நூல் : மழையின் மனதிலே
நூல் ஆசிரியர் :
கவிஞர் புதுயுகன்
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி



‘மழையின் மனதிலே’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்கள், நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர் வாழும் இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டே கவிதைத் துறையிலும் முத்திரைப் பதித்து வருபவர். முகநூலில் நல்ல பதிவுகள் செய்து வருபவர்.

இந்நூலில் சாகித்ய அகதெமி விருதுக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார், சிறந்த சிந்தனையாளர் எழுத்தாளர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. பாராட்டுகள்.

இந்த நூலை கணித மேதை சீனிவாச ராமானுஜன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். 39 தலைப்புகளில் கவிதை எழுது உள்ளார். மகாகவி பாரதியார் போல, திருவள்ளுவர் போல புதிய சொல்லாட்சி அறிமுகம் செய்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன்.

‘SELFIE’ என்று சொல்லிற்கு சுயபடம் என்று தமிழாக்கம் செய்துள்ளார். முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சுய படம்! (தன் படம் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்)

கொம்பு முளைத்த காலம்
உடல் பலமே பலம் என்றது !
அறிவே பலம் என்றது !
பிறிதொரு காலம்
தகவலே பலம் என்றது !
இன்றையக் காலம்!


இது தகவல் தொடர்பு சிறப்பான காலம் இது. கவலையை மறக்க உதவுவது கலை. அன்றும் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுவது கலை.

கலை!

துன்பம் என்பது கோடை
உன் கொடை அங்கே குடை
உன் பெயர் தான் கலை!


மணிவாசகர் பதிப்பகம் அட்டைப்பட வடிவமைப்பு நூலின் உள்படங்கள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக செய்துள்ளனர் பாராட்டுகள்.

கவிதையில் காட்சிப்படுத்துதல் ஒரு கலை. அக்கலை நூலாசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு நன்கு கைவரப் பெற்றுள்ளார். பரபரப்பான இயந்திரமயமான இலண்டன் மாநகரில் வாழ்ந்தாலும் இயற்கையை ரசிக்கவும் நேரம் ஒதுக்கி ரசித்து வருகிறார் என்பதை மெய்ப்பிக்கும் கவிதை.

பனி!

ஒரு இலண்டன் காலை
என் சன்லைன் வெளியே
அரிதாரம் பூசிய வெள்ளம் தேவதைகள்
மொத்தம் பத்து
அத்தனையும் முத்து !

சூரியராமனின் கால்
பட்டதும் தான் தெரிந்தது
அவை அகலிகையர் அல்ல.
அழகிய பூக்கள் என்று !


மலர்களின் மீதிருந்த பனிகள் சூரியன் வருகையால் காணாமல் போவதை கவிதையால் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்.

வானவில் ரசிப்பது சுகம். அவை ஆயுள் குறைவு என்றாலும் இருக்கும் நேரத்தில் பார்க்கும் பார்வையாளர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.

கவிதை மாதிரி வானவில்!

ஒரு கவிதை எழுதலாம் என சாளரம் திறந்தேன்

பளிச்சென வானவில்!
‘ஓவிய மாதிரி’ மாதிரி
எனக்காகத் தோன்றிய
‘கவிதை மாதிரி’
இது நிழல் இல்லா சூரியன் எடுத்த
தமிழ்ப்படம்.
மேகக் கண்ணாடி பந்தது
தேவதை ஒருத்தி
சட்டென தீட்டிய கன்னத் தீட்டல்
இந்த வண்ணக்கொட்டல்.


இக்கவிதை படித்து முடிக்கும் வாசகர் மனதில் வானவில் காட்சிக்கு வரும் என்பது உண்மை.

ஹைக்கூ, சென்றியூ, புதுக்கவிதை என பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.

ஹைக்கூ !

கூரைக்கெல்லாம் கூரை
பொங்கி வழியாத நுரை
வானம்!


சென்றியு

விரல் நுனியில் உதயம்
வினாடியில் பிரசவம்
குறுஞ்செய்தி!


ஹைக்கூ – சென்றியூ கலப்பினம் வடிவில் 4 கவிதைகள் உள்ளன. சிந்தனை மின்னலை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்.

இரண்டு மின் அலைகள்
ஒரு மின்னல்
ஹைக்கூ!

மூன்றே துளிகள்
ஒரு கடல்
ஹைக்கூ !


ஹைக்கூ கவிதைக்கான விளக்கத்தை, இலக்கணத்தை ஹைக்கூவாக வடித்துள்ளார், பாராட்டுகள்.

வளர்பிறை என்ற சொல் அனைவரும் அறிந்த ஒன்று. நூலாசிரியர் கவிஞர் புதுயுகன் ‘வளர்பிறை’ என்று புதுச்சொல் அறிமுகம் செய்துள்ளார்.

வளர்பிழை!

முரண்புரிக்குச் சென்றிருக்கிறீர்களா?
அங்கே கணிப்பொறி மனிதனை இயக்குகிறது.
என் தேர்வுத்தாளைப் பார்த்தேன் ;
ஆசிரியர் மதிப்பெண்களைத் தரத்
தவறியிருந்தார்
என் மகனின் தேர்வுத்தாளைப் பார்த்தேன்
ஆசிரியரிடம் மதிப்பெண்கள் வாங்கத் தவறியிருந்தான்.


எது கவிதை என்ற கேள்வி எல்லோராலும் எழுப்பப்படுகிறது. இக்கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில் சொல்கின்றன. கவிதைக்கான முழுமையான விளக்கம் இன்னும் யாராலும் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இதோ! நூலாசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் மொழியில் கவிதைக்கான விளக்கம்.

உயிரில் விழும் விதை!

சலவை செய்த சொற்கள் அடுக்கி
கலவை செய்தல் கவிதை ஆகுமோ?

நிலவில் குளித்து எழுந்த்து போலே
நிலவும் இன்ப நினைவே கவிதை!

காதல் வரிகளில் ஏறி அமர்ந்து
காதலர் நெஞ்சில் நுழைந்திட வேண்டும்.

தீமையைக் கண்டால் தீ போல் எரித்து ஆமை மனங்களை உசுப்பிட வேண்டும். இப்படியே நீள்கிறது இக்கவிதை. இனிய கவிதை நந்தவனம் சென்று வந்த மன உணர்வைத் தருகின்றது பாராட்டுகள்.நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் இயற்கை ரசிகர் .சமுதாய நேசர் வித்தியாசமான முறையில் கவிதைகள் வடித்துள்ளார் பாராட்டுக்கள்.
 




மணிவாசகர் பதிப்பகம்,
31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600 108. விலை : ரூ.
60.