நூல் :
தீப்பொறி – தெய்வநெறி
நூல் ஆசிரியர் :
கவிச்சுடர் புதுமைக்கோமான்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி
நூல்
ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான் அவர்கள் தள்ளாத வயதிலும் தளராத
தேனீயாக உழைத்து வருபவர். பாவலர் இராம. இளங்கோவன் அவர்களுடன் பெங்களூரு
அலுவலகம் வந்து என்னை சந்தித்து மகிழ்ந்தவர். இல்லம் சென்று உடன்
இந்நூலை அஞ்சலில் அனுப்பி வைத்தார். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின்
மாதாந்திர கவியரங்கில் தவறாமல் கலந்து கொண்டு கவிதை பாடும் வல்லவர்.
கவிதை உறவு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதை எழுதி வருபவர்.
கவிக்குரிசில் இரா. பெருமாள் இ.ஆ.ப., கவிமாமணி தேனி.ரா. பாண்டியன்,
யோகினி சிவசக்தி லலிதாம்பிகை, தேனி. ரா. உதயகுமார், கவிமலர் வ.
மலர்மன்ன்ன் ஆகியோரின் அணிந்துரைகள் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக
அமைந்துள்ளன.
‘தீப்பொறி’ என்ற பகுதியில் 47
தலைப்புகளில் கவிதையும், ‘தெய்வநெறி’ என்ற பகுதியில்
32 தலைப்புகளில்
கவிதையும் எழுதி உள்ளார். நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக் கோமான்
அவர்கள் சிறந்த மரபுக்கவிஞர் என்பதால் மரபு மாறாமல் மிக நுட்பமாக கவிதை
வடித்துள்ளார்.
மரபுக்கவிதை வாசிப்பது சுகமான அனுபவம். பழைய திரைப்படப்பாடல்கள் கேட்டு
ரசிப்பதைப் போன்ற அலாதியான இன்பம் தருபவை. மரபுக்கவிதை தொடர்ந்து எழுதி
வரும் வெகுசிலரில் சிகரமானவர் இவர். இலக்கணத்தோடு கருத்துக்கும்
முக்கியத்துவம் தந்து பல்வேறு தலைப்புகளில் கவிதை எழுதி உள்ளார்.
உலகின் முதல் மொழியான செம்மொழி தமிழ்மொழி பற்றிய முதல் கவிதையே
முத்தாய்ப்பாக உள்ளது.
மொழிக்கெல்லாம் ஒளிவிளக்கு!
செங்கதிரின் வெங்கதிரைத் தானம் பெற்றுச்
சிற்றளவே ஒளியளித்துச் சிறப்புற் றோங்கும்
திங்களைப் போல், மங்காது மேன்மை யுற்ற
தீந்தமிழின் தயவால் தான் பிற்கா லத்தில்
தங்கமுலாம் பூசினாற்போல் திகழு கின்ற
சில மொழிகள் பிறப்பெடுத்துச் சிறக்கக் கண்டோம்
எங்கள் தமிழ் இன்றிருக்கும் மொழிகட் கும்பின்
எழப்போகும் மொழிகட்கும் ஒளிவி ளக்கு.
இதுவரை உருவான மொழிகளுக்கும், இனிவரப்போகும் மொழிகளுக்கும் தாய்மொழி,
தமிழ்மொழி என்பதை மிக அழகாக எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுக்கள்.
மரபுக்கவிதை எழுதினால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம்
கவிதையாலேயே எழுதி உள்ளார். கவிதையில் இலக்கணம் மட்டும் இருந்தால்
போதாது, உணர்ச்சிமிக்க கருத்துக்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்
தான் கவிதை என்கிறார். நூலில் தலைப்பில் உள்ள கவிதை.
தீப்பொறி !
பாப்புனையும் பற்றுடைய கவிஞர் பல்லோர்
பத்திரிகை தனில்தம்பேர் பதிப்ப தற்கே
யாப்பறிவும், யாருக்குமொரு பயனு மில்லா
பாப்புனைந்து பொழுதைவீ ணாக்கு கின்றார்;
தீப்பொறியாய்த் தெறிக்கின்ற சீர்த்திரு த்த
தீம்பாவாய் மரபோடு வரைதல் வேண்டும்!
மூப்பெய்தி மெய்தளர்ந்த முதிய வர்க்கும்
முறுக்கேற்றும் விதமாக வடிக்க வேண்டும்!
இன்றைய அரசியலில் அன்றைய அரசியல் போல தூய்மை இல்லை வாய்மை இல்லை, அறம்
இல்லை. காமராசர், கக்கன் போன்ற நல்லவர்கள் இல்லை. இன்றைய அரசியல் நிலையை
கவிதையில் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
ஒரே குட்டை மட்டைகள்!
கோடிகளில் செல்வங்கள் குவித்து வைத்தே
குதூகலமாய வாழுகின்ற குபேர மன்னர்
கூடுதலாய செல்வங்கள் குவிக்கும் வாஞ்சைக்
கொண்டோராய் அரசியலில் குதிக்கின் றார்கள்;
நாடிதனின் கேடொழித்து நலிந்தோர்க் கெல்லாம்
நலஞ்சேர்க்கும் நோக்கத்தால் அல்ல! அல்ல!
பாடுபடும் பஞ்சையரின் துயர்து டைத்துப்
பசுமையாய் வாழவைக்கும் குறிக்கோள் இல்லை!
ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி
உள்ளார்.
வழக்காடு மன்றத்தில் வழக்காடுவது போல நீள்கவிதை வித்தியாசமாக எழுதி
உள்ளார். பாராட்டுகள். விலைமகள் புலம்பி நீதி கேட்டது போல வடித்துள்ளார்.
பெண்ணுரிமை பேசி உள்ளார்.
பாருக்குள்ளே நல்ல நாடு என்று தலைப்பிட்டு வஞ்சப்புகழ்ச்சி அணியில்
கவிதை வடித்துள்ளார். நாட்டில் நடக்கும் அவலம் கண்டு பொறுக்க முடியாமல்
பொங்கி எழுந்து உணர்ச்சிமிக்க பல கவிதைகள் வடித்து உள்ளார். பாராட்டுகள்.
பாருக்குள் நல்ல நாடு !
வாடி வதையும் மக்களின் வாழ்வை
வளமாய் ஆக்கும் நோக்கம் – இன்றி
கோடிக் கணக்கில் பொருளைக் குவிக்கும்
கொடுமதி நெஞ்சில் தேக்கி – மிக்கக்
கேடுறும் அரசியல் சூதாட் டத்தில்
கொள்ளை யடிக்க விரைந்தார் – இந்த
நாடுறும் நலிவை நாழிகை யேனும்
நினைவில் கொள்ள மறந்தார்.
நூலில் உள்ள கவிதைகளில் அறச்சீற்றம் உள்ளது.
ஒப்பற்ற உழைப்பினைப் போற்றி கவிதை வடித்துள்ளார். உழைப்பின் உன்னதத்தை
உணர்த்தி உள்ளார்.
உழைப்பே உயர்வு தரும் !
பொருளொன்று இருக்கின்ற இடம்தெ ரிந்தும்
பெறுகின்ற முயற்சியினை மேற்கொள் ளாமல்
விருதாவாய்ப் பொருதொழித்தே இருத்தல் விட்டு
விருப்பாக்ச் செயலாற்ற சிறக்கும் வாழ்வு!
கவிதைகளில் கோபம் காட்டுகின்றார். கேள்வி கேட்கின்றார். அவல நிலை
குறித்து ஆதங்கம் உணர்த்துகின்றார்.
விடுதலைபெற் ரறுபத்து மூன்றாண்டாகி
வியப்பூட்டும் முன்னேற்றம் என்ன கண்டோம்?
இடருற்றோர் வாழ்வினிலே விடியல் இல்லை ;
இன்னமும் படிப்பறியார் பல்லோர் உள்ளார் !
நூல் ஆசிரியர் கவிச்சுடர் புதுமைக்கோமான் அவர்கள் புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் போல உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போல மரபுக்கவிதையாலே
தமிழ்இன உணர்வூட்டி, விழிப்புணர்வு விதைத்து உள்ளார். பாராட்டுகள்.
வயதால் முதிர்ந்திட்ட போதும் கவிதையால் இளமையாக உள்ளார் நூலாசிரியர்.
புதுமை பதிப்பகம்,
343, வது ஸ்கொயர், ஆஸ்டின் டவுன், பெங்களூரு –
560 047.
|