நூல் :
அருமையான
ஆளுமைகளும் சுவையான மதிப்புரைகளும்
நூல் ஆசிரியர் :
கே.எஸ். சிவகுமாரன்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கே.எஸ்.சிவகுமாரன்
அவர்கள் இலக்கிய உலகில் மிகப் பிரபல்யம் வாய்ந்தவர். திறனாய்வுகளை
திறம்பட எழுதி வருவதுடன், மொழிபெயர்ப்புக்களையும், பத்தி
எழுத்துக்களினூடாக பலரைப் பற்றிய, பல்துறை சார்ந்தவை பற்றிய
அறிமுகங்களையும் செய்து வருகின்றார். இவருடைய ஆளுமை, விசேடமாக கடல்
தாண்டி விரிவடைந்திருக்கின்றமை இலங்கையர்களான நம் எல்லோருக்கும் பெருமை
தரக்கூடிய விடயமாகும்.
ஒரு பத்தி எழுத்தாளராகவும், மதிப்புரையாளராகவும், கட்டுரையாளராகவும்
செயற்படும் இவர் ஏனையவர்களைப் பற்றி மனம் திறந்து எழுதுவது
பாராட்டப்படக்கூடியது. அதற்கான காரணம்; மற்றவர்களின் படைப்புக்களை
முழுதாக நேரம் ஒதுக்கிப் படித்துவிட்டு, அந்த முயற்சியைப் பாராட்டி,
அதிலுள்ள நல்லவற்றை எடுத்துக்காட்டி, பிழைகளை இங்கிதமாக சுட்டிக்காட்டி
எழுதியவரை இன்னும் ஊக்கப்படுத்தும் பணியை இவர் செய்து வருவதாகும்.
பரந்துபட்ட திறந்த மனதுடையவர்களால்தான் மற்றவர்களின் வெற்றிக்கு
வாழ்த்து சொல்ல முடியும். அதே போல் மற்றவர்களின் படைப்புக்களை திறந்த
மனதுடன் அணுக முடியும். அந்த வகையில் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்
நல்மனம் படைத்த ஒரு இலக்கியவாதியாவார்.
பல நூல்களுக்கு சொந்தக்காரரான இவர், ஷஷஅருமையான ஆளுமைகளும் சுவையான
மதிப்புரைகளும்|| என்ற இன்னொரு திறனாய்வு நூலை வெளிக்
கொணர்ந்திருக்கின்றார். 110
பக்கங்களில் அமைந்துள்ள இத்தொகுதி மணிமேகலைப் பிரசுரமாக
வெளிவந்திருக்கின்றது.
திறனாய்வு, மதிப்பீடு, விமர்சனம் என்று நாம் பொதுவாக பயன்படுத்தும்
இவ்வார்த்தைகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒத்த கருத்தைத் தருவதில்லை.
அதற்கான அர்த்தத்தை கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் கீழுள்ளவாறு அருமையாக
விளக்குகின்றார்.
Review என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
மதிப்புரை என்று தமிழில் கூறுகின்றோம். கலை இலக்கியங்களின் தரம் பற்றிய
கருத்து அல்லது கணிப்பு மதிப்புரை எனலாம். திறனாய்வு, விமர்சனம் என்ற
சொற்களும் மதிப்புரையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
உண்மையான திறனாய்வு மதிப்புரையையும் சற்று கடந்தது. விரிவானது. ஆழமானது.
Critisism என்ற வார்த்தைக்கு சிலர்
கண்டனம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றனர். குணதோஷங்களை காரணங்களுடன்
சான்றுகளுடன் வெளிப்படுத்தும் முறைமையை
Critisism எனலாம். பாடல்களில்
உள்ள நயங்களைக் காணல் என்பது
Appreciation என்பார்கள்.....|
இலங்கையில் வெளிவந்த விடிவு என்ற தொலைத் திரைப்படம் பற்றி கே.எஸ்.
சிவகுமாரன் தனது கருத்துக்களை இந்த நூலில் (பக்கம் 15)
எழுதியிருக்கின்றார். அந்தத் திரைப்படத்துக்கான கதை, வசனம், நெறியாள்கை
என்பவை பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இத்திரைப்படம் அங்கவீனம் பற்றி பின்வருமாறு பேசுகின்றது. அங்கவீனர்கள்
தாழ்த்தபட வேண்டியவர்கள் அல்லர். உடலில் ஊனம் இருப்பதைவிட மனதில் ஊனம்
இருப்பதுதான் வெட்கப்படக் கூடியதொரு விடயமாகும். அந்த வகையில்
பரிகாசத்துக்கும், கிண்டலுக்கும் அங்கவீனர்கள் ஆளாகிவிடக் கூடாது.
உடலளவில் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள அவர்கள் மனதளவிலும்
பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
இன்று பாதையோரங்களில் அவ்வாறான பலரை நாம் தினசரி சந்திக்கின்றோம்.
அவர்களில் எத்தனைப் பேருக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறோம் என்பது
சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
இலங்கை வரலாற்றில் கறை படிந்த பக்கங்களில் யுத்த காலம் பிரதான இடத்தை
வகிக்கின்றது. உயிர்ச் சேதம், உடல் சேதம், பொருட் சேதம் என்று பல
வகைகளிலும் மனிதனின் வாழ்க்கையோடு விளையாடிவிட்ட யுத்தத்தின்
எச்சங்களாக இன்று பல அங்கவீனர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அவர்கள்
பற்றிய சம்பவங்களைத் தொகுத்தே இந்த விடிவு என்ற திரைப்படம்
அமைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் எந்த இனமும் இன்னொரு இனத்தைச்
சாராமல் வாழ முடியாது என்ற கருவும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
மூவினங்களைக் கொண்ட இலங்கையில் யாரும் யாரையும் விலக்கி வைத்துவிட்டு
கருமாற்ற முடியாது என்பது கண்கூடான விடயம். இத்திரைப்படம்
திருப்திகரமானது என்பதை கே.எஸ். சிவகுமாரன் உறுதியாகக்
கூறியிருக்கின்றார்.
மாதுமை சிவசுப்பிரமணியத்தின் தூரத்துக் கோடை இடிகள் என்ற நூல் பற்றியும்
இத்தொகுதியில் எழுதப்பட்டிருக்கின்றது. மாதுமை திருகோணமலையைச்
சேர்ந்தவர். பாடசாலைக் காலத்திலேயே சிறுகதைகள் எழுதி பலரது பாராட்டையும்
பெற்றுக்கொண்டவர். மாதுமை, பிரபல எழுத்தாளர் தம்பு சிவா அவர்களின்
புதல்வியாவார். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் துன்பங்கள்
குறித்த பிரச்சினைகளை அவர்களது மொழிப் பாணியிலேயே எழுதியுள்ளார். இவரைப்
பற்றிய நூலாசிரியர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
ஷமுதுமை, தனிமை, அனாதரவு, சூழல் இணக்கமாக அமையாமை, மத்திய – மத்திய தர
மக்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள், இன வேறுபாடுகளுக்கும் அப்பால் மனித
உறவுகளின் அன்னியோன்னியம், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர் சிலரின்
கேவலமான நடத்தைகள், ஏமாற்றுச் செயல்கள், திருகோணமலையில் குடியேறிய
அகதிகளின் அந்தரங்கம், மாற்று இனப்பெண் வயோதிபருக்கும், அநாதைப்
பிள்ளைகளுக்கும் உதவ முன்வருதல், கண நேரக் காதலை வெளிப்படுத்த முடியாத
அங்கலாய்ப்பு, பெற்றோரை அவமரியாதைக்குரியவர்களாக ஆக்கும் மகனின்
உதாசீனம், குருவை உதாசீனஞ் செய்து கலையை விலையாக்கும் இளம் பாடகி, மண
வாழ்வில் ஏமாற்றம், கணவன் துரோகம் கண்டு தற்கொலை செய்யும் மனைவி,
தோல்விகளுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் வளரும் இளைஞன் - இப்படிப்
பலவிதமான நிகழ்;சிகளை அவர் வாசகர் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார்.
இது உண்மையிலேயே பாராட்டத்தக்க அம்சம்|.
இலக்கிய உலகத்தின் ஜாம்பவானாக என்றும் விளங்குபவர் டொமினிக் ஜீவா
அவர்கள். உழைப்பால் உயர்ந்த அவர் பலருக்கு முன்மாதிரியாகவும்,
எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார். மல்லிகை என்ற சஞ்சிகை மூலம் பலரை
இனங்காட்டியவர். மக்களை மதிப்பவர். இயல்பாகப் பழகக் கூடியவர். அதே போல
முகத்திற்கே எதையும் கேட்டுவிடும் போக்குடையவர். பின்னாலிருந்து
மற்றவர்கள் பற்றி பேசாதவர். இவர் பற்றி நூலாசிரியரின் கருத்து இவ்வாறு
அமைந்திருக்கின்றது.
ஷடொமினிக் ஜீவா கீழ் மட்ட வாழ்க்கை அனுபவங்களை இளமையிலேயே எதிர்கொண்டவர்.
சுய நம்பிக்கை, விடா முயற்சி, அறிவுத் தாகம், பிரயாசை, கடின உழைப்பு,
ஜீவ காரூண்யம், சிறுமை கண்டு வெகுண்டெழும் தார்மீகக் கோபம்,
வரித்துக்கொண்ட அரசியல் தத்துவார்த்தக் கோட்பாடு போன்றவை அவர் தளத்தை
உயர்த்தியிருக்கின்றது. இவர் பல மட்டங்களிலும் பரிச்சயமுள்ளவர் -
சமுதாய மட்டங்களில் மாத்திரமல்ல வாழ்க்கையின் இதர மட்டங்களிலும்
தளங்களிலும் பரிச்சயமும் கொண்டவர். வாழ்க்கை என்ற பல்கலைக் கழகத்திலே
சிறப்புப் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர். சிறுகதை எழுத்தாளனாக
ஆரம்பித்து மல்லிகை என்ற இலக்கிய ஏட்டின் ஆசிரியனாக மலர்ந்து, இன்று
நூல் வெளியீட்டாளனாகவும் பரிணமித்திருக்கின்றார். இவரில் குழந்தைத்
தன்மை இயல்பாய் அமைந்திருக்கின்றது. இதுவே இவரருடைய வெற்றியின் இரகசியம்|
தான் ரசித்த புத்தகங்கள், சினிமாக்கள், தான் சந்தித்த மிக முக்கியமான
மனிதர்கள் பற்றியெல்லாம் வாசகருக்கு அறியத் தரும் கே.எஸ். சிவகுமாரன்
அவர்கள் பவள விழா கண்ட மூத்த ஆய்வாளர். அவருக்கு என் வாழ்த்துக்கள்!!!.
நூல் - அருமையான ஆளமைகளும்
சுவையான மதிப்புரைகளும்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
தொலைபேசி - 0112587617
ஈமெயில்
-sivakumaranks@yahoo.com
, kssivakumaran610@yahoo.com
வெளியீடு; - மணிமேகலைப் பிரசுரம்
விலை; - 120
இந்திய ரூபாய்
|