகப் போராடி வெல்வது எந்தத் தத்துவ பின்னணியும் இல்லாத திரைக்கதையில் சாத்தியம். நடைமுறையில் ஒருபோதும் சாத்தியம் இல்லை

எந்த இருத்தல்வாத போராளியும் ஓர் நாள் இயக்கம் - பேரியக்கம் என்ற நிலையிலான போராட்;டங்களில் உந்தித்தள்ளப்படுவான். இதில் புத்துமண் நாவல் ஆசிரியர் சுப்ரபாரதிமணியனுக்கும் உடந்தை என்பதை அவர் நாவலில் குறிப்பிடும் கேரளாவைச் சேர்ந்த ஜான்சி ஜேக்கப்பின் 'ஓருலகு ஓருயிர்' என்ற இயக்கமும் பசுமை இயக்கத் தலைவர் வெ.ஜீவானந்தம் மணியனுக்கு எழுதிய கடிதமும் உணர்த்துகின்றன.

சமதர்ம பெண்ணியத் தத்துவப் பின்னணியில் மாபெரும் சூழலியல் இயக்கம் உருவாகி, சாதி, மதம், இன, மொழி, கடந்து பூமியை--- இயற்கையை மற்றும் நேசிக்கின்ற உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து நடத்தும் போராட்டமே வலிமை வாய்ந்த போராட்டமாக அமையும். அப்போராட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆதிக்க வர்க்கங்கள் வலிமை இழந்து அவையும் இயற்கையையும் சூழலையும் பாதுகாக்க முன்வரும். ஆகவே மக்கள் ஒன்றுபட்டு இயற்கையை-பூமியைக் காப்பதின் அவசியத்தைப் புத்துமண் நாவல் உணர்த்துகின்றது.


மேற்கோள் நூல்கள்:

  • 1. சுப்ரபாரதிமணியன், புத்துமண், உயிர்மை பதிப்பக வெளியீடு, சென்னை-18 (2014)
     

  • 2. ந.முத்துமோகன் மார்க்சியக்கட்டுரைகள், காவ்யா வெளியீடு, சென்னை.-24 (2007)
     

  • 3. வந்தனா சிவா உயிரோடு உலாவ தமிழாக்கமும் வெளியீடும்,
    பூவுலகின் நண்பர்கள்; சென்னை
    – 40 (2003

 

முனைவர். இரா.செல்வி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி
பீளமேடு
– 641014.